மனிதனுடைய அனைத்து கவலைகளுக்கும், துயரங்களுக்கும், அழிவுகளுக்கும் மூல காரணமாக இருப்பது பொறாமையே. பகவத் கீதையில், கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அவ்வப்போது எச்சரிக்கிறார்:
“அர்ஜுனா! நீ பொறாமையற்றவனாக இருக்க வேண்டும். பொறாமை என்னும் தீய குணத்திற்கு ஆளாகாதே.”
பொறாமையுடன் வெறுப்பும் சேர்ந்தே வரும். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று துணையான இரு தீய குணங்கள். இவை விஷம் நிறைந்த பூச்சிகளைப் போன்றவை. மனிதனுடைய ஆளுமையின் ஆணிவேரையே இவை தாக்குகின்றன.
ஒரு மரம் அழகிய மலர்களாலும் இனிய கனிகளாலும் செழித்து விளங்கலாம். ஆனால், தீங்கு விளைவிக்கும் புழுக்கள் அதன் வேர்களைத் தாக்கத் தொடங்கினால், அந்த மரத்தின் அழகும் செழிப்பும் என்னவாகும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்! நாம் அதன் அழகைக் கண்டு வியந்து கொண்டிருக்கும்போதே, மலர்கள் வாடத் தொடங்கும்; கனிகள் உதிர்ந்துவிடும்; இலைகள் மஞ்சள் நிறமாகி, காற்றில் சிதறிச் செல்லும். இறுதியில் அந்த மரம் காய்ந்து, உயிரிழந்து, கீழே விழுந்துவிடும்.
அதேபோல, பொறாமையும் வெறுப்பும் ஒருவருடைய இதயத்தைப் பற்றிக்கொண்டு செயல்படத் தொடங்கினால், அவர் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும், எவ்வளவு உயர்ந்த கல்வி கற்றவராக இருந்தாலும், இறுதியில் வீழ்ச்சியடைவார். அவர் சமூகத்திற்கு எதிரியாக மாறிவிடுகிறார். மனிதநேயத்தை இழந்துவிடுவதால், பிறரின் கேலிக்கும் பரிகாசத்திற்கும் இலக்காகிறார்.
இறுதியில், அவரை நம்பியிருந்த நண்பர்கள்கூட அவரைவிட்டு விலகி, அவருடைய எதிரிகளாக மாறிவிடுகின்றனர். அவர் தனது குழுவினரின் மரியாதையை இழந்துவிடுகிறார். பிறரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண மரியாதையும் அன்பான அணுகுமுறையும்கூட அவருக்குக் கிடைப்பதில்லை. இதனால், அவரது நாட்கள் நிரந்தரமான மனவேதனையிலும் துயரத்திலும் கழிகின்றன.
பொறாமையைப் போன்ற மறைமுகமான, நயவஞ்சகமான எதிரி வேறு எதுவும் இல்லை.
No comments:
Post a Comment