எயார் பஸ் இலஞ்ச விவகாரம் : நாமலின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு ; விளக்கமறியல் நீடிப்பு! - முழுமையான விபரங்கள்
யாழ்ப்பாணத்தில் குழாய்க்கிணறு அமைப்பதற்கு கட்டுப்பாடு: ஆளுநர் தலைமையில் தீர்மானம்
சுற்றுலாத்துறையில் உலகின் வேகமாக முன்னேறும் முதல் 10 நாடுகளில் இலங்கை
அனோஜன் விவகாரம்: சாதாரண தூதரக உதவிகளுக்கு அப்பால் ஒருங்கிணைந்த இராஜதந்திர முயற்சிகள் அவசியம் - 'ரைட் டு லைஃப்' அமைப்பு உடனடிக் கோரிக்கை
வவுனியா வெடுக்குநாறிமலையில் புத்தரின் சிலை வைக்கப்பட்டு வழிபாடு ; பெருமளவான பௌத்தமக்கள் பங்கெடுப்பு
எயார் பஸ் இலஞ்ச விவகாரம் : நாமலின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு ; விளக்கமறியல் நீடிப்பு! - முழுமையான விபரங்கள்
23 Sep, 2026 | 07:20 PM
(எம்.எப்.எம்.பஸீர், செ.சுபதர்ஷனி)
எயார் பஸ் விமானங்களை கொள்வனவின்போது இடம்பெற்ற இலஞ்ச கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் பிணைக் கோரிக்கையை நிராகரித்து எதிர்வரும் 30ஆம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு 10 எயார் பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது போது, ஐரோப்பிய நிறுவனமொன்றிடமிருந்து 2 இலட்சம் அமெரிக்க டொலர் பணத்தை இலஞ்சமாக பெறப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தில், பணச் சுத்திகரிப்பு தடுப்பு சட்டத்தின் கீ்ழ் கைதான பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (23) கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்தார்.
அதற்கமைய கடந்த 16 ஆம் திகதி பிரதிவாதி தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான உத்தரவை நேற்றைய தினம் நீதிவான் அறிவித்திருந்தார். வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில், முதன்மை தகவல் அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தது. அதன்படி இந்த வழக்கில் முதலாவது பிரதிவாதியாக கபில சந்திரசேன, 2 ஆவது பிரதிவாதி பிரியங்கா நியுமாலி, 3 ஆவது சந்தேகநபர் சமீந்திர ராஜபக்ஷ, 4 ஆவது சந்தேகநபராக நாமல் ராஜபக்ஷ ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாவது பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள கபில சந்திரசேன தற்போது உயிருடன் இல்லை, அதேபோல் அவரது மனைவியான 2 ஆவது சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சமூகமளிக்காத காரணத்தினால் குறித்த பிரதிவாதிக்கு எதிராக நீதிமன்றத்தால் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 ஆவது சந்தேகநபர் தலைமறைவாக உள்ள காரணத்தினால் அவரை கைதுசெய்ய முடியாமல் போயுள்ளமையால் அவருக்கு எதிராகவும் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 4 ஆவது பிரதிவாதி கைது செய்யப்பட்டு செப்டம்பர் 16 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது பிணை கோரிக்கை மீதான உத்தரவைப் அறிவித்த நீதிவான், இந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபருக்குப் பிணை வழங்குவது குறித்துப் பரிசீலிப்பதற்கான சாத்தியக்கூறுகள் நீதிமன்றத்திற்கு இல்லை எனக் குறிப்பிட்டார். இந்நிலையில் சந்தேகநபரின் சட்டதரணியால் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையை நிராகரிப்பதாக நீதிவான் உத்தரவிட்டார். தொடர்ந்து தெரிவித்த நீதிவான்,
சந்தேகநபர் கடந்த 16ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, பிணை வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திலும், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கோட்டை நீதிவான் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளன. அதற்கமைய 2023 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும், குற்றப்புலனாய்வு திணைக்களமும் இணைந்து இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
4 ஆவது பிரதிவாதியால் விமான கொடுக்கல் வாங்கலின் போது 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்துக்க அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழும் குற்றமிளைக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இரு நீதிவான் நீதிமன்றங்களின் விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கை ஒரு நீதிமன்றத்தின் கீழ் தனி ஒரு வழக்காக விசாரணை செய்ய முடியும். இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதுக் குறித்து அறிவிக்காமையால் பிணை வழங்குவது குறித்து பரிசீலிக்க இயலாது என்றார்.
தொடர்ந்து, அவசியம் ஏற்படின் இந்த வழக்கை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கின் குற்றச்சாட்டுகளுக்கும், பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் குற்றச்சாட்டுகளுக்கிடையிலும் தொடர்புள்ளமையை நீதிமன்றம் அவதானித்துள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் சந்தேகநபர் ஏற்கனவே எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பின்னணியில், கோட்டை நீதிமன்ற இந்த வழக்கிலிருந்து பிணை வழங்க முடியாது.அவருக்கு பிணை வழங்குவது குறித்து பரிசீலிப்பது, சிக்கலை தோற்றுவிக்கக் கூடும்.
முறைப்பாட்டாளர் தரப்பினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள விடயங்களைக் கருத்தில் கொள்ளும்போது, ஊழல் எதிர்ப்புச் சட்டத்துக்கு அமைவாகப் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தல் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதா ? என்பது குறித்துக் குறிப்பிடப்படவில்லை என நீதிவான் இதன்போது தெரிவித்திருந்தார்.
மேலும் எதிர்வரும் நாட்களில் பின்வரும் விடயங்கள் குறித்து எழுத்து மூலம் நீதிமன்றத்தில் அறிவிக்குமாறு முறைப்பாட்டாளர் தரப்புக்கு நீதிவான் உத்தரவிட்டார். அதன் பின்னரே பிணை வழங்குவது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். அதற்கமைய இந் வழக்கு தொடர்பான விசாரணைகளில் வெளிப்பட்டுள்ள விடயங்களையும், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற வழக்கின் விசாரணைகளில் வெளிப்பட்டுள்ள விடயங்களையும் ஒருங்கிணைத்து ஒரே வழக்காக முன்னெடுத்துச் செல்ல உத்தேசிக்கப்பட்டுள்ளதா?
இந் வழக்கை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்கே மாற்ற முறைப்பாட்டாளர் தரப்பு எதிர்பார்க்கிறதா? கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற வழக்கு தொடர்பில் 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149 ஆம் பிரிவுக்கு அமைய, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தல் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? ஆகிய வி்டயங்களை தொடர்பில் அறிவிக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக்க பண்டாரவுக்கு நீதிவான் உத்தரவிட்டார்.
இந்நிலையில் சந்தேக நபரின் சட்டத்தரணியல் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கையை நிராகரித்த நீதவான் எதிர்வரும் 30ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். நன்றி வீரகேசரி
யாழ்ப்பாணத்தில் குழாய்க்கிணறு அமைப்பதற்கு கட்டுப்பாடு: ஆளுநர் தலைமையில் தீர்மானம்
23 Sep, 2026 | 09:34 AM
யாழ்ப்பாண மாவட்டத்தில் குறிப்பாக, எந்தவொரு முறையான கண்காணிப்புமின்றி குழாய்க் கிணறுகள் அமைக்கப்படுவதையும், அதன் மூலம் குடாநாட்டின் நிலத்தடி நீர்வளத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் கருத்திற்கொண்டு, குழாய்க் கிணறுகள் அமைக்கும் நடவடிக்கையை முறையான ஒழுங்குமுறையின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற ஆரம்பக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் குழாய்க்
கிணறுகள் அமைப்பதை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பான ஆரம்பக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
குடாநாட்டில் கண்காணிப்புக்கு உட்படாத வகையில் குழாய்க் கிணறுகள் அமைக்கப்படுவதால் நிலத்தடி நீர்வளத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இதனை முறையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது, நீர்வளச் சபையின் வடபிராந்திய முகாமையாளர், குழாய்க் கிணறுகள் அமைப்பதை ஒழுங்குமுறைப்படுத்தும் நோக்கில் 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்தார்.
நன்றி வீரகேசரி
சுற்றுலாத்துறையில் உலகின் வேகமாக முன்னேறும் முதல் 10 நாடுகளில் இலங்கை
Published By: Digital Desk 2
27 Sep, 2026 | 01:17 PM
சுற்றுலா மற்றும் பயணத்துறையின் வளர்ச்சியில் உலகளவில் வேகமாக முன்னேற்றம் கண்டுள்ள முதல் 10 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.
உலக பொருளாதார மன்றத்தினால் (WEF) வெளியிடப்பட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான Travel and Tourism Development Index (TTDI) அறிக்கையின் அடிப்படையில், 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026ஆம் ஆண்டில் சுற்றுலா மற்றும் பயணத்துறை மேம்பாட்டுக் குறியீட்டில் அதிக முன்னேற்றம் கண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை 4.33 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் அல்பேனியா முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், அந்நாட்டின் குறியீட்டு மதிப்பெண் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேவேளை, வியட்நாம் 6.3 சதவீத முன்னேற்றத்துடன் இரண்டாவது இடத்திலும், லாவோஸ் 6.1 சதவீத முன்னேற்றத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
அனோஜன் விவகாரம்: சாதாரண தூதரக உதவிகளுக்கு அப்பால் ஒருங்கிணைந்த இராஜதந்திர முயற்சிகள் அவசியம் - 'ரைட் டு லைஃப்' அமைப்பு உடனடிக் கோரிக்கை
Published By: Digital Desk 1
27 Sep, 2026 | 10:52 AM
(நா.தனுஜா)
சவூதி அரேபியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் சிவராசா அனோஜனின் விவகாரம் சாதாரண தூதரக உதவிகளுக்கு அப்பால் கொண்டுசெல்லப்படவேண்டும். அதற்கமைய இருதரப்பு உறவுகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் நலன்சார் அமைப்புக்களின் ஆதரவுடன் அனோஜனுக்கான பொதுமன்னிப்பைக் கோருவதற்கான ஒருங்கிணைந்த இராஜதந்திர முயற்சிகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என 'ரைட் டு லைஃப்' அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மதநிந்தனைக் குற்றச்சாட்டில் கடந்த மாதத் தொடக்கத்தில் சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் 5 வருடகால சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்ட இலங்கையரான சிவராசா அனோஜனின் மேன்முறையீட்டை அடுத்து, தற்போது அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் 'ரைட் டு லைஃப்' அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
சவூதி அரேபியாவில் தற்போது மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் இலங்கையைச் சேர்ந்த இளம் புலம்பெயர் தொழிலாளரான அனோஜனின் உயிரைக் காப்பதற்கு உடனடியாக உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடமும் வெளிவிவகார அமைச்சரிடமும் கோருகிறோம்.
சமூகவலைத்தளப் பதிவொன்று தொடர்பிலேயே சவூதி அரேபிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அனோஜனுக்கு மரணதண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது. மரணதண்டனைக்கு எதிரான தேசிய மற்றும் சர்வதேச செயற்திட்டங்களின் பங்காளர் என்ற அடிப்படையில், இவ்விவகாரத்தின் தீவிரத்தன்மையயும் வெளிநாடுகளில் மரணதண்டனை விதிக்கப்படும் வழக்குகளின் காலக்கெடு சார்ந்த இரக்கமற்ற தன்மையையும் நாம் நன்கு உணர்ந்திருக்கிறோம்.
இவ்விவகாரத்தில் அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை இரத்துச்செய்வதற்கான ஒரே வழி சவூதி அரேபிய மன்னர் மற்றும் இளவரசரின் பிரத்யேக அதிகார வரம்புக்கு உட்பட்ட 'பொது மன்னிப்பு' மாத்திரமேயாகும்.
எனவே அரசியலமைப்பின் பிரகாரம் குடிமக்களின் உயிரைப் பாதுகாத்தல் என்ற தமது முதன்மைப் பொறுப்பின் அடிப்படையில், இலங்கை அரசாங்கத்தினால் இவ்விவகாரம் சாதாரண தூதரக உதவிகளுக்கு அப்பால் கொண்டுசெல்லப்படவேண்டும். இருநாட்டு உறவுகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் நலன்சார் அமைப்புக்களின் ஆதரவுடன் அனோஜனுக்கான பொதுமன்னிப்பைக் கோருவதற்கான ஒருங்கிணைந்த இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
வவுனியா வெடுக்குநாறிமலையில் புத்தரின் சிலை வைக்கப்பட்டு வழிபாடு ; பெருமளவான பௌத்தமக்கள் பங்கெடுப்பு
27 Sep, 2026 | 10:57 AM
வவுனியா வெடுக்குநாறிமலையில் இன்றையதினம் புத்தரின் சிலையினை வைத்து பௌத்த பிக்கு தலைமையில் விசேட பௌர்ணமி தின வழிபாடுகள் நடைபெற்றது. வழிபாட்டின் பின்னர் சிலை மீண்டும் எடுத்துச்செல்லப்பட்டது.
நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் நேற்று (26) சனிக்கிழமை வடக்குமாகாண தலைமை தேரர் சந்தபோதி தலைமையில் பௌர்ணமி நிகழ்வு ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சைவமக்கள் இன்று புரட்டாதி சனி விசேட பூஜை வழிபாடுகளில் அங்கு ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை செய்திருந்தனர்.
இரண்டு தரப்பும் வழிபடலாம் என்ற உத்தவை நீதிமன்றம் ஏற்கனவே விடுத்திருந்தது.
அந்தவகையில் சைவமக்கள் காலை 06 மணியளவில் ஆலயத்திற்கு
விஜயம் செய்து தமது வழிபாடுகளில் ஈடுபட்டனர். அத்துடன் கல்கமுவே சந்தபோதி தேரர் தலைமையிலான பௌத்த மக்களும் காலை 09 மணிக்கு பின்னர் வழிபாடுகளை மேற்கொள்வதற்காகச் அங்கு சென்றனர்.
தேரருடன் வெளிமாவட்டங்களில் இருந்து பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட பெருமளவான சிங்கள மக்கள் ஆலய பகுதிக்கு வந்தனர்.பௌத்ததேரர் புத்தரின் சிலை ஒன்றை எடுத்துவந்ததுடன், அதனை மலையடிவாரத்தில் வைத்து விசேட பிரித் ஓதல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார். பின்னர் அவை நிறைவடைந்ததும் புத்தர்சிலையை மீண்டும் எடுத்துச்சென்றனர்.
நேற்றையதினம் வெடுக்குநாறி மலையை சுற்றி நூற்றுக்கணக்கான பொலிஸார்,விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தார்கள். மலை அடிவாரம் முழுவதும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு மதப்பதட்டம் ஏற்படுவதற்கான நிலமை அங்கு அவதானிக்க முடிந்தது. எனினும் பெரியளவிலான குழப்பநிலை ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றையதினம் பாராளுமன்ற உறுப்பினர்களான கயேந்திரகுமார்பொன்னம்பலம், து.ரவிகரன்,ப.சத்தியலிங்கம்,சிவஞானம் சிறிதரன் முன்னாள் பா.உ.செ.கயேந்திரன், மற்றும் பொதுமக்கள் சிவ வழிபாடுகளில் பங்கெடுத்திருந்தனர்.
நன்றி வீரகேசரி

















No comments:
Post a Comment