வரப்பிரசாதம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 தமிழ் இலக்கியத் துறையிலும், பத்திரிக்கைத் துறையிலும், மேடைப்


பேச்சிலும் , பட்டி மன்றங்களிலும் கோலோச்சியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் . பிரபல டைரக்டராக விளங்கியவர் ஐ .வி . சசி, இசைஞானியாக திகழ்பவர் இளையராஜா இவர்கள் மூவரும் அறிமுகமான தமிழ் படம் ஒன்றேதான். இம் மூவருக்கும் வரப்பிரசாதமாக அமைந்த அந்த படம் வரப்ரசாதம் !


இந்தப் படத்தின் மூலம் தான் வலம்புரி ஜான் கவிஞராக அறிமுகமானார் . அதோடு வக்கீலாக இரண்டு காட்சிகளிலும் தோன்றினார். அதே போல் அவளோட ராவுகள், காளி , குரு போன்ற படங்களை இயக்கிய ஐ வி சசி இப் படத்தில் கலை இயக்குனராக பணியாற்றினார். அதே சமயம் இசையமைப்பாளர் ஆர் . கோவர்தனத்திடம் உதவி இசையமைப்பாளராக பணியாற்றிய இளையராஜாவின் பெயர் முதல் தடவையாக திரையில் காண்பிக்கப் பட்டதும் இந்தப் படத்தில் தான். 

 தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த ஹீரோ ரவிச்சந்திரன். பல

வெற்றி படங்களை கொடுத்த அவருக்கு 70ம் ஆண்டுகளின் நடுப் பகுதி ஒரு தேக்க நிலையை ஏற்படுத்தி இருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் இப் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் அவர். 

 படத்தில் நான்கு நண்பர்களாக ரவிச்சந்திரன், விஜயகுமார், சுருளிராஜன் , ஜெயச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். ஹீரோயினாக நடித்த ஜெயசித்ரா நன்கு நடித்திருந்தார். ரவியின் நடிப்பு மிகையின்றி அமைந்தது. அதே அளவு நடிப்பை விஜயகுமாரும் வழங்கி இருந்தார். சுருளிராஜன், மனோரமா காமெடி சலிப்பை தந்தது. படத்தில் நீதிபதியாக வரும் அசோகனின் நடிப்பு கிரேட். அவருக்கு இணையாக வரும் எம் என் ராஜம் நடிப்பில் அசத்துகிறார். அதே போல் சி ஐ டி சகுந்தலாவுக்கு இதில் மாறுபட்ட வேடம் . இவர்களுடன் கே . கண்ணன், சுந்தரராஜன் , ஆகியோரும் நடித்தனர். 

 திருமணங்கள் சொர்கத்ததில் நிச்சயிக்கப் படுகின்றன என்று சொல்வார்கள் அவை திருமண மேடையிலும் நிச்சயிக்கப் படுகிறது என்று சொல்கிறது வரப்பிரசாதம் படம்! 1976ம் ஆண்டு வெளிவந்த இப் படத்தின் கதை இவ்வாறுதான் அமைக்கப் பட்டுள்ளது. 

 நான்கு நண்பர்கள். ஒருவன் தந்தையின் பணத்தில் சொகுசாக

வாழ்பவன். மற்றையவன் அக்கா ஹோட்டல்களில் டான்ஸ் ஆடி சம்பாதிக்கும் பணத்தில் டாக்டருக்கு படிப்பவன் . மூன்றாமவன் வசதியில்லாதவன் . நான்காமவன் பெண்களை கவர்ச்சியாக படம் வரைந்து வருமானம் ஈட்டுபவன் . எதிர்பாராத வகையில் படம் வரைபவன் கொலை செய்யப் படுகிறான். கொலைப் பழி சொகுசாக வாழ்பவன் மீது விழுகிறது. அவனுக்கு எதிராக சாட்சி சொல்கிறான் டாக்டருக்கு படிப்பவன். 

 டாக்டருக்கு படிப்பவன் நீதிபதியின் ஒரே மகளை காதலிக்கிறான். இருவரும் அதி காலையில் முருகன் சந்நிதியில் திருமணம் செய்ய தீர்மானிக்கிறார்கள். ஆனால் கடைசி தருணத்தில் கொலைப் பழிக்கு ஆளான அவனின் நண்பன் அவளுக்கு தாலி கட்டி விடுகிறான். இப்போது அவளின் தந்தை தான் அவளின் திடீர் கணவன் மீது சுமத்தப் பட்ட கொலை வழக்கை விசாரித்து தீர்ப்பு எழுத வேண்டிய நீதிபதி ஆகிறார்! 

 இந்த கதையை எழுதி அதற்கு வசனங்களையும் எழுதி இருந்தார்

கே.எஸ் . மாதங்கன். எத்தனை மாதங்கள் இந்த கதையை பற்றி சிந்தித்தாரோ தெரியவில்லை. ஆனால் வசனங்களில் பின்னி எடுத்திருந்தார் அவர். கடவுள் நம்மகிட்ட கணக்கை போட சொல்லிட்டு விடையை அவர் வச்சிக்கிட்டாரு , நீ கணவனை தெய்வமா மதிக்கிறவ அந்த தெய்வம் வரம்தான் கொடுக்கும் வழக்காடாது , நான் ஜட்ஜாக இருந்து எடுக்கிற முடிவு சட்டத்தை அணுசரிக்கும் உன் அப்பாவா இருந்து எடுக்கிற முடிவு உன் வாழ்க்கையை நிர்ணயிக்கும் போன்ற வசனங்கள் கருத்தோடு கவனத்தை கவர்ந்தன. 

 படத்துக்கு இசையமைத்தவர் ஆர் . கோவர்தனம். எம் எஸ் வியிடம் நீண்ட காலம் உதவி இசையமைப்பாளராக செயல்பட்ட இவர் சில படங்களுக்கு இசையமைத்திருந்தார் . அவற்றுள் இப் படமும் ஒன்று . அவரின் உதவியாளராக இளையராஜாவின் பெயர் படத்தில் ராஜா என்று காண்பிக்கப் பட்டது. சில ஆண்டுகள் கழித்து இளையராஜா உச்சம் தொட்ட பிறகு அவரிடம் உதவியாளராக பணியாற்றினார் கோவர்தனம்! 

 இந்த படத்தில் புலமைப்பித்தன் இயற்றிய ஜேசுதாஸ் , வாணி

ஜெயராம் பாடிய கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான் பாடல் இன்றும் பிரசித்தம். வலம்புரி ஜான் இப் படத்தில் கவிஞராக அறிமுகமானார். 

 படத்தை லஷ்மண் கோரே ஒளிப்பதிவு செய்தார் . சினிமாவில் நீண்ட காலம் படத் தொகுப்பாளராக இயங்கியவர் கே. நாராயணன். இப் படத்தை அவரே எடிட் செய்து இயக்கியும் இருந்தார். அவரின் அனுபவம் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியது. ஆனால் படத்தின் முடிவு வாழ்வில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வரத் துடிப்பவர்களின் எண்ணம் இறுதியில் நிராசை ஆவதாக காண்பிக்கப் படுவது நெருடலாகவே அமைந்தது!


No comments: