சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு

16 May, 2026 | 12:59 PM

தமிழின அழிப்பை பிரதிபலிக்கும் வகையில், நினைவின் வழியே இனத்தின் வரலாற்றை காக்கும் ஒரு சின்னமாக, சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இன்று சனிக்கிழமை (16) திறக்கப்பட்டது.

இனப்படுகொலைக்கு இலக்கான தாயகத் தமிழ் மக்களின் நினைவாகவும், அவர்களின் நினைவு நாட்களில் மலர் தூவி வணக்கம் செலுத்துவதற்கும் சிட்னி நகரில் நிரந்தர 'தமிழர் நினைவுத் தூபி'  ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

தமிழர் இன அழிப்பு நினைவுத் தூபி திறப்பு நிகழ்வு இன்று காலை 9.45 மணிக்கு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் Cumberland நகர சபை முதல்வர் பங்கேற்று, நினைவுத் தூபியை திறந்துவைத்தார்.

சிட்னியில் உள்ள Pendle Hill Civic Park பொது இடத்தில், Cumberland நகர சபையின் ஆதரவுடன் இந்த நினைவுத் தூபி நிறுவப்பட்டுள்ளது. 

'தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - சிட்னி' அமைப்பின் ஏற்பாட்டில் சிட்னியில் உள்ள அனைத்துத் தமிழர் அமைப்புகளின் ஒத்துழைப்போடும் இந்நினைவுத் தூபி நிறுவப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உருவாக்கப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி, வெறும் கற்களாலும் சிலைகளாலும் ஆன ஒரு கட்டமைப்பு அல்ல. அது தமிழர் இனத்தின் துயர வரலாறு, போராட்ட நினைவு, இன அழிப்பு வேதனை மற்றும் நீதிக்கான தொடர்ச்சியான அழைப்பின் அடையாளமாக திகழ்கிறது. 

இவ்வுலகு என்னாளும் சொர்க்கமாய் ஆகிவிடும் !



 



























மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்… அவுஸ்திரேலியா 









தர்மம் தலைகாக்கும் தளர்வில்லா வாழ்வுதரும்
அதர்மம் ஆடிநின்று அடங்கியே ஒடுங்கிவிடும்
நீதி நிலைதளரா நிமிர்ந்தோங்கி நின்றுவிடும்
பேதமுற்று நின்றால் பித்துமே பிடித்துவிடும்

ஓதி உணராதார் உரைத்திட்டால் பயனாகா
பயனாகா வார்த்தைகள் பதருக்கு ஒப்பாகும்
நிறைவான வார்த்தைகளை நித்தமுமே நாங்கள்
உரைத்திட்டால் உள்ளம் உயர்வாக உயர்ந்திடுமே 

உயர்வான உள்ளத்தில் உயிர்த்துடிப் பிரிக்கும்
உயிர்த்துடிப் பிருந்தால் உள்ளமொளி வீசும்
உள்ளமொளி  எழுந்தால் உலகமே போற்றும்
உலகமே போற்றினால் உயர்நிலையை எய்திடுவோம்

நடைமுறையின் முக்கியத்துவம்

 நீங்கள் நீண்ட காலமாக துறவறத்தைப் பற்றி வாசித்து வருகிறீர்கள். பல உபந்யாசங்களையும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அவற்றில் எவ்வளவு அளவிற்கு நீங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளீர்கள்? உங்களையே நீங்கள் கேள்வி கேட்டுப் பாருங்கள். நீங்கள் ஒரு அடிக்கூட முன்னேறவில்லை; இருந்த இடத்திலேயே இருக்கிறீர்கள் என்பதை உணர்வீர்கள்.

வேதாந்த நூல்களை வாசித்தும், ஜபம் மற்றும் தியானம் செய்தும், புனித நூல்களின் அறிவைப் பெற்றிருந்தும், உங்கள் நிலைமையில் மாற்றமில்லை. முன்னேற்றம் அடைவது எப்படி? நீங்கள் கற்ற அறிவை நடைமுறையில் செயல்படுத்தும் போதுதான் உயர்ந்த நிலைகளை அடைய முடியும்.

ஆனால் இன்றைய மாணவர்கள் நடைமுறையில் பூஜ்யமாகவும், புத்தக அறிவில் வீரர்களாகவும் உள்ளனர். நீங்கள் பல விஷயங்களை கேட்டு கற்றுக்கொள்ளலாம். ஆனால் உங்கள் நிலை மாறாமல் அதேபடி இருக்கும். நூறு விஷயங்களை கற்றுக்கொள்வதைவிட, குறைந்தபட்சம் ஒரு விஷயத்தையாவது நடைமுறைப்படுத்துவது மிக முக்கியம்.

ஆகையால், நீங்கள் பயிற்சியைத் தொடங்க வேண்டும். அனுபவம் என்பது நடைமுறையால் மட்டுமே கிடைக்கும். சுவையான உணவுப் பொருட்களின் பெயர்களைக் கேட்பதாலேயே பசி தீராது; அவற்றை உண்ண முயற்சி செய்ய வேண்டும். ஒரு பிச்சைக்காரன் பொருளாதாரத்தின் மகத்துவத்தைப் பற்றி கேட்பதாலேயே தனது நிலையை உயர்த்த முடியாது. ஒளியின் சக்தியைப் பற்றி கேட்பதாலேயே அடர்ந்த இருள் அகலாது.

அதேபோல், வேதாந்தத்தைப் பற்றி கற்றுக்கொள்வதாலேயே ஒருவர் வேதாந்தியாக மாற முடியாது.

கவிதை..."கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்"... மெல்போர்ன் அறவேந்தன்










 

சினத்தை அடக்குவதே சிறந்த குணம்! (உடுக்கைப் பாட்டு) --- அன்பு ஜெயா

 கரையொன்று நம்மையெலாம்

காத்திடுமே வெள்ளத்தின்

கடுமையுமே தாக்கிடாதே!

கரைதானே வெள்ளத்தின்

கடுஞ்சினமும் அழித்திடாமல்

காவலுமே புரிகின்றதே!

கரைதாண்டி வெள்ளமதும்

கடந்திடுதல் அரிதாகும்

காத்திடுதல் அதன்பண்பே!

கரைபோன்றே உள்ளமதும்

கடுஞ்சினத்தை எந்நாளும்

காத்திடுதல் சிறப்பன்றோ!

கடுஞ்சினமும் வெளிப்படாது

காலமெல்லாம் அமைதியினைக்

காத்திடுதல் பெருமையன்றோ!

கடுஞ்சினத்தை அடக்குவோனே

களத்தினிலே வெற்றிதனைக்

காலமெல்லாம் காண்பானே!


தமிழ் கற்பீர் தமிழர்காள்!

 பக்க வாத்தியம் வாசித்து

எக்காலும் பழக்கமில்லை
இரும்பைப் பொருளாக்க
இரும்பால்தான் அடிப்பார்

பட்டறையின் அடைகல்லில்
பழுத்த இரும்பும் காத்திருக்க
அதை அடிக்கும் சம்மட்டியும்
இரும்பென்று அறிந்திலரோ

சங்கறுப்பது எங்கள் குலம்
சங்கரனுக்கு ஏது குலமென்றான்
சங்கறுக்கும் நக்கீரன் சிவனிடமே
தமிழ்காக்க எதிர்த்து நின்றான்

முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்
முதுமொழியும் வழிசொல்லி நிற்கும்
காலில் முள்தைத்தால் அதனை
கூரானமுள் கொண்டே அகற்றிடுவர்

அவுஸ்திரேலியாவில் பரிசுபெறும் இலங்கை நூல்கள்!

அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும்

,  அஸ்திரேலியா
தமிழ் இலக்கிய கலைச் சங்கம்எழுத்தாளர்களுக்காக ஓர் எழுத்தாளர் விழாவையும் மற்றும், தமிழ் இலக்கியம், கலை தொடர்பான நிகழ்வுகளையும் கடந்த 25 வருடங்களாக நடத்திவருகிறது.


அவற்றுடன், கடந்த சில வருடங்களாக, இச் சங்கம், இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும் தமிழ் நூல்களில் சிறந்த நூல்களுக்குப் பணப்பரிசுகளை வழங்கி வருகிறது. எழுத்தாளர்களை ஊக்குவித்துப் பாராட்டுவதையும், புதியவர்களை எழுதத் தூண்டுவதுடன் அவர்களுக்குத் தமிழ் எழுத்துலகில் களம் அமைத்துக்கொடுப்பதையும் நோக்கங்களாகக் கொண்டு இந்தப் பரிசளிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுச் செயற்படுத்தப்படுகிறது.

நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதை, கட்டுரை ஆகிய நான்கு ஆக்க வகைகளில், ஒவ்வொன்றிலும் கடந்த 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் வெளியிடப்பட்ட நூல்களில் சங்கத்தின் பரிசளிப்புத் திட்டத்திற்குக் கிடைக்கப்பெற்ற நூல்களில் சிறந்த நூல்களாகத் தெரிவுசெய்யப்பட்டு, ஒவ்வொன்றும் ஐம்பதாயிரம் இலங்கை  ரூபாவைப் பரிசாகப் பெறும் நூல்களையும், அவற்றை எழுதியவர்களையும் பற்றிய விபரங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன.

அந்த வகையில், கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களில் பரிசுபெறும் நூல்களினதும், அவற்றை எழுதிய எழுத்தாளர்களினதும் பெயர் விபரங்கள்  பின்வருமாறு:  

 நாவல்: ஆத்ம அசைவுகள்.    

நூலாசிரியர்: - திருமதி அற்புதராணி காசிலிங்கம் (மலரன்னை) திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

படித்தோம் சொல்கின்றேம்: மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் எழுதிய – பத்திரிகைத்துறையில் என்கதை முருகபூபதி

---------------------------------------------------------------------------

மேர்வின்டீ. சில்வாவின் புதல்வன் கலாநிதி தயான் ஜெயதிலக்காவும் இலங்கையில் மிகவும் பிரபலமானவர்.  கடந்த அரசாங்கங்களின்  காலத்தில் ரஷ்யா, மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராவும் பணியாற்றியவர்.

இவர் ஒரு காலகட்டத்தில் வட-கிழக்கு மாகாண சபையிலும் அமைச்சராக இருந்தார்.  அதற்கு முன்னர்  இவரும் இலங்கையில் சிறிது காலம் தலைமறைவாக வாழ நேரிட்டது.

அவ்வாறான தலைமறைவு வாழ்க்கையின்போது ஒரு பிரபல தமிழரின் கொழும்பு இல்லத்தில்தான்  தங்கியிருந்தார்.

அந்தத் தமிழரும் மிகவும் பிரபலமானவர்தான்.  அவர் தோழர் என். சண்முகதாசன். 

இதுபோன்ற பல   செய்திகளை  வீரகேசரி – தினக்குரல் மற்றும்


சமகாலம் முதலான ஏடுகளில் சிரேஷ்ட ஆசிரியராக பணியாற்றிய வீரகத்தி தனபாலசிங்கம் எழுதியிருக்கும்  - பத்திரிகைத்துறையில் என் கதை   -  என்ற நூலிலிருந்து நாம் தெரிந்துகொள்கின்றோம்.

தனபாலசிங்கம், ஏற்கனவே, நோக்கு ( தினக்குரல் ஆசிரிய தலையங்கங்கள்)  ஊருக்கு நல்லது சொல்வேன்,    தமிழ் தேசியவாத அரசியல்,  ஆகிய நூல்களையும் வரவாக்கியிருப்பவர்.  தோழர் சண்முகதாசனின் கட்டுரைகள், மற்றும் சண்முகதாசன் நூற்றாண்டு மனப்பதிவுகள் ஆகியற்றையும் வெளியிட்டிருக்கிறார்.

 இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை உக்கிரமடைந்து கலவரங்கள் தொடங்கிய  காலப்பகுதியில்  பத்திரிகைத்துறையில் பிரவேசித்தவர். வீரகேசரியில்   தனது தொழில்சார்ந்த வாழ்க்கையை முதலில் ஒப்புநோக்காளராக ஆரம்பித்தவர். 1977 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தென்னிலங்கையில் இனக்கலவரம் நடந்தது.  அப்போது, பிரதமராகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்தனா  “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் “ என்று  சூளுரைத்தார்.   இவ்வாறு நாட்டில் மிகுந்த நெருக்கடி தொடங்கியவேளையிவ் தனபாலசிங்கத்தின்  கொழும்பு வாழ்க்கை ஆரம்பமாகிறது.

நாமிருவரும் அவ்வேளையில் வீரகேசரியில் ஒப்புநோக்காளர்களாக இணைந்தோம்.

அன்று முதல் இற்றை வரையில்  இவருடனான எனது நட்புறவு நீடிக்கிறது.

படிப்படியாக தன்னை இவர் எவ்வாறு வளர்த்துக்கொண்டார் என்பதையும்,  இந்நூலில் நனவிடை தோய்ந்து பதிவுசெய்திருக்கிறார்.  இந்நூலை இலங்கையின் மூத்த இடதுசாரித்தோழரும் பத்திரிகையாளருமான (அமரர் பாதிநேசன் வீ. சின்னத்தம்பி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.

பேராசிரியர் எம். ஏ. நுஃமான் முகவுரையும்,  மூத்த பத்திரிகையாளர் டீ. பி. எஸ். ஜெயராஜ், பேராசிரியர்  சந்திரிக்கா சுப்பிரமணியம், தெட்சணா மூர்த்தி மதுசூதனன் ஆகியோர் தங்கள் கருத்துரைகளையும் எழுதியுள்ளனர்.

தனது 21 வயதில் வீரகேசரி பணிமனையில் பிரவேசித்த தனபாலசிங்கத்திற்கு அவ்வேளையில்  தலைநகரம் முற்றிலும் புதிது.  இவரது தாய்மாமனார்  கந்தசாமியின் ( வீரகேசரியின் விளம்பரப்பிரிவு – உதவி முகாமையாளர் ) தூண்டுதலால் ஒப்புநோக்காளர் பணியை ஏற்கிறார்.

வீடுபேற்றினால் கிடைத்த விடை!

உண்மைக்கதை என்று உண்மையில் சில கதைகள் வருவதுண்டு. அப்படிப் பார்த்தால் இதுவும் ஓர் உண்மைக் கதைதான். அந்தரங்கம் கருதி ஊர் பெயர் போன்றவை மாற்றப்பட்டுள்ளன. சின்னாளப்பட்டி சிவநேசன் கனவில் வந்ததை முடிவெட்ட வந்தபோது சிகைதிருத்த வந்த சிங்காரவேலுவிடம் சொன்னதை நான் உங்களுக்கு சொல்கிறேன்.


முடிவெட்டவந்தவன் தன் நண்பனும் முடிவெட்ட வந்ததை அறிந்து மகிழ்ந்தான். மகிழ்ச்சிக்கு காரணம் தன் மனதில் இருந்து அரித்துக் கொண்டிருந்த கனவை யாரிடமாவது சொல்லவேண்டும் என்ற எண்ணமே காரணம். யாரிடம் சொல்லவேண்டும் என்று எண்ணிப் பார்க்கும்போது தீவிரவாதிகளிடம் சொன்னால் நமக்கு கடவுள் நம்பிக்கையற்றவன் என்ற முத்திரை குத்திவிடுவார்கள்.

முத்திரை குத்துவதோடு விடாமல் அதற்கென ஒரு கொள்கைபரப்புச் செயலாளரையும் போட்டு நமக்காக விளம்பரமும் செய்யத் தொடங்கிவிடுவார்கள். ஏதோ அவர்களால் இயன்ற கைமாறு. ஆதலால் தகுந்த ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தான். கனவு வந்தால் கனவுதானே என்றுவிட வேண்டியதுதானே. சிலருக்கு கனவோ நனவோ நமக்குத் தெரிந்ததை நாலுபேருக்கு சொல்லிவிட வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் தலைவெடித்து விடும்.

இவர்களுக்கு எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் ஆல்இந்தியா ரேடியோ என்று பெயர். நாம் ஒன்றை பரப்பவேண்டும் என்றால் இவர்கள் காதில் போட்டுவைத்தால் போதும். நாம் வேறு எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம். விளம்பரம் செய்தால்கூட பரப்ப முடியாத அளவுக்கு செய்தியை பரப்பிவிடுவார்கள். ஆதலால் கவனமாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட நேரத்தில் சிங்காரவேலுவைக் கண்டவனுக்கு பக்கத்து இலைக்கு பாயாசம் என்று யாரும் சிபாரிசு செய்யாமலே என் இலையில் பாயாசம் ஊற்றப்பட்ட கதையாய் இருந்தது.

காரணம் சிங்காரவேலு சிவநேசனைப் போலவே மிதவாதி. கடவுள் இல்லை என்று சொல்லமாட்டான். நமக்கு மேல் ஒரு ஆற்றல் உண்டு, அந்த ஆற்றல்தான் கடவுள் என்பான். மறைந்த நம் நெருங்கிய சொந்தங்களை எண்ணி வணங்குவதைப்போல் நம் பரம்பரையில் வாழ்ந்து மடிந்து மறைந்தவர்களை குலதெய்வமாக வணங்குவதைப் போன்றதுதான் கடவுள் வழிபாடு என்பான்.

பெதும்பை – சிறுகதை - கே.எஸ்.சுதாகர்

அத்துவானக் காட்டைப் போல் நீண்டு பரந்து விரிந்திருந்தது வயல். சுஜித்தாவும் தாயார் தெய்வானையும் நடு வயலிற்குள் நின்று களை பிடுங்கிக்கொண்டு நிற்கின்றார்கள். அவர்களைப் போலவே வேறு சிலரும், அங்கே தலை தெரியும் தூரத்தில் நின்று வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள். வயல் அவர்களுடையது அல்ல. வறுமை அவர்களை அங்கே கொண்டுவந்து விட்டிருக்கின்றது.

சுஜித்தா பாடசாலை தவிர்ந்த நேரங்களில் அம்மாவிற்கு ஒத்தாசையாக வயல் வேலைகளில் இறங்கிவிடுவாள். பதினொரு வயதுகள் நிரம்பிய அவளிடம் வயதுக்கேற்ற வளர்ச்சி இருக்கவில்லை. அழகி என்றாலும் அணிந்துகொள்ள எதுவும் இல்லாதவள். காதின் ஓட்டைகள் தூர்ந்துபோய் பல வருடங்களாகிவிட்டன. கழுத்தில் ஒரு வெளிறிப்போன மாலை, கையில் ஒரு கோவில் திருவிழாவின் போது வாங்கிய ரப்பர் வளையல்கள்.

சில நாட்களாக சுருக்கங்கள் விழுந்த அவள் முகம் பூப்போல விரிந்திருந்தது. நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக தேங்கிவிட்ட சிறு புன்னகையும், மனம் முழுக்க - மழை பெய்து குளம் நிரம்பி வழிவது போல மகிழ்ச்சியும் தழும்பிக் கிடந்தன.

ஐந்தாம் வகுப்பு புலமைப்பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்று மாநிலத்தில் முதலாவதாகத் தேறியிருந்ததுதான் அவள் மகிழ்ச்சிக்குக் காரணம். அவளுக்கு அது ஒரு இன்ப அதிர்ச்சி. அந்தப் பரீட்சைக்காக அவள் எந்தவித பிரத்தியேக வகுப்புகளுக்கும் செல்லவில்லை. அந்தப் பரீட்சை குறித்து எதுவித அக்கறையும் அவளுக்கும் தாயாருக்கும் இதுவரை இருந்ததில்லை. வறுமை கோரத்தாண்டவமாடும் வீட்டில், நித்தம் விளக்கு எரிவதே அதிசயம் என்றானபோது அதுகுறித்து அவர்கள் கவலைப்படவில்லை. ஆனால் இன்று… சுஜித்தாவின் வெற்றி குறித்தான மகிழ்ச்சியைச் சொல்வதற்கு அவர்களிடம் வார்த்தைகள் இல்லை.

ஆனாலும் இந்த மகிழ்வில் கலந்துகொண்டு குதூகலிக்க அவள் அப்பா இன்று அவர்களுடன் இல்லை. இப்படித்தான் ஒருநாள் வயல் வேலை செய்து கொண்டிருந்தபோது, சீருடை அணிந்த இராணுவத்தினரால் அவள் தந்தை பிடித்துச் செல்லப்பட்டார். இன்று எட்டு வருடங்கள் கழிந்துவிட்டன.

அப்பா ஒரு போர்வீரர் அல்ல. எந்தவித இயக்கங்களிலும் இருந்தவரும் அல்ல. ஆனாலும் தொலைந்து போனார். போர் நடக்கும் இடங்களில் தொலைந்து போவதற்கு காரணங்கள் ஏதும் தேவையில்லை. தொலைந்து போனவர்கள் உயிரோடு இருப்பதற்கான சாத்தியங்களும் மிகக் குறைவு.

மாலை சரிந்து கொண்டிருந்தது. தலைக்கு மேலால் பறவைகள் ஆர்ப்பரித்து, அவள் மகிழ்ச்சிக்கு ஈடாகப் பறந்து தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன.

தூரத்தே குரல் எழுப்பியபடியே மூச்சிரைக்க ஓடி வருகின்றான் கிச்சா. கிச்சா சுஜித்தாவைவிட இரண்டு வயதுகள் இளமையானவன். தன்னையொத்த வயதுடைய பையன்களுடன் எந்த நேரமும் சதா விளையாடியபடி இருப்பான் கிச்சா. அவனின் பின்னால் காற்சட்டையைத் தூக்கிப்பிடித்தபடி வளையம் உருட்டிக் கொண்டுவந்த சிறுவர்கள் இருவர், வளையம் வயலிற்குள் போகவே அதன் வழி போய் பொத்துப் பொத்தென வயலிற்குள் விழுந்தனர்.

“அம்மா…. ஸ்கூல் பிரின்சிபல் வீட்டை வந்து நிக்கின்றார். உங்களை ஒருக்கா வந்திட்டுப் போகட்டாம்…”

வரவேற்பு (கன்பரா யோகன்)

மரங்களின் இலைகள் மஞ்சலும், சிவப்புமாக நிறம் மாறி இலையுதிரத் தயாராகின்றன. சிவப்பிலைகள் செங்கம்பள விரிப்பைப் போல நடைபாதையை மூடி இரவு பெய்த மழைத்துளிகளின் பாரத்தில் அவை நிலத்தோடு கிடக்கின்றன இலைகள் மதிய வெய்யிலில் காய்ந்துவிட காற்று இலைகளை அலைக்கழித்து அள்ளிக் கொண்டு புற் தரையில் கொட்டுகிறது..

நானோ வீட்டின் முன்னாள் நிற்கும் மூன்று அரசாங்கம் நட்டு வைத்த மரங்கள் முற்றாக இலைகள் கொட்டித் தீர்க்கும் வரை காத்திருக்கிறேன். அவற்றை அள்ளி முடிப்பது அரை நாள் வேலை. ஆனால் இன்னொரு நல்ல விஷயம் புல்லு வெட்டத் தேவைவையில்லை என்பதுதான். குளிர் புற்களை வளரவிடாது தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும்.    

இனி வரும் நாலைந்து மாதங்களுக்காக மரங்கள் தம்மை


தயார்படுத்தி குளிர் காலத்தை வரவேற்பது போல மனிதரும் தம்மைத் தயார் படுத்துகின்றனர்.

வின்டர் வரும் வரை உள்ளே அலுமாரிக்குள் பதுங்கிக் கிடந்த குளிர் உடுப்புகள் வெளியே உடுப்புக் கொளுவும் ஹாங்கரில் எடுத்துக் போட்டுவிட்டோம். இரவும் காலையும் சூடேற்றிகளை இயக்கத் தொடங்கி விட்டோம்.

குளிர்காலத்துக்கென்று பிரத்தியேகமான ஃப்ளூ ஊசி போட ஒழுங்கு செய்தாயிற்று.

வின்டர் வந்தால் இலங்கை இந்தியா என்று குளிரிலிருந்து தப்பிச் செல்லும் சிலர் பயணங்களுக்கு ஆயத்தமாகி விட்டனர்.

காலையில் வெயில் பளிச்சென்று வந்து விடுகிறது. குளிர் காலநிலையிலும் பெரும்பாலும் வெயில் எறிக்கத் தவறுவதில்லை. மற்றைய நாடுகளின் வின்டர் காலத்துடன் ஒப்பிடும்போது கன்பராவுக்கு வெய்யில் ஒரு வரப்பிரசாதம். உடுப்புகளை வெய்யிலிலேயே காய வைத்து விட முடிகிறது.

இன்னொன்றை கவனித்தேன். தூரத்தில் நிற்கும் மலைகளில் மரங்கள் என்றும் பச்சையாகவே நிற்கின்றன. அங்கெல்லாம் பெரும்பாலும் யூகலிப்டஸ் மரங்களும், பைன் மரங்களும் மட்டுமே நிற்கின்றன. வின்டரில் இலையுதிராத மரங்கள் அவை.

இந்த மலைகள் எத்தனை தலைமுறைகளைக் கண்டிருக்கும்!. எத்தனை காலநிலை மாற்றங்களிகளினூடாக கடந்து வந்திருக்கின்றன. காட்டுத்தீ உட்பட.

ஆனாலும் அவை மாற்றமின்றி நிற்கின்றன.

 

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள்

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

06 - 06 -2026 Satசிட்னி இசை விழா 2026

07 - 06 -2026 Sun:சிட்னி இசை விழா 2026

மெல்பேர்னில்   நடைபெறும் நிகழ்வுகள் 

06 - 06 - 2026 Sat: அக்கினிக்குஞ்சு 16ம் ஆண்டுவிழா 
                                Drum Theatre, Dandenong at 6 PM

கன்பராவில்  நடைபெறும் நிகழ்வுகள் 


குயின்ஸ்லாந்தில்  நடைபெறும் நிகழ்வுகள் 


பெர்த்தில்  நடைபெறும் நிகழ்வுகள் 


ராமு - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

ஒரு மொழியில் வெற்றி பெற்ற படத்தை வேறு மொழியில் படமாக்குவது திரையுலகில் வாடிக்கை. ஆனால் ஹிந்தியில் வெளி வந்து படு தோல்வியடைந்த ஒரு படத்தை தமிழில் தயாரித்து வெற்றி காண்பது என்பது ஒரு சாதனை. அதனை செய்தவர்கள் ஏவி எம் புரொடக்சன்ஸார். அவ்வாறு உருவான படம் ராமு. 


பிரபல ஹிந்தி பாடகர் கிஷோர்குமார் கதை எழுதி, தயாரித்து , இயக்கி , நடித்து தோல்வி கண்ட படமான "தூர் ககன் கி சாஓன் மெய்ன் படத்தையே ஏவி எம் நிறுவனம் தமிழில் எடுத்தனர். வாய் பேச முடியாத ஒரு சிறுவனின் கதை தான் இப் படம். இதனை ஹிந்தி ரசிகர்கள் நிராகரித்து விட்டார்கள். ஆனால் இப் படத்தை பார்த்த ஏவி, எம் சரவணனும் அவரின் சகோதரர்களும் இதனை தமிழில் எடுத்தால் வெற்றி பெரும் என்று நம்பினார்கள். இது பற்றி இயக்குனர்களான கிருஷ்ணன் பஞ்சு, திருலோகசந்தர் , கதாசிரியர் ஜாவர் சீதாராமன் ஆகியோரிடம் கூறிய போது அவர்கள் தட்டிக் கழித்து விட்டார்கள். ஆனாலும் நம்பிக்கை இழக்காத சரவணன் கதாசிரியர் ஜாவரிடம், படத்தில் சிறுவன் ஊமை என்று காட்டுவதோடு நின்று விடாது அவன் ஏன் ஊமையானான் என்று காட்டி திரைக் கதை அமைத்தால் கதை மெருகேறி விடும் என்று ஐடியா கொடுக்க ஜாவர் தன் கற்பனை ஜாலத்தை காட்டி விட்டார். 


படம் உருவாவது நிச்சயம் என்றவுடன் அதில் ஹீரோவாக நடிக்க

தேர்வானார் ஜெய்சங்கர். ஆனால் அவருக்கு வில்லனானார் ஜெமினி. 1966ம் ஆண்டளவில் ஜெமினியின் மார்க்கெட் சற்று மந்த கதியில் இருந்தது. உடனடி வெற்றி ஒன்றை அவர் எதிர்பார்த்திருந்தார். ஏவி எம் ராமு படத்தை தயாரிக்கிறார்கள் என்றவுடன் சற்றும் தாங்காமல் நேரில் சென்று ஏவி எம் செட்டியாரை சந்தித்தார் அவர். 

 ராமு படத்தில் கதாநாயகனாக நடிக்க விரும்புவதாக அவர் விடுத்த கோரிகையை ஏவி எம் மினால் தட்ட முடியவில்லை. இதனால் ஜெய்சங்கருக்குப் பதில் ஜெமினி ஹீரோவானார். ஜெய்யைப் பொருத்த்க்க வரை ஏவி எம்மில் அவருக்கு ஏற்பட்ட இரண்டாவது அனுபவம் இது. ஆரம்பத்தில் அன்பே வா படத்தில் ஹீரோவாக நடிக்க தெரிவாகி. பின்னர் அதில் எம் ஜி ஆர் நடித்தார். இம் முறை ஜெமினி ராமு பட வாய்ப்பை தட்டிப் பறித்து கொண்டார். 


இலங்கைச் செய்திகள்

 தமிழினப் படுகொலையை எடுத்துக்காட்டும் “நினைவாயுதம்” கண்காட்சி யாழ். பல்கலையில் இன்று ஆரம்பம்

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை உத்தரவு!

குமுதினி படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

குமுழமுனையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரல்

மானிப்பாயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு


தமிழினப் படுகொலையை எடுத்துக்காட்டும் “நினைவாயுதம்” கண்காட்சி யாழ். பல்கலையில் இன்று ஆரம்பம்

Published By: Digital Desk 2

16 May, 2026 | 10:50 AM

யாழ். பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் "நினைவாயுதம்"  ஓவிய, புகைப்பட மற்றும் ஆவணக் கண்காட்சி இன்று (16) ஆரம்பமாகிறது.

யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இது தொடர்பாக  கூறுகையில்,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நாம் பல்வேறு வேலைத்திட்டங்களை செயற்படுத்தி வருகிறோம். அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் ஜந்து மாவட்டங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உலகச் செய்திகள்

அமெரிக்கா - சீனா இடையே புதிய சகாப்தம்: மோதலல்ல, ஒத்துழைப்பே உலகிற்கு அவசியம் - சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்

உக்ரைன் மோதல் முடிவுக்கு வருகிறது - புட்டின் அறிவிப்பு

இஸ்ரேலில் அரசாங்கத்திற்கு எதிராக வெடித்த போராட்டம்


அமெரிக்கா - சீனா இடையே புதிய சகாப்தம்: மோதலல்ல, ஒத்துழைப்பே உலகிற்கு அவசியம் - சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்

Published By: Digital Desk 3

15 May, 2026 | 09:10 AM

சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி  ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான தீர்க்கமான பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் உள்ள 'மக்களின் மகா மண்டபத்தில்' வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது, புதிய சகாப்தத்தில் இரு வல்லரசு நாடுகளும் சுமுகமாக முன்னோக்கிச் செல்வதற்கான சரியான வழியைக் கண்டறிய வேண்டும் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தொடர்பில் ஷி ஜின்பிங், 

ஆன்மீக ஒற்றுமையை உணரும் வாழ்க்கைப் பயணம்

 இறைவனின் மகிமையும் மகத்துவமும் இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் நிறைந்துள்ளது. காற்றில் மணம் இருப்பதுபோலும், நெருப்பில் வெப்பம் இருப்பதுபோலும், பாலில் வெண்ணெய் மறைந்திருப்பதுபோலும், இறைவன் அனைத்திலும் உட்கார்ந்திருக்கிறார். முத்துக்களை ஒன்றிணைத்து நிறுத்தும் நூல்போல், இந்த உலகிலுள்ள அனைத்தையும் இணைத்து தாங்கிக் கொண்டிருப்பது அவரே.

அவரே இந்தப் படைப்பின் ஆதாரம், பாதுகாவலன் மற்றும் உயர்ந்த குறிக்கோள் என்பதை உணர்வதே மனித வாழ்க்கையின் இறுதியான இலக்கும் நோக்கமும் ஆகும். இதுவே மனிதன் காலங்காலமாகப் பெற்றுள்ள அனைத்து வேதங்களும் சாஸ்திரங்களும் வழங்கும் மையப் போதனையாகும். மொழிகள் மாறினாலும், நாடுகள் மாறினாலும், அனைத்து மதங்களும் மனிதனை அந்த பரம உண்மையை நோக்கிச் செலுத்தும் பாதைகளாகவே உள்ளன.

ஒவ்வொரு ஒழுக்க நெறியும் மனிதனின் பேச்சு, செயல் மற்றும் சிந்தனைகளை ஒழுங்குபடுத்தி, உண்மையின் பாதையை தெளிவாக காணவும், அதில் உறுதியுடன் நடக்கவும் உதவுகின்றன. இந்த உயர்ந்த ஆன்மீக ஞானம் பிறந்து வளர்ந்த புனித பூமி இந்தியா ஆகும். எண்ணற்ற முனிவர்களும் ஞானிகளும் கடுமையான சாதனைகளின் மூலம் இந்த உண்மையை உணர்ந்து உலகிற்கு பரப்பினர்.

ஆனால் இன்று, அந்த உயர்ந்த ஆன்மீக இலட்சியங்கள் சீரழிந்து வருகின்றன என்பதை வருந்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆன்மீக பேரானந்தத்தின் உச்சத்தை அடைந்த அந்த மகான்களை மதிப்பதற்குப் பதிலாக, அவர்களின் அனுபவங்களையே சிலர் கேலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, அந்த மகத்தான ஞானத்தை அளித்த பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் மீண்டும் மதித்து போற்ற வேண்டிய காலம் இது. உண்மையை நோக்கிய ஆன்மீகப் பயணத்தில் மீண்டும் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். இந்தப் பல்வகைமைகள் நிறைந்த உலகக் காட்டின் நடுவே மறைந்திருக்கும் அடிப்படை ஒற்றுமையையே உண்மையான நிதர்சனமாகக் கண்டறிய வேண்டும்.

ஆத்ம ஞானமே உண்மையான விடுதலை

 நமது வாழ்க்கையின் வேர்கள் ஆத்மாவில் பதிந்துள்ளன. வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளும் கலக்கங்களும் நடுவே அது வளர்ந்தாலும், அதன் ஆத்ம மூலத்திலிருந்து அது ஒருபோதும் பிரிந்து செல்ல முடியாது. மனிதன் யுகங்களாக விடுதலையை நாடி, பந்தங்களிலிருந்து சுதந்திரம் பெற போராடிக் கொண்டிருக்கிறான். ஆனால், அவன் எதிலிருந்து விடுபட வேண்டும், உண்மையான பந்தம் எது என்பதை சரியாக உணரவில்லை.

பலருக்கு தாங்கள் பந்தங்களில் சிக்கியிருப்பதற்கே அறிவில்லை. ஆகையால், அவர்கள் தங்களை விடுவிக்க முயற்சிக்கவே மாட்டார்கள். குடும்பம்தானா சிறை? மனைவி, குழந்தைகள்தானா பந்தங்கள்? செல்வம், சொத்து, உடைமைகள்தானா மனிதனை கட்டிப்போடுகின்றன? விருப்பங்களும் வெறுப்புகளும்தானா அவனை அடிமைப்படுத்துகின்றன? இல்லை. இவற்றில் எதுவும் மனிதனை உண்மையில் கட்டிப்போடுவதில்லை.

மனிதனின் எண்ணங்களையும் செயல்களையும் மிகவும் வலிமையாக கட்டுப்படுத்தும் பந்தம் அவன் உண்மையில் யார் என்பதை அறியாத அறியாமையே ஆகும். “நான் யார்?” என்ற உண்மையை உணராதவரை, மனிதன் துன்பத்திலிருந்து துன்பத்திற்கு அலைக்கழிக்கப்படுவான்; இடையில் சில கணங்கள் மட்டுமே மகிழ்ச்சியை அனுபவிப்பான்.

ஆத்மாவை உணர்ந்தாலே மனிதன் நிலையான ஆனந்தத்தையும் உண்மையான சுதந்திரத்தையும் அடைய முடியும். ஆத்ம ஞானமே மனிதனை எல்லா பந்தங்களிலிருந்தும் விடுவிக்கும் பரம மார்க்கமாகும்.

அன்பே தெய்வத்தின் வடிவம்

 அன்பில்லாத இதயம் ஒரு சுடுகாட்டைப் போன்றது. அன்பே தெய்வத்தின் இருப்பை உணர்த்துகிறது. அது எங்கும் நிறைந்துள்ளது. மனித ஒற்றுமைக்கான அடிப்படை அன்பே ஆகும். சுயநலம் நீங்கி, தெய்வத்தின் மீது நம்பிக்கை வளரும்போதுதான் மனித ஒற்றுமை நிலைபெறும். ஆகையால், ஒவ்வொரு மனிதனும் தனது இதயத்தை அன்பால் நிரப்பிக் கொள்ள வேண்டும்.

“கடவுள் அன்பே; அன்பே கடவுள்” என்பதே உயர்ந்த உண்மை. அன்பு அன்போடு மட்டுமே இணைகிறது. ஒருவர் முழுமையாக அன்பால் நிரம்பியிருக்கும்போது, அவர் அத்வைத நிலையான இறைவனோடு ஒன்றிய நிலையை அடையத் தகுதியானவராகிறார்.

இந்த அன்புத் தத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியமானது. இந்த அன்பு நல்லவர்களிடமும் கெட்டவர்களிடமும் உள்ளது; காடுகளிலும் அரண்மனைகளிலும் உள்ளது; பாசத்திலும் பிரிவிலும் உள்ளது; ஒருவரின் நடத்தை மற்றும் பேச்சிலும் உள்ளது; மனதிலும் செயல்களிலும் உள்ளது. அன்பு அனைத்திலும் பரவி நிற்கும் பரம சக்தியாகும்.

இன்றைய உலகில் தீய சக்திகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. அவற்றை அழிக்கக்கூடிய மிக வலிமையான ஆயுதம் அன்பே. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மனிதர்கள் இந்தப் புனிதமான அன்பைப் பெறுவதற்கான சரியான பாதையைப் பின்பற்றவில்லை.

அன்பே அன்பின் விதை. அதுவே கிளை, மலர், கனியும் ஆகும். அன்பின் இனிய கனியை அனுபவிக்க விரும்பினால், அன்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தெய்வீக போதனைகளை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துதல்

 நீங்கள் கேட்கும் மற்றும் படிக்கும் எல்லா நல்ல போதனைகளையும் உங்கள் இதயத்தில் பதியச் செய்ய வேண்டும். ஒரு குரு தனது சீடர்களை அழைத்து, “என் அன்பு மாணவர்களே! நான் உங்களுக்கெல்லாம் ஒரு இனிப்பை தருகிறேன். அதை எறும்புகள், ஈக்கள், கொசுக்கள், பூனைகள் அல்லது எலிகள் கெடுக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.

அதைக் கேட்ட பெரும்பாலான மாணவர்கள் அந்த இனிப்பைப் பல வழிகளில் பாதுகாக்க முயன்றனர். ஆனால் ஒரே ஒரு மாணவன் மட்டும் அந்த இனிப்பை உண்டு, அதை ஜீரணித்து, அதிலிருந்து வலிமையைப் பெற்றான். இதன் உட்பொருள் என்ன?

தெய்வீக போதனைகளை புத்தகங்களில் பாதுகாத்து வைத்திருப்பது மட்டும் போதுமானதல்ல. அந்த அமுதமயமான போதனைகளை உங்கள் இதயத்தில் ஏற்று, அவற்றை நன்கு சிந்தித்து, வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டும். அப்போதுதான் “புஷ்டி” மற்றும் “சந்துஷ்டி” — அதாவது வலிமையும் மகிழ்ச்சியும் — கிடைக்கும்.

நீங்கள் கேட்கும், படிக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் அனைத்து புனிதமான போதனைகளையும் உங்கள் இதயத்தில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதயத்தில் பதிந்தவற்றை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் உண்மையான நிறைவு கிடைக்கும்.

உணவு உண்ணுவது மட்டும் போதாது; அதை ஜீரணிக்கவும் வேண்டும். அதுபோலவே, நல்லவற்றைக் கேட்பதும் படிப்பதும் மட்டும் போதாது; அவற்றை அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்தி அனுபவிக்க வேண்டும்.

அன்பின் பரம்பொருள் தத்துவம்

 ஒவ்வொருவரும் இந்தப் புனிதமான அன்புத் தத்துவத்தை உணர முயற்சி செய்ய வேண்டும். அன்பு என்பது இயற்கையை குறிக்கும் ஒன்றல்ல; அது இயற்கையைத் தாண்டிய உயர்ந்த தத்துவமாகும். அன்பு இயற்கைக்குள் அடங்கியதல்ல; மாறாக, இயற்கையே அன்புக்குள் அடங்கியுள்ளது. அதுபோல, அன்பு இந்தப் பிரபஞ்சத்துக்குள் இருப்பதல்ல; இந்தப் பிரபஞ்சமே அன்புக்குள் அடங்கியுள்ளது.

ஒரு கைக்குட்டையை நான் என் கையில் பிடித்திருக்கிறேன் என்றால், அதற்குப் பொருள் என்ன? என் கை அந்தக் கைக்குட்டையை விட பெரியது என்பதே அதன் அர்த்தம். அதுபோல, “அன்பு இந்தப் பிரபஞ்சத்துக்குள் அடங்கியுள்ளது” என்று சொன்னால், பிரபஞ்சம் அன்பை விட பெரியது என்ற பொருள் தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. உண்மையில், அன்பே இந்தப் பிரபஞ்சத்தை விட உயர்ந்ததும் பரந்ததும் ஆகும்.

அன்பு இந்தக் கண்ணுக்குத் தெரியும் உலகத்தின் கட்டுப்பாட்டில் இல்லை; மாறாக, இந்த உலகமே அன்பின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. படைப்பு, பாதுகாப்பு, லயம், காலம், காரணம் மற்றும் விளைவு — இவை அனைத்தும் அன்புக்குள் அடங்கியவையாகும். அன்பைத் தவிர இந்த உலகில் உள்ள மற்ற அனைத்தும் உடல்சார்ந்ததும் நிலையற்றதும் ஆகும்.

இந்த உடல் எவ்வளவு காலம் நிலைத்திருக்கும்? அது தற்காலிகமானது. இந்த நிலையற்ற உடலை அடிப்படையாகக் கொண்ட அன்பும் தற்காலிகமானதே. ஆனால் ஆத்மா, பிரம்மம் அல்லது இதயம் எனப்படும் தெய்வீகத் தத்துவம் மட்டுமே உண்மையானதும் நித்தியமானதும் ஆகும்.

இந்த நித்தியமான உண்மையான அன்புத் தத்துவத்தை உணர்ந்து கொள்ளுதல் மனிதனின் முதன்மையான கடமையாகும்.

ஆசைகளுக்கு எல்லை அவசியம்

 ஆசைகள் என்பது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானவை. ஒருவர் இளைஞராக இருந்தாலும் முதியவராக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், சாதாரண மனிதராக இருந்தாலும் முனிவராக இருந்தாலும் ஆசைகள் அனைவரிடமும் காணப்படுகின்றன. ஆனால், நல்ல ஆசைகளை வளர்த்துக் கொள்வது மிகவும் முக்கியமானது. உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற விருப்பம், ஒழுக்கமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம், சிறந்த மாணவனாக உருவாக வேண்டும் என்ற நோக்கம், அல்லது தெய்வீகப் பாதையில் நடக்க வேண்டும் என்ற தாபம் போன்றவை உயர்ந்த ஆசைகளாகும்.

மனிதன் உலகத்தில் வாழ வேண்டியிருப்பதால் அவனுக்கு ஆசைகள் இருப்பது இயல்பானதே. ஆனால் அவற்றிற்கு ஒரு வரம்பு இருக்க வேண்டும். கலியுகத்தின் தாக்கத்தால் மனிதனின் ஆசைகள் எல்லையை மீறி வளர்ந்துவிட்டன. அதன் விளைவாக அவன் மன அமைதியை இழந்து, எப்போதும் பதற்றத்திலும் அமைதியின்மையிலும் வாழ்கிறான்.

மனிதனின் அளவற்ற ஆசைகள் அவனை கட்டிப் போடும் சங்கிலிகளைப் போன்றவை. ஆசைகளால் கட்டுண்டவன் தனது சுதந்திரத்தையே இழக்கிறான். மிருகங்களுக்கும் ஆசைகள் உள்ளன. ஆனால் அவை மனிதனுடைய ஆசைகளைப் போல அளவில்லாதவை அல்ல. மிருகங்களுக்கு ஒரு காரணமும் ஒரு காலமும் உண்டு; ஆனால் மனிதனுக்கு காரணமும் இல்லை, காலமும் இல்லை. இதுவே இன்று மனிதன் பல துன்பங்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்வதற்கான முக்கிய காரணமாகும்.

மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றில் குறைபாடு இல்லை. அப்படியிருக்கையில், அவன் ஏன் அமைதியின்றி தவிக்கிறான்? அதற்குக் காரணம் அவனுடைய அளவுக்கு மீறிய ஆசைகளே. எனவே, மனிதன் தனது ஆசைகளுக்கு ஒரு வரம்பை விதிக்க வேண்டும்.

“குறைந்த சுமை அதிக சுகம் தரும்” என்பார்கள். வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம். அந்த நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் தேவையற்ற ஆசைகள் என்ற அதிக சுமைகளை சுமந்து செல்லக்கூடாது. வேதாந்த மொழியில் இதுவே “வைராக்யம்” அல்லது துறவு என்று அழைக்கப்படுகிறது.

திருக்குறள் மனனப் போட்டிகள் - 2026

இப் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் முற்பகல் 10.00 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.

போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் வயது வரம்பும்

பிரிவுகள்

பிறந்த திகதி விபரம்

பாலர் ஆரம்ப பிரிவு

01.08.2021 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்

பாலர் பிரிவு

01.08.2019 க்கும் 31.07.2021 க்கும் இடையில் பிறந்தவர்கள்

கீழ்ப்பிரிவு

01.08.2017 க்கும் 31.07.2019 க்கும் இடையில் பிறந்தவர்கள்

மத்தியபிரிவு

01.08.2014 க்கும் 31.07.2017 க்கும் இடையில் பிறந்தவர்கள்

மேற்பிரிவு

01.08.2011 க்கும் 31.07.2014 க்கும் இடையில் பிறந்தவர்கள்

அதிமேற்பிரிவு

01.08.2007 க்கும் 31.07.2011 க்கும் இடையில் பிறந்தவர்கள்

 கீழே விண்ணப்பப் படிவத்திற்கான இணைப்பு உள்ளது.

ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2026

தயவுசெய்து 2026 ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

போட்டிக்கான விதிமுறைகள்,  கூடுதல் விவரங்கள் மற்றும் ஆவணங்கள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் குழந்தைகளின் வயதை கவனத்தில் கொண்டு, அவர்கள் சரியான பிரிவுகளில் பங்கேற்பதை உறுதிப்படுத்துங்கள்.  

மேலும் தகவல்களுக்கு கருணாசலதேவாவை 0418442674 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.