ஊருக்கு உழைப்பவன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 

தமிழ் சினிமாவில் பிரபலமாக விளங்கிய பட நிறுவனங்களில் ஒன்று வீனஸ் பிக்சர்ஸ் . இயக்குனர் ஸ்ரீதர் , கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜன் மூவரும் இணைந்து இந்த நிறுவனத்தை தொடங்கி சிவாஜியின் தயவில் அமரதீபம் படத்தை தயாரித்தார்கள். அதன் வெற்றியைத் தொடர்ந்து அவர்கள் தயாரித்த உத்தம புத்திரன் சக்கை போடு போட்டது. தொடர்ந்து எடுத்த கல்யாணப் பரிசு வெள்ளி விழா கண்டது. பின்னர் ஸ்ரீதர் நிறுவனத்தில் இருந்து வெளியேறி சொந்த பட நிறுவனம் ஆரம்பிக்க மற்ற இருவரும் வீனஸ் நிறுவனத்தை நடத்தி தமிழிலும், ஹிந்தியிலும் பல படங்களை தயாரித்தார்கள் . அந்த வரிசையில் எம் ஜி ஆரின் நடிப்பில் அவர்கள் தயாரித்த என் அண்ணன் படம் வெற்றி கண்டது. ஆறாண்டுகள் கழித்து மீண்டும் 1976ல் எம் ஜி ஆர் நடிப்பில் அவர்கள் தயாரித்த படம் ஊருக்கு உழைப்பவன். 


 தமிழக சட்டசபைத் தேர்தலை எதிர் நோக்கியிருந்த எம் ஜி ஆர்

அதற்கு ஏதுவாக தன் படங்களின் பெயர்களையும் தெரிவு செய்து கொண்டிருந்தார். அதற்கமைய அமைந்த டைடில் ஊருக்கு உழைப்பவன். படத்தில் இரண்டு எம் ஜி ஆர் கள் ! ஒருவர் படத்தின் ஆரம்பத்திலேயே டூயட் கூட பாடாமல் ஜெயிலுக்கு போய் விட மற்றைய எம் ஜி ஆர் தான் ஊருக்கு உழைக்கிறார். 

 ஒரே முக சாயலை கொண்ட செல்வம், ராஜா என்ற இரு நண்பர்கள் . ஒரு விபத்தில் பணக்கார நண்பன் ராஜாவின் மனைவியின் புத்தி பேதலித்து விடுகிறது. அதே கையேடு கொலை குற்றச்சாட்டில் அவனும் கைதாகி சிறையில் அடைக்கப்படுகின்றன் . உண்மை குற்றவாளியை கண்டு பிடிக்க மற்றைய நண்பன் செல்வம் கங்கணம் கட்டுகிறான். அவன் ஒரு போலீஸ் அதிகாரி என்பதும் அவன் முயற்சிக்கு துணையாகிறது. இதனிடையே அவனுக்கும் கல்யாணமாகி குழந்தையும் பிறக்கிறது. 

 இப்போது ஒரு சங்கடம் ஏற்படுகிறது . புத்தி பேதலித்து ராஜாவின் மனைவி காஞ்சனாவுக்கு சுய நினைவு திரும்புகிறது. அவளுக்கு மீண்டும் புத்தி மாறாட்டம் ஏற்படக் கூடாது என்பதால் ஜெயிலில் இருக்கும் அவளின் கணவன் ராஜாவாக நடிக்கிறான் செல்வம். அதே சமயம் தன் மனைவி மல்லிகாவுடனும் குழந்தையுடனும் குடித்தனம் நடத்துகிறான். இது போதாதென்று குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியிலும் தீவிரம் காட்டுகிறான். 

 படத்தின் கதை இரண்டாண்டுகளுக்கு முன் இதே எம் ஜி ஆர் நடித்த

நேற்று இன்று நாளை படத்தின் கதையை ஞாபக படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. இதனால் கதையை முழுமையாக ரசிக்க முடியவில்லை. 

 இப்படி அமைந்த கதையை பூவை கிருஷ்ணன் எழுதி இருந்தார். இதற்கு ஆர் . கே. சண்முகம் வசனங்களை எழுதினார். ஆரூர்தாஸ், சொர்ணம் போன்றோர் எம் ஜி ஆரிடம் இருந்து ஒதுக்கப் பட்ட பின் சண்முகம் எம் ஜி ஆர் படங்களில் தன் திறமையை காட்டிக் கொண்டிருந்தார். ஆங்காங்கே வசனங்கள் ரசிக்கும் படி அமைந்தன. 

 படத்தில் இரண்டு எம் ஜி ஆர் . அவருக்கு ஜோடியாக வாணிஸ்ரீ , வெண்ணிற ஆடை நிர்மலா . நிர்மலாவிடம் இளமை

ஊஞ்சலாடுகிறது. வாணிஸ்ரீ நடிப்பால் நெகிழ வைக்கிறார். வில்லனாக வரும் வீரப்பாவிடம் பழைய கம்பீரம் மிஸ்ஸிங் . மற்றைய வில்லன் கே. கண்ணன் அந்த குறையை நீக்குகிறார். தேங்காய் சீனிவாசனின் காமெடி ஒரே சொதப்பல் . நீண்ட நாட்களுக்கு பிறகு எம் ஜி ஆர் படத்தில் எம் . என் . ராஜம் தோன்றுகிறார். குமாரி பதமினி நடிப்போடு ஒரு கவர்ச்சி நடனமும் ஆடி வைக்கிறார். இவர்களுடன் திருப்பதிசாமி, வி . கோபாலகிருஷ்ணன், ஆசாத் பயில்வான் , சண்முகசுந்தரி, கரிக்கோல் ராஜு ஆகியோரும் நடித்தனர். 

 படத்தின் இசையமைப்பாளர் எம் .எஸ் .விசுவநாதன். நா. காமரசன்

இயற்றிய இரவுப் பாடகன் வந்தான், முத்துலிங்கம் இயற்றிய பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் , அழகென்னும் ஓவியம் இங்கே, வாலியின் இதுதான் முதல் ராத்திரி அன்பு காதலி என்னை ஆதரி பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன. இவை தவிர ராண்டர் கை எழுதிய It's Easy to Fool You ஆங்கிலப் பாடலும் எடுபட்டது . தொடர்ந்து எல்லாப் படங்களிலும் எம் ஜி ஆருக்கு பாடி வந்த டி .எம் . சௌந்தரராஜன் இப் படத்தில் ஒரு பாடலும் பாடவில்லை! 

 இந்தப் படத்திற்காக உள்ளூரில் இருக்கும் வில்லன்கள் காணாதென ஹிந்தியில் இருந்து வில்லன் நடிகர் ஷெட்டியை இறக்குமதி செய்திருந்தார்கள். ஹிந்தியில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான இவர் எம் ஜி ஆரின் டுப்புடன் சேற்றில் உருண்டு புரண்டு சண்டை போடுகிறார். 

 என் . பாலகிருஷ்ணன் படத்தை ஒளிப்பதிவு செய்தார். கிளைமாக்சில் இரண்டு ஹெலிகொப்டர், படகு என்பன துரத்தும் கட்சி விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருந்தது. 

 நீண்ட காலமாக படங்களை இயக்கி வந்தவர் எம் . கிருஷ்ணன் .

ஆரம்பதில் ஜெய்சங்கரின் இயக்குனராக அறியப்பட்டு அவர் நடித்த முத்துச்சிப்பி, மகனே நீ வாழ்க, மன்னிப்பு படங்களை இயக்கினார். பின்னர் எம் ஜி ஆரின் ரிக்ஷாக்காரன், அன்னமிட்ட கை , நான் ஏன் பிறந்தேன் படங்களைத் தொடர்ந்து இந்த படத்தையும் இயக்கினார். ஆனாலும் வலுவில்லாத கதை நடிகர்களின் முதுமை என்பன படத்தின் ஜீவனை நசுக்கியது. கன்னடத்தில் ராஜ்குமார் நடித்த படமே தமிழில் ஊருக்கு உழைப்பவன் ஆனது. இதற்கு பதில் வேறு கதை ஒன்றை எடுத்திருந்தால் இன்னும் எடுபட்டிருக்கும் . ஆனாலும் எம் ஜி ஆர் ரசிகர்கள் படத்தை ஆதரித்தார்கள். ஊருக்கு உழைப்பவனாக அவர் அவர்களின் நெஞ்சில் குடியேறினார்!

No comments: