சுயசரிதை பாங்கில் அமைந்த ஒரு விதையின் இருமலர்கள் –
Two Blooms of One Seed என்ற நூல் எனக்கு அண்மையில் படிக்கக் கிடைத்தது.
நண்பர் ஶ்ரீபாலன் இதனை எனக்குத்தந்தார். இந்நூலை எழுதியிருப்பவர்
எனது மற்றும் ஒரு நண்பர் திரு. கந்தசாமி சரநாதன்.
கவிதைத்துறையில்
ஈடுபாடுமிக்கவரான சரநாதன், தனது கதையையும் கவிதையாகவே புனைந்துள்ளார். அதனால், இலக்கிய நயத்தையும் நாம் உணர்கின்றோம். தமிழிலும்
ஆங்கிலத்திலும் இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது.
இந்நூலுக்கு சிட்னியில் வதியும் கவிஞர் த. நந்திவர்மன் அணிந்துரை
வழங்கியிருக்கிறார். சரநாதன், தனது இளமைக்காலம்
முதல் தீவிர வாசகராகவும், கலை இலக்கியங்களில்
ஆர்வம் மிக்கவராகவும் விளங்கியவர். பாடசாலைக்காலத்தில் மட்டுமன்றி, கல்லூரியில்
பிரவேசித்த பின்னரும், அதன்பிறகு இலங்கை பல்கலைக்கழகத்திற்கு ( பேராதனை பல்கலைக்கழகம் )
பிரவேசித்த பின்னரும் எழுத்து முயற்சிகளில் ஈடுபட்டவர்.
பல்கலைக்கழகத்தில் இவர் பயின்ற வேளையில் சமகால தத்துவ சாஸ்திர விரிவுரையாளர், தற்போது மெல்பனில் வதியும், கலாநிதி
எஸ்.வி. காசிநாதனுடன் யுகம் என்ற பல்கலை பதிப்பு நூலில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.
அவரே இந்நூலுக்கு ஆங்கிலத்தில் முன்னுரையும் வழங்கியிருக்கிறார்.
ஒருவரது சுயசரிதையின் மூலம்,
அவரது வாழ்க்கையை மாத்திரமின்றி, வாழ்வியல் அனுபவங்களையும் , அவர் கடந்து வந்த பாதையையும் நாம் தெரிந்துகொள்கின்றோம். அத்துடன் அகவயமான - புறவயமான பக்கங்களையும் தரிசிக்க
முடியும்.
ஒரு வறிய குடும்பத்தில் பிறந்திருக்கும் சரநாதன்,
தமது பெற்றோர் குறித்தும், உறவினர்கள் பற்றியும் அவர்களின் குணவியல்புகள் தொடர்பாகவும்,
எழுதியிருக்கிறார்.
இவரது அருமைத்தாயார் பூமணி தையல்முத்து அவர்கள்
அண்ணல் காந்தி அடிகள் பற்றியெல்லாம் சொல்லி வளர்த்திருக்கிறார். வாழ்வியல் விழுமியங்களை காந்தி அடிகளின் சரிதைகளிலிருந்து
எடுத்துக்காண்பித்துள்ளார்.
அவ்வாறு நல்ல போதனைகளை கேட்டு வளர்ந்த சரநாதன், தனது எதிர்காலம்
எவ்வாறு அமையவேண்டும் என்பதை தனக்குள்ளாகவே தீர்மானித்திருக்கிறார்.