அஞ்சலிக்
கவிதை
நனவினிலே நானுன்னை நற்கவியால்; வாழ்த்திவந்தேன்
நனிசிறந்த வுன்வாழ்த்தைச்
சுவைத்தவண்ணம் தூங்கிவிட்டேன்
கனவினிலே துயிலெழுப்பி; அஞ்சலிக்கா கவிகேட்டாய்?
கண்ணிரண்டை நீர்மறைக்கக்
கனத்தநெஞ்சோ டெழுதுகிறேன்
மருகியவள்
விருந்திடவென் மைந்தனவன் இல்லத்தில்
விருந்தினனாய்த்
தங்கிச்சிவ ஞானபோதம் கற்பித்தாய்!
அரும்பேறு
பெற்றுயர்ந்த மாணவர்கள் தவித்தேங்கப்
பெரும்பேறாய்ப்
பிறவாப்பே ரின்பநிலை அடைந்தனையோ?
மண்ணிலுழல்
எம்மவர்கள் மறுமையிலும் உய்வடைய
எண்ணரிய
ஆனந்த நூல்தேர்ந்து பொருளுரைத்தாய்
எண்பதொடு
நான்ககவை எய்தியதும் சிவகுருவே
கண்ணுதலான் பேரின்பக் கழல்நாடிக் கலந்தனையே!
சென்னைநகர் வந்துனையுன் தாரத் துடனெம்
திருநாடாம் இலங்கைக்கு அழைத்துச் சென்று
மன்னுபுகழ் பஞ்சஈஸ்வர தலங்கள் நாடி
மகிழ்வுடனே தொழுததெலாம் மறக்கப் போமோ?
என்னினிய இணைபிரியா விளவல் போன்று
இருவருமே கேண்மையுடன் இன்புற் றிருக்க
முன்னைப்பழ வினைதீர்க்க நோயைத் தந்து
மோட்சத்தை நல்கினனோ முக்கண் முதல்வன்?
இருள்நிறைந்த மாணாக்கர் உளங்கள் தோறும்
இருந்திடர்செய் அஞ்ஞான இருளா மன்ன
மருளகற்றிச் சிவசிந்தனை மலர வைத்தாய்
மதப்பெருமை உணர்த்திவிட்;ட அறிஞ! அன்பின்
அருள்வடிவே! நீவிரித்த அருளால் நாமும்
அறிவுபெற்றோம் கைம்மாறு செய்ய முன்னே
பெருமனத்தோய் பிறப்பறுத்துப் பிறைசூ டிசிவ
பெருமானின் கழலடியிற் சங்கமித் தாயே!
ஏறுநடை போட்டெமக்குச் சிவனார் பெருமை
எடுத்தியம்பும் கீர்த்தித்திரு அகவல் அதற்குக்
கூறுகூறாய்ப் பெருவிருந்தாய் உரைவிரித்தாய்!
கூடுதலாய்த் தசகாரிய நுண்பொருள் விளக்கி
வீறுடனே சகலாகம பண்டித! நீயுன்;
வித்துவத்தி றமையெல்லாம் குயிற்றக் கண்டோ
ஆறுபடை வீடமரும் .வைவேல் முருகன்
அழைத்துன்னைச் சிவமாக்கி அரனடி சேர்த்தான்?
பொற்புடன்சிவ ஞானபோத நுணுக்க மெல்லாம்
புகலரிய வித்துவத்தால் ஆய்ந்த றிந்து
கற்றதனை எம்மவரும் கடிதே நுகரக்
காதலொடு சிவபணியாய்ச் சிரமம் பாரா(து)
அற்புதமாய் சிறந்தவுரை விரித்துத் தந்தோய்!
ஆற்றியநின் சேவைக்குக் கைம்மா றறியோம்
சிற்சபையோன் மன்றுளாடி செம்மலர்ப் பாதம்
சிவகுருவே சாந்திதர அஞ்சலி செய்வாம்!
செந்தண்மை அந்தணனே சிறியேம் எழுதிச்
சேர்த்திட்ட விடைகள்தனைச் செம்மை யாக
சொந்தவிட யங்களெலாம்; தியாகஞ் செய்து
துருவியவைக் களவாக மதிப்பீ டிட்டெம்
சிந்தையிலே சிவஞான போதங் காட்டும்
தெய்வதநெறி யெனும்விதையை நாட்டி மகிழ்ந்து
விந்தைமிகு செஞ்சாலிப் பயிராய் வளர்த்து
வெற்றிகண்ட வித்தகனே சாந்தி சாந்தி!
தவமலிந்த திருப்பொலிவு முகத்திற் கால
தழைக்குஞ்சிவ சின்னமதை நெற்றி தாங்கச்
சிவனுருவாம் ஐந்தெழுத்தைச் செந்நா செப்பத்
தினம்அந்தி வண்ணனையுந் தித்தா மரையில்
நவநிதியாய் எழுந்தருளச் செய்து ஞான
நற்குருவாய் மலர்ந்ததிரு சபாரத் தினமே!
பவமறுக்கும் சிவதீட்சை அளித்த குருவே
பரமபதப் பேறுபெற்றாய் தெய்வ மானாய்.
சிவசாரியப் பெருந்தகையே சீயா போற்றி!
செப்பமுடைக் கல்விக்கோர் கடலே போற்றி!
தவநிறைந்த மனையறத்தின் தலைவ போற்றி!
சைவமொடு தமிழ்வளர்த்த சகபதி போற்றி!
பவமறுக்கும் சாந்தகுணப் புனிதா போற்றி!
பார்மதித்துப் போற்றிமகிழ் பண்பாள போற்றி!
சிவமான சிவாச்சாரிய செல்வ போற்றி!.
சின்மயமே தேவதேவே போற்றி! போற்றி!.
அண்மையிலே சிவபதம்
எய்திய சபாரத்தின சிவாசாரியார்
அவர்களpன் பிரிவை
ஆற்றாது உடனேயே எனது மனதிலே
கிளர்த்தெழுந்த அஞ்சலிக் கவிதையை
அன்னாரின் மகளுடன் பகிர்ந்தேன். அந்தக்
கவிதையை அவரைப் பற்றிய சிறு குறிப்புடன்
தமிழ்முரசு வாசக நேயர்களுடன்
பகிர்கிறேன்.
-------------பல்மருத்துவக் கலாநிதி பாரதி
இளமுருகனார்.
பேராசிரியர் சிவத்திரு சபாரத்தினம் சிவாசாரியார்
சகலாகம
பண்டிதர் முனைவர் சிவத்திரு சபாரத்தினம் சிவாசாரியார் அவர்கள் ஆகமங்களை
ஐயந்திரிபறக் கற்று அறிந்து அவற்றிலே ஆய்வுசெய்து கலாநிதிப் பட்டம் பெற்றவர். தமிழ் -
சமக்கிருதம் - தத்துவம் ஆகியவற்றிலே முதுகலைப் பட்டங்கள் பெற்றுச் சென்னைப்
பல்கலைக் கழகத்திலே சுமார் முப்பது
ஆண்டுகள் தமிழ் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றிய பெருமை உடையவர். சங்க
இலக்கியங்கள் - ஆகமங்கள் - வேத உபநிடதங்கள் - திருமுறைகள் - திருப்புகழ்
ஆகியவற்றுடன் ஆங்கிலத்திலும் ஆழ்ந்த புலமை பெற்றுத் திகழ்ந்தவர்.
சைவசித்தாந்தத்திலே தெளிந்த விரிந்த அறிவு கொண்டு விளங்கியவர். திருமந்திரம் -
சிவஞானபோதம் - சிவஞான சித்தியார் - திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார் மற்றும்
பாம்பன் சுவாமிகளின் நூல்கள் - போன்றவற்றிற்கு ஆகமப் பேருரை செய்வதில் நிகரற்றவர்
சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பு சிட்;னிக்கு (அவுத்திரேலியா) உலகசைவப் பேரவையின் அனுசரணையுடன் சிவஞானபோதம்
கற்பிப்பதற்காக வருகை தந்தார். வரவேற்புக் கவிதை வழங்கி வரவேற்றேன். சிவஞானபோதம் -
திருமந்திரம் ஆகிய சைவத்திரு நூல்களுக்கு பேருரை வழங்கி சைவ மாணவர்கள் பலருக்கு
ஞானயோகப் பயிற்சிகளை நடத்திச் சான்றிதழ்களும் வழங்கினார். என்னுடைய பாராட்டிற்குப்
பதிவாக எனக்கு இந்தக்
வெண்பாவையம் வாழ்த்தையும் எழுதி
அனுப்பினார்.
தன்னேர் இலாச்சிவ ஞானபோ தப்பொருளை
என்னால் இயன்றவகை ஈண்டுரைக்கப் - பொன்னாரும்
சிற்றம் பலவன்றன் சீர்அருளே முன்னிற்க
முற்றும் உணர்வாய் முனைந்து.
தக்கதொரு குருவருளால் தமிழும் பண்பும்
தனிச்சைவ நெறியுணர்வும் வாய்க்கப் பெற்றே
இக்கெனவே இனிக்கின்ற மொழியில் ஊஞ்சல்
இனிதியற்றிப் பணிசெய்தும் எயிறு காத்தும்
பக்குவம்சேர் மனம்கொண்ட பாரதிப் பேர்கொள்
பாலசுப் பிரமணியனார் செல்வ வாழ்க!
குக்குடம்சேர் கொடிகாள்ளும் குமரன் தங்கள்
குடிமுழுதும் காத்தருள்க குறைவி லாதே!
அடியார்க்கு எளியன்
சபாரத்தினம்
சபாரத்தின
சிவாசாரியாரின்அன்பும் நட்பும் என்னை அவர்பால் ஈர்த்தது. அவரது 80 ஆவது பிறந்த
நாளுக்கு வாழ்த்து அனுப்பினேன்.
நெஞ்சத்திருந்(து) ஒளிவிளக் கேற்றி யுன்றன்
நினைவில்நறுஞ் சிவஞான ஊற்ற ளிக்கும்
அஞ்சரண அம்பலத்தோன் அருள்பெற் றுயர்ந்தோய்!
அருளமுதோ அறிவமுதோ எனநாம் வியக்க
விஞ்சுமெழில் கொஞ்சப்பொருள் விரிக்குங் கோலம்
மெச்சியதன் பெற்றிதனைப்; பகரப் போமோ?
மஞ்சுதவழ் வானிற்பிறை ஆயிரங் கண்டோய்!
மன்றுளாடி வழிநடத்த வாழ்வாங்கு வாழி!
பதிலுக்கு எனக்கும் 80ஆம்
பிறந்தநாள் வாழ்த்தாகப் பின்வரும்கவிதைகளை
அனுப்பினார். என்னே எனது பாய்க்கியம்.
உ
திருச்சிற்றம்பலம்
ஓங்குபுகழ்ப் பொதிகைவாழ் ஐயன் தந்த
ஒளிநெறிசேர் உயர்தமிழின் இனிமை யாதிப்
பாங்குகளை விரித்துரைக்கும் பண்சேர் பாக்கள்
பலநூறாய்த் தந்ததங்கத் தாத்தா வின்சீர்
ஈய்ங்குயர்த்திக் காட்டுகின்ற ஏந்தல்! ஈடார்
இளமுருக னார்பரமேஸ் வரியாம் அன்னை
நீங்கலிலாப் பேரன்போ டீய்ந்த செல்வ!
நீள்நிலத்தில் நன்னலத்தோ டென்றும் வாழி!
சொற்பொலிவும் பற்பொலிவும் மிளிரச் செய்யும்
சுடர்மிக்க நற்பணிகள் செய்யும் தூயோய்!
பொற்புறவே நன்மக்கட் பேறுபெற்ற
புனிதனே! புதியனவாம் பாடல் நூறாய்ச்
சற்பமெனப் படைத்துவரும் சீரோய்! தெய்வத்
திருக்கோயில் நிகழ்வுகளை வருணித் தாங்கே
நற்பொருள்சேர் கவிதைகளை வழங்க வல்லோய்!
நல்அரங்கேஸ் வரியுடன்எந் நாளும் வாழ்க!
சம்புபக்கச் சீரோர்க்கும் சம்பு பக்கத்
தரமார்ந்த உருத்திரர்க்கும் குருவாய்த் தோன்றி
உம்பர்களால் உணர்வரிய ஆக மங்கள்
உலப்பிலவாய் உபதேசித்(து) ஒளியைத் தந்த
நம்பன்சீர்த் திருவனைத்தும் ஈழ நாட்டு
நற்புகழ்சேர் சிதம்பரத்துப் புராணம் மூலம்
இம்பருல குள்ளார்க்கு விளக்கி வைத்த
இளமுருக னார்வாழ்த்த என்றும் வாழ்க!
எண்பதாம்
அகவையின் நிறைவைக் காணும் தாங்கள்
நூறாம்
அகவையின் நிறைவையும் கண்டுகளிக்க அன்புடன் வாழ்த்தி வணங்கும்
அன்பன்
சபாரத்தினம்
--------------------------------------------------------------------------------------------------
சைவாகமங்களைப் பயில்வோர்கள்
ஆகம ஞான பாத நுட்பங்களைத் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும் எனில் பதிநான்கு
மெய்ந்நூல்களையும் அவசியம் முறைப்படி பயில வேண்டும். திருவுந்தியார் -
திருக்களிற்றுப்படியார் ஆகிய இரண்டு நூல்களையும் கற்பதற்கு முன்னர் சிவஞானபோதம் சிவஞான
சித்தியார் சிவப்பிராசம் போன்ற சித்தாந்த நூல்களைத் தெளிவாகக் கற்று முப்பொருள் உண்மைகளை ஒழுங்குற உணர்ந்த
பின்னரே பயிலவேண்டும் என்பதிலே மிகவும் உறுதியாக இருந்தவர் சிவாசாரியார்.
அதன்படியே செயலிலும் நிறைவேற்றி மகிழ்ந்தவர்.
சிவத்திரு அருச்சுனமணி அவர்களின் வழிநடத்தலிலே சிறப்புடன் இயங்கிவரும்
அவுத்திரேலியா சிவஞானத்
தமிழ்ப் பேரவை ஊடாகச் சிவஞான
;தியாரை விரிவாகப் படிப்பித்தார்
தவப்பேற்றின் பயனாகக் குருவாய் வந்து
தமிழ்ப்பேரவை மூலமாய்நீ கணணி வழியே
சிவப்பேறளிக் குஞ்சிவஞான சித்தி யாரின்;
தேன்பொதிந்த பொருள்விரித்து உரைப கன்று
நவப்பேறு பெற்றதுபோல் சிவஞா னத்தை
நாள்தோறும் ஊ}ட்டியெம்மைத் தூய்மை செய்தாய்!
உவப்பேறி நன்றிசெல வார்த்தை ஏது?
உமைமைந்தன் அருளருள நீடு வாழி!
என
வாழ்த்தி மகிழ்ந்தேன்.
‘
சிவாசாரியாரின் தூயநட்பைப் பெற்றது எனது
பேறு என எண்ணினேன்.
பொங்கிவரு முள க்குமுறல்! புத்து ணர்ச்சி!
புகலரிய செந்தமிழைப் போற்றும் மேன்மை!!
பங்கம்வர வொருவரையும் பகையா வுள்ளம்!
பரம்பொருளை விட்டகலா நெறியின் கேண்மை!
தங்குதடை யின்றிக்கவி புனையும் பெற்றி!
சாந்தமுகம் வெண்ணீறு உளத்தின் தூய்மை!
துங்கமுகத் தூமணியின் அருளா லுன்றன்
தூயநட்பைப் பெற்றதென்றன் பேறு அன்றோ?
என வாழ்த்தி
மகிழ்ந்தேன்.
நட்பு வாய்க்கப்; பெற்றதை நினைந்து
மகிழ்வுற்றேன். எனது தாத்தாவாகிய
நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சூரிய வழிபாடு என்னும் அருiமான நூலுக்கு ஒரு
அணிந்துரை தந்ததொடு நூல் வெளியீட்டு விழாவினையும் தலைமை தாங்கி ஆய்வுரை நிகழ்த்திச்
சிறப்புச்செய்தவர் சிவாசாரியார்.
“சகலாகம பண்டிதர்” என்னும்
விருதும் பொற்கிழியும்
மதுரை
ஆதீனம் ஸ்ரீ-ல-ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் அவர்களால்
வழங்கப்பெற்ற ஞான்று அவரை என் கவிதை அந்த நிகழ்ச்சியிலே வாழ்த்தியது.
அளிக்கப்பெற்ற
வாழ்த்துப்பா
இந்துமா கடற்கண் இலங்குந்
தமிழகம்
முந்தியாய் முகிழ்த்தநற்
தவப்பய னென்கோ!
வந்திறை அருளிய வரந்தா
னென்கோ!
சந்ததி இயற்றிய தவப்பயன்
னென்கோ!
வளநலந் திகழ்உயர்; அந்தணர் குலமதில்
இளங்கதி ரொளிகால் இரவிதா
னென்கோ?
வாமனத் தோற்றமும் மாரவேள்
வனப்பும்
கோமகன் உருவினில் குலநலக்
கொழுந்தென
அபார ஞானக் குழந்தையாய்; உதித்தனை!
சபாரத் தி;னசிவா சாரியார் ரெனும்பேர்
தாங்கியே குருவழி தரமிகு
பல்கலைப்
பேரா சிரியர் எனவுயர்ந்
தோங்கினை!
நிகரில் விருதெனப் பெருவிழா
வதனில்
‘சகலா
கமபண் டிதர்’எனும்
பட்டம்
பெறுவதை நினைந்து பெருமிதங்
கொண்டு
நிறைமனத் துடனே வாழ்த்து
கின்றோம்!
மருவா நெறிதரு ஞான போதமும்
\திருமந்
திரமமாம் தமிழ்மந் திரமும்
பவமறுத்; திம்மையில் சிவபதம் நல்கும்
சிவங்கனி ஞான சித்தி யாரும்;
தவஞ்செய் பலனால் பயிற்றுவித்
தருளினை!
கொண்டவுண் மைநூற் கருத்துக்
கெலாமுரை
கண்டுநீ விரித்த பெற்றிதான்
என்னே!
சொல்லெனும் துளியிலே
பொருளெனும் புதுமது
சொட்டிச் சுரந்திடு மமிர்த
சுரபியாய்
சூல்கொள் கொண்டலாய்ப் பெய்தே
பலநாள்
சில்லென நெஞ்செலாம் சிவஞா
னக்கடல்
பல்கிப் பெருக்கெடுத் தோடிட
வைத்தனை!
சிவவொளி யின்றியே சிந்தைவா
டியசிவச்
செஞ்சா லிப்பயிர் செழித்தே
ஓங்கிடச்
சஞ்சா ரஞ்செயும் உதயசூ
ரியனாய்
தக்கநே ரத்திலா ஒளிகா லவந்தனை?
சொக்கனா வுனைத்தேர்ந்
திங்கனுப் பினனோ?
சொற்சுவை பொருட்சுவை துலங்கிட
அன்புடன்
பொற்புறு நயம்பல பொருந்து
முரையெலாம்
கற்றிடும் எமக்கோர் நற்றவ ஞான
குருவெனத் தோன்றி நயம்பட
விரித்தனை!
எண்பதாம் அகவையில் இன்றுஞ்
சேவைசெய்
பண்பினோய் உனக்கெம் கைமாறு
ஏதுசொல்!
பழையன திருத்திப் புதியன
புனையும்
இளகிய மனங்கொண்; டொழுகிடுஞ் செம்மல்!
ஓங்கு புகழ்மிகு வாகம
நூலதற்(கு)
ஆங்கிலத் திலேமொழி
பெயர்த்தநல் லறிஞ!
என்பால் அன்பை என்றுஞ்
சொரிந்திடும்;
நந்தா
விளக்;கென
ஞான மருளிடும்
செந்தா மரைபோல் திகழ்மலர்
முகத்தினாய்!
வாய்மையிற் சிறந்த தூய்மை
நெஞ்சினாய்;!
அந்தி வண்ணனின் அருட்க
மலங்கள்
சிந்திடும் பேரருள் நிறைகெனத்
துதித்து
சுந்தர மதிமுகத் துணையொடு
கூடிப்
பீடுசால் ஞானம் பெருக்கி
நீடுவா ழியநீ! நீடுவா ழியவே!
சிறியனேனின்
சிந்தையிலே பூத்த இக்கவிதையிலே ஏதாவது பிழைகள் இருந்தால் அறிவிக்கும்படி
தாழ்மையாகக் கவிதையாலே விண்ணப்பித்தேன்.
சிற்றறி வுடையனேன் சிந்தையில் எழுந்ததைத்
தீட்டினேன்! வாழ்த்ததில் என்னையும் மீறிச்
சொற்பிழை மற்றும் பொருட்பிழை கண்டால்
தூயவா! எனக்கறி விப்பீ ரையா!
கற்றதன் படியே என்றுமே நானும்
கழல்தொழு தேத்தியே நாள்கழிக் கின்றேன்
பொற்புடன் நடஞ்செய் சிற்சபை ஈசன்
பூங்கழல் அருள்பெற் றோங்கிடு வாயே!
வாழ்த்துக்
கவிதை ஒன்றை எனக்கு னுப்பியிருந்தார்.
திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்
திருக்கீர்த்தி அகவற் பாஆகிய நூல்களுக்கு ஆகம அனுபூதிப் பேருரை விரித்துரைத்ததுடன் ஞானயோகப் பயிற்சிகளை நடத்தி மாணவர்களுக்குச்
சான்றிதழ்களும் வழங்கியவர். அவருடைய உரைகளெல்லாம் காலங்காலமாகத் தொடர்ந்துவரும்
குரு மரபுக்கு மாறுபடாத வகையில் சுருதி – குருவாக்கியம்
– சுவானுபூதி
என்னும் மூன்றின் வழிநின்று ஆகம அடிப்படையிலே எழுந்தவையே. சிவாசாரியார்
மாணவர்களுக்குச் சிறந்தமுறையிலே பயிற்சிகளை
நடாத்தினார்.
சிவஅனுபூ திப்பேற்றைப் பெற்றுநா முய்யச்
சிவப்பணியாய் எம்போன்ற சிறியோர்க் கமுதாய்ப்
பவம்போக்கச் சிவனார்தம் கைப்பட வரைந்த
பார்போற்றும் திருக்கீர்த்தி அகவற் பாவிற்(கு)
உவந்தெமக்குப் பொருள்விளக்கி உய்வித்து ஞான
ஒளிகால எழுந்ததோர் பரிதி போலக்
கவனமொடு பதிகப்பெரு வழியைக் காட்டக்
காதலொடு முனைந்திட்ட குருவே வாழி!
என்று அன்று வாயார வாழ்த்தத்தான் முடிந்தது.
அடியேன் திருவருள் துணையொடு
உலகம் போற்றும் யாழ்.கொழும்புத்துறை
சிவயோக சுவாமிகள் அவர்களின் வாழ்க்கைச் சரிதத்தோடு அவரது அற்புதங்கள்
அடங்கிய அரும்பெரும் நூலான ‘சிவஞானச்
சித்தர்’ என்கிற நூலுக்கு அருமையான
அணிந்துரையைத் தந்து பாராட்டினார். கவிதையால் வாழ்த்தினேன்.
அவதரித்துக்; குருவாகி அகிலம் உய்ய
அருள்வடிவாயச்; சைவமதை உயிராய் ஓம்பிச்
சிவம்வளர்த்த சித்தமாசித் தர்சீர் செப்பும்
திருநூலுக் அணிந்துரையைச் சிவவாக் கெனவே
தவப்பேறாய்ப் பெற்றுவிட்டேன்! குருவே நின்றாள்
தனைத்தலைமேற் சூட்டிமகிழ் கின்றேன் ஐயா!
புவனமீன்ற பெய்வளையாள் பொங்கர வனுடனே
பொற்புமிகு பதமீவாள் நலமே வாழி!
சிவாசாரியர் தனது வகுப்புகளை
நிறவு செய்ததும் ;;…..
நாள்தோறும் நூற்பொருளை நன்றாகச் சிந்தித்துத்
தாள்போற்ற வாய்த்துள்ள தமிழ்ப்பதிகப் பொருளுணர்ந்து
கோள் அகற்றும் நிராதாரக் குலநெறியில் தலைநின்று
மீள்கையிலா ஆனந்தப் பேறடைவீர்;; மேம்பட்டே!
என்று ஒரு வேண்டுகோளை
வைத்துத் தனது தெய்வீகப் பணியைச்
சிறப்புற நிறைவுசெய்தார்.
சிவாசாரியாருக்கு உடல்நலக்
குறைவென்னு அறிந்து இறைவனை வேண்டி இந்தக் கவிதையை அனுப்பினேன்.
பங்கமிலாத் துங்கமிகு சிவஞா னபோதப்
பயிற்சிமுறை உயர்ச்சிபுகழ் பகரப் போமோ?
தங்கமனம் கொண்டசபா ரத்தின மையா!
தங்களுடல் நலக்குறைவு உற்ற தென்று
திங்களன்று என்செவியாற் செய்தி கேட்டேன்
திருமுறைகள் ஓதியுங்கள் பிணியுந் தீரப்
பொங்கரவன் விரைமலர்த்தாள் தொழுது நின்றேன்
பூரணசுகம் பெற்றிடுவீர்! வாழ்த்து கின்றோம்1
என்ன செய்வது? இறைவன் விதித்த இறுதி நாளை மாற்ற முடியுமா?.
இவ்வண்ணம் பலவகையாலும் தனது இறுதிக் காலத்திலே அரும்பணி ஆற்றிய
சிவாசாரியாரின் எதிர்பாரா மறைவு
எல்லோருக்கும் ஒரு பேரிழப்பாகும். அவரின் புனித ஆன்மா சிவபெருமானின் பாதாரவிந்தங் காலும் சிவவொளியிலே சங்கமித்துச் சிவானந்தம் துய்த்திருக்கும் என்பது அடியார்களாகிய எமது நம்பிக்கை.
ஓம்
சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
சிவஞானச்சுடர் பல்மருத்துவக் கலாநிதி பாரதி இளமுருகனார்


No comments:
Post a Comment