ஒரு
அலங்காரமும் இல்லாத மேடை, துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கப்பட்ட சுவர்கள், நடுவே சுழன்று கொண்டிருக்கும் மேடையில் வருவதும், போவதுமாக எட்டுப்பேர்கள், அருகே இரு இசைக் கலைஞர்கள்.
1995 இலிருந்து 2009 வரை நாங்கள் போரின்
நடுவே வாழ்ந்த வாழ்க்கை, இடம் பெயர்வு, நந்திக்கடலில்
முடிவு, இப்போது 2026 ல் போர்க்குற்றத்துக்கு எதிரான குரல்
என ஒரு அதிவேக ராட்டினத்தில்
பயணம் செய்தது போன்ற உணர்வைத் தந்தது, காடும் கடலும்.
கண்
தெரியாத திருதராஷ்டிரனை மணந்ததும், தானும் இவ்வுலகைப் பார்க்க மாட்டேன் என்று தன் கண்களை மூடிக்கட்டிக்
கொண்ட காந்தாரியைப் போல கண்களைக் கட்டியபடி
கைகளில் ஒரு சங்குடன் வந்த
ஒரு தாயின் அமைதியான, ஆனால் ஆழமான அபிநயங்கள் அத்தாயின் மனவேதனையை எடுத்துக்காட்டின. என் பிள்ளைகள் எங்கே,
எங்கே என்று தேடுவது புரிந்தது.
சட்டென மாறியது காட்சி. மேடையும் சுழலத் தொடங்கியது. 4 பிள்ளைகள், தாய், தந்தை என சாதாரண எம்மைப்போன்ற ஒரு தமிழ்க்குடும்பம். Cricket விளையாடும் மகன், நடனம் பயிலும் ஒரு மகள், படிக்கும் ஒரு மகள், பொறுப்பான ஒரு மூத்த மகள், அடிக்கடி வந்து போகும் ஒரு சிங்கள நண்பரின் மகன் எனக் கலகலப்பான காட்சி. Helicopter ல் இருந்து விழும் துண்டுப் பிரசுரங்கள் எல்லோரையும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்துகிறது. கொழும்பிலுள்ள தன் சிங்கள நண்பருடன் கலந்தாலோசித்து விட்டு அனைவரையும் தேவாலயத்துக்குச் செல்லச் சொல்கிறார் தகப்பன். தேவாலயத்தின் மேல் குண்டு விழ எல்லாமே மாறிப்போய் விடுகின்றன. தந்தை கண்பார்வையை இழக்கிறார், மகள் கைவிரல்களை இழக்கிறாள். இவர்களுடன் கூடப் போன நண்பர் மனைவியையும், குழந்தையையும் இழக்கிறார். அங்கு தொடங்குகிறது களேபரம். எங்களின் சொந்த அரசே, தன் மக்களின் மேல் குண்டு மழை பொழிகின்றது எனக்கூறி மகனை விடுதவைப்புலிகளுடன் சேர்க்கிறார் ஒருவர். இளைய மகளும் தகப்பனும் அவுஸ்திரேலியாவுக்கு வாழ்வு தேடிப் போகிறார்கள். சகோதரனை மீட்டு வரப்போவதாக மூத்த மகள் புறப்படுகிறாள். தனது பிள்ளைகள் அனைவரையும் ஒன்றாகப் பார்க்கும் வரை தான் இந்த உலகத்தைப் பார்க்கப் போவதில்லை என்று தனது கண்களை மூடித் துணியால் கட்டிக் கொள்கிறார் அன்னை.
எல்லோரும்
இடம் பெயர்கிறார்கள். தாயும் இரண்டு மகள்களும் கைகளில் அகப்பட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு கூடச் செல்கின்றனர். பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்படும் ஒவ்வொரு
இடமாக எல்லோரும் இடம் பெயர்வதும், அவ்விடங்கள்
தாக்கப்படுவதும், நாங்களும் மூட்டை, முடிச்சுக்களுடன் அலைக்கழிந்ததை கண் முன் கொண்டு
வருகிறது. கண்ணைக்கட்டிக் கொண்ட தாய்க்கு, வழியில் நடப்பவற்றை எடுத்துச் சொல்லும் மகளின் குரல் வழியாக நாமும் அவர்களுடன் பயணிக்கிறோம். காலச் சுழற்சிக்கேற்ப மேடையும் பல இடங்களில் வேகமாகச்
சுழல்கிறது. திரை மூடாமலே காட்சிகள்
மாறுகின்றன. அதற்கேட்ப ஒரு அடியும் பிசகாமல்
நடிகர்கள் வந்து போகிறார்கள். தொடர்ந்து கதைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இவ்வளவு இன்னல்களுக்கும் நடுவே, முன்பு பிரிந்து போன சிங்கள, புத்த
மத இளைஞன், திரும்ப வந்து இந்து சமயத்தைச் சேர்ந்த மூத்த மகளைத் திருமணம் செய்கின்றான். அதை ஒரு கிறிஸ்துவ
மதகுரு, அந்த chaos க்குள் ஒரு petromax வெளிச்சத்தில் ‘Love
bears all things, believes all things, hopes all things, and endures all things’
என்று கூறி நடாத்தி வைக்கிறார்.
அவுஸ்திரேலியா சென்ற நாத்தியவாதியான மகள் சட்டப்படிப்பை முடித்துவிட்டு
தன் வாழ்க்கைத்துணையைப் பற்றி, தகப்பனிடம் சொல்லும் காட்சி நகைச்சுவையும் கலந்து தருகிறது. ஆனாலும் 14 வருடங்களின் முன் தன் சொல்லைக்கேட்டுத்தானே
தேவாலயம் சென்று பலர் உயிர் நீத்தார்கள்
என்ற குற்ற உணர்ச்சியில் இருந்து தகப்பன் மீளவேயில்லை.
இடம்
பெயர்ந்தவர்கள் இறுதியில் சங்குகளின் கடலான நந்திக்கடலின் கரையை அடைகிறார்கள். போரின் உக்கிரத்தைக் கண்டு அவுஸ்திரேலியா சென்ற மகள் திரும்ப வருகிறாள்.
எல்லோரும் அவுஸ்திரேலியா செல்ல சந்தர்ப்பங்கள் கூடி வருகின்றன. ஆனால்
இறந்த சகோதரனின் இறுதிச்சடங்கை முடிக்காமல் வரமாட்டேன் என்ற உறுதியான மூத்த
மகளின் மனிதநேயத்துக்கு அவர்கள் எல்லோரும் கொடுக்கும் பரிசு விலை மதிக்க முடியாத
ஒன்றாகும். ‘போர் முடிந்தது, ஒருவரும்
இறந்த போராளிகளை நினைவு கூரக்கூடாது’ என இராணுவம் திட்டவட்டமாக
அறிவிக்கின்றது. 2026 ல், சட்டத்தரணியான மகள்
இப்போரில் இறந்த லட்சணக்கான மக்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்றும், கண்டுபிடிக்கப்படும் எலும்புக்கூடுகளை அடையாளம் காணவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள். அந்த முயற்சியில் தன்
சகோதரங்களைக் கண்டு தாயிடம் காட்ட, அவர் கண் கட்டுக்களை
அகற்றி, ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க
மாட்டாயா?’ என்ற பாடலுக்கு அபிநயம்
பிடிப்பதுடன் முடிகிறது காடும் கடலும்.
இரண்டு
இடைவேளைகளுடன் கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்கள் எங்களை பல்வேறு உணர்ச்சிகளினூடாக தங்களின் அபார நடிப்பால் அனைவரும்
எடுத்துச் சென்றார்கள். கூடவே இழையோடிச் செல்லும் இசை, மௌனிக்க வேண்டிய
இடங்களில் மௌனித்து, ஓங்கி ஒலிக்க வேண்டிய இடங்களில் ஒலித்து, நாங்கள் ஒரு அரங்கத்துள் இருக்கின்றோம்
என்பதை மறக்க வைத்தது. போர் முடிந்திருக்கலாம். ஆனால் அதன்
பிடியிலிருந்து நாம் முற்றாக விடுபட்டு
விட்டோமா? பல இடங்களில் கண்கள்
பனித்தன. பல இடங்களில் நெஞ்சம்
அடைத்துப் போனது. சில இடங்களில் ஓவென்று
அழ வேண்டும் போலிருந்தது. இறுதியில் கனத்த இதயத்தோடு வெளியே வந்தோம்.
No comments:
Post a Comment