கனவிடை உயிர்த்தல்.


நிறையப் பார்த்தாயிற்று…..
ம‌னக்கதவை மூட,
இருட்கதவம் போதவில்லை.

காட்சிகள்…… 

புறவெளி அறிந்திரா காற்று உணர்ந்திராக் காட்சிகள்......
கண்முன் விரியும் …. 

சிறுதுணிப்பை அவிழ,
உருண்டோடிய என் குழந்தைக் காலத்து மாபிள்களாய் !

கணிதம் போல வாழ்க்கை என்று கற்பிதம் செய்த ஆசிரியன் எங்கே ?

3ம் + 4 ம் 10 ஐத் தருகின்ற புதிரினுள், 

சிக்குண்டு தொலைகின்றது …….. 

சின்னமனம் .


இடுக்கில் விழுந்த பல்லியை,
அதன் உருளும் சிறு கருங்கண்களை,
எத்தனையோ முறை …….
தவிர்த்து நடந்தாயிற்று .



எப்பொழுதோ தொலைந்துபோன,
என்மனதின் வர்ணத்தைத்
தேடியலைந்து…..
இறுதியில் காட்டிற்று, என் காலம்!
இடுக்கில் விழுந்த,
ஒரு பல்லியின்
உடலினுள் ஒளிந்து ,
நலிந்துறையும்…….
என் ஏழுவர்ண சின்னமனம்.

குமுதினி கலையழகன்.
சிட்னி - அவுஸ்திரேலியா

No comments: