உணர்ச்சிகள் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்


உலகில் ஆண் . பெண் வேறுபாடின்றி இரு பாலார் இடையிலும் பரவக் கூடிய நோயாக எய்ட்ஸ் இருந்து வருகிறது. மருத்துவ ரீதியில் இதற்கு பல மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டிருந்தாலும் இன்னும் அதன் தாக்கம் இருந்தே வருகிறது. 

 1981ம் ஆண்டு அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் எய்ட்ஸ் என்ற நோயை முதன் முதலில் அறிவித்த போதும் அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரும் இந்த நோய் மக்கள் மத்தியில் இருந்தே வந்துள்ளது. தமிழகத்திலும், இலங்கையிலும் அதற்கு வழங்கப் பட்ட பெயர் மேக நோய் ! 

 பால் வினை நோயான இது தவறான , பாதுகாப்பற்ற உடலுறவினால்

ஏற்படும் நோய் என்ற போதும் திரைப் படங்களில் இந்த சப்ஜெக்ட் கையாள படவில்லை. எம் ஆர் ராதா நடித்த ரத்தக் கண்ணீர் படத்தில் கதாநாயகன் பல பெண்களுடன் தொடர்பு வைத்து அதன் மூலம் அவனுக்கு குஷ்டரோகம் ஏற்படுவதாக காட்டியிருந்தார்களே தவிர அதனை மேக நோய் என்று வெளிப்படுத்தவில்லை. 

 ஆனால் ஆண்டுகள் பல கடந்து 1976ம் வருடம் இந்த நோயின் தாக்கத்தை பறை சாற்றும் விதமாக படம் ஒன்று வந்தது. உணர்ச்சிகள் என்பது படத்தின் பெயர். அன்றைய இளம் நடிகரான கமல்ஹாசன் இதில் ஹீரோவாக நடித்திருந்தார். 

 பொதுவாக புதிதாக சினிமாவில் நுழைபவர்கள் புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்று துடிப்பார்கள். அந்த வகையில் ஆர் .சி . சக்தி மேக நோயை கருவாகக் கொண்டு உணர்ச்சிகள் படக் கதையை அமைத்திருந்தார். அவருக்கு இது முதல் படம். அதனாலோ என்னவோ இப்படி ஒரு கதையை எழுதி இருந்தார். முதலில் மேடை நாடகமாக கமல், எல். காஞ்சனா நடிப்பில் நடிக்கப்பட்ட இக் கதை பின்னர் படமான போது தயாரிப்பாளர் போஸின் ஆலோசனைக்கு அமைய சில மாற்றங்களுடன் படமானது . 

 

முத்து ஒரு சிறிய கிராமத்தில் வேலை செய்யும் 18 வயதுடைய, அப்பாவியான ஒர் இளைஞன். அவனது நில உரிமையாளரின் சகோதரியான ஒரு விதவை பெண் அவனுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கிறாள். அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், முத்து சென்னைக்குச் செல்கிறான். இருப்பினும், அங்கு அவன் சந்திக்கும் சிலராலும் அதே போன்ற தொல்லைகளுக்கு ஆளாகிறான். ஒரு விடுதியில் 'ரூம் பாய்' (அறைப் பணியாளர்) ஆக வேலைக்குச் சேரும் அவனுக்கு, அங்கு மரகதம் என்ற பாலியல் தொழிலாளி அறிமுகமாகிறாள். ஒருமுறை காவல்துறை சோதனையின்போது அவளை அவன் காப்பாற்றுகிறான். அவளைக் காப்பாற்றிய பிறகு, அவள் அவன் மீது ஈர்ப்பு கொள்கிறாள். முத்து மரகதத்தின் வீட்டில் ஒரு வேலையாளாகத் தங்குகிறான். அவளை ஒரு தலையாக காதலிக்கிறான். அக் காதல் மரகதத்தால் நிராகரிக்கப் படுகிறது. 

 இதனிடையே பெண் மோகத்துக்கு ஆளாகும் அவன் பல

பெண்களுடன் உடலுறவு கொள்கிறான். இதற்காக மரகதத்தின் பணத்தையும் திருடுகிறான். இதனால் அங்கிருந்து வெளியேற்றப்படுகிறான். இறுதியில், பாலியல் ரீதியாகப் பரவும் நோய் (STD) ஒன்றால் பாதிக்கப்படும் முத்து, அனாதரவாக மருத்துவமனையில் மருத்துவரின் சிகிச்சையைப் பெறுகிறான். 

 கே. பாலசந்தர் கூட கை வைக்காத கதையை சக்தி படமாக்கி இருந்தார். அவருடைய ஆர்வத்துக்கு ஏற்றாற் போல் போஸ் தயாரிப்பாளராக கிடைத்தார். ஆனாலும் நிதி நெருக்கடி காரணமாக படம் மெதுவாகவே தயாரானது. 

 படத்தில் முத்துவாக நடிக்கும் கமலும் , மரகதமாக நடிக்கும் ஸ்ரீ

வித்யாவும் இயல்பாக நடித்திருந்தார்கள். வசனம், முகபாவம் என்பனவற்றில் அவர்களின் நடிப்பு கவர்ந்தது. எல் . காஞ்சனாவும் நடிப்பில் குறை வைக்கவில்லை. இவர்களுடன் சுந்தரராஜன், எஸ் பி ராமதாஸ் , வி . கோபாலகிருஷ்ணன் . கே கே சௌந்தர் ஆகியோரும் நடித்திருந்தனர். 

 படத்துக்கான இசையை ஷியாம் வழங்கினார். உள்ளத்தில் போராடும் எண்ணங்கள் பாடல் ரசிகர்கனின் வரவேற்பை பெற்றுக் கொண்டது. படத்தை பிள்ளை ஒளிப்பதிவு செய்தார். 

 கமல் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய முதல் படமாக இது கருதப்பட்டாலும் இப் படம் வெளிவரும் முன் அவர் ஹீரோவாக நடித்த சில படங்கள் வெளிவந்து அவர் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தார். அதே போல் இப் படத்தின் கதை மலையாளத்தில் ராஸலீலா என்ற பெயரில் கமல் நடிப்பில் 1975ல் வெளிவந்து வெற்றி கண்டது. எம் .ஆர் . ராதாவுக்கு பிறகு இப்படி ஒரு வேடத்தில் நடித்து கமல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து கொண்டார். 

 ஆர் .சி . சக்தி படத்தின் கதை வசனத்தை எழுதி டைரக்ட் செய்தார். படத்தில் மோகம், விலைமாது, எய்ட்ஸ் எல்லாம் இருந்த போதும் காட்சிகளில் விரசமோ , ஆபாசமோ இன்றி படத்தை இயக்கி இருந்தார் சக்தி. இப் படம் மூலம் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டார். பின்னர் ரஜினியின் தர்ம யுத்தம் , லஷ்மி, ராஜேஷ் நடித்த சிறை படங்களையும் இயக்கிப் புகழ் பெற்றார். ஆனாலும் கமலின் நெருங்கிய நண்பரான அவருக்கு கமலின் படங்கள் ஏதும் இயக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது விந்தை தான்!

 



No comments: