தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அவதாரத் திருநாள் – அன்பும் சேவையும் வாழ்வின் இரு கண்கள்!

நவம்பர் 23 – பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் பிறந்தநாள்



உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான பக்தர்களின் இதயங்களில் அன்பு, அமைதி, சேவை, ஒற்றுமை ஆகிய உயரிய நற்பண்புகளை விதைத்த பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அவதாரத் திருநாளை நவம்பர் 23ஆம் நாளான இன்று நாம் பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுகிறோம்.

1926ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் நாள், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள புட்டபர்த்தி என்னும் சிற்றூரில் ஸ்ரீ சத்ய நாராயண ராஜு என்ற திருநாமத்துடன் அவதரித்தார் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா. சிறுவயதிலிருந்தே அன்பு, கருணை, ஆன்மிகச் சிந்தனை, பிறருக்கு உதவும் மனப்பான்மை ஆகிய உயரிய பண்புகளை வெளிப்படுத்தினார்.

அவர் உலகிற்கு வழங்கிய மிக முக்கியமான செய்தி:

“அனைவரையும் நேசியுங்கள்; அனைவருக்கும் சேவை செய்யுங்கள்.”

இந்த எளிய வாசகத்தில் மனித வாழ்க்கையின் மிக உயர்ந்த தத்துவம் அடங்கியுள்ளது.

மனிதநேயமே உண்மையான ஆன்மிகம்!

பகவான் சத்ய சாயி பாபா மனிதகுலத்திற்கு ஐந்து அடிப்படை மனிதநேய விழுமியங்களை எடுத்துரைத்தார்.

  1. சத்தியம் (Truth) – எப்போதும் உண்மையைப் பேசுதல்.

  2. தர்மம் (Righteousness) – நேர்மையுடனும் நியாயத்துடனும் வாழ்தல்.

  3. சாந்தி (Peace) – மன அமைதியையும் பொறுமையையும் வளர்த்துக்கொள்ளுதல்.

  4. பிரேமை (Love) – எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துதல்.

  5. அஹிம்சை (Non-violence) – எவருக்கும் தீங்கு விளைவிக்காமல் வாழ்தல்.

இந்த ஐந்து மனிதநேய விழுமியங்களையும் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதே உண்மையான ஆன்மிகப் பயிற்சி என்று அவர் வலியுறுத்தினார்.

மனிதன் எத்தனை நூல்களைக் கற்றாலும், எத்தனை ஆலயங்களுக்குச் சென்றாலும், எத்தனை வழிபாடுகளைச் செய்தாலும், அவனுடைய மனதில் அன்பும் இரக்கமும் இல்லையெனில் அந்த வழிபாடுகளால் முழுமையான பயன் கிடைக்காது என்பதை அவர் உணர்த்தினார்.

மனித சேவையே மாதவ சேவை!

பகவான் சத்ய சாயி பாபாவின் போதனைகளில் சேவைக்கு மிக முக்கியமான இடம் உண்டு.

தீதும் நன்றும் பிறர்தர வாரா !


 










மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்   ….. அவுஸ்திரேலியா





ஓலைக் குடிசை இருப்பாரும் உறங்குகிறார்
ஓட்டு வீட்டில் இருப்பாரும் உறங்குகிறார்
காலை எழும்புவோம் எனும் நம்பிக்கையால்
ஞாலம் இருப்போர் உறங்கிடச்  செல்லுகின்றார்

ஆசையும் காதலும் அனைவர்க்கும் உண்டு
காதலும் மோதலும் நோதலும் உண்டு
சாதல் என்பது அனைவர்க்கும் சமமே 
வாதமும் வழக்கும் வேண்டாமே நமக்கு

கஷ்டங்கள் என்பது யாவர்க்கும் உண்டு
கஷ்டத்தைக் கவலையாய் மாற்றிட  வேண்டாம்
கஷ்டத்தை நினைத்தால் தவிர்த்தே விடலாம்
கருத்தினில் எடுத்தால் கலக்கம் அகலும்

ஒளிவளர் விளக்குகள் ஏற்றிடுந் திருநாள் !


 












   

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 






கருணையின் வடிவாய் கடவுள் இருக்கிறார்
ஒளிவடி வாகியும் இருக்கிறார் கடவுள்
கடவுளை பற்பல வடிவமாய் பார்க்கிறார்
கற்பனை கற்சிலை ஆக்கியும் நிற்கிறார்

ஒவ்வொரு மாதமும் உயர்வுடை மாதமே
உயர்வுடை தத்துவம் உணர்த்திடும் மாதமே
கார்த்திகை என்றதும் கருத்தெலாம் வருவது
கனற்பொறி தோன்றிய கந்தனின் தோற்றமே

கனற்பொறி என்றதும் கந்தனின் தந்தை
கயிலை நாதனே கருத்தினில் வருவான்
ஒளிப் பிளம்பாக உமைபாகன் தோன்றிய
உயர்வினைப் பெறுவதும் கார்த்திகைத் தினமே

ஜெகமெல்லாம் ஆட நீவருக முருகா !


 











 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்   ….. அவுஸ்திரேலியா





அழகு மயிலேறி ஆடிவரும் கந்தா
குறமகளைக் கூடே கூட்டிவரும் கந்தா
அசுரர் களைத்தாட  வைத்த  முருகையா 
அப்பன் சிவனாட  அமர்ந்துபார் ஐயா

பொறியாக வந்தாய் போராடி வென்றாய்
பொல்லாத அரக்கரை வென்றாடி நின்றாய்
தேவரைக் காத்தாய் சிறையினைத் தகர்த்தாய்
யாவரும் வணங்கும் தெய்வமாய் ஆகினாய்

தெய்வானை ஆட வள்ளியும் ஆட
தேவரும் சேர்ந்துமே ஆடியே நிற்க
சிவனாரும் ஆட பார்வதியும் ஆட
ஜெகமெல்லாம் ஆட  நீவருக முருகா  

"பொருள் புரிந்த குறள்!” ... மெல்போர்ன் அறவேந்தன்

 















எங்கள் காலத்துக் கவிஞன் (கன்பரா யோகன்)

 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. 1985 இல் மண் சுமந்த மேனியர் நாடக நாட்களில் பழக முன்னரே சேரனின் இரண்டாவது சூரிய உதயம், யமன் கவிதை தொகுதிகளை அறையில் வைத்திருந்தேன். பல்கலைக்கழகத்தின் முன் இருந்த மணியம் புத்தகக் கடையில் வாங்கியிருந்த அந்தக் கவிதைகளில் பல மனப்பாடம் ஆகியிருந்தன

 சேரனின் கவிதைகளில் அந்தக் கால போரின் வலி, மண்ணின் உயிர்த் துடிப்பு, போராட்ட அறைகூவல் அனைத்தும் இருந்தன. கவிதைகளில் பொருந்தும் படிமங்கள் செறிந்திருந்தது நினைவில் இன்னும் நிற்கின்றது. ஒரு கவிதையில் தனது தோட்டத்தில் பறவைகளைப் துரத்த பட்டாசு கொழுத்தி போட்ட ஒருவரை இராணுவம் துப்பாக்கி வேட்டு வைத்தார் என்று கைது செய்து சித்திரவதை செய்தது பற்றியதை சொல்கிறார். அந்த கவிதையில் ஒரு இடத்தில் நறுக்காக

 “ பறந்து போனது பறவைக்  கூட்டம்

   பிறகு வந்தது மிருகக் கூட்டம்”

 என்று நயம்பட எழுதியிருந்தார்.

 சேரனின் கவிதைகள் காலத்தைப் பிரதிபலித்தன. தாயக மண்ணில் அவர் படைப்பில் உருவான ‘எங்கள் மண்ணும் இந்த நாட்களும்’ - கவிதா நிகழ்வு, ‘மாயமான்’ - வீதி நாடகம் ஆகியவற்றிலும்

மற்றும் அவரது பல கவிதைகளைக் கொண்டிருந்த 'மண் சுமந்த மேனியர் ' நாடகத்திலும் பங்கு பற்றியிருந்தவன்  என்ற வகையில் சேரனுடனான நட்பு வயது, அந்தஸ்து என்ற எல்லைகளைக் கடந்து பல ஆண்டுகள் நீடித்திருந்தது.

 துரதிஷ்ட வசமாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் கனடா சென்றிருந்தபோது அவரை நேரில் சந்திக்க முடியவில்லை. அப்போது அவர் உடல் நலக்குறைவுடன் இருந்தாலும் என்னைச் சந்திக்க ஆவலாயிருந்தார். ஒரு புதன்கிழமை வந்து சந்திப்பதாக தொலைபேசியில் சொன்னேன். பிறகு அவரது விலாசத்தை கேட்க போன்  எடுத்தபோது அவர் எடுக்கவில்லை எனவே குறுஞ்செய்தியில்

 'ப்ளீஸ் கிவ் மீ எ ரிங் ' என்று அனுப்பினேன். பதிலுக்கு அவரது குறும்பு மிக்க குறுஞ் செய்தியை அனுப்பியிருந்தார்.

 'டயமண்ட், கோல்ட் ஓர் சில்வர்?' என்ற கேள்விதான் அது.

 அந்தப் புதன்கிழமைக்கு இரு நாட்கள் முன்பு மீண்டும் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்

'மன்னிக்கவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளேன். உன்னைச் சந்திக்க முடியவில்லை'

 எனக்கு அதிர்ச்சியாயிருந்தது என்றாலும் அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை அறிந்திருந்தேன் . அதன் பிறகு எனது அழைப்புக்களை அவரால் எடுக்க முடியவில்லை. நானும் அவுஸ்திரேலியா திரும்பி விடடேன். அதுவே அவருடனான எனது இறுதித் தொடர்பாடலாகி விட்டது.  எங்கள் காலத்துக் கவிஞன் சேரனுக்கு எனது அஞ்சலி.

 

வியட்நாம் நாட்டில் எமது மறக்க முடியாத சுற்றுலாப் பயணம் - கு. கருணாசலதேவா

 04 - 16 நவம்பர் 2026 – ஒரு பயண அனுபவப் பகிர்வு

எமது அண்மைக்கால வியட்நாம் சுற்றுலாப் பயணத்தின் இனிய அனுபவங்களையும், மறக்க முடியாத நினைவுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

TripADeal நிறுவனத்தின் ஏற்பாட்டில், சிட்னியிலிருந்து வியட்நாம் நாட்டிற்குச் சுற்றுலா சென்றிருந்தோம்.

வரலாறு, கலாசாரம், இயற்கை அழகு, பாரம்பரியம் எனப் பல சிறப்புகளைக் கொண்ட ஒரு நாட்டை நேரில் காணும் அரிய வாய்ப்பு எமக்குக் கிடைத்தது.

போராட்டங்கள் நிறைந்த வரலாற்றைக் கொண்ட வியட்நாம், இன்று வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு நாடாக விளங்குகின்றது. பாரம்பரிய வாழ்க்கை முறையையும் நவீன வளர்ச்சியையும் ஒருங்கே கொண்ட இந்நாட்டின் நகரங்களும், மக்களும், இயற்கைக் காட்சிகளும் எம்மை மிகவும் கவர்ந்தன.

எமது பயணத்தில் ஹோ சி மின் நகரம் (Ho Chi Minh City), ஹோய் ஆன் (Hoi An), ஹனோய் (Hanoi), ஹா லோங் விரிகுடா (Ha Long Bay) மற்றும் நின் பின் ( Ninh Binh)ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தோம்.

எமது பயண அனுபவங்களை ஒவ்வொன்றாக உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

1. ஹோ சி மின் நகரம் – தெற்கு வியட்நாமின் பரபரப்பான நகரம்

எமது பயணத்தின் முதல் இலக்காக அமைந்தது ஹோ சி மின் நகரம். இது முன்னர் சைகோன் (Saigon) என அழைக்கப்பட்டது.

வியட்நாமின் மிகப்பெரிய நகரமாக விளங்கும் இங்கு ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

அங்கு சென்றவுடன் எமது கவனத்தை மிகவும் ஈர்த்தது வீதிகளில் காணப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் ஸ்கூட்டர்களும் ஆகும்!

ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் எல்லாத் திசைகளிலும் சென்றுகொண்டிருந்தன. ஆனால், அந்தப் போக்குவரத்து நெரிசலுக்கிடையிலும் உள்ளூர் மக்கள் மிகவும் சாதுரியமாகப் பயணித்த விதம் வியப்பை ஏற்படுத்தியது.

அடுத்ததாக, நகரத்திலிருந்து சுமார் 60 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள புகழ்பெற்ற கு சி சுரங்கப்பாதைகளைப் பார்வையிட்டோம்.

வியட்நாம் போராட்டக் காலத்தில், வெளிநாட்டுப் படைகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வியட்நாமியப் போராளிகளால் இந்த நிலத்தடி சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டன.

இந்தச் சுரங்கங்கள் வெறும் மறைவிடங்களாக மட்டும் இருக்கவில்லை. அவற்றுக்குள் மக்கள் வசிப்பதற்கான அறைகள், சமையலறைகள், மருத்துவமனைகள், ஆயுதக் களஞ்சியங்கள் மற்றும் கட்டளை மையங்கள் எனப் பல வசதிகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஒரு காலத்தில் சுமார் 10,000 பேர் இந்தச் சுரங்கப்பாதை அமைப்பில் வாழ்ந்ததாக அறிந்தோம்.

மிகவும் கடினமான சூழ்நிலைகளில் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதைக் காண்பது ஆச்சரியமாக இருந்தது.

வியட்நாமிய மக்களின் மன உறுதி, துணிவு, தன்னம்பிக்கை மற்றும் போராட்ட உணர்வை இந்தச் சுரங்கப்பாதைகள் எடுத்துக்காட்டுகின்றன.

இந்தப் பயணம் வியட்நாமின் வரலாற்றையும், சுதந்திரத்திற்காக அந்நாட்டு மக்கள் மேற்கொண்ட போராட்டங்களையும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவியது.

யுகங்களின் குரல் "கவிஞர் மீரா" பதிவும் பகிர்வும்


 


லலிதா - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 

தமிழ் சினிமா புது நடிகர்களை உள் வாங்கி கொண்டிருந்த 1976 கால கட்டத்தில் பழைய நடிகரான ஜெமினி கணேசனை கதாநாயகனாகப் போட்டு கலரில் படம் ஒன்றைத் தயாரிக்கும் துணிவு ஒருவருக்கு வந்தது. அவர்தான் வலம்புரி சோமநாதன். அவர் தயாரித்த படம் லலிதா.


 1950களில் சக்தி என்ற ஒரு மத இதழ் வெளிவந்து கொண்டிருந்தது. இதன் ஆசிரியர் வை. கோவிந்தன். வைகோ என்று அவரை அழைப்பார்கள்! இவருடைய பத்திரிகை பாசறையில் பயின்றவர்கள் ஏராளம். கண்ணதாசன், தமிழ்வாணன் , ரா .கி . ரங்கராஜன், என்று பலர் இவரிடம் பணியாற்றினார்கள். அவர்களுள் ஒருவர் வலம்புரி சோமநாதன். 

 எல்லோரையும் போல் இவரும் ஒரு சந்தர்ப்பத்தில் அங்கு இருந்து

விலகி தனிப் பயணம் கண்டார். அதன் பலனாக கதாசிரியராகவும், படத் தயாரிப்பாளரும் , இயக்குனருமானார் வலம்புரி. ஆரம்பத்தில் ஏவி எம்மின் என் மனைவி படம் படம் சிங்களத்தில் தயாரான போது அதன் உருவாக்கத்தில் பணியாற்றியவர் பின்னர் மணமகன் தேவை, மங்கையர் திலகம், கானல் நீர் படங்களுக்கு வசனங்களை எழுதினார். அதன் பின் தன் சொந்தப படமான திருமணம் படத்தை பீம்சிங் இயக்கத்தில் உருவாக்கினார். தொடர்ந்து பீம்சிங்குடன் பதிபக்தி, பந்தபாசம், பார் மகளே பார் போன்ற படங்களின் கதை உருவாக்கத்திலும் பங்கு பற்றினார் . ஒரு சந்தர்ப்பத்தில் ஹிந்தி திரை யுலகம் இவரை அரவணைத்துக் கொண்டது. இவ்வாறு பல மொழிகளில் அவர் செயல் பட அவருக்கு இருந்த ஆங்கில அறிவே காரணமாயிற்று . 

 1976 ல் திரைக் கதை வசனம் லலிதா படத்தை தயாரித்து டைரக்ட் செய்தார் வலம்புரி. சுஜாதாவின் முதல் கலர் படம் இதுவாகும். 

இராமாயணம் திரைப்படம் அனிதா ஜெயசிங்கம்

 இராமாயணம் படம் பார்த்தேன். தமிழில் பார்க்கக் கிடைக்கவில்லை. என்றாலும் பெரிய திரையில் பார்க்கும் போது கிடைக்கும் அனுபவம் வேண்டும் என்பதற்காக இந்தி மொழிப் படத்தைப் பார்த்தேன். உங்களுக்கு எல்லாம் எப்படியோ தெரியாது. எனக்கு இந்தி மொழி கேட்கும் போதெல்லாம், இந்திய அமைதிப்படை எம் ஊரை ஆக்கிரமித்த நாட்களும், அவர்கள் புரிந்த செயல்களும் தான் ஞாபகம் வரும். எனவே நான் அவற்றைத் தவிர்ப்பதுண்டு. என்றாலும் இராமாயணத்தை எப்படி எடுத்திருக்கிறார்கள் என்ற ஒரு ஆவல் இருந்தது. அத்துடன் சாய் பல்லவி சீதைக்குப் பொருத்தமாக இருப்பாவோ என்ற சந்தேகமும் இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் தகர்த்தது படத்தின் பிரமாண்டம். காட்சியமைப்புகளும் (visuals) தொழில்நுட்ப யுக்திகளும் (technology) மிகவும் நேர்த்தியாக இருந்தன. அரண்மனைகளைப் பிரமாண்டமாகக் காட்டுவதில் அதிக நேரம் செலவழிக்காமல், காடுகளையும், அங்கு வசிக்கும் அரக்கர்களையும், அவர்களுடன் ராம, இலக்குமன் போராடுவதையும் விரிவாகக் காட்டியுள்ளனர். 

இலங்கைச் செய்திகள்

மட்டக்களப்பபில் 8 பேருக்கு மரண தண்டனை கதறியழுத உறவினர்கள்

செம்மணி – சித்துபாத்தி மனிதப்புதைகுழி வழக்கு: அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றம் ஆராய்வு

நாமல் ராஜபக்‌ஷவுக்கு பிணை மறுப்பு ; டிசம்பர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு  



மட்டக்களப்பபில் 8 பேருக்கு மரண தண்டனை கதறியழுத உறவினர்கள் 

Published By: Vishnu

19 Nov, 2026 | 09:12 PM

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2008ஆம் ஆண்டு தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 பேரில், 8 பேருக்கு மரண தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் வியாழக்கிழமை (19.11.2026) தீர்ப்பளித்துள்ளது.

மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதுடன், வழக்கின் 9ஆவது எதிரியை விடுதலை செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி, தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவர் அப்போதைய செங்கலடி முகாமுடன் தொடர்புடைய ஈ.பி.டி.பி உறுப்பினர்களால் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

உலகச் செய்திகள்

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க, சீன, ரஷ்ய ஜனாதிபதிகள் சந்திப்பு

மும்பையில் சச்சின் டெண்டுல்கருடன் கிரிக்கெட் விளையாடிய பிரித்தானிய இளவரசர் வில்லியம், கேட்

“மரண அச்சுறுத்தலையும் மீறி டிசம்பரில் நாடு திரும்புவேன்” - பதவி நீக்கம் செய்யப்பட்ட பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அறிவிப்பு!


வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க, சீன, ரஷ்ய ஜனாதிபதிகள் சந்திப்பு

19 Nov, 2026 | 05:22 PM

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டிற்கு இடையே, சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகிய உலகின் மூன்று மிகப்பெரிய அணு ஆயுத வல்லரசுகளின் தலைவர்கள் இன்று வியாழக்கிழமை (19) வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பை நடத்தியுள்ளனர்.

சீனாவின் தெற்கு நகரமான ஷென்செனின் வடமேற்கு மலைப்பகுதியில் அமைந்துள்ள அரச விருந்தினர் மாளிகையான கைலின் வில்லாவில் சுமார் 90 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

வட்டமேசையைச் சுற்றி அமர்ந்து ஆரம்ப உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், "நாம் உண்மையிலேயே வரலாறு படைக்கிறோம்; பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகளை நிராகரிப்பதன் மூலம் எந்த அமைதியும் உருவாக்கப்பட்டதில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கைக்கான கல்வியே உண்மையான கல்வி!

மனிதன் உண்மையான முன்னேற்றத்தை அடைய வேண்டுமெனில், கல்வி என்பது வெறுமனே வேலைவாய்ப்பைப் பெற்று வாழ்க்கையை நடத்துவதற்கான ஒரு கருவி என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும். கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையிலான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட வேண்டும். கல்வி என்பது பிழைப்புக்காக மட்டுமல்ல; வாழ்க்கையைச் சிறப்பாகவும் அர்த்தமுள்ளதாகவும் வாழ்வதற்காக இருக்க வேண்டும்.

இந்த உண்மையை உணர்ந்து செயல்படுபவரே உண்மையில் கற்றறிந்தவராவார்.

பாரத நாட்டின் பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் உயரிய கலாசார விழுமியங்களையும் பாதுகாத்து வந்த ரிஷிகளும் முனிவர்களும் தொன்றுதொட்டு இந்த உண்மையை உணர்ந்து போதித்து வந்துள்ளனர்.

அறிவு என்பது வெறும் புத்தக அறிவு மட்டுமல்ல. புத்தகங்களில் உள்ள கருத்துகளையும் தகவல்களையும் மூளையில் பதிவு செய்து வைத்திருப்பது மட்டுமே கல்வியாகிவிடாது. மனிதனின் இதயத்தையும் உள்ளத்தையும் பண்படுத்தி, அவனிடம் நல்ல சிந்தனைகளையும் உயர்ந்த பண்புகளையும் உருவாக்குவதே கல்வியின் உண்மையான நோக்கமாகும்.

பிறருக்குச் செய்யும் சேவையே இறைவனுக்குச் செய்யும் உண்மையான வழிபாடு!

 சூர்தாஸ் கூறினார்:

“இறைவனுக்கு எனது சேவை தேவையில்லை. அவரிடம் இல்லாதது என்று எதுவுமில்லை. என்னைவிடச் சிறப்பாகவும் திறமையாகவும் சேவை செய்யக்கூடிய எண்ணற்ற பக்தர்கள் அவரிடம் இருக்கிறார்கள். ஆனால், அந்த இறைவனின் பக்தர்களில் பலர் துன்பத்திலும் துயரத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு அன்பும் ஆதரவும் உதவியும் தேவைப்படுகின்றன. எனவே, நான் அவர்களுக்குச் சேவை செய்து, அதன் மூலம் எனது ஆன்மாவை உயர்த்திக்கொள்வேன்.”

நமது வீட்டில் ஒரு திருமண விழா நடைபெறும்போது, ஏற்கெனவே வயிறு நிறைந்து உணவருந்தியவர்களைக்கூட மீண்டும் மீண்டும் உணவு உண்ணுமாறு வற்புறுத்துகிறோம். இதனால் உணவு வீணாகிறது. விருப்பமில்லாதவர்களுக்குக்கூட அளவுக்கு அதிகமாக உணவு பரிமாறப்படுகிறது. ஆனால், உணவின்றிப் பசியால் வாடி, ஒரு கவளம் உணவுக்காக வீட்டின் வாசலில் காத்திருப்பவர்களையோ கடுமையான சொற்களால் விரட்டியடிக்கிறோம். இது எத்தகைய முரண்பாடான செயல்!

இறைநாமத்தின் மகிமை – சிறிய விதையில் பெரிய விருட்சம்!

 ஒருமுறை, ஒரு யாத்திரிகர் இரவு நேரத்தில் அடர்ந்த காட்டை வந்தடைந்தார். அந்தக் காட்டைக் கடந்து அருகிலிருந்த ஒரு கிராமத்தை அடைந்தால்தான் அவருக்குப் பாதுகாப்பான தங்குமிடம் கிடைக்கும். அவர் கடக்க வேண்டிய தூரம் சுமார் ஐந்து மைல்கள்.

அவரது கையில் ஒரு சிறிய விளக்கு இருந்தது. அதை ஏற்றியபோது, அதன் ஒளி தனக்கு முன்னால் ஒரு கெஜம் தூரம் வரை மட்டுமே வெளிச்சம் தருவதைக் கண்டு அவர் மிகவும் கவலையடைந்தார்.

“இந்தச் சிறிய விளக்கின் வெளிச்சத்தை மட்டும் வைத்துக்கொண்டு, என்னால் எவ்வாறு ஐந்து மைல் தூரம் நடந்து செல்ல முடியும்?” என்று அவர் வருத்தத்துடன் புலம்பினார்.

அந்த வழியாக வந்த ஒரு ஞானி, அவரது கவலையைப் பார்த்து, “அன்பரே! இந்த விளக்கை உங்கள் கையில் பிடித்துக்கொண்டு தொடர்ந்து நடந்து செல்லுங்கள். உங்களால் ஐந்து மைல் மட்டுமல்ல, ஐம்பது மைல் தூரம்கூட செல்ல முடியும். ஏனெனில், நீங்கள் எவ்வளவு தூரம் நடந்து சென்றாலும், அந்த விளக்கைச் சுற்றியுள்ள ஒளி உங்களுக்கு வழிகாட்டிக்கொண்டே இருக்கும்” என்று அறிவுரை கூறினார்.

ஆசைகளை அடக்கி, அன்பின் மூலம் மனதை வெல்வோம்!

 விஷ்ணு பகவானைப் போற்றும் ஒரு புகழ்பெற்ற பிரார்த்தனை:

“சாந்தாகாரம் புஜகசயனம் பத்மநாபம் சுரேசம்...”

என்பதாகும்.

இதன் பொருள்: தாமரை மலர் தொப்புளிலிருந்து தோன்றியவரும், ஆதிசேஷன் எனும் ஆயிரம் தலைகளைக் கொண்ட நாகத்தின் மீது சாந்தமாகப் பள்ளிகொண்டிருப்பவரும், தேவர்களின் தலைவருமான ஸ்ரீமன் நாராயணனை வணங்குகிறோம் என்பதாகும்.

இந்தப் பிரார்த்தனையின் உள்ளார்ந்த தத்துவம் என்ன?

ஆயிரம் தலைகளைக் கொண்ட நாகத்தின் மீது பள்ளிகொண்டிருந்தாலும், பகவான் விஷ்ணு எப்போதும் அமைதியும் சாந்தமும் நிறைந்தவராக இருக்கிறார். இத்தகைய ஆழ்ந்த அமைதியை அவரால் எவ்வாறு தக்கவைத்துக்கொள்ள முடிகிறது?

அதற்குக் காரணம், அவர் அந்த ஆயிரம் தலை நாகத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார் என்பதேயாகும்.

வாழ்க்கை ஒரு நீண்ட ஆன்மிகத் திருத்தேர்ப் பயணம்!

 நீங்கள் நமது நாட்டில் பல்வேறு திருத்தேர்த் திருவிழாக்களையும் (ரத யாத்திரை) கண்டிருப்பீர்கள். அத்தகைய தேர்ப் பவனிகள் பொதுவாக மிகவும் கோலாகலமாகவும் நீண்ட ஊர்வலமாகவும் நடைபெறுகின்றன.

முன்னால் மேளதாளங்கள், ஜால்ராக்கள், பஜனைப் பாடல்கள், இசைக் கலைஞர்களின் குழுக்கள், ஏன் கோமாளிகள்கூட அணிவகுத்துச் செல்வார்கள். தேர்ச் செல்லும் பாதை முழுவதும் கொடிகள், தோரணங்கள், அலங்கார வளைவுகள் மற்றும் பந்தல்கள் அமைக்கப்பட்டிருக்கும். அழகிய அலங்காரங்களுடன் யானைகளும், வெள்ளி மணிகள் ஒலிக்க கம்பீரமாகச் செல்லும் குதிரைகளும், கிராமிய நடனங்களை ஆடும் மக்களும் அந்த ஊர்வலத்தில் இடம்பெறலாம்.

ஆனால், இத்தனை ஏற்பாடுகளும் எதற்காக?

பெண்மையின் பெருமையும் மகத்துவமும்!

 இந்தப் பரந்த பிரபஞ்சத்தில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றுள் மனிதப் பிறவி மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. மனிதப் பிறவியிலும் பெண்ணாகப் பிறப்பது ஒரு பெரும் பேறாகும். பெண்களின் உயர்வையும் மகத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதற்குப் பல சிறந்த உதாரணங்கள் உள்ளன.

இறைவனின் அவதாரமான ஸ்ரீராமர், அன்னை கௌசல்யாவின் கருவில்தானே அவதரித்தார்? லவனும் குசனும் அன்னை சீதையின் மைந்தர்களாகப் பிறந்ததால்தானே பெருமையும் புகழும் பெற்றனர்? ஜீஜாபாயின் அன்பும் அரவணைப்பும் வழிகாட்டுதலும் சிவாஜியை ஒரு மாவீரனாக உருவாக்கவில்லையா? புத்திரபக்தியும் இறைநம்பிக்கையும் நிறைந்த புத்திலிபாயின் (Putlibai) நற்பண்புகள்தானே காந்தியை மகாத்மாவாக உயர்த்தின?

சேவை செய்வதே இறைவனுக்குச் செய்யும் வழிபாடு!

 மகாபாரதப் போரின் உச்சக்கட்டமான குருக்ஷேத்திரப் போரின்போது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நாள் முழுவதும் அர்ஜுனனின் தேரோட்டியாகப் பணியாற்றினார். போரின் முடிவில் மாலைப் பொழுது வந்ததும் போர் நிறுத்தப்பட்டது. அப்போது கிருஷ்ணர் குதிரைகளை ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று, அவற்றிற்கு இதமான நீராடல் செய்வித்து, போரின்போது ஏற்பட்ட காயங்களுக்கு மருந்துத் தைலங்களைப் பூசினார். மேலும், கடிவாளங்களையும் குதிரைகளுக்கான கட்டுகளையும் சீரமைத்து, மறுநாள் மீண்டும் போருக்குத் தயாராகும் வகையில் தேரையும் செப்பனிட்டார்.

இறைவனே இவ்வாறு சேவையின் மகத்துவத்தைத் தமது செயல்களின் மூலம் நமக்கு எடுத்துக்காட்டுகிறார். ஒவ்வோர் உயிரினத்திற்கும் நாம் செய்யும் சேவை இறைவனுக்கே செய்யப்படும் சேவையாகும்; அத்தகைய சேவையை இறைவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார் என்பதையும் அவர் உணர்த்துகிறார்.

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 63 யுகங்களின் குரல் "மஹாகவி உருத்திரமூர்த்தி " பதிவும் பகிர்வும்

 


நாள்:  சனிக்கிழமை 28-11-2026

 நேரம்:

 இந்திய நேரம் - மாலை 7.00

இலங்கை நேரம் - மாலை 7.00

கனடா நேரம் - காலை 8.30

இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30

 வழி: ZOOM

 Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09&omn=89908160430

 சிறப்புப் பேச்சாளர்கள்:

பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன்

கலாநிதி  சு.குணேஸ்வரன்

 விரிவுரையாளர் எம். அப்துல் றஸாக்

ஆய்வாளர்  யோ. ஜோன்சன் ராஜ்குமார்

ஆய்வாளர்  சி.ரமேஷ்

ஒருங்கிணைப்பு:   கலாநிதி எம். எம். ஜெயசீலன்

மேலதிக விபரங்களுக்கு: - 001416-822-6316

 https://www.ilakkiyaveli.com

இனிய இலக்கிய சந்திப் 29/11/2026

 



கர்ணன் – விதியைத் தாண்டி 06/12/2026


 

டிசம்பர் 6 | மாலை 4:30 மணி – இரவு 9:00 மணி

நுழைவுக் கட்டணம்: A$45.00 – A$150.00

கர்ணன் – விதியைத் தாண்டி: மறுவடிவம் பெறும் தலைவிதி

கர்ணனின் வலிமைமிக்க வாழ்க்கைக் கதையைப் பரதநாட்டியம், அசல் இசை, உணர்வுகளை வெளிப்படுத்தும் நடன அமைப்பு மற்றும் நாடக வடிவிலான கதைசொல்லல் ஆகியவற்றின் மூலம் உயிரோட்டத்துடன் மேடைக்குக் கொண்டுவரும் ஒரு சிறப்பான கூட்டு நடன நிகழ்வாகும் கர்ணன் – விதியைத் தாண்டி: மறுவடிவம் பெறும் தலைவிதி.

மெல்பேர்ன் நாட்டியாலயா நடனப் பள்ளியின் திருமதி உஷாந்தினி ஸ்ரீபத்மநாதன் (நாட்டிய கலா ரத்னம்) மற்றும் லயதாண்டவம் பரதநாட்டிய நடனப் பள்ளியின் திருமதி ரம்யா ஸ்ரீஷ்யாம் ஆகியோரால் வழங்கப்படும் இந்நிகழ்ச்சி, விதி, அடையாளம், விசுவாசம் மற்றும் தியாகம் ஆகிய கருப்பொருள்களைப் புதிய கலைநோக்கில் ஆராய்கிறது.

இந்நிகழ்ச்சிக்கான இசையை அகிலன் சிவானந்தன் அமைத்துள்ளார். பாடல் வரிகளைப் பேராசிரியர் முனைவர் மௌனகுரு சின்னையா எழுதியுள்ளார். இந்நிகழ்ச்சியின் அடிப்படைக் கருத்தைத் திருமதி ரம்யா ஸ்ரீஷ்யாம் மற்றும் முனைவர் ஸ்ரீஷ்யாம் ஸ்ரீபாலச்சந்திரன் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். நடன அமைப்பு, படைப்பாற்றல் மிக்க வழிநடத்தல் மற்றும் கருத்தாக்கம் ஆகியவற்றைத் திருமதி உஷாந்தினி ஸ்ரீபத்மநாதன் மேற்கொண்டுள்ளார்.

இலங்கையில் பாதிப்புக்குள்ளாகும் மக்களின் வாழ்வில் நீடித்த, நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் வன்னி ஹோப் (Vanni Hope) அமைப்பிற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி ஒரு தொண்டு நிதி திரட்டும் நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலை, கலாசாரம், கதைசொல்லல் மற்றும் நடனம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்த மறக்க முடியாத மாலைப் பொழுதில் கலந்துகொண்டு, ஒரு சிறந்த சமூக நோக்கத்திற்கும் உங்கள் ஆதரவை வழங்குங்கள்!