உலகச் செய்திகள்

ஈரானுடனான மோதல் மிக விரைவில் முடிவுக்கு வந்துவிடும் - ட்ரம்ப்

அமெரிக்காவில் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு புதிய கடும் கட்டுப்பாடுகள் அமுல்

ரஷ்யக் கடற்கரையில் ட்ரோன் வீழ்ந்து வெடித்ததில் 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

தமிழக முதலமைச்சர் விஜய் மீது தாக்கல் செய்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றார் மனைவி சங்கீதா  


ஈரானுடனான மோதல் மிக விரைவில் முடிவுக்கு வந்துவிடும் - ட்ரம்ப்  

07 Aug, 2026 | 03:25 PM

ஈரானுடனான மோதல் மிக விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

ஹோர்முஸ் நீரிணை தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து நம்பிக்கை தெரிவித்த ட்ரம்ப், “ஈரான் நாட்டினால் இனி நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது” என்று ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில்,

“ஈரான் விடயத்தில் நான் மிக முக்கியமான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியபோது, அது மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது. ஏனெனில், அவர்களிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது, இல்லையெனில், உலகம் முழுவதும் அழிந்துபோகும். அதை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. நாங்களோ அல்லது மத்திய கிழக்கோ மட்டுமல்ல, உலகம் முழுவதுமே அது ஒரு பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும். எங்களுக்கு வேறு வழியில்லை. 

போர் முடிந்ததும் நான் காணும் சூழலின் அடிப்படையில் அந்த நல்ல நாட்களை நாம் விரைவில் மீண்டும் காண்போம். போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று நான் நினைக்கிறேன். அவர்களால் இனி நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை” என்றார்.    நன்றி வீரகேசரி 




அமெரிக்காவில் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு புதிய கடும் கட்டுப்பாடுகள் அமுல்  

07 Aug, 2026 | 10:41 AM

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு (USCIS) குடியேற்ற விண்ணப்பங்களை பரிசீலிக்கும் விதத்தில் புதிய கடுமையான மாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தியுள்ளது.

போதிய சான்றுகளோ அல்லது தேவையான ஆவணங்களோ இல்லாமல் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களை, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக நிராகரிக்க அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் விண்ணப்பங்களில் ஏதேனும் தவறுகள் அல்லது ஆவணக் குறைபாடுகள் இருந்தால், அவற்றைச் சரிசெய்து மீண்டும் சமர்ப்பிக்க 12 வாரங்கள் (3 மாதங்கள்) கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது. இனி அந்த அவகாசம் கிடையாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

புதிதாக தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமின்றி, ஏற்கனவே நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் இந்த புதிய விதிமுறைகள் பொருந்தும் என்றும் குறிப்பிடப்படுகிறது. 

முழுமையற்ற விண்ணப்பங்களை தாக்கல் செய்து, அந்த அவகாசத்தைப் பயன்படுத்தி பணி அனுமதி உள்ளிட்ட சலுகைகளை முறையற்ற வழிகளில் சிலர் பெற்று வருவதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   நன்றி வீரகேசரி 






ரஷ்யக் கடற்கரையில் ட்ரோன் வீழ்ந்து வெடித்ததில் 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!  

Published By: Digital Desk 3

04 Aug, 2026 | 01:05 PM

தெற்கு ரஷ்யாவின் கிராஸ்னோடார் பிராந்தியத்தில் உள்ள அர்கிபோ-ஒசிபோவ்கா கடற்கரையில் ட்ரோன் ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகள் பலர் கூடி மகிழ்ந்து கொண்டிருந்த கடற்கரையில், திடீரென அதிவேகமாக வந்த ட்ரோன் ஒன்று மலைப் பாறைப் பகுதியில் மோதி தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியுள்ளது. இத்தாக்குதலில் காயமடைந்த 40 பேரில் 17 பேர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ட்ரோன் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் அப்பகுதியில் எவ்வித அவசர கால எச்சரிக்கை சைரன்களும் ஒலிக்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது பொதுமக்கள் மீது உக்ரேன் நடத்திய திட்டமிட்ட தாக்குதல் என கிராஸ்னோடார் பிராந்திய ஆளுநர் வேனியாமிண்ட பிராந்திய ஆளுநர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக உக்ரேன் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வக் கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.

ட்ரோன் வெடிப்பதற்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகச் சாட்சியங்கள் தெரிவித்துள்ளதால், ரஷ்யாவின் வான் பாதுகாப்புப் படையினர் ட்ரோனை சுட்டு வீழ்த்த முயன்றபோது அது திசைமாறி கடற்கரையில் விழுந்திருக்கலாம் என ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றின் மீது இன்று (04) செவ்வாய்க்கிழமை அதிகாலை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றின் மீது இன்று அதிகாலை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் பிரபல ஈ-காமர்ஸ் நிறுவனமான 'Wildberries' கிடங்குகளை இலக்கு வைத்து உக்ரேன் அண்மைக்காலமாகத் தொடர் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்ய இராணுவத்திற்குத் தேவையான உபகரணங்களை சப்ளை செய்ய இக்கிடங்குகள் பயன்படுவதாக உக்ரேன் தெரிவிக்கிறது.   நன்றி வீரகேசரி 





தமிழக முதலமைச்சர் விஜய் மீது தாக்கல் செய்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றார் மனைவி சங்கீதா  

07 Aug, 2026 | 04:34 PM

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுக்கொண்தாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

குறித்த விவாகரத்து மனு திரும்பப் பெற்றதன் காரணமாக, தொடரப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்துள்ளதாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தமிழக முதல்வரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய்- அவரது மனைவி சங்கீதா ஆகியோர் கடந்த காலங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விவாகரத்து கேட்டு, சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் தனது கணவர் விஜய் தமிழகத்தின் பிரபல நடிகை


ஒருவருடன் தொடர்பில் இருப்பதால் அவரிடமிருந்து விவாகரத்தும், நிரந்தர ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசிப்பதற்கான உரிமையும் வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று முறை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் ஒரு முறை கூட விஜயும், சங்கீதாவும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை.

கடந்த ஜூன் மாதம் 15ஆம் திகதியன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் பிரபலமானவர்கள் என்பதால் காணொளி வாயிலாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் விசாரணையை ஓகஸ்ட் 7ஆம் திகதியன்று ஒத்தி வைத்தது.

இந்த தருணத்தில் இன்று காலை காணொளி வாயிலாக விசாரணைக்கு சங்கீதா ஆஜரானார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறுவதால்.. முதல்வர் விஜயால் ஆஜராக முடியவில்லை என்றும், விசாரணையை வேறொரு நாளிற்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து சங்கீதாவிடம் விசாரணையை மேற்கொண்ட செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதி அரசர்.. வழக்கின் விசாரணையை இரண்டு மணி நேரம் ஒத்தி வைத்தார்.

பிற்பகல் மீண்டும் விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், நீதியரசரிடம் இந்த வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வதாக சங்கீதா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொண்ட நீதியரசர் விஜய் -சங்கீதா விவாகரத்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே தமிழக முதல்வர் ஜோசப் விஜயிற்கும், மற்றும்
லண்டனில் உள்ள பிரபல தொழிலதிபரின் மகளான சங்கீதாவிற்கும் கடந்த 1999 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி திருமணம் நடைபெற்றது என்பதும் இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் - திவ்யா சாஷா என இரண்டு வாரிசுகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 





No comments: