இறைவனிடம் முழுமையான சரணாகதி

 இறைவன் சர்வ வல்லமை படைத்தவர்; இறைவன் எங்கும் நிறைந்திருப்பவர்; இறைவன் அனைத்தையும் அறிந்தவர். இத்தகைய ஆற்றல் மிக்கதும், எல்லையற்றதுமான பரம்பொருளை வணங்குவதற்காக, மனிதன் இருபத்து நான்கு மணி நேரத்தில் சில நிமிடங்களை மட்டும் ஒரு சிலையின் முன்பாகவோ, உருவப்படத்தின் முன்பாகவோ செலவிடுகிறான்! இது உண்மையிலேயே வியப்புக்குரியது; நடைமுறையில் பயனற்றதாகவும் ஆகிவிடுகிறது.

உங்களுக்கு மூச்சு இருக்கும் வரையிலும், நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கும் வரையிலும் இறைவனை வணங்குங்கள். இறைவனைத் தவிர வேறு சிந்தனை இல்லாமல், அவரது கட்டளையை அறிந்துகொள்வதைத் தவிர வேறு குறிக்கோள் இல்லாமல், அந்தக் கட்டளையைச் செயல்படுத்துவதைத் தவிர வேறு செயல்பாடு இல்லாமல் வாழுங்கள். இதுவே சரணாகதி எனப்படுகிறது.

உங்களை முழுமையாக இறைவனிடம் அர்ப்பணித்துவிடுங்கள்.

நீங்கள் ஒரு பயணம் செல்லும்போது, உங்கள் காரின் சாவியை ஓட்டுநரிடம் ஒப்படைத்துவிட்டு, பின் இருக்கையில் வசதியாகவும் பாதுகாப்பாகவும் அமர்ந்து கொள்கிறீர்கள். வழியில் ஏற்படக்கூடிய சிரமங்களைப் பற்றி கவலைப்படாமல் பயணத்தைத் தொடர்கிறீர்கள்.

அவ்வாறு செய்யும்போது, உங்கள் வாழ்க்கைப் பயணத்தை அந்த ஓட்டுநரின் அறிவு, விழிப்புணர்வு மற்றும் திறமை ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்து அவரிடம் ஒப்படைத்துவிட்டீர்கள்.

ஆனால், சிலர் முழுமையாகச் சரணடைவதில்லை. அதற்குக் காரணம் அவர்களுடைய அகந்தை! வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஒவ்வொரு நிமிடமும், ஓட்டுநருக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கிக் கொண்டிருப்பார்கள். கார் அல்லது சாலையின் நிலை குறித்து கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பிக் கொண்டிருப்பார்கள்.

நிலைத்திருங்கள்; நம்பிக்கையுடன் இருங்கள்; உங்கள் இலக்கை பாதுகாப்பாகச் சென்றடையுங்கள்.

வாழ்க்கையே கார்; உங்கள் இதயமே அதன் சாவி; இறைவனே சாரதி (Sarathi – ஓட்டுநர்).

அந்த இறைவனிடம் முழுமையாகச் சரணடைந்து, தேவையற்ற கவலைகளிலிருந்து விடுபடுங்கள்.

பாதுகாப்பாகப் பயணம் செய்து, மகிழ்ச்சியுடன் இலக்கைச் சென்றடையுங்கள்.

No comments: