இலங்கைச் செய்திகள்

லலித், குகன் வழக்கு: கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை - தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அவசர அறிவிப்பு

திராய்க்கேணிப் படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!


லலித், குகன் வழக்கு: கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

Published By: Digital Desk 3

07 Aug, 2026 | 02:23 PM

லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்‌ஷவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 






4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை - தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அவசர அறிவிப்பு

07 Aug, 2026 | 12:47 PM

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகளைப் புதுப்பித்துள்ளது. 

அதன்படி, மண்சரிவு அபாயம் அதிகம் உள்ள பிரதேசங்கள் இரண்டாம் கட்டத்தின் கீழும், எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய பிரதேசங்கள் முதல் கட்டத்தின் கீழும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரல பிரதேச செயலகப் பிரிவு, நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை, கொத்மலை மேற்கு, அம்பகமுவ, நுவரெலியா, நோர்வூட் மற்றும் கொத்மலை கிழக்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையின் கீழ் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, கண்டி மாவட்டத்தின் தொளுவ, பன்வில, மெததும்பறை, உடபலாத்த, கங்க வட்ட கோரளை, உடுதும்பறை மற்றும் தெல்தோட்டை ஆகிய பிரதேச செயலகங்களும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, ஓபநாயக்க மற்றும் இம்புல்பே ஆகிய பிரதேச செயலகங்களும் முதல் கட்ட எச்சரிக்கையின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

எனவே, இப்பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் மண்சரிவு தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவதானத்துடன் செயற்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.   நன்றி வீரகேசரி 






திராய்க்கேணிப் படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!

07 Aug, 2026 | 11:08 AM

அம்பாறை மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ்க்கிராமமான திராய்க்கேணியில் 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைகளின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வியாழக்கிழமை (06) மாலை அக்கிராமத்தில் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்றது.

கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி திராய்க்கேணி கிராமத்தில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலில் 54 தமிழ் மக்கள் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அக்கிராமத்து மக்களால் வருடாந்தம் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைவாக, இம்முறையும் படுகொலை இடம்பெற்ற ஆலய


முன்றலில் இந்நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது கிராம மக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தீபமேற்றி, சிறப்புப் பூஜைகள் வழிபாடுகளை மேற்கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்நினைவேந்தல் நிகழ்வில் சமூகச் செயற்பாட்டாளர்களான காந்தன், தாமோதரம் பிரதீவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.






















































நன்றி வீரகேசரி 



No comments: