“தெய்வம்போல் வந்தபெருந் தியாகிநீ”

 இயற்றியவர்: பல்மருத்துவ கலாநிதி பாரதி இளமுருகனார்.
















பால்பொழியும் நிலாவெறிக்குங் கடற்க ரையில்   

பாவையவள்  வரவுக்குக் காத்தி ருந்தேன்

வேலையொத்த ஒளிவிழியிற் பொங்கிய சீற்ற

வேகமின்னுந் தணியவிலை என்றூ கித்தேன்!















பருவவெழில் ஒருமித்த உருவங் கண்டு

பகலிரவாய் அவள்நினைவால் தூக்கங் கெட்டேன்

பெருகிவரும் காதலினை அவளிடம் சொல்லப்

பெண்ணவளும் பார்த்தாளே! அந்தப் பார்வை……  

 

நெஞ்சத்துள் சுடுசரமாய் நெருடியே நின்றென்

நிலைமைதனைத் தடுமாற வைத்த தம்மா

அஞ்சாதென் காதலைத்தான் அன்று சொன்னேன்

அதுஅவளை நிலைகுலையச் செய்ததோ அறியேன்!

 

ஐயிரண்டு மாதமாக அவளின் பதிலை

ஆவலொடு பார்த்திருந்து களைத்து விட்டேன்

பெய்வளையாள் இளம்விதவை யான செய்தி

பேரிடியாய் எனைத்தாக்கத் துடித்து நின்றேன்.

 

 

இளகியவென் மனமதனை யார்தா னறிவார்?

பழகிடமுன் விதவையென்று அறிந்த பின்னும்

உளம்அவளை மறக்காது தேடி நிற்க

ஒருவாறு ஒருநாளில் அவளைக் கண்டேன்.

 












கையிலொரு பிள்ளையுடன் கண்ணீர் மல்கக்

காட்சிதந்த அவள்நிலையை உணர்ந்த கணமே

மெய்குறுக வெட்கப்பட் டவளைத் தேற்றி

விரக்தியடை யாதீரென வேண்டி நின்றேன்

 

கையிருந்து பிள்ளைதனை மெள்ள வாங்கிக்

கண்ணீரை என்கரத்தால் துடைத்து நோக்கி

தையலேநீ கலங்காதே கால மெல்லாம்

தாயான உனைநானுங் காப்பே னென்றேன்!

 

ஐயனேநான் உம்பேச்சை நம்ப லாமோ?

அடுத்தவர்கள் வதந்திகளைப் பரப்ப முன்னர்

மெய்யாக ஊரவர்முன் மணஞ்செய் வீரா?

விளையாட்டு வேண்டாம்நான் ஏழை என்றாள்.

 

 

கழிவிரக்கத் தோடவளின் கரத்தைப் பற்றிக்

கலங்காதே விரைவிலுனை மணமுடிப் பேன்எனத்

தெளிவாகச் சொன்னதுமே அவளென் காதில்

தெய்வம்போல் வந்தபெருந் தியாகிநீ என்றாள் !














விதவைகளும் நல்வாழ்வு வாழ வேண்டும்

விரகதாபம் அவர்களுக்கும் உண்டு தானே!

கதவுகளை அடைத்துவைத்துத் தனிமையில் விடாது

கல்யாணஞ் செய்துவைத்தல் புண்ணியம் அன்றோ?













யாவும் கற்பனை




No comments: