அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நாட்டு மக்களுக்கு பாதகமாக அமையாது; குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக தீர்மானத்தை மீளப்பெற போவதில்லை - ஜனாதிபதி
மெல்பேர்ன் - கொழும்பு நேரடி விமான சேவை : ‘ஜெட்ஸ்டார்’ குழுவினர் அமைச்சர் அனுர கருணாதிலக்கவுடன் சந்திப்பு
திருகோணமலையில் 29 எண்ணெய்த் தாங்கிகளை நீண்டகால குத்தகைக்கு வழங்க தீர்மானம் : பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
ஜெட்ஸ்டாரின் வாரத்திற்கு மூன்று சேவைகள் : மெல்பேர்ன் – கொழும்பு நேரடி விமானப் போக்குவரத்து ஆரம்பம் !
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நாட்டு மக்களுக்கு பாதகமாக அமையாது; குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக தீர்மானத்தை மீளப்பெற போவதில்லை - ஜனாதிபதி
Published By: Vishnu
26 Aug, 2026 | 08:01 PM
(இராஜதுரை ஹஷான்)
நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எதிரான எந்த தீர்மானத்தையும் நான் எடுக்கபோவதில்லை. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பில் தவறான நிலைப்பாடு தோற்றுவிக்கப்படுகிறது. நீதியை தேடும் மற்றும் நீதியை பெற்றுக்கொள்ளும் மக்களின் எதிர்பார்ப்பை விரைவுப்படுத்துவதற்காகவே இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தால் நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இருப்பினும் பாதாளக்குழுக்களுக்கும், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் இது பாதகமாக அமையலாம்.நாட்டு மக்களின் நலனுக்காக எடுக்கும் எந்த தீர்மானத்தையும் ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புக்களினால் இடைநிறுத்த போவதில்லை, மீளப்பெறுவும் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நீர்கொழும்பில் புதன்கிழமை (26) நடைபெற்ற 42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழா நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நபிகள் நாயகம் அமைதி, கருணை மற்றும் மனித நேயத்தை உலகுக்கு போதித்துள்ளார். ஆனால் இன்றைய உலகில் அந்த போதனைகளுக்கு எதிர்மறையான செயற்பாடுகள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது. சகல மதங்களும் அமைதி, கருணை மற்றும் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஆகவே மத தலைவர்களுக்கு கையளிக்க முடியாத பொறுப்பு உண்டு. மதங்களின் சிறந்த போதனைகளை இளம் தலைமுறையினருக்கு போதிக்க வேண்டும்.
இலங்கையானது கடந்த காலங்களில் இனவாத முரண்பாடுகள், இனவாத கலவரங்களால் பாரிய இழப்புக்களை எதிர்கொண்டுள்ளது. வடக்கு, கிழக்கு உட்பட சகல மாகாணங்களிலும் இனவாத முரண்பாடுகளினால் இளைஞர்கள் உயிரிழந்துள்ளார்கள். இவ்வாறான மோசமான நிலைமை இனியொரு போதும் ஏற்படாது.
நாட்டில் இனியொருபோதும் இனவாத முரண்பாடுகளுக்கும், இன கலவரங்களுக்கும் இடமில்லை. ஏனெனில் கடந்த கால கசப்பான சம்பவங்களால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆகவே எதிர்காலத்தில் அவ்வாறான கசப்பான சம்பவங்கள் தோற்றம் பெறுவதற்கு இடமளிக்க முடியாது.
நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் சட்டவாட்சி கோட்பாடு சிறந்த முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை செயற்பாடுகள் ஊடாக நிரூபித்துள்ளேன். சட்டத்தின் முன் எவருக்கும் விசேட சலுகை வழங்கப்படாது. சட்டத்தை கடுமையாக செயற்படுத்தாமல் முறைமை மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
அரச சேவையை மறுசீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கான அரச சேவை வினைத்திறனாக்கப்படும். எதிர்வரும் ஜனவரி மாதம் அரச சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும். சமூக கட்டமைப்பை அச்சுறுத்தும் கறுப்பு அரக்கனாகவே போதைப்பொருள் பாவனை காணப்படுகிறது. அரச இராச்சியத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்படும் போதைப்பொருள் எனும் கறுப்பு இராச்சியம் அரச இயந்திரத்தின் ஒரு சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது.போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குழு செயற்பாடுகளை முழுமையாக இல்லாதொழிப்பேன். விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்கால தலைமுறைக்காக இதனை செய்ய வேண்டும்.
போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாதாளக் குழுவின் செயற்பாடுகளுக்கு கடந்த காலங்களில் அரச அனுசரணை வழங்கப்பட்டது. நீர்கொழும்பு மக்கள் அதனை நன்கு அறிவார்கள். போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழுக்களை அழிப்பதற்கு முப்படைகளையும், அரச அதிகாரத்தையும் முழுமையாக பயன்படுத்துவேன்.
நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எதிரான எந்த தீர்மானத்தையும் நான் எடுக்கபோவதில்லை. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பில் தவறான நிலைப்பாடு தோற்றுவிக்கப்படுகிறது. நீதியை தேடும் மற்றும் நீதியை பெற்றுக்கொள்ளும் மக்களின் எதிர்பார்ப்பை விரைவுப்படுத்துவதற்காகவே இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தால் நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இருப்பினும் பாதாளக்குழுக்களுக்கும், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் இது பாதகமாக அமையலாம்.
நீதியை தேடும் மற்றும் நீதியை பெறும் பொறிமுறையில் பல பிரச்சினைகள் காணப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு சம்பவத்துக்கு 2026 ஆம் ஆண்டு தீர்ப்பு கிடைப்பதாயின் நீதியின் மீதான மக்களின் நம்பிக்கை வலுவற்றதாகும். ஆகவே நீதி கிடைப்பனவை விரைவுப்படுத்துவதற்காகவே நீதித்துறை கட்டமைப்பை மறுசீரமைக்கப்படவுள்ளது.
நாட்டு மக்களின் நலனுக்காக எடுக்கும் எந்த தீர்மானத்தையும் ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புக்களினாலும் இடைநிறுத்த போவதில்லை. மீளப்பெறுவும் போவதில்லை. தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் சகல தரப்பிலும் கலந்துரையாடியுள்ளோம். தீர்மானம் எடுத்ததன் பின்னர் அந்த தீர்மானத்தை மீளப்பெற போவதில்லை.
நபிகள் நாயகத்தின் கோட்பாடுகள் மற்றும் போதனைகளுக்கு அமைவான நிர்வாகத்தை உருவாக்குவதற்கான சிறந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றை உறுதியான முறையில் செயற்படுத்துவேன் என்றார். நன்றி வீரகேசரி
மெல்பேர்ன் - கொழும்பு நேரடி விமான சேவை : ‘ஜெட்ஸ்டார்’ குழுவினர் அமைச்சர் அனுர கருணாதிலக்கவுடன் சந்திப்பு
26 Aug, 2026 | 04:49 PM
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரத்திலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குத் தனது முதலாவது நேரடி விமான சேவையைத் தொடங்கிய ஜெட்ஸ்டார் (Jetstar) நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவினர், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்கவை இன்று (26) காலை அமைச்சரவை வளாகத்தில் சந்தித்தனர்.
நிறுவனத்தின் வணிக விவகாரங்களுக்கான நிர்வாக முகாமையாளர் ஸ்காட் ஸ்கெலின் தலைமையிலான இக்குழுவினர், அமைச்சுச் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கல மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல ஆகியோருடனும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடினர்.
நன்றி வீரகேசரி
திருகோணமலையில் 29 எண்ணெய்த் தாங்கிகளை நீண்டகால குத்தகைக்கு வழங்க தீர்மானம் : பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
26 Aug, 2026 | 03:43 PM
(இராஜதுரை ஹஷான்)
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளில் பராமரிக்காமல் கைவிடப்பட்டுள்ள 29 எண்ணெய் தாங்கிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திக்குமார தெரிவித்தார்.
திருகோணமலை எண்ணெய் தாங்கி மறுசீரமைப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எண்ணெய் தாங்கிகளை மறுசீரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.பெற்றோலிய டேர்மினல் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான 61 தாங்கிகளில் 29 தாங்கிகள் முறையாக பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
இந்த 29 தாங்கிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வெகுவிரைவில் அந்த பணிகள் நிறைவுபடுத்தப்படும்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கண்காணிப்புக்கு அமைவாக 2 தாங்கிகள் முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளன. 3 தாங்கிகள் தற்போது புனரமைக்கப்பட்ட வண்ணம் காணப்படுகிறது. வெகுவிரைவில் அந்த பணிகளும் நிறைவுபடுத்தப்படும்.
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளில் இருந்து உச்ச பயனை பெற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலும் அதற்குரிய ஒத்துழைப்புக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றார். நன்றி வீரகேசரி
ஜெட்ஸ்டாரின் வாரத்திற்கு மூன்று சேவைகள் : மெல்பேர்ன் – கொழும்பு நேரடி விமானப் போக்குவரத்து ஆரம்பம் !
Published By: Priyatharshan
26 Aug, 2026 | 10:22 AM
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இருந்து இலங்கையின் கொழும்பு நோக்கி ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways) நிறுவனத்தின் முதலாவது விமானம் செவ்வாய்க்கிழமை (25) இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இலங்கைக்கான ஜெட்ஸ்டாரின் புதிய விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதை முன்னிட்டு, விமான நிலையத்தில் குறித்த விமானத்திற்கு விசேட நீர் பீச்சி வரவேற்பு (Water Salute) அளிக்கப்பட்டது.
Boeing 787 Dreamliner ரகத்தைச் சேர்ந்த குறித்த விமானம், செவ்வாய்க்கிழமை (25) இரவு 6.24 மணியளவில் Jetstar நிறுவனத்தின் JQ-005 விமானமாக மெல்பேர்னில் இருந்து 271 பயணிகள் மற்றும் 13 விமானப் பணியாளர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து, இலங்கையின் பாரம்பரிய கலை மற்றும்
கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் கண்டிய நடனக் கலைஞர்களின் சிறப்பு கலைநிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜெட்ஸ்டாரின் இந்த விமான சேவை இனிமேல் வாரத்திற்கு மூன்று நாட்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மெல்பேர்ன் மற்றும் கட்டுநாயக்க இடையே இயக்கப்படவுள்ளது.
மெல்பேர்னிலிருந்து இலங்கைக்கான இந்த விமானப் பயணத்திற்கு சுமார் 10 மணி நேரம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை இடையே குறைந்த கட்டண (Low Fares) விமான சேவையை வழங்கும் நோக்கில் இந்த புதிய சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜெட்ஸ்டாரின் முதலாவது விமானத்தை வரவேற்கும் நிகழ்வு கட்டுநாயக்க விமான நிலையத்தின் “சில்க் ரூட்” (Silk Route) பயணிகள் முனையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வர்த் (Matthew Duckworth), இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கப்டன் தமிந்த ரம்புக்வெல்ல உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஜெட்ஸ்டாரின் புதிய சேவை மூலம் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான விமானப் போக்குவரத்து தொடர்புகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி வீரகேசரி
நன்றி வீரகேசரி








No comments:
Post a Comment