இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த நாளான “ஈஸ்டர் திருநாளை” மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்கள்


உயிர்த்த ஞாயிறு என்பது ஒரு மத நிகழ்வு என்பதைத் தாண்டி, அது மனிதாபிமானம், அன்பு மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை மீண்டும் நினைவுபடுத்தும் கிறிஸ்தவர்களின் கலாசார பண்டிகையாகும். 

மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து, உறுதியான சங்கற்பமும் அர்ப்பணிப்பும் இருந்தால் இருளை வென்று ஒளியையும், பயத்தை வென்று நம்பிக்கையையும், வேதனையை வென்று நித்திய மகிழ்ச்சியையும் அடைய முடியும் என்பதைத் தமது வாழ்வின் மூலம் உலகிற்கு எடுத்துக் காட்டினார்.

தமக்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவுக்காக ஒன்றிணைந்து நின்ற மக்கள், உலகிற்கு ஒற்றுமையின் நற்செய்தியை வழங்கினர்.

இயேசுவின் உண்மையான தியாகம்

 

யேசு, தன் உபதேசங்களாலும் தன் வாழ்வின் உதாரணங்களாலும், தானம், கருணை, சகிப்புத்தன்மை, அன்பு மற்றும் நம்பிக்கை போன்ற நற்குணங்களை வளர்த்துக்கொள்ள மக்களை ஊக்குவித்தார். இவை தனித்தனியான குணங்களல்ல; மனிதனுள் இருக்கும் தெய்வீகத்தின் பல்வேறு அம்சங்களே ஆகும். அவற்றை உணர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும்.

பலர், யேசுவின் சிலுவை ஏற்ற துன்பத்தை அவர் செய்த தியாகமாகக் கூறுகிறார்கள். ஆனால், அவர் பிடிக்கப்பட்டு கட்டப்பட்டார், முள்ளுக் கிரீடம் சூட்டப்பட்டார், பின்னர் சிலுவையில் அறையப்பட்டார். காவலர்களால் கட்டப்பட்டும் அடிக்கப்பட்டும் இருக்கும் ஒருவர் தியாகம் செய்ததாக சொல்ல முடியாது; ஏனெனில் அவர் சுதந்திரமான நிலையில் இல்லை.

ஆகையால், யேசு தனது சுய விருப்பத்தால், சுதந்திரமாக இருந்தபோது செய்த தியாகத்தை நாம் கவனிக்க வேண்டுற்றும் நிலையை தியாகம் செய்தார். அதிகாரமுள்ளவர்களின் பகையை அவர் அஞ்சவில்லை. அவர் ஒருபோதும் தளரவில்லை, சமரசம் செய்யவில்லை.

அவர் ‘அஹங்காரம்’ எனப்படும் மிகக் கடினமான ஒன்றை துறந்தார். இதற்காகவே அவரை நாம் கௌரவிக்க வேண்டும். மனிதனை உடல் ஆசைகள் எவ்வாறு வாட்டுகின்றனவோ, அவற்றை அவர் தன்னிச்சையாகத் துறந்தார். இத்தகைய தியாகம், கட்டாயத்தால் உடலை இழக்கும் தியாகத்தை விட உயர்ந்ததாகும்.

பெண்ணாகப் பிறந்தாலும் மண்சிறக்க வாழ்ந்தார் !

 




















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

       
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் ….. அவுஸ்திரேலியா 

 





பன்மொழிகள் பாரெங்கும் பரவியே இருக்கு
பசுந்தமிழோ தனித்துவமாய் எழுந்துமே இருக்கு
பக்தியை இலக்கியமாய் கண்டதும் தமிழே
பாருக்குப் பண்ணிசையைக் கொடுத்ததும் தமிழே 

கடவுளையே மொழியாக்கிக் கண்டதும் தமிழே
கடவுளே தமிழ்கேட்க விரும்பியதும் உயர்வே
அடியார்கள் தமிழ்கேட்டு ஆண்டவனே மகிழ்ந்தான்
அகிலத்தில் தமிழ் மொழியே அமுதமாயிருக்கு 

எம்மொழியும் பக்தியினைத் தொட்டதும் இல்லை

பக்தியெனும் பெரு வெளியில் பயணிக்கவில்லை

எம்மொழியாம் தமிழொன்றே பக்தியினைப் பற்றியதே

இதனாலே தமிழுமே தனித்துவமாய் மிளிர்கிறது

 

பக்தியை இலக்கியமாய் பாருமே பார்ப்பதற்கு

படைத்திட்ட எங்கள்மொழி பாருக்குள் உயர்வாகும்

பக்திக்குள் மூழ்கிவிட்டால் பரவசமே உருவாகும்

பரவசத்தை அளிப்பது பாங்குடைய தமிழாகும் 

மீண்டும் மிடுக்குத் தொடர வேண்டும்! (தத்துவப் பாடல்) இயற்றியவர்- - கலாநிதி பாரதி இளமுருகனார்.

 









பேதை மனிதா வாதை ஏனோ?;

மேதை நீயும் கலங்க லாமோ?

கோதை தந்தது துயரந் தானோ?

மாதை நம்பிப் பெற்ற பரிசோ?

 

 

சூது வாது சோலி களவு

ஏதும் அறியா  நண்பா நீயும்  

சோத னைக்குப் பலியா கினையோ?

ஆதர வுனக்கு ஆர்தரு வாரோ?

 

 

கணத்திற் பிறந்த  காத லாலே 

சுணக்க மின்றி மணமுடித் தாயே!

பணத்தி னாலோ இணக்க மின்றிப்

பிணக்கப் பட்டுப் பிரிந் தேனோ?

 

 

நண்பா நண்பா!


பண்டிகைக் காலக் கனவு - கே.எஸ்.சுதாகர்

குழந்தைகள் ஈஸ்டர் பண்டிகை வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பதாகவே ஆரவாரப்படத் தொடங்கிவிட்டார்கள். அந்த விடுமுறையில், பிள்ளைகள் மூவரும் தாங்கள் போக விரும்பிய இடங்களைக் குறிப்பிட்டு, அங்கே என்னவெல்லாம் பார்க்கலாம் என தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் சொல்லும் இடத்துக்குத்தான் போகவேண்டும் என்றும் அடம் பிடித்தார்கள்.

கடைசியில் இவாஞ்சலினாவும் டேவிட்டும் எல்லாரையும் சமாதானம் செய்து, `பேர்த்’ என்ற இடத்திற்கு ஒரு கிழமை போய்வர முடிவெடுத்துக் கொண்டார்கள்.

மெல்பேர்ணில் இருந்து பேர்த் போவதற்கு மூன்றரை மணி நேரம் ஆகாயத்தில் பறக்க வேண்டும். பண்டிகைக்காலம், திடீர்ப்பயணம் என்பதால் செலவு எல்லாம் கூடியே இருந்தது. அப்பா டேவிட் கொம்பியூட்டரில் ஒன்லைனில் விமானச் சீட்டுகள், தங்குமிட வசதிகளைத் தேடி மும்மரமாக மூழ்கி இருந்தார்.

வருடத்தில் ஒருமுறை வரும் அந்தப் பண்டிகைக்கால விடுமுறையில்தான் அனேகமாக எல்லாருக்கும் லீவு கிடைக்கும். சேர்ந்து கொண்டாடுவார்கள்.

“அம்மம்மா… நாங்கள் எல்லாரும் பேர்த் போறோம். நீங்கள் உங்களுக்குத் தேவையான பொருட்களை இந்த பாக்கிற்குள் அடுக்கி வையுங்கள்” கடைக்குட்டிப் பேத்தி தன்னைவிட பெரிய பாக் ஒன்றை இழுத்துக் கொண்டுவந்து அம்மம்மாவின் காலடியில் போட்டாள். அம்மம்மா அடியும் நுனியும் புரியாமல் விழித்தார்.

கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் எல்லாரும் எங்குமே ஒன்றாகப் பயணித்ததில்லை. அம்மம்மாவும் அம்மப்பாவும் மூப்பு காரணமாக அதற்குத் தடையாக இருந்தார்கள். அவர்களை விட்டுவிட்டு இவாஞ்சலினாவும் டேவிட்டும் எங்குமே நகர முடியாதவர்களாக இருந்தார்கள்.

இன்று அம்மப்பா வைத்தியசாலையில் பாலியேட்டிவ் கேரில் (Palliative Care) இருக்கின்றார். குணப்படுத்த முடியாத குடல் புற்றுநோயுடன் போராடிக்கொண்டிருக்கும் அவர் சமீபத்தில் தான் எண்பத்தைந்து வயதுகளைப் பூர்த்தி செய்து கொண்டார். அந்தச் சிறப்பு மருத்துவப் பகுதியில் அவருக்கு வலியைக் குறைக்கும் சிகிச்சை வழங்குகின்றார்கள்.

அம்மம்மா கட்டிலில் இருந்து இறங்கி, ஊன்றுகோலையும் எடுத்துக் கொண்டு,  பேர்த்தி போன பாதை வழியே சென்றார்.

“என்ன இவள் சொல்லுகின்றாள்?” என்று இவாஞ்சலினாவைப் பார்த்துக் கேட்டார்.

“நெடுகலும் நீங்களும் வீட்டுக்கை அடைஞ்சு இருக்கிறியள். பிள்ளையளுக்கும் ஒரு அவுற்றிங் ஆக இருக்கும். இந்த முறை ஈஸ்டர் விடுமுறைக்கு பேர்த் போய் வருவோம்.”

கணவர் வைத்திய சாலையில் தஞ்சம் புகுந்ததன் பின்னர், அம்மம்மாவுக்கு பயணங்களில் பெரிதும் நாட்டமிருக்கவில்லை. தனக்குத்தானே உணவு செய்து, தன்னைத் தானே பார்த்து வரும் அவருக்கு, கணவனை விட்டு எங்கும் போவதில் பிரியமில்லை.

மனிதனோ விலங்காய் மாறியே விடுகிறான் !

 







மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா 






நாயிருக்கு நரியிருக்கு சிங்கமிருக்கு சிறுத்தையிருக்கு
அதனதன் பாட்டில் அவையெலாம் இருக்கு
நாட்டிலே இருக்கும் மனிதர்கள் மட்டும்
செய்யும் அனைத்துமே சிறுமையாய் இருக்கு

திட்டும் வார்த்தைக்குத் தேடுறோம் பெயர்களை
நாயைச் சேர்க்கிறோம் நரியைச் சேர்க்கிறோம்
சிங்கத்தைச் சிறுத்தையும் சேர்த்துமே நிற்கிறோம்
வந்ததைச் சொல்லி வதைக்கிறோம் மனங்களை

போடா நாயே போக்கிரிப் பயலே
நரிக்குணம் படைத்த சகுனிதான் நீயே
சிங்கமாய் சீறி சிறுத்தையாய் பாய்ந்து
எங்களின் ஆத்திரம் போக்கிட முயல்கிறோம்

நாயும் நரியும் நமக்கென்ன செய்தன
சிங்கமும் சிறுத்தையும் சீண்டவா வந்தன
தங்களின் வழியில் போகும் அவற்றை
எங்களின் இழிகுணம் இப்படி எடுப்பதா 

கவிதை..."கடைசிவரை யாரோ?"... மெல்போர்ன் அறவேந்தன்

 












பக்குவம் நிறைந்த பதமான காலம் !

 














மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்…அவுஸ்திரேலியா 




இளமையிற் கல்வி சிலையி லெழுத்து
என்பதை யாவரும் நன்றா யறிவோம்
அறிந்தும் அக்கறை காட்டா விட்டால்
அறிவிலி யாகியே அவமானப் படுவோம்

கற்றோர் முன்னே நின்றிடல் வேண்டும்
கற்றவர் அவையில் இருந்திடல் வேண்டும்
மற்றவர் வியக்க வாழ்ந்திட வேண்டும்
மதிப்புடன் வாழக் கற்றிட வேண்டும்

வளரும் பருவம் இளமைக் காலம்
உடலும் உளமும் உரம்பெறுங் காலம்
கண்டதும் கவர்ந்திடும் காந்தக் காலம்
கற்றலைப் பிடித்தால் கைப்படு மனைத்தும்

இளமையில் எதனையும் புகுத்துதல் எழிது
இளமையில் பற்றினால் என்றுமே நிலைக்கும்
பக்குவம் நிறைந்த பதமான காலம்
படிப்பதைத் தேர்ந்து படித்திட  வேண்டும்

ஓட வருவேன் உயிரோடிணைய!



விழிகளில் நீரேந்திய கயற்கண்ணி

வழிந்தோட காத்திருக்க வருவேன்
அழியாத என் ஓவியமே என் உயிரே
வழி ஒன்று சொல்வேன் வருந்தாதே

கடல் கடந்து மட்டுமே சென்றேன்
உடல் மட்டுமே நம்மைப் பிரித்தது
மடல் வந்து நம்முள்ளம் இணைக்க
விடல் நம் அன்புக்கும் இல்லையே

வானில் மேகம் ஓடுகின்றதா அதுவும்
நானிங்கு விட்ட மேகவிடு தூதாகும்
ஏனிங்கு நான் எழிலை விட்டுவந்தேன்
மானிங்கு நீயில்லை மயங்குகின்றேன்

ஊரை விட்டு வந்தாலும் கலங்காதே
நாரைகளை வானில் கண்டால் நீயும்
நாரைவிடு தூதாக எண்ணி மகிழ்வாய்
கூரையை கோபுரமாக்க வந்ததறிவாய்

நிலமிசை நீடுவாழ்வார் யார்?…..சங்கர சுப்பிரமணியன்.

நீடுவாழ்வார் என்றால் என்ன? மார்க்கண்டேயன் போல் என்றும் பதினாறு வயதாக வாழ்வதா? அப்படி வாழத்தான் முடியுமா? அவருக்கு ஏதோ ஜாக்பாட் அடித்தது வாழ்ந்து கொண்டிருக்கிறார். நாம் எல்லோரும் நினைப்பதுபோல் இத்த கலிகாலத்தில் அப்படி ஒரு ஜாக்பாட் அடிக்குமா? அப்படி இருந்தால் இங்கு நம் கண் முன்னே ஏகப்பட்ட மார்க்கண்டேயன்கள் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.


ஆதலால் நீடுவாழ்வார் என்றால் நோய்நொடி இன்றி உடல் நலத்துடன் கவலையில்லாது வாழும்நாள் வரை வாழ்வதாகும். யாரும் நம்மை நீடுழி வாழ்க என்றால் மார்க்கண்டேயன் போல் வாழ்வாய் என்று பொருள் அல்லவே.

ஆதலால் இவ்வாறு நிலமிசை நீடுவாழ்வார் யார் என்பதை அறிவோம். மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார் என்கிறார் வள்ளுவர். மாணடி சேர்ந்தார் என்றால் என்ன? மாணடியை அடைதல் என்பதாகும். சான்றாக இறைவனடி சேர்ந்தார் என்றார் என்றால் இறைவனடியை அடைந்தார் என்றே பொருள்.

எப்படி இயற்கையாக ஆண் பெண் இனச் சேர்க்கையால் மனிதன் இயற்கையாக பிறந்தானோ அப்படியே வாழ்ந்து முடித்தவுடன் இயற்கையிலேயே கலந்தான் என்பதே கருப்பொருள். இனி யாருடைய மாணடியை சேர்ந்தார் என பார்ப்போம். அவர் யாருமல்ல மலர்மிசை ஏகினான்தான்.

மலர்மிசை ஏகினான் என்றால் மலர் மீது செல்லுதல், நடத்தல் அல்லது போதல் என்று பொருள். மலர்மீது நடந்து போகமுடியுமா?
போகமுடியும். உங்களைப் போன்றோரும் என்னைப் போன்றோரும் போகமுடியாது. அதிலும் ஐம்பது வயதில் என்பது கிலோ எடையைச் சுமந்து திரிபவர்களாலும் போகமுடியாது.

ஆனாலும் போகமுடியாது என்று திட்டவட்டமாய் சொல்லமுடியாது. ஏனென்றால் தாமரை மலரில் உட்காரவும் நிற்கவும் இயலும்போது ஏன் நடந்து போக முடியாது. அப்படி அமர்ந்தவர்கள் நின்றவர்களைப்பற்றி என்னால் சொல்ல முடியும். உட்கார்ந்து இருப்பவர்கள் பிரம்மாவும் சரஸ்வதியும் ஆவார்கள். நிற்பவரோ லட்சுமி.

இவர்கள் எல்லாம் இருந்ததும் நின்றதும் அந்தக்காலத்தில் என்பவர்களுக்கு அவர்களது காலத்திலேயே மலர்கள் மீது நடக்கக் கூடியவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதையும் ஏற்க வேண்டும். இருப்பதும் நிற்பதும் சாத்தியம் என்றால் நடப்பதும் சாத்தியமே. லட்சுமியும் சரசுவதியும் நீரின் மேல் இருந்த மலர்கள் மேல்தான் நின்றார்கள் அமர்ந்தார்கள்.

ஆனால் நம் பிரம்மா, திருமாலின் தொப்புள் கொடியில் இருந்து தோன்றிய தாமரை மலரில் அமர்ந்திருக்கிறார். இதனால் என்ன தெரிகிறது? மலர் மீது அமரலாம் மற்றும் நிற்கலாம் என்று தெரிகிறது. கடவுள் செய்வதைத்தான் நாமும் செய்கிறோம். கடவுள் காதலிக்கிறார். சான்றாக முருகன் வள்ளியைக் காதலித்தார். கண்ணன் ராதாவைக் காதலித்தார்.

கடவுளர் திருமணம் செய்தனர். திருமால் மற்றும் லட்சுமி, சரசுவதி மற்றும் பிரம்மா மற்றும் சிவன், பார்வதியைச் சொல்லலாம். பிள்ளைகள் பெற்றனர். சிவன் மற்றும் ராமன் போன்றோர் குழந்தைகளைப் பெற்றுள்ளனர்.
ஆகவே அவர்கள் செய்தவற்றை எல்லாம் நம்மாலும் செய்யமுடியும். அவர்கள் வாழ்ந்து மறைந்தவர்கள் என்பது ஒன்றே வேறுபாடு.

சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்! விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!! தொடர் - 1…..சங்கர சுப்பிரமணியன்.

தமிழுக்கும் ஜப்பானுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை எனது வாசிப்பு அனுபவம் எனக்கு தெளிவு படுத்தியது. சுசுமு ஓனோ என்ற ஜப்பான் நாட்டு மொழியியலாளர் எடுத்து வைத்த கருத்து என்னை வியப்படைய வைத்தது. தமிழ் மொழி உலக மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழி என்பது ஒரு புறமிருக்க அதிலிருந்து பல மொழிகள் தோன்றி இருப்பதாய் சொல்லப்படுவதையும் நம்பும்படி அவர் எடுத்து வைக்கும் கருத்தில் ஆழமிருக்கிறது.


ஜப்பானிய மொழியில் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ் சொற்கள் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. தமிழ் எழுத்துக்களில் காணப்படும் வளைவும் சுழிவும் ஓரளவில் ஜப்பானிய மொழியிலும் இருக்கிறது. அதற்காக தமிழ்மொழிக் குடும்பத்தில் ஜப்பானிய மொழி இருப்பதாகச் சொல்லவில்லை. உடனே மாடசாமி அண்ணாச்சி தமிழ்மொழிக் குடும்பமா? திராவிடமொழிக் குடும்பம் என்றல்லவா சொல்கிறார்கள் என்கிறார்.

நம்மில் சிலர் அன்னமும் ஆகாரமும் இங்கு ஆசையும் பாசமும் அங்கு என்றிருப்பதைக் காணமுடிகிறதல்லவா? நாங்கள் தமிழர்கள்தான் ஆனால் எங்களுக்கும் கேரளாவுக்கும் தொடர்புள்ளது. நாங்கள் மலையாளிகளைப் போல புட்டும் இடியாப்பமும் சாப்பிடுகிறோம் என்று எனது நண்பர்கள் பலர் என்னிடம் கூறி இருக்கிறார்கள்.

நான் அவர்களிடம் நீங்கள் அவர்களைப்போல் நிறமுடையவர்களாக

இல்லையே தமிழரைப் போன்றுதானே இருக்கிறீர்கள் என்பேன்.
மலையாளிகள் உளுந்து வடையும் பருப்புவடையும் எங்களைப் போலவே சாப்பிடுகிறார்கள். அவியலும் பொரியலும் எங்களைப்போலவே செய்கிறார்கள் அதனால் நாங்களும் மலையாளிகள் மாதிரிதான் என்று நான் ஒருநாளும் சொல்லமாட்டேன். காரணம் தமிழன் என்று சொல்வதைத்தான் பெருமை என நான் எண்ணுகிறேன் என்பேன்.

தங்களை தமிழர்கள் என்று சொல்வதை பெருமையாக உணராதவர்கள் நாங்கள் அதிகம் மலையாளப் படங்களை மட்டுமே பார்ப்போம் என்று ஒருநாளும் என்னிடம் சொன்னதில்லை. தமிழ்ப்படங்களைத்தான் பார்ப்பார்கள். நாங்கள் தேவாரம் திருவாசகம் எல்லாம் படிக்கமாட்டோம் என்றோ திருக்குறள், கம்பராமாயாணம் படிக்க மாட்டோம் என்றோ சொன்னதில்லை. அவற்றைத்தான் படிப்பார்கள். ஆனால் தங்களை நாங்கள் மலையாளிகள் மாதிரி என்று சொல்லிக் கொள்வதில் அப்படியொரு பெருமை.

தம்மைத் தமிழராக உணராதவர்களால் மட்டுமே திராவிடமொழிக் குடும்பம் என்ற மாயை உள்ளது. தமிழ்மொழிக்கு மூலம் என்ன என்றால் முதனிலைத் திராவிட மொழி என்கிறார்கள். இவர்களைத் தவிர, இதைச் சொல்பவர்கள் தமிழர் அல்லாதவர்களும் ராபர்ட் கால்டுவெல் சொன்னதை சிரமேற்பவர்களும்தான். உண்மையில் அது முதனிலைத் தமிழ்மொழி.

முதனிலைத் திராவிடமொழி என்பது சில மொழியியலாளர்களால் செய்யப்பட்ட மீளுருவாக்கம் மட்டுமே. இதனை வரலாற்றுச் சான்றுகள் மூலம் நிறுவமுடியாது. எனவே இதனை மீண்டும் மீளுருவாக்கம் செய்யவேண்டும்.

இருள் சேர் இருவினையும் சேரார் யார்?


-சங்கர சுப்பிரமணியன்.

இருள் சேர் இருவினை என்றால் என்ன? என் வாழ்வில் இருள் சூழ்ந்து விட்டது என்றால் என்ன? துன்பம் என் வாழ்வைச் சுற்றியுள்ளது என்பதே பொருள். என் வாழ்வில் ஒளி பிறந்திருக்கிறது என்றால் எனக்கு நல்லது நடந்துள்ளது. மகிழத்தக்க நன்மை அரங்கேறியுள்ளது என்பது பொருளாகும்.

கண்ணதாசனின் திரை இசைப்பாடலில் ஒளி மயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகிறது என்ற பாடலைக் கேட்டால் நமது வாழ்விலேயே ஏதோ மகிழ்ச்சி ஏற்பட்டதைப் போல இனம்புரியாத இன்ப உணர்வை அடைய முடிகிறதல்லவா? அதனால் வாழ்வில் ஒளி என்பது இன்பமான மகிழ்ச்சிதான். இதனை நல்வினை என்றால் தீவினை என்று ஒன்று உண்டல்லவா? அந்த தீவினைதான் இருள் என்ற துன்பம் ஆகும்.

இதிலிருந்து இன்பம் மற்றும் துன்பத்தை இருவினைகள் என்றறிகிறோம். இதன்படி பார்த்தால் இருவினைகள் எப்படி இருள்சேர்க்கும்? நல்வினை நன்மையையும் தீவினையையும் செய்வதுதான் முறைமை. அப்படுயிருக்க இருள் சேர் இருவினை என்று எப்படி இருவினைகளைச் சொல்ல முடியும். ஆதலால் வள்ளுவன் சொல்லவரும் இருள் சேர்க்கும் இருவனைகள் நல்வினை மற்றும் தீவினை அல்ல.

அப்படியானால் அந்த இருவினைகள் என்ன?
அவை ஒன்று தீவினை பற்றி எண்ணுவது ஒன்று மற்றொன்று தீவினையைச் செயலாக்குவது. உங்களுக்குப் புரியும்படியே சொல்கின்றேன். ஒரு கொலை நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த கொலை எடுத்த எடுப்பில் செய்யப் படுவதில்லை. முதலில் திட்டம் தீட்டப்படுகிறது. இது தீவினைகளில் ஒன்றான திட்டம் தீட்டப்படும் ஒருவினை.

அடுத்ததாக தீட்டிய திட்டத்தை செயல் படித்துவது இருள்சேர் இருவினைகளில் மற்றொன்றான தீவினை. ஒன்று தீயதை நினப்பது மற்றொன்று நினைத்த தீயதை செயல்படுத்துவது. இவைதான் அந்த இருள்சேர் இருவினை. இவற்றை எப்படி இருவினைகள் எனலாம் என்று நீங்கள் கேட்கலாம். ஒன்றை மட்டும் சொல்லி உங்கள் சந்தேகத்தை தீர்க்கலாம் என எண்ணுகிறேன்.

காவல் நிலையத்தில் ஒரு கொலை பதிவாகிறது. காவலர்கள் இதக்கண்டறிய முற்பட்டு கொலையாளியை கண்டுபிடிப்பார்கள். அடுத்தபடி அந்த கொலைக்கு காரணமானவன் யார் அதற்கு திட்டம் வகுத்துக் கொடுத்தது யார் என்று கண்டுபிடிப்பார்கள். சொல்லப் போனால் கொலையாளியை விட கொலைக்கு திட்மிட்டுக் கொடுத்தவனுக்கு அதிக தண்டனை என்று சொல்லப்படுகிறது.

இதிலுருந்து தீயதை எண்ணுவதும் அதைச் செயற்படுத்துவம் ஆகிய இருவினைகளே வள்ளுவன் சொன்ன இருள்சேர் இருவினைகள் என்பதை அறிவோம். அடுத்ததாக இந்த இருவினைளும் சேராத இறைவன் யார்? இறைவனை இயற்கையாக வைத்தால் பொதுவின் பாலாகவோ அல்லது பெண்பாலாகவோ வைக்கலாம். பூமி, ஆறு போன்றவை பெண்பாலாக ஏற்கப் படுகிறது.
மற்றபடி அரசனையும் தலைவனையும் பொதுவின் பாலில் வைத்து காணலாம்.

மோட்டார் சுந்தரம் பிள்ளை - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 அறுபது வருடங்களுக்கு முன் சிவாஜி நடித்த பெரும்பாலான


படங்களில் அவர் இளைஞனாக, காதலனாக வந்து ஆடிப் படி , நடித்து ரசிகர்களை கவர்ந்து கொண்டிருந்தார். ஒரு சில படங்களில் வயதான வேடங்களில் நடித்த போதும் பெரும் குடும்பஸ்தனாக அவர் நடித்ததில்லை. ஆனால் 1966ம் ஆண்டு அவர் இரண்டு மனைவிகளுடன் பதின்மூன்று பிள்ளைகளுக்கு தந்தையாக ஒரு படத்தில் நடித்து அசத்தி இருந்தார். அந்தப் படம்தான் மோட்டார் சுந்தரம் பிள்ளை. 


இந்திய மொழிகள் பலவற்றில் படம் எடுத்து உன்னத நிலையில்

இருந்த எஸ் எஸ் வாசனின் ஜெமினி ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்தது . ஏற்கனவே சிவாஜி நடிப்பில் இரும்புத்திரை படத்தை எடுத்திருந்த நிலையில் ஆறாண்டுகள் கழித்து இப் படம் உருவானது. 

ஆங்கிலப் படம் ஒன்றைத் தழுவி இந்திய சூழலுக்கு ஏற்ப எழுதப் பட்ட கதையை சிவாஜியிடம் சொன்ன போது முதலில் அதில் நடிக்க அவர் மறுத்து விட்டார். இதனால் வாசன் அதனை ஹிந்தியில் கிரகஸ்தி என்ற பேரில் படமாக்கினார். 1963ல் வெளியான இப் படத்தில் அசோக்குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். அப் படத்தைப் பார்த்த பிறகு தமிழில் நடிக்க சிவாஜி உடன் பட்டார். 

சௌகார் ஜானகி சிவாஜிக்கு ஜோடியாக நடிக்க அவரின் 13 பிள்ளைகளில் ஒருவராக ஜெயலலிதாவும், காஞ்சனாவும் நடித்தனர். முரடன் முத்து படத்திலேயே சிவாஜிக்கு ஜோடியாகி இருக்க வேண்டிய ஜெயலலிதா அது நடக்காத நிலையில் இதில் மகளாக நடித்தார். 

இலங்கைச் செய்திகள்

போர் தாக்கம் : உலக உணவு விலைகள் மீண்டும் உச்சம் - ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு

பாலையடிவட்டை இராணுவ முகாம் விடுவிப்பு ; நேரடியாக சென்று பார்வையிட்டார் சாணக்கியன்.எம்.பி

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புனித வியாழன், புனித வெள்ளி விழிபாடுகள்

வடக்கிற்கான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது ; யாழ் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன்



போர் தாக்கம் : உலக உணவு விலைகள் மீண்டும் உச்சம் - ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு


Published By: Vishnu

04 Apr, 2026 | 03:43 AM

மத்திய கிழக்கில் தொடரும் போரின் காரணமாக எரிசக்தி மற்றும் எரிபொருள் விலைகள் உயர்ந்ததால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு மார்ச் மாதத்தில் உலக உணவு விலைகள் மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளன.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), போர் 40 நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் மற்றும் எரிபொருள், உரம் போன்ற உள்ளீடுகளின் விலை அதிகமாக இருந்தால், விவசாயிகள் தங்கள் சாகுபடியைக் குறைக்கத் தூண்டப்படலாம் என்று எச்சரித்துள்ளது.

உலகச் செய்திகள்

அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது

ஈரான் பாலம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் 8 முக்கிய பாலங்கள் தாக்கி அழிக்கப்படும் - பட்டியல் வெளியிட்டது ஈரான்

அமெரிக்க இராணுவத் தளபதி பதவி நீக்கம்: பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உத்தரவு  



அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது

Published By: Vishnu

03 Apr, 2026 | 07:21 PM

அமெரிக்காவுக்கு சொந்தமான இரண்டாவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானின் வான்பரப்பிற்குள் நுழைந்த நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் புரட்சிகர இராணுவம் அறிவித்துள்ளது.

ஈரான் புரட்சிகர இராணுவத்துடன் தொடர்புடைய ‘பார்ஸ்’ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மத்திய ஈரான் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில், குறித்த போர் விமானம் முழுமையாக சேதமடைந்து நொறுங்கி வீழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தர்மத்தின் உண்மையான பொருள்

 “தரயதி இதி தர்ம:” என்று கூறப்படுகிறது. உலகத்தைத் தாங்கி நிலைநிறுத்துவது தர்மம் ஆகும். உலகில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் தனித்துவமான சில இயல்புகள் உள்ளன. அந்தப் பொருளின் முக்கிய இயல்பே அதன் தர்மத்தை வெளிப்படுத்துகிறது.

உதாரணமாக, தீயின் அடிப்படை இயல்பு எரிதல்; எரிதலே அதன் தர்மம். தீ தனது எரிக்கும் சக்தியை இழந்தால், அது தீயாக இல்லாமல் வெறும் கரியாக மாறிவிடும். அதேபோல், சர்க்கரையின் இயல்பு இனிமை. அது இனிமையை இழந்தால், அது சர்க்கரையாக இல்லாமல் மணலாகி விடும். சம்பங்கி மலரின் இயல்பு மணம் வீசுவது; அதில் மணம் இல்லையெனில் அது சம்பங்கி அல்ல.

இதேபோல், மனிதனுக்கு ஆனந்தம் (பேரின்பம்) என்பது உள்ளத்திலிருந்து எழும் இயல்பான தர்மமாகும். ஆனால் இன்றைய காலத்தில், வெளிப்புற சாதனைகளுக்காக மனிதன் தனது இயல்பை மறந்து விடுகிறான்.

ஒருவர் கல்வியுள்ளவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அனைவருக்கும் பொதுவான ஒரு தர்மம் உள்ளது: அவர்கள் மற்றவர்களிடமிருந்து எதிர்பார்க்கும் மரியாதையும் மதிப்பையும், அவர்கள் மற்றவர்களுக்கும் வழங்க வேண்டும். மற்றவர்கள் நமக்கு செய்தால் நமக்கு துன்பமும் துயரமும் உண்டாகும் செயல்களை நாம் பிறரிடம் செய்யக்கூடாது.

யஜ்ஞத்தின் உண்மையான அர்த்தம்

 

யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் புனிதமும் மணமிக்க பொருட்களும், அதில் இடப்படும் விலைமதிப்புள்ள ரத்தினங்களும், மனிதன் தனது வாழ்க்கையில் செய்ய வேண்டிய அர்ப்பணிப்புகளின் அடையாளங்களாகும். அவன் தனது தூய்மையான இதயத்தையும், சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை (உண்மை, நற்பண்பு, அமைதி, அன்பு) போன்ற உயர்ந்த குணங்களையும் இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.

தன்னிடம் உள்ள செல்வம், அறிவு, திறமைகள் ஆகியவற்றை சமுதாயத்திற்கும் சமூகத்திற்கும் பகிர்ந்து கொடுக்கும் உண்மையான மனப்பான்மையே யஜ்ஞம் (யாகம்) ஆகும். தியாக மனப்பான்மை இல்லாமல் வெளிப்புற சடங்குகளைச் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

வாழ்க்கை தானே ஒரு யஜ்ஞம். கடமைகள் மற்றும் செயல்களின் புனித அக்னியில் மனித வாழ்க்கையை அர்ப்பணிப்பதே உண்மையான யஜ்ஞம் ஆகும். ஒருவரின் கெட்ட குணங்களை நீக்குவதும் யஜ்ஞமே ஆகும்.

ஒரு சிறந்த வாழ்க்கையை நடத்த விரும்பும் ஒவ்வொரு மனிதரும், ஆனந்தத்தை அடையவும், ஆத்மஞானத்தை பெறவும் தியாகத்தின் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். யஜ்ஞம் என்பது துயரத்திலிருந்து சந்தோஷத்திற்கும், கஷ்டத்திலிருந்து செழிப்பிற்கும், இருளிலிருந்து வெளிச்சத்திற்கும் வழிகாட்டும் ஒரு மார்க்கமாகும்.

மனித வாழ்க்கை தியாகம் அல்லது துறவு என்ற குணத்தின் அடிப்படையில் இருந்தால்தான் அர்த்தமுள்ளதாகும். அப்போது வாழ்க்கை பொருளுள்ளதாக மாறி, தெய்வீக அனுபவத்தையும் பெற முடியும்.

கல்வியின் உண்மையான நோக்கம்

 

கல்வி விற்கப்படுவதற்கோ அல்லது வேலைக்காக யாசிக்கப் பயன்படுத்தப்படுவதற்கோ அல்ல. அது பகிரப்படுவதற்காகும். பகிர்ந்தால் கல்வி வளர்கிறது. நற்குணங்கள் இல்லாத உயர்கல்வி எதற்கு பயன்படும்? அத்தகைய கல்வியின் மதிப்பு என்ன? கல்வியை விட குணநலன் மிக முக்கியமானது.

மாணவர்களே! கல்வியை முடித்த பின் வேலை பெறுவதில் தவறு இல்லை. ஆனால் அதே நேரத்தில், உங்கள் கல்வி சமூக நலனுக்குப் பயன்படுமாறு இருக்க வேண்டும் என்பதை உறுதியாகக் கவனிக்க வேண்டும். எப்போதும் சமூகத்தின் நலனை முன்னிலைப்படுத்த வேண்டும். சமூக சேவையில் ஈடுபட வேண்டும்.

சமூக சேவை என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? நீங்கள் உயர்கல்வி பெற்றவர்கள் என்பதால் சேவை செய்வது உங்கள் மரியாதைக்கு கீழானது என்று எண்ண வேண்டாம். அதே சமயம், சேவை என்ற பெயரில் சாலைகளை தூய்மைப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை.

நீங்கள் செய்யும் எந்த வேலையாக இருந்தாலும், அதை உங்கள் மனச்சாட்சிக்கு திருப்தியாகச் செய்தால் அதுவே சேவை ஆகும். உதாரணமாக, நீங்கள் வணிகம் செய்கிறீர்கள் என்றால், பணம் சம்பாதிக்க அநியாயமான மற்றும் அதர்மமான வழிகளை பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக, உங்கள் வருமானத்தை புனிதமான மற்றும் நல்ல செயல்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

பார்த்தாலும் உண்மையை அறியாதவன் மூடன்

 

அனைத்தையும் தெய்வீகமான உணர்வுடன் பாருங்கள். அப்போதுதான் நீங்கள் எல்லோரிலும் தெய்வீகத்தை காண முடியும். ஆனால் நீங்கள் அனைத்தையும் உலகியலான பார்வையில்தான் காண்கிறீர்கள். ஒரு கயிறை பார்த்து அதை பாம்பு என்று தவறாக நினைக்கிறீர்கள். அதனால் உங்களுள் பயம் உருவாகிறது.

அது கயிறா அல்லது பாம்பா என்பதை அறிய உங்கள் விவேகத்தை (பகுத்தறிவு) பயன்படுத்துவது அவசியம். உங்கள் மாயை காரணமாக நீங்கள் கயிறை பாம்பு என்று தவறாக எண்ணுகிறீர்கள். மாயை தோன்றும் அந்த நொடியில் பயமும் தோன்றுகிறது. பயத்தின் காரணமாக நீங்கள் அங்கிருந்து ஓடிவிடுகிறீர்கள்.

ஆனால், விவேகத்தின் விளக்கால் பார்த்தால் அது பாம்பு அல்ல, கயிறு என்பதை உணர்வீர்கள். அது கயிறு என்பதை அறிந்தவுடன் பயம் மறைந்து விடுகிறது. பின்னர் நீங்கள் அந்த கயிறிற்கு அருகில் செல்லத் தொடங்குகிறீர்கள்.

பயம் எப்போது மறைந்தது? அது கயிறு என்பதை உணர்ந்த அந்த நொடியில் பயம் இல்லை. மாயை நீங்கும் போது தைரியம் உண்டாகிறது. தைரியம் என்பது பயமின்மை. அப்போது நீங்கள் ஆனந்தத்தை அனுபவிக்கிறீர்கள்.

இதுபோலவே, இந்த உலகின் உண்மையை நீங்கள் ஆராய்ந்து அறிய வேண்டும். இது உலகியலானதா அல்லது தெய்வீகமானதா? இந்த ஆராய்ச்சியே “மீமாம்சா” (ஆழ்ந்த பகுத்தறிவு விசாரணை) எனப்படுகிறது.

இராமாயணத்தின் அவசியமான செய்தி

 இன்றைய உலகம், இராமாயணக் கதையின் செய்தியை மிகுந்த அவசியமாக தேடுகிறது. இன்றைய காலத்தில், மகன்கள் தங்கள் தந்தையரின் அறிவுரைகளைப் பின்பற்றுவதில்லை. தந்தையரும் குழந்தைகளுக்கு சரியான முன்மாதிரியாக இருப்பதில்லை. சீடர்கள் குருமார்களை மதிப்பதில்லை; குருமார்களும் சீடர்களை அன்புடன் நடத்துவதில்லை. நண்பர்களுக்கிடையிலும் கூட அன்பு குறைந்து வருகிறது. உறவினர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் பிரிந்து நிற்கின்றனர்.

வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும்—நிர்வாகம், வேளாண்மை, வணிகம், அரசியல்—எங்கும் கருத்து வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகள் அதிகமாக காணப்படுகின்றன. சமூக, அரசியல் மற்றும் ஆன்மீக துறைகளிலும் பிளவுகள் நிலவுகின்றன. இந்த நிலைக்கு காரணம் என்ன என்று ஆராய்ந்தால், அதற்கான மூல காரணம் சுயநலமே என்பது தெளிவாகிறது.

மனிதகுலம் முழுவதற்கும் அடிப்படை அம்சங்கள் ஒன்றே. உலகமே ஒரு குடும்பம். எல்லா மனிதர்களும் சகோதரர்களே. இந்த அடிப்படை உண்மையை உலகிற்கு போதித்தவர் இராமர். அவர், மனிதன் தனது அன்றாட வாழ்க்கை கடமைகள், சமூகப் பொறுப்புகள் மற்றும் குடும்பப் பொறுப்புகளை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தார்.

இந்த மூன்று கடமைகளின் ஓட்டமே இராமாயணத்தின் மையச் செய்தியாகும். இந்த மூன்று தர்ம ஓட்டத்தில் நீராடுபவர், தனது பாவங்களிலிருந்து விடுபட்டு, மீட்சியை அடைவார்.

வேதங்களின் ஆழமான மகத்துவம்

 வேதங்கள் என்பது ஆழ்ந்த, அளவிட முடியாத மற்றும் முடிவில்லா ஞானத்தின் சாரமாகும். திரேதா யுகத்தில், நான்கு வேதங்கள் மனித உருவம் எடுத்து இராமர், லட்சுமணர், பரதர் மற்றும் சத்ருக்னர் ஆக அவதரித்தன. இதில், ரிக் வேதம் இராமராகவும், யஜுர்வேதம், சாமவேதம் மற்றும் அதர்வவேதம் முறையே லட்சுமணர், பரதர் மற்றும் சத்ருக்னர் ஆகியோரின் வடிவங்களில் வெளிப்பட்டன.

இராமர் ரிக் வேதத்தின் சின்னமாக விளங்கினார். அவர் மந்திர ஸ்வரூபம் (மந்திரங்களின் உருவகமாக) இருந்தார். லட்சுமணர் மந்திர த்ரஷ்டா (மந்திரங்களை தியானித்து உணர்ந்தவர்) ஆவார்; அவர் இராமரின் போதனைகளை நடைமுறையில் கொண்டு வந்தார். அவர் எப்போதும் இராமரை உண்மையுடன் பின்பற்றினார். இராம நாமத்தை விடுதலை அளிக்கும் மந்திரமாகக் கருதினார். லட்சுமணருக்கு இராமர் தாய், தந்தை, குரு மற்றும் இறைவன் அனைத்துமாக இருந்தார்.

பரதர் சாமவேதத்தின் உருவாக இருந்து, உணர்வு, ராகம் மற்றும் தாளத்துடன் (பாவம், இசை, ஓசை) இராம நாமத்தை இடைவிடாது ஜபித்தார். பரதர் நிர்குண வழிபாட்டில் (குணங்களற்ற இறைவனை வணங்குதல்) ஈடுபட்டிருந்தபோது, லட்சுமணர் சாகுண வழிபாட்டில் (குணங்களுடன் கூடிய இறைவனை வணங்குதல்) ஆனந்தம் அடைந்தார்.

அதர்வவேதம் சத்ருக்னராக வெளிப்பட்டு, தனது மூத்த மூன்று சகோதரர்களை பின்பற்றி, உலகியலான வாழ்க்கையிலும் மட்டுமல்லாது, இன்ப-எண்ணங்களின் ஆட்சியையும் வென்று உயர்ந்தார்.

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 57 “நூல்களைப் பேசுவோம்”

நாள்:  சனிக்கிழமை 11-04-2026

நேரம்:

 இந்திய நேரம் - மாலை 7.00

இலங்கை நேரம் - மாலை 7.00

கனடா நேரம் - காலை 9.30

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30

 வழி: ZOOM

 Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 https://us02web.zoom.us/j/3890729245...

 நூல்களைப் பேசுவோம்:

 முனைவர் அரங்கமல்லிகாவின் “மணிமேகலையின் பெளத்தப் பேரறம்”

 

உரை:  முனைவர் கவிதா நல்லதம்பி

 தமிழவனின் “உலகச் சிந்தனையில் கிளை பரப்பிய ஒரு மரம்”  (தன் வரலாறு)

 

உரை:  பேராசிரியர் பா. இரவிக்குமார்

 சு. தவச்செல்வனின் “இலக்கியம் – கலகம் - அரசியல்”

உரை:  கலாநிதி  எம். எம். ஜெயசீலன்

 ஒருங்கிணைப்பு:  கலாநிதி சு.குணேஸ்வரன்

 மேலதிக விபரங்களுக்கு: அகில் - 001416-822-6316

 https://www.ilakkiyaveli.com