1987இல் யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவேந்தல்
10 ஆண்டுகளுக்குப் பின் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் தொடங்கியது பிரிட்டிஷ் எயார்வேஸ்
குவைத்தில் வெவ்வேறு வீடுகளில் இலங்கைப் பெண்கள் இருவரது சடலங்கள் கண்டுபிடிப்பு : மரணங்களில் சந்தேகம் நிலவுவதால் குவைத் பொலிஸார் தீவிர விசாரணை
சிறையிலுள்ள மகன் நாமலுக்கு உருக்கமான கடிதம் எழுதிய மஹிந்த
1987இல் யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவேந்தல்
24 Oct, 2026 | 06:02 PM
யாழ்ப்பாணம் - கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (24) நடைபெற்றது.
கொக்குவில் இந்துக் கல்லூரியின் மைதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று காலை 8 மணியளவில் நினைவேந்தல் நடைபெற்றது.
படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும், அப்பகுதி மக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நினைவேந்தலில் உயிரிழந்தவர்களுக்காக சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
1987இல் இந்திய இராணுவத்துக்கும் – விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்தம் தொடங்கிய பின்னர் இந்திய இராணுவத்தின் பரவலான விமானக் குண்டுவீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதலுக்கு அஞ்சி கொக்குவில், ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த பல மக்கள் பாதுகாப்புக் கருதி கொக்குவில் இந்துக் கல்லூரியில் தஞ்சமடைந்தனர்.
1987 ஒக்டோபர் 24ஆம் திகதி காங்கேசன்துறை வீதி வழியாக யாழ் நகரம் நோக்கிக் கவச வாகனங்கள், டாங்கிகள் சகிதம் முன்னேறிய இந்தியப் படையினர் கொக்குவில் இந்துக் கல்லூரியை வந்தடைந்ததும், கவச வாகனங்களிலிருந்து அங்கு அடைக்கலம் புகுந்திருந்த பொதுமக்கள் தங்கியிருந்த பாடசாலை கட்டடங்கள் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தினர்.
இதனால் பாடசாலை வகுப்பறையில் தங்கியிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உரிய முறைப்படி தகனம் செய்வதற்கான சூழ்நிலை இல்லாததால் இறந்தவர்களின் சடலங்கள் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஒரே குழியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
10 ஆண்டுகளுக்குப் பின் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் தொடங்கியது பிரிட்டிஷ் எயார்வேஸ்
Published By: Digital Desk 1
24 Oct, 2026 | 02:49 PM
பிரித்தானியாவின் பிரிட்டிஷ் எயார்வேஸ் (British Airways) நிறுவனமானது 10 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. இதன் முதல் விமானம் இன்று சனிக்கிழமை (24) காலை கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
லண்டன் கெட்விக் (Gatwick) விமான நிலையத்திலிருந்து BA2045 என்ற விமான இலக்கத்துடன் புறப்பட்ட போயிங் 777-200ER ரக விமானம் இன்று காலை கொழும்பை வந்தடைந்துள்ளது. இதன் ஊடாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) நிறுவனம் இலங்கைக்கான தனது விமான சேவையை அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான வான்வழி இணைப்பை வலுப்படுத்தும் வகையில், லண்டன் கெட்விக் மற்றும் கொழும்பு இடையே வாரத்திற்கு மூன்று விமானங்களை இயக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இலங்கையின் முக்கிய சுற்றுலாச் சந்தைகளில் ஒன்றாக பிரித்தானியா விளங்குவதால், இந்த சேவை மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது நாட்டின் சுற்றுலாத்துறைக்கு பெரும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த புதிய சேவையானது வணிகப் பயணங்களை இலகுபடுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் ஹேலிஸ் (Hayleys) குழுமத்தின் துணை நிறுவனமான அட்வான்டிஸ் ஏவியேஷன் சர்வீசஸ் (Advantis Aviation Services), இலங்கையில் பிரிட்டிஷ் ஏர்வேஸின் பொது விற்பனை முகவராக (GSA) செயற்படும் என தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸின் கொழும்பு வழித்தடமானது குளிர்கால அட்டவணையின்போது ஒரு பருவகாலச் சேவையாக இயக்கப்படும். மேலும் பயணிகள் எகனமி, ப்ரீமியம் எகனமி மற்றும் பிஸ்னஸ் க்ளாஸ் ஆகிய விருப்பங்களைத் தெரிவுசெய்து பயணிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது. நன்றி வீரகேசரி
குவைத்தில் வெவ்வேறு வீடுகளில் இலங்கைப் பெண்கள் இருவரது சடலங்கள் கண்டுபிடிப்பு : மரணங்களில் சந்தேகம் நிலவுவதால் குவைத் பொலிஸார் தீவிர விசாரணை
24 Oct, 2026 | 11:49 AM
குவைத் நாட்டில் இரு வேறு இடங்களில் உள்ள வீடுகளில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கைப் பெண்கள் இருவரது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இரு பெண்களின் மரணங்கள் தொடர்பிலும் குவைத் பொலிஸார் விசாரணைகளை தீவிரமாக நடத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குவைத்தில் அலி சபா அல்-சலம், அல்-நஸ்தா ஆகிய இரு பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்தே இந்த இரண்டு பெண்களின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பெண்களின் மரணங்கள் இயற்கை கடந்து நேர்ந்திருக்கலாம் என அந்நாட்டுப் பொலிஸார் வெளிப்படுத்தும் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
உயிரிழந்த பெண்களில் ஒருவர், அலி சபா அல்-சேலம் பகுதியில் உள்ள வீடொன்றின் கூரையில் அமைக்கப்பட்டிருக்கும் களஞ்சிய அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவ்வீட்டின் உரிமையாளர் அளித்த தகவலின் அடிப்படையில் அஹ்மதி பொது குற்றவியல் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்தப் பெண் 1988இல் பிறந்தவர் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த மற்றொரு பெண், அல்-நஹ்தா எனுமிடத்தில் உள்ள வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் 1999ஆம் ஆண்டு பிறந்த பெண் என்ற தகவலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
சடலம் தொடர்பில் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஜஹ்ரா பொது குற்றவியல் பிரிவினர், தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து சான்றுகளை சேகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இரு பெண்களின் மரணங்களும் சந்தேகத்துக்கிடமான முறையில் இடம்பெற்றிருப்பதால் இரண்டு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக தடயவியல் பிரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு “அரப் டைம்ஸ்” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நன்றி வீரகேசரி
சிறையிலுள்ள மகன் நாமலுக்கு உருக்கமான கடிதம் எழுதிய மஹிந்த
23 Oct, 2026 | 01:40 PM
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உருக்கமான கடிதமொன்றை எழுதியுள்ளார். நாமல் 2010 ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்த போது அவருக்கு வழங்கிய ஆலோசனைகளையும் அவர் அக்கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளார்.
அரசியலில் பிரவேசிப்பதற்கு முன்னர் நாமல் தன்னிடம் அனுமதி கோரியதாகக் குறிப்பிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, அரசியல் வாழ்க்கையில் சிறைவாசத்தையும் பல்வேறு கஷ்டங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் எனத் தான் மகனுக்கு எச்சரித்ததாகத் தெரிவித்துள்ளார்.
“நீ அரசியலில் பிரவேசிக்க விரும்பினால் பிரவேசி. ஆனால் சிறைக்குச் செல்லவும் கஷ்டங்களை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்” எனத் தான் நாமலிடம் கூறியதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாமல் பிறப்பதற்கு முன்னர், அரசியலில் பிரவேசித்த சிறிது காலத்திலேயே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான் சிறையில் அடைக்கப்பட்டதாகக் கூறியுள்ள அவர், தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே இந்த ஆலோசனையை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
தனது சிறைவாசக் காலத்தில் நீதித்துறையின் மீதான நம்பிக்கையே தனக்கு முக்கியமான ஆதாரமாக இருந்ததாகக் குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ஷ, நீதித்துறையின் மீது நம்பிக்கை வைக்குமாறு மகனிடம் வலியுறுத்தியுள்ளார்.
“யார் என்ன கூறினாலும், நீதித்துறையின் மீது மட்டுமே நம்பிக்கை வையுங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
தானும் தனது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவும் நாவலோக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நாமல் பிறந்த அதே வைத்தியசாலையில் தாங்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், தங்களது இளைய மகன்களான யோஷித மற்றும் ரோஹித ராஜபக்ஷ ஆகியோர் தங்களைக் கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யோஷித ராஜபக்ஷ தொடர்பான சட்ட நடவடிக்கைகளைக் குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ஷ, அவருக்கு எதிரான வழக்குகளில் ஒன்று கடற்படையில் இணைவதற்கான அவரது தீர்மானத்துடன் தொடர்புடையது எனக் கூறியுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தாலும் அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என நாமலிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அரசியல் தலைவர்களின் பிள்ளைகள் தங்களது பெற்றோரின் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பெற்றோர் செய்வதற்கு பிள்ளைகள் பொறுப்பல்ல. பழிவாங்காமல் இருப்பதே ராஜபக்ஷ குடும்பத்தின் வழிமுறையும் பாரம்பரியமும் ஆகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தமது குடும்பம் பங்களிப்புச் செய்திருந்தபோதிலும், தமது குடும்பத்தின் மீது நியாயமற்ற வகையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
தேர்தல்களில் தமது குடும்பம் தோல்விகளைச் சந்தித்திருந்தாலும், இலங்கை மக்கள் நன்றியுணர்வு கொண்டவர்கள் என்ற நம்பிக்கையை நாமல் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பௌத்த மத ஆசீர்வாதத்துடன் அந்தக் கடிதம் நிறைவடைந்துள்ளது.
இதற்கிடையில், இலஞ்சம் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய வழக்கில் நாமல் ராஜபக்ஷ தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கிரிஷ் குழுமப் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் பிணை மனுக்களை நிராகரித்த கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், அவர்களை நவம்பர் 06ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment