அமெரிக்காவில் மைக்ரோசொப்ட் உட்பட தொழில்நுட்ப நிறுவனங்களின் கிரீன் கார்ட் விண்ணப்பங்களுக்கு கட்டுப்பாடு
யேமன் விமான நிலையத்தின் மீது ஹவுதி அமைப்பினர் ஏவுகணைகள், ட்ரோன்களால் தாக்குதல்
ஆய்வகத்தில் ஆபத்தான தொற்று பரவி ரஷ்ய பெண் ஆய்வாளர் உயிரிழப்பு
ரியாத் சர்வதேச விமான நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: 12 பேர் உயிரிழப்பு, 309 பேர் காயம்
நேபாளத்தில் புத்தி கண்டகி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: 10 பேரைக் காணவில்லை ; 06 பேர் மீட்பு
அமெரிக்காவில் மைக்ரோசொப்ட் உட்பட தொழில்நுட்ப நிறுவனங்களின் கிரீன் கார்ட் விண்ணப்பங்களுக்கு கட்டுப்பாடு
09 Oct, 2026 | 12:19 PM
மைக்ரோசொப்ட் , அடோப் மற்றும் முன்னணி இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை வெளிநாட்டு ஊழியர்கள் நிரந்தரக் குடியுரிமை (Green Card) பெறுவதற்காக பயன்படுத்தப்படும் 'நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் திட்டத்தில்' (PERM) இருந்து இடைநீக்கம் செய்ய அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், வெளிநாட்டு மாணவர் மற்றும் தொழிலாளர் விசாக்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி ஹார்வர்ட், யேல், ஸ்டான்போர்ட், எம்.ஐ.டி உட்பட 09 முன்னணி அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மீதும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மைக்ரோசொப்ட் மற்றும் அடோப் தவிர, இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சேர்வீசஸ் , இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்.சி.எல் மற்றும் காக்னிசன்ட் , கேப்ஜெமினி ஆகிய நிறுவனங்களும் இந்தத் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பிடப்பட்ட நிறுவனங்களுக்காக இனி எந்தவொரு புதிய நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட மாட்டாது எனவும் அமெரிக்கத் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
"அமெரிக்க ஊழியர்களை வேலைநீக்கம் செய்துவிட்டு, குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை H-1B மற்றும் கிரீன் கார்ட் மூலம் அமர்த்துவதை ஏற்க முடியாது. மைக்ரோசொப்ட் நிறுவனம் அமெரிக்கக் கட்டமைப்பு முறையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளது" எனத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தாங்கள் தாக்கல் செய்த H-1B விண்ணப்பங்களில் 80 சதவீதம் நடப்பு ஊழியர்களின் காலவகாசத்தை நீடிப்பதற்கே பயன்படுத்தப்பட்டதாகவும், அமெரிக்க ஊழியர்களுக்கு இணையான ஊதியமே வெளிநாட்டு ஊழியர்களுக்கும் வழங்கப்படுவதாகவும் மைக்ரோசொப்ட் நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
யேமன் விமான நிலையத்தின் மீது ஹவுதி அமைப்பினர் ஏவுகணைகள், ட்ரோன்களால் தாக்குதல்
07 Oct, 2026 | 02:29 PM
ஈரான் ஆதரவு பெற்ற யேமனின் ஹவுதி அமைப்பினர் புதன்கிழமை (7) அதிகாலையில் ஏடன் சர்வதேச விமான நிலையத்தின் (Aden International Airport) மீது ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக யேமன் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
பல்வேறு முனைகளில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சவூதி அரேபிய படைகள் தலைநகர் ரியாத்திற்கு வடக்கே ஹவுதிகளின் ஏவுகணை ஒன்றை இடைமறித்து அழித்ததாகக் கூறியுள்ளன.
கெய்ரோவிலிருந்து புறப்பட்ட ஒரு விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே ஒரு ஏவுகணை விழுந்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக அதிகாரிகள் விமானம் தரையிறங்குவதை ரத்து செய்து, அதை ஜித்தாவுக்குத் திருப்பிவிட்டனர். அதே நேரத்தில் ஓடுபாதையிலிருந்த இரண்டு விமானங்கள் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இத்தாக்குதல் குறித்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உடனடியாக எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் இல்லாத யேமன் பகுதிகளுக்கான முதன்மை சர்வதேச நுழைவாயிலாக ஏடன் சர்வதேச விமான நிலையம் விளங்குகிறது.
யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தை ஆதரிக்கும் சவூதி தலைமையிலான கூட்டணி, ரியாத்திற்கு வடக்கே ஹவுதிகளின் ஏவுகணையை இடைமறித்து அழித்ததாகத் தெரிவித்துள்ளது.
ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சனாவில் (Sanaa) ஏவுகணை ஏவப்பட்ட தளத்தைக் கண்காணித்து வருவதாகவும், அதை அழிக்கப்போவதாகவும் சவூதி அரேபியா கூறியது. ஆனால் உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த எந்த விபரங்களையும் வெளியிடவில்லை.
ஹவுதி இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரீ வெளியிட்ட அறிக்கையில், ரியாத்தில் உள்ள 'கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தை' (King Khalid International Airport) இலக்கு வைத்து தங்களது அமைப்பு பல ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளார். இருப்பினும், இந்த விமான நிலையத்தின் மீதான தாக்குதல் குறித்து சவூதி தரப்பிலிருந்து உடனடியாக எந்த உறுதிப்படுத்தலும் வரவில்லை.
சமீபத்திய வாரங்களில் நாட்டின் செங்கடல் கடற்கரையோரத்தில் நிலப்பரப்புகளைக் கைப்பற்றிய ஹவுதிகளுக்கு எதிராக, சவூதி ஆதரவு பெற்ற அரசுப் படைகள் எதிர்த்தாக்குதலைத் தொடங்கியதைத் தொடர்ந்து, யேமனின் பல முனைகளில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
சவூதி தலைமையிலான கூட்டணியின் வான்வழி ஆதரவுடன், யேமன் அரசாங்கப் படைகள் இந்த வாரம் வியூக முக்கியத்துவம் வாய்ந்த 'பாப் எல்-மண்டேப்' ஜலசந்தி (Bab el-Mandeb Strait) மற்றும் மோச்சா (Mocha) நகரத்தைச் சுற்றியுள்ள செங்கடல் கடற்கரைப் பகுதியை மீட்க ஒரு மின்னல் வேகத் தாக்குதலைத் தொடங்கின. இதன் மூலம் கடந்த மாதம் ஹவுதிகள் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து அவர்களை வெளியேற்றின.
முன்னதாகப் புதன்கிழமை (7) தென்மேற்கு சவூதி நகரமான கமீஸ் முஷைத்தை நோக்கி ஏவப்பட்ட ஹவுதிகளின் ஏவுகணையைச் சவூதி இடைமறித்து அழித்ததாகச் சவூதி அரசுத் தொலைக்காட்சி ஊடகமொன்று செய்தி வெளியிட்டது.
மற்றொரு தனிப்பட்ட அறிக்கையில், அபா சர்வதேச விமான நிலையம் (Abha International Airport) மற்றும் கமீஸ் முஷைத்தில் உள்ள வான்படைத் தளத்தின் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக சாரீ தெரிவித்தார்.
கமீஸ் முஷைத் அருகே ஏவுகணையை இடைமறித்ததாக சவூதி கூறிய சம்பவத்துடன் இதற்குத் தொடர்புள்ளதா என்பது உடனடியாகத் தெளிவாகவில்லை.
அபா விமான நிலையத்தின் மீதான தாக்குதலையும் சவூதி அதிகாரிகள் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ஆய்வகத்தில் ஆபத்தான தொற்று பரவி ரஷ்ய பெண் ஆய்வாளர் உயிரிழப்பு
05 Oct, 2026 | 11:38 AM
ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள ஓர் ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஆபத்தானதொரு தொற்று பரவி, பெண் ஆய்வாளர் ஒருவர் (வயது 28) உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்ய அரசு ஊடகமான 'டாஸ்' (TASS) வெளியிட்ட தகவலின்படி, இர்குட்ஸ்க் (Irkutsk) அருகே உள்ள ஷெலேகோவ் (Shelekhov) நகரில் அமைந்துள்ள 'பிளேக் எதிர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில்' (Anti-Plague Research Institute) இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
தொற்றுநோய்களைக் கையாளும் 'ரோஸ்போட்ரெப்நாட்சர்' (Rospotrebnadzor) என்ற அரசு அமைப்பானது, ஆய்வகத்திலிருந்து என்ன கசிந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என கூறியுள்ளது.
மேலும், "காரணம் கண்டறியப்படாத" நியூமோனியா (Pneumonia of unknown origin) பாதிப்புக்குள்ளாகி அந்த ஆய்வாளர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
அத்துடன் குறித்த அமைப்பானது, "இர்குட்ஸ்க் பிராந்தியம், இர்குட்ஸ்க் மற்றும் ஷெலேகோவ் நகரங்களில் சுகாதார மற்றும் தொற்றுநோயியல் சூழல் சீராக உள்ளது" என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆய்வாளருக்கு நேர்ந்த மரணம் தொடர்பில் உரிய அதிகாரிகளால் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் உயிரிழந்தவர் "காரணம் கண்டறியப்படாத நியூமோனியா" நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது என்றும் ரோஸ்போட்ரெப்நாட்சர் அமைப்பு கூறியுள்ளது.
அண்டை குடியரசான புரியாட்டியாவின் (Buryatia) தலைவர் அலெக்சி சிடேனோவ் (Alexei Tsydenov) கூறுகையில், உயிரிழந்த 28 வயதான பெண் ஆய்வாளர் "ஒருவேளை பிளேக் நோயினால்" உயிரிழந்திருக்கலாம் என்று முன்னதாகத் தெரிவித்திருந்தார். அதேவேளை, புரியாட்டியாவில் "பிளேக் நோய் பாதிப்பு எதுவும் இல்லை" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இர்குட்ஸ்க் ஆளுநர் இகோர் கோப்சேவ் (Igor Kobzev), குறித்த பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு மிகவும் ஆபத்தான தொற்று நோய் ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படுவதன் அடிப்படையில் அவசரக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டதாக தனது டெலிகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆய்வகத்திற்கு அருகே உள்ள ஒரு அலுமினிய ஆலை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனது ஊழியர்களை முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியுள்ளது. நன்றி வீரகேசரி
அத்துடன் அலுமினிய ஆலையின் இயக்குநர் ஆர்டெம் ஃபோமினிக் (Artem Fominikh) இந்த தொற்று தொடர்பாக பல வதந்திகளும் முரண்பாடான செய்திகளும் பரவி வருவதாக சுட்டிக்காட்டினார். நன்றி வீரகேசரி
ரியாத் சர்வதேச விமான நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: 12 பேர் உயிரிழப்பு, 309 பேர் காயம்
11 Oct, 2026 | 11:59 AM
சவூதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டு வரும் தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியாக, ரியாத்தில் அமைந்துள்ள மாமன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 309 பேர் காயமடைந்துள்ளனர்.
சவூதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை வெளியிட்ட தகவலின்படி, உயிரிழந்தவர்களில் நான்கு சவூதி பிரஜைகளும் பங்களாதேஷ், அமெரிக்கா, எகிப்து, ஜோர்தான், சிரியா, பாலஸ்தீனம் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த எட்டு வெளிநாட்டுப் பிரஜைகளும் அடங்குகின்றனர்.
காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலையத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், பயணிகள் தங்களது விமானப் பயணங்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை நடத்தப்பட்ட இத்தாக்குதலைத் தொடர்ந்து, ரியாத் சர்வதேச விமான நிலையத்தை மூடிவிட்டதாக ஹவுதி ஊடக அலுவலகத் தலைவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், திங்கட்கிழமை யேமன் அரசாங்கம் ஹவுதிகளுக்கு எதிராகத் தாக்குதலை ஆரம்பித்ததை அடுத்து, சவூதி அரேபிய வான்வெளியைத் தவிர்க்குமாறு விமான நிறுவனங்களுக்கு ஹவுதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலை “ஏற்றுக்கொள்ள முடியாதது” என வன்மையாகக் கண்டித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் தொடர்புகொண்டு பேசவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
நேபாளத்தில் புத்தி கண்டகி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: 10 பேரைக் காணவில்லை ; 06 பேர் மீட்பு
11 Oct, 2026 | 03:43 PM
நேபாளத்தின் கோர்க்கா மாவட்டத்தில் உள்ள புத்தி கண்டகி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இன்று (11) ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, குறைந்தது 10 பேரைக் காணவில்லை எனவும், 06 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கோர்க்கா மாவட்டத்தின் உதவி தலைமை மாவட்ட அதிகாரி நேத்ரா பிரசாத் சர்மா தெரிவிக்கையில்,
அருக்கட், திரிபுராசுந்தரி, சோதி-மன்பு ஆகிய இடங்களில் இருந்த வாகனப் பாலங்கள் மற்றும் தார்ச்சே கிராமப்புற நகராட்சியை இணைக்கும் பெய்லி பாலம் உட்பட 2 மோட்டார் பாலங்களும் 4 தொங்கு பாலங்களும் வெள்ளத்தில் முற்றிலும் சேத மடைந்துள்ளது.
சும்னுப்ரி கிராமப்புற நகராட்சியின் பைன்யு மற்றும் பாகர் பகுதிகளில் 35 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தின் வடபகுதியில் 10 பேர் காணாமல் போயுள்ளனர். ஜகத், சல்லேரி, தோவன் மற்றும் கட்டேகோலா ஆகிய குடியிருப்புகளும் சேதமடைந்துள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் வான்வழியாகவும் தரைவழியாகவும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவசர உதவிக்காகக் கூட்டு விரைவுப் பதிலளிப்புக் குழு ஹெலிகொப்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.
ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சிர்திபாஸ், ஜகத், சல்லேரி, கோர்லாபேசி, மச்சாகோலா, சோதி, அர்கெட் மற்றும் அருக்கட் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆற்றோர மக்கள் தாமதிக்காமல் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு உள்நாட்டு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். அவசர உதவிக்கு 1234 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து சுமார் 184 கி.மீ தொலைவில் உள்ள இப்பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 06 பேர் இதுவரை ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment