இலங்கைச் செய்திகள்

தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காக குரல் கொடுத்த சி. அ. யோதிலிங்கம் காலமானார்

தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஷிரந்தி ராஜபக்‌ஷ

போதைப்பொருள் பாவனையால் நாட்டில் எச்.ஐ.வி., ஹெபடைடிஸ் தொற்று ஆபத்து அதிகரிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்‌ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிரான ஊழல் வழக்கு - கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பம்

தேரர்கள் சிறையில் தடுத்து வைக்கப்படும் மற்றும் வெளியே அழைத்துச் செல்லப்படும் முறை தொடர்பில் புதிய விதிமுறைகள் – ஜனாதிபதி



தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காக குரல் கொடுத்த சி. அ. யோதிலிங்கம் காலமானார்

09 Oct, 2026 | 10:00 AM

வடக்கு, கிழக்கு, மலையகத் தமிழர்கள், மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்காக குரல் கொடுத்த – ஆய்வு கட்டுரைகளை எழுதிய – விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுத்த தமிழ்த் தேசிய மற்றும் குடிமைச் சமூக செயற்பாட்டாளரான சி. அ. யோதிலிங்கம் காலமானார்.

நேற்று வியாழக்கிழமை (08) யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 8 மணித்தியாலங்களுக்கு மேலாக  நடைபெற்ற சத்திர சிகிச்சையை தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானதாக உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும், சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளரும், ஓய்வுநிலை ஆசிரியருமான சி. அ. யோதிலிங்கம் குரல் அற்றவர்களின் குரலாகவும், சமூக நீதிக்காகவும், அநீதிக்கு எதிராகவும் அரசியல் போராட்டங்கள் பலவற்றில் முன்னின்று செயற்பட்டவர்.

தமிழ் மக்களின் அரசியல் விடுதலை, மலையகத் தமிழ் மக்களின் உரிமைகள், அரசியலமைப்பு சார்ந்த பெருமளவு நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.  

மலையகத் தமிழ் மக்களும் இலங்கையின் அரசியலமைப்பில் தனித்துவமான தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர்களில் சி. அ. ஜோதிலிங்கம் முதன்மையானவர்.

மலையகத் தமிழ் மக்களின் அரசியல் அடையாளம், தேசிய இன உரிமைகள், அரசியலமைப்பு அங்கீகாரம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாகத் தொடர்ச்சியாகக் கருத்துகளை முன்வைத்து வந்துள்ளார்.

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைந்து, அவர்களுக்கான உதவித் திட்டங்களையும் சமூகப் பணிகளையும் அவர் தனது மனைவியுடன் இணைந்து முன்னெடுத்துள்ளார். குறிப்பாக மீறியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் செய்த சேவைகள் அளப்பறியவை.

புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவுடன் மலையகத்தில் பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்ததுடன், நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களின் பகுதிகளுக்குச் சென்று பணியாற்றியமையும் அவரது சமூகப் பங்களிப்பின் முக்கிய அம்சமாகும்.

மலையக சமூக ஆய்வு மையத்துடனான அவரது தொடர்பும் செயற்பாடுகளும் மலையக மக்களின் சமூக, அரசியல் மற்றும் தேசிய அடையாளம் தொடர்பான விடயங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன.

மாற்று மே தினம் மற்றும் மலையக தேசிய பொங்கல் விழா உள்ளிட்ட நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகளுடன் அவர் இணைந்து செயலாற்றியுள்ளார்.

மலையக மக்களின் உரிமைகள், அடையாளம் மற்றும் சமூக முன்னேற்றம் தொடர்பான விடயங்களில் சுமார் இரண்டு தசாப்தங்களாகத் தொடர்ந்து எழுதியும் கருத்துகளை முன்வைத்தும் வந்துள்ளார்.

மலையகப் பிரதேச இளைஞர்களிடையே அரசியல் அறிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதிலும் அவர் பங்களித்துள்ளார். அரசியலமைப்பு, அதிகாரப் பகிர்வு, மலையகத் தமிழ் தேசியம் உள்ளிட்ட விடயங்களில் இலவச வகுப்புகளை நடத்தி, இளைஞர்கள் தமது அரசியல் உரிமைகள் மற்றும் சமூகத்தின் எதிர்காலம் குறித்துப் புரிந்துகொள்ள சி. அ. யோதிலிங்கம் உதவியுள்ளார்.   நன்றி வீரகேசரி 






தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஷிரந்தி ராஜபக்‌ஷ

09 Oct, 2026 | 11:14 AM

கைது செய்யப்பட்டு எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்‌ஷ,  இன்று (09) வெள்ளிக்கிழமை தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கண்ணில் ஏற்பட்டுள்ள நோய் நிலைமையினால் நேற்று (08) புதன்கிழமை சிறைச்சாலை வைத்திய நிபுணரிடம் அவர் காண்பிக்கப்பட்டார்.

சிறைச்சாலை மருத்துவ அதிகாரி வழங்கிய மருத்துவப் பரிந்துரைகளுக்கு அமைவாகவே, தேசிய கண் வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் ஒருவரிடம் அவரைப் பரிசோதனைக்குட்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

'சிரிலிய சவிய' கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 10 மில்லியன் ரூபா நிதி முறைகேடு குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்‌ஷ, கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 




போதைப்பொருள் பாவனையால் நாட்டில் எச்.ஐ.வி., ஹெபடைடிஸ் தொற்று ஆபத்து அதிகரிப்பு

Published By: Digital Desk 2

09 Oct, 2026 | 10:57 AM

(செ.சுபதர்ஷனி)

நாட்டில் வருடாந்தம் எச்ஐவி தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. கடந்த வருடம் மாத்திரம் 875 எச்ஐவி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பால்வினை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் வைத்தியர் சத்தியா ஹேரத் தெரிவித்தார்.

அத்தோடு, போதைப்பொருள் பயன்பாடும் அதனோடு இணைந்த ஊசி பயன்பாடும் சமூகத்தில் நவநாகரிக போக்காக உருவெடுத்துள்ளமையால், அதன்பால் ஈர்க்கப்பட்டு பலரும் எச்ஐவி, எப்படைடிஸ் சி உள்ளிட்ட பால்வினை நோய் நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

'முழுநாடும் ஒன்றாக' எனும் தேசிய செயல் திட்டத்தின் உத்தியோகப்பூர்வ அலுவலகத்தில் நேற்றைய தினம் (8) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வைத்தியர் மேலும் தெரிவிக்கையில்,

போதைப்பொருள் பாவனையானது உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிப்பதுடன், திடீர் மரணங்கள் மற்றும் பால்வினை நோய்தொற்றுகள் போன்ற ஆபத்தான நிலைமைகளை ஏற்படுத்தக்கூடும். உலக நாடுகள் எச்ஐவி தொற்றைக் கட்டுப்படுத்தியுள்ள போதிலும், இலங்கையில் பாதுகாப்பற்ற பால்வினை நடவடிக்கைகள் மற்றும் நரம்புகளில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் புதிய சவால்கள் எழுந்துள்ளன. 

எச்ஐவி தொற்றைக் கண்டறியும் வீதம் 56 சதவீதமாகவும், மருந்துகளைப் பாவிப்போர் வீதம் 52 சதவீதமாகவுமே உள்ளது. போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 875 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதேவேளை, போதைப்பொருளை ஊசி மூலம் பாவிப்பவர்களிடையே ஹெபடைடிஸ் சி தொற்று 40 முதல் 50 சதவீதம் வரை கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்காக நாடு முழுவதும் 25 மாவட்டங்களில் 41 பிரதியோக சிகிச்சை நிலையங்களின் மூலம் விசேட சேவைகள், தடுப்பு முறைகள், ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகளுக்குச் செல்லத் தயங்குபவர்களுக்காகச் சமூக மட்டத்திலான மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகின்றன.

பால் உறவுகளுக்காக போதைப்பொருளைப் பயன்படுத்துவோரிடையே தொற்றுப் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. அன்மையில் கொம்பனித்தெரு பகுதியில் 360 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 45 பேருக்கு எச்ஐவி தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனையால் சுய உணர்வற்ற நிலையில் பாதுகாப்பற்ற மற்றும் குழுப் பால் உறவுகளில் ஈடுபடுவதே இதற்கு பிரதான காரணமாக உள்ளது.

எனவே, போதைப்பொருள் பாவனையிலிருந்து விலகியிருப்பதும், நரம்புகளில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றுவதைத் தவிர்ப்பதும் அவசியமாகும். இவ்வாறான சுகாதார நடவடிக்கைகளால் நாட்டைப் பாதுகாப்பான சுகாதாரச் சூழலாக மாற்ற முடியும் என்றார்.  நன்றி வீரகேசரி 






முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்‌ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிரான ஊழல் வழக்கு - கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பம்

09 Oct, 2026 | 11:12 AM

(எம்.எப்.எம்.பஸீர், செ.சுபதர்ஷனி)

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்‌ஷ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கின் ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை தள்ளுபடி செய்த கொழும்பு மேல் நீதிமன்றம், குறித்த வழக்கு விசாரணையை  நேற்று (08) வியாழக்கிழமை ஆரம்பித்திருந்தது.  

அதற்படி பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கமைய, வழக்கு விசாரணை முன்னெடுத்துச் செல்லப்படும் என நீதிபதி இதன்போது உத்தரவிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தாம் குற்றமற்றவர்கள் என பிரதிவாதி தரப்பினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்த நிலையில், இவ்வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் மன்றில் ஆஜரான பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுபாஷினி சிரிவர்தன விடயங்களை முன்வைக்கையில், வழக்கு விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 199 ஆம் ஏற்பாடுக்கமைய, தொடக்கவுரையை ஆற்றுவதுக்கு அனுமதிக்குமாறு கோரியிருந்தார்.

அதற்கமைய “கனம் நீதிபதி அவர்களே! இந்த வழக்கின் அடிநாதமாக அமைவது 2022 ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதியன்று ஏற்பட்ட நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் போராட்டத்தின் போது தீக்கிரையாக்கப்பட்ட அல்லது சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களுக்கான நட்டஈட்டு வழங்குமுறையாகும். இத்தகைய இழப்பீடு தொகைகளைச் முறையாக வழங்குவதற்கெனப் பிரத்தியேகமான சட்டப்பூர்வ நிறுவனமும் தெளிவான செயற்பாட்டுப் பொறிமுறையும் காணப்படுகின்றது. 2018 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க இழப்பீடுக்கான அலுவலகச் சட்டத்தின் ஊடாக அரசாங்கத்தினால் இழப்பீடு வழங்கல் செயற்பாடுகளை மேற்கொள்ளவதற்கான அலுவலகம் அரசாங்கத்தால் நிறுவப்பட்டுள்ளது. குறித்த இந்த நிறுவனத்தின் ஊடாக இழப்பீடு தொகைகள் வழங்கும் செயற்பாட்டில் பாரிய அளவிலான ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டே இந்த வழக்கு எங்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இதனைத் தொடர்ந்து, பிரதிப் பணிப்பாளர் நாயகத்தின் நெறிப்படுத்தலின் கீழ் வழக்கின் பிரதான சாட்சிகள் விசாரணை ஆரம்பமாகியிருந்தது.

கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி முதல் 2024 ஆம் ஆண்டு மே 29 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள், இலங்கை மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான செவனகல பகுதியில் உள்ள காணி ஒன்றில் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டடம் உள்ளிட்ட சொத்துக்கள் மே ஒன்பது வன்முறையின் போது சேதமடைந்திருந்தன. இதனைக் காரணம்காட்டி, இழப்பீடு அலுவலக அதிகாரிகள் மீது அழுத்தம் பிரயோகித்து, அந்தச் சொத்துக்களுக்காக 8,850,000 ரூபா (88 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா) பணத்தை இழப்பீடாக பெற்றுக்கொண்டதன் மூலம், 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி, கடந்த ஜூன் 19 ஆம் திகதியன்று மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்குக்கான குற்றப்பத்திரிகையை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கின் பிரதான விதிகளுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுக்கள் முறைப்பாட்டுத் தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் வழக்கு விசாரணைகளின் போது சாட்சிகளாக 30 நபர்களை மன்றில் ஆஜர்படுத்தவும், சான்றுப்பொருட்களாக 38 ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்‌ஷ, இழப்பீடு அலுவலகத்தின் முன்னாள் பணிப்பாளர் சேபாலிகா சமன் குமார மற்றும் மகாவலி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் ஜெனரல் கீர்த்தி பண்டார கொடகம ஆகியோர் முறைப்பாட்டுத் தரப்பினரால் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.   நன்றி வீரகேசரி 




தேரர்கள் சிறையில் தடுத்து வைக்கப்படும் மற்றும் வெளியே அழைத்துச் செல்லப்படும் முறை தொடர்பில் புதிய விதிமுறைகள் – ஜனாதிபதி

08 Oct, 2026 | 06:52 PM

தேரர்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படும் முறை மற்றும் சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் முறை தொடர்பில் நடைமுறையில் உள்ள சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான கட்டளைகள் மற்றும் விதிமுறைகளை முன்வைப்பதற்காக குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களம், நீதி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஆகியோரை உள்ளடக்கியதாக இந்தக் குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இதன்போது, தற்போதைய சிறைச்சாலை சட்டக் கட்டமைப்பு தொடர்பில் தொடர்ந்தும் தெளிவுபடுத்திய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

“1877 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் மூலமே தற்போது நமது சிறைச்சாலைகள்  நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. அந்த சட்டம் அவ்வப்போது திருத்தப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் 94 ஆவது பிரிவின் மூலம் அமைச்சருக்கு அவ்வப்போது விதிமுறைகளை பிறப்பிப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், 2022 ஆம் ஆண்டிலேயே குறித்த விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளன. அத்துடன், சிறைச்சாலைகளைப் பராமரிப்பதற்காக அமைச்சரின் அனுமதியுடன் நிலையான கட்டளைகளைப் பிறப்பிப்பதற்கான அதிகாரம் சிறைச்சாலை ஆணையாளருக்கு உண்டு. அதன்படி, சிறைச்சாலைக் கட்டமைப்பானது ஒரு சட்டத்தினாலும், அமைச்சரால் பிறப்பிக்கப்படும் விதிமுறைகளாலும் மற்றும் அமைச்சரின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு ஆணையாளரால் பிறப்பிக்கப்படும் நிலையான கட்டளைகளாலும் நிர்வகிக்கப்படுகிறது.

ஓரிரு சந்தர்ப்பங்களைத் தவிர, பொதுவான கைதிகள் தொடர்பிலேயே இந்த திருத்தங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 216ஆவது விதிமுறைப் பிரிவில் மாத்திரமே குறிப்பாக நமது பிக்குமார்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்தச் சட்டங்களைத் தயாரிக்கும்போது தேரர்களையோ அல்லது ஏனைய மதத் தலைவர்களையோ மையப்படுத்தி விசேட விதிமுறைகள் தயாரிக்கப்படவில்லை. எப்போதும் பொதுவான கைதிகள் தொடர்பில்தான் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் இரு வகையில் கைதிகள் தடுத்து வைக்கப்படுகின்றனர். ஒன்று,    நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படாது விளக்கமறியலில் வைக்கப்படுபவர்கள், விளக்கமறியலில் இருக்கும் பிக்குமார்கள் தொடர்பில் இத்தகைய சிக்கல் எழுவதில்லை. ஆயினும், நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படும் தண்டனை கைதிகள் தொடர்பில்  நிலைமை மாறுகிறது. அங்கு கடூழிய சிறைத்தண்டனை மற்றும் சாதாரண சிறைத்தண்டனை என இரு வகைகள் உள்ளன. சாதாரண சிறைத்தண்டனையின்போது சிறைச்சாலை அதிகாரியின் உடன்பாட்டுடன் ஆடையைத் தெரிவு செய்ய முடியும் என்றாலும், கடூழிய சிறைத்தண்டனையின்போது சிறைச்சாலையிலிருந்து வழங்கப்படும் உரிய ஆடையையே அணியவேண்டும். இதுவரை காலமும் அவ்விதிக்கு அமையவே செயற்பட்டுள்ளது.

அதன்படி, மகாநாயக்க தேரர்கள் அனுப்பிய கடிதத்திற்கு அமைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முறையை விட, அவர்கள் சிறைச்சாலையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களிலேயே பிரச்சினை எழுகிறது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக மட்டுமல்லாமல், சிறைச்சாலையிலிருந்து வெளியே செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் இதனைக் கவனத்திற்கொள்ள வேண்டும். ஏனெனில், சிறைச்சாலைக்கு உள்ளே திறந்த வெளி அல்லாத இடமாக இருந்தாலும், வெளியே அழைத்துச் செல்லும்போது அதனை ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் காண்கின்றனர்.

இவர்களை வெளியே அழைத்து வரும்போது வழக்கமான நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இதற்கு முன்னரும் ஆராய்ந்துள்ளதோடு  தற்போது  தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 63 தேரர்கள் குறித்தும் நான் கவனம் செலுத்தினேன். சில பிக்குமாகள் ஒரு குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவிக்கும் போது, வேறு வழக்குகளுடன் தொடர்புடையவர்களாயின் அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வர வேண்டியுள்ளது.

தற்போது சிறையில் இருக்கும் சில தேரர்கள் வேறு வழக்குகளுக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருப்பது கூட அவர்களின் காவி உடை அணிந்த நிலையில் அல்ல. சிறைச்சாலை அதிகாரிகள் தற்போதைய சட்ட மற்றும் விதிமுறைகளின்படியே செயற்பட்டுள்ளதால் அவர்களைக் குற்றம் சாட்டுவதில் எந்தப் பயனுமில்லை.

நேற்று வணங்கி வழிபட்ட தேரர் ஒருவரை இன்று வேறு விதமாகக் காண நேரிடுவது பௌத்த மக்களுக்கும் மகா சங்கத்தினருக்கும் கடுமையான அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்துகிறது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும், நடைபெற்ற செயல்முறை இதுதான்.

சட்டங்கள் என்பவை எக்காலமும் ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் மறுக்க முடியாத வரலாற்று நிகழ்வுகள் அல்ல, சட்டங்கள் அடிக்கடி திருத்தப்படுகின்றன. அவ்வாறில்லாமல்,  சட்டங்கள் அவ்வாறு இருக்கையில், 'இவ்வாறு செய்யுங்கள்' என்று கட்டளையிட நான் விரும்பவில்லை. அப்படியானால் சட்டம் ஒருபுறம் இருக்க, அது எனது சட்டமாக மாறிவிடும். எனது விருப்பம் சட்டமாக மாறக்கூடாது. சாதாரண அரசியலில் 'சட்டம் என்பது ஆட்சியாளரின் விருப்பமாகும்' என்று கூறப்பட்டாலும், எனது விருப்பத்தைச் சட்டமாக மாற்றிக்கொள்ள நான் எக்காலத்திலும் விரும்பவில்லை.

சட்டம் தற்காலத்திற்குப் பொருத்தமானதாக இல்லாவிட்டால் , உரிய முறையில் சட்டத்தை இயற்றிக்கொள்வதைத் தவிர, நமது விருப்பத்தின்படி சட்டத்தைச் செயற்படுத்துவது உகந்ததல்ல.  எனவே, தற்போதுள்ள இந்த விதிமுறைகளும் சிறைச்சாலை நிலையான கட்டளைகளும் தற்கால நிலைமைக்குப் பொருந்தும் வகையில் மாற்றப்பட வேண்டும். இத்தகைய கலந்துரையாடல்களில்தான் இதுபோன்ற விடயங்கள் எழுகின்றன. எப்பொழுதும் இந்தச் சட்டங்கள் பொதுவான சூழ்நிலைகளுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளனவே தவிர, பௌத்த பிக்குமார்களுக்காக விசேட கட்டளைகள் குறைவாகவே உள்ளன.

பிக்குமார்கள் சிறைவாசம் அனுபவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படாததால் அத்தகைய விதிமுறைகள் சேர்க்கப்பட்டிருக்காது. ஆனால், தற்போது சமூகத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிகளுக்கு சில சந்தர்ப்பங்களில் பிக்குமார்களும் ஆளாகியிருப்பதாகத் தெரிகிறது. எனவே, சிறைச்சாலையில் தங்கியிருக்கும் விதம் மற்றும் சிறைச்சாலையிலிருந்து அழைத்துச் செல்லப்படும் விதம் தொடர்பில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். அது ஒரு தேரரை இலக்கு வைத்து அல்லாமல், பொதுவாக ஒட்டுமொத்த முறைமைக்கும் பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும்" என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இதுபோன்ற சிக்கலான விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்தி உடனடித் தீர்வுகளை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தமைக்காக மகாநாயக்க தேரர்களின் சார்பில் இங்கு வருகை தந்திருந்த மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்குத் தமது நன்றியுடன் கூடிய ஆசீர்வாதங்களைத் தெரிவித்தனர்.

சியாமோபாலி மகா நிக்காயவின் அஸ்கிரி தரப்பு அனுநாயக்க வண. நாரம்பனாவே ஆனந்த தேரர், சியாமோபாலி மகா நிக்காயவின் மல்வத்து மகா விஹார தரப்பு பிரதம பதிவாளர் வண. பஹமுணே ஸ்ரீ சுமங்கல தேரர், பிரதி பதிவாளர் வண. மஹவெல ஸ்ரீ ரதனபால தேரர், இலங்கை அமரபுர மகா நிக்காயவின் பிரதம பதிவாளர் ராஜகீய பண்டித தர்சனபதி வண. பலபிட்டியே சிரிசீவலி தேரர், பிரதி பதிவாளர் வண. அஹங்கம மைத்திரிமூர்த்தி தேரர், இலங்கை ராமஞ்ஞ மகா நிக்காயவின் பிரதம பதிவாளர் வண. அத்தங்கனே சாசன ரதன தேரர், வண. கொங்கஸ்தென்னே ஆனந்த தேரர் உள்ளிட்ட  மகா சங்கத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.   நன்றி வீரகேசரி 







No comments: