உலகச் செய்திகள்

ஐ.நா பேரவையில் நெதன்யாகுவின் ஆவேச உரை: வெளிநடப்பு செய்த பிரதிநிதிகளை "நேர்மையற்ற கோழைகள்" என விமர்சித்தார்!

“நாங்கள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்” - ட்ரம்ப் கருத்துக்கு ஈரான் ஜனாதிபதி பதில்

விமான நிலையத்திற்கு சென்று சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கை வரவேற்ற ட்ரம்ப்!

ஐ.நா. பொதுச் சபையில் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை: ஈரானை அழித்துவிடுவேன் என ட்ரம்ப் எச்சரிக்கை

சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரி கைது



ஐ.நா பேரவையில் நெதன்யாகுவின் ஆவேச உரை: வெளிநடப்பு செய்த பிரதிநிதிகளை "நேர்மையற்ற கோழைகள்" என விமர்சித்தார்!

25 Sep, 2026 | 12:58 PM

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸா, ஈரான் மற்றும் மத்திய கிழக்கில் தனது நாடு மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரமாக நியாயப்படுத்தி உரையாற்றியுள்ளார்.

நெதன்யாகு மேடையேறியதும் பல நாட்டுப் பிரதிநிதிகள் கூட்டரங்கை விட்டு வெளிநடப்பு செய்த நிலையில்,

"நாங்கள் வெற்றி பெறுவோம், அதைத் தவிர வேறு வழியில்லை. அரங்கில் இருக்கும் எஞ்சிய நேர்மையற்ற கோழைகளும் விருப்பமிருந்தால் வெளியேறலாம்" என நெதன்யாகு ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்த அவர், தற்காப்புக்காகவே போரிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

காலனித்துவக் குற்றச்சாட்டைச் சுமத்தும் ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா மற்று பிரான்ஸ் ஆகிய நாடுகளை நோக்கி, "காலனித்துவம் என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தவர்களே அவர்கள் தான்" என விமர்சித்துள்ளார்.

துருக்கி ஜனாதிபதி ரசெப் தாயிப் எர்டோகனை 'சர்வாதிகாரி' என விமர்சித்ததுடன், அவர் ஹமாஸுக்கு ஆதரவளிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

நியூயோர்க் மேயர் சோஹ்ரான் மம்தானியை கடுமையாக விமர்சித்த நெதன்யாகு, அவர் பதவியேற்றது முதல் நியூயோர்க்கில் யூதர்களுக்குப் பாதுகாப்பு உணர்வு குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட கூட்டு வான்வழித் தாக்குதல்களுக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் "துணிச்சலான தலைமைத்துவத்திற்கு" நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.

நெதன்யாகுவின் உரைக்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாக, அமெரிக்க நுழைவு இசைவு மறுக்கப்பட்டதால் காணொளி மூலம் உரையாற்றிய பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், 

மேற்குக்கரையில் இஸ்ரேலியக் குடியிருப்புகளின் சட்டவிரோத விரிவாக்கம் பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரத்தையும், இரு-நாடு தீர்வையும் முற்றாகப் அழித்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

காஸாவில் பாலஸ்தீன மக்கள் மீதான கொலைகள், அழிவுகள் மற்றும் பட்டினிப் போர் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நெதன்யாகுவின் ஐ.நா வருகைக்கு எதிராக நியூயோர்க் நகரில் வீதிகளை மறித்துப் பாரிய போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டத்தில் பங்கேற்ற ஒஸ்கார் விருது பெற்ற பிரபல ஹொலிவூ  நடிகை சூசன் சரண்டன், நடிகை ஹனா என்பிண்டர் மற்றும் நியூயோர்க் நகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த மாதம் இஸ்ரேலில் முக்கிய பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உள்நாட்டு வாக்குகளை ஈர்க்கவும் சர்வதேச அளவில் ஆதரவைத் திரட்டவுமே நெதன்யாகு இத்தகைய காரசாரமான உரையை ஆற்றியதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.   நன்றி வீரகேசரி 






“நாங்கள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்” - ட்ரம்ப் கருத்துக்கு ஈரான் ஜனாதிபதி பதில்

24 Sep, 2026 | 01:18 PM

“நாங்கள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்” என்று ஈரான் ஜனாதிபதி பெசெஸ்கியன் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் நேற்று புதன்கிழமை (23) கூறியுள்ளார். 

செவ்வாய்க்கிழமை (22) பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானை, “பயங்கரவாத நாடு” என்று கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக, ஈரான் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பாக ஈரான் ஜனாதிபதி மேலும் கூறுகையில், 

“அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எங்களை “பயங்கரவாதி” என்று வர்ணித்துள்ளார். நாங்கள் பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள். எந்தவொரு சட்ட நடைமுறையோ அல்லது காரணமோ இன்றி, எங்களின் மதிப்பிற்குரிய உயரிய தலைவர் படுகொலை செய்யப்பட்ட ஈரானிலிருந்து நான் வருகிறேன். 

உண்மையில், ஒரு பாடசாலை மீதே குண்டு வீசப்பட்ட ஈரானிலிருந்து நான் வருகிறேன். இந்தக் குழந்தைகளைப் பார்க்கிறீர்களா? அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பயன்படுத்திய ஆயுதங்களை கொண்ட குண்டுகளால் இந்தக் குழந்தைகள் உயிரிழந்தனர். 

எங்களது நாட்டின் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல்களுக்கு எங்களது அப்பாவி மக்கள் இலக்காகின்றனர். நாங்கள் மிகுந்த வலிமையுடன் எங்களைப் பாதுகாத்துக்கொண்டோம். 

அமெரிக்காவும் இஸ்ரேலும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எங்கள் மீது தாக்குதல் நடத்தின. அவர்கள் எங்களைத் தாக்கினார்கள். ஆனால், நாங்கள் ஒருபோதும் மண்டியிடவில்லை. 

நாங்கள் பதிலடி கொடுத்தோம். ஆனால், பொதுமக்களைத் தாக்கவில்லை. 

காசாவில் 80,000க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தங்கள் வசமுள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவர்கள் இனப்படுகொலையைச் செய்து வருகின்றனர். பின்னர், மற்றவர்களைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள்.

நாங்களா நிலையற்ற தன்மைக்குக் காரணம்? நாங்கள் சுதந்திரமாக வாழவே விரும்புகிறோம். 

நாங்கள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக வேறொரு நாட்டின் மீதோ அல்லது பிரதேசத்தின் மீதோ தாக்குதல் நடத்தியதில்லை. ஆனால், அச்சுறுத்தல் ஏற்பட்டபோதெல்லாம் தொடர்ந்து தன்னை தற்காத்துக்கொண்டுள்ளது. பிராந்தியத்தில் நிலையற்ற தன்மைக்கு காரணமாகவும் பயங்கரவாத நாடாகவும் ஈரான் ஏன் இப்போது சித்திரிக்கப்படுகிறது. 

ஈரான் தனது அதிகாரத்தை ஆதிக்கத்துக்காக பயன்படுத்தவோ அல்லது பிற நாடுகளின் நலனைப் பாதித்துத் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவோ விரும்பவில்லை” என்று ஈரான் ஜனாதிபதி தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி 




விமான நிலையத்திற்கு சென்று சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கை வரவேற்ற ட்ரம்ப்!

Published By: Digital Desk 2

24 Sep, 2026 | 10:56 AM

சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை ஆரம்பித்துள்ள நிலையில், அவரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றுள்ளார்.

23 ஆம் திகதி புதன்கிழமை அமெரிக்கா சென்றடைந்த ஷி ஜின்பிங்கையும் அவரது மனைவி பெங் லியுவானையும் வரவேற்பதற்காக ட்ரம்ப் மற்றும் அமெரிக்க முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப் ஆகியோர் மேரிலாந்தில் உள்ள அன்றூஸ் விமானப்படைத் தளத்திற்கு நேரில் சென்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் வெளிநாட்டு அரச தலைவரை விமான


நிலையத்திற்கே சென்று நேரில் வரவேற்பது வழக்கமான நடைமுறையாக இல்லாத நிலையில், ட்ரம்பின் இந்த நடவடிக்கை அரிதான இராஜதந்திர வரவேற்பாக அமைந்துள்ளது.

பொதுவாக வெளிநாட்டு தலைவர்கள் அமெரிக்காவிற்கு வருகை தரும்போது, அவர்களை வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க ஜனாதிபதி வரவேற்பது வழக்கமாகும்.

ஜி ஜின்பிங்கின் இந்த விஜயம் செப்டெம்பர் 23 முதல் 25ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இது ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்திற்குப் பின்னர் அவர் மேற்கொள்ளும் அமெரிக்காவின் முதல் அரசுமுறை விஜயமாகும்.


இந்த விஜயத்தின்போது அமெரிக்கா – சீனா வர்த்தக உறவுகள், செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு, தாய்வான் மற்றும் முக்கிய கனிம வளங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளனர்.

விமான நிலைய வரவேற்பின்போது சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்ததுடன், இராணுவ இசைக்குழுவின் இசை மற்றும் உத்தியோகப்பூர்வ இராணுவ மரியாதைகளும் இடம்பெற்றன. ட்ரம்ப் – மெலானியா தம்பதி, ஜி ஜின்பிங் – பெங் லியுவான் தம்பதியை நேரில் சந்தித்து வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் ஜி ஜின்பிங்கிற்கு


உத்தியோகப்பூர்வ வரவேற்பு நிகழ்வும், இராணுவ அணிவகுப்பு பார்வையிடும் நிகழ்வும், அரச விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பல தசாப்தங்களாக அரிதாகக் காணப்பட்ட விமான நிலைய வரவேற்பு நடைமுறையை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ள ட்ரம்பின் இந்த நடவடிக்கை, அமெரிக்கா – சீனா உறவுகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நிகழ்வாக சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.   நன்றி வீரகேசரி 





ஐ.நா. பொதுச் சபையில் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை: ஈரானை அழித்துவிடுவேன் என ட்ரம்ப் எச்சரிக்கை

23 Sep, 2026 | 02:51 PM

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடரின் பின்னணியில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மத்தியஸ்தர்கள் ஊடாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் அமைதி உடன்பாடு எட்டப்படாவிட்டால் அந்நாட்டை “முழுமையாக அழித்துவிட” முடியும் என ஐ.நா. பொதுச் சபையில் எச்சரித்துள்ளார்.

நியூயோர்க்கில் நடைபெற்ற இந்த இராஜதந்திர முயற்சிகளில் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஈடுபட்டிருந்ததுடன், ஈரான் சார்பில் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பங்கேற்றுள்ளார்.

அமெரிக்கத் தரப்பின்படி, மத்தியஸ்தர்கள் இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர். ஈரான் தரப்பும் அமெரிக்கத் தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அப்பாஸ் அராக்சி இடையே சந்திப்பு இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைகளில் ஈரான் முன்வைத்த முக்கிய நிபந்தனைகளில், அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை நீக்குதல், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துகளை விடுவித்தல் மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகியவை அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்கா இராணுவ அழுத்தத்தைத் தளர்த்தி, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், ஹொர்முஸ் நீரிணையை ஏழு நாட்களுக்குள் மீண்டும் திறக்க முடியும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பின்னர் ஈரானுடன் உடன்பாடு எட்டப்படலாம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை, பின்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களில் உடன்பாடு அதற்கு முன்னரே எட்டப்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஹொர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான முயற்சிகளில் கட்டார் உள்ளிட்ட பிராந்திய நாடுகள் மத்தியஸ்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் காண்பதாக அமெரிக்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ பதற்றம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 






சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரி கைது

21 Sep, 2026 | 10:43 AM

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை விடுவிக்கக் கோரி, போராட்டமொன்றினை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நேற்று (20) இம்ரான்கானின் சகோதரி அலீமா கான் லாகூரில் கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இம்ரான்கானை விடுவிக்குமாறு அலீமா கான் தொடர்ந்து போராடி வருவதோடு, பல தரப்புகளிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். 

இந்நிலையில், எதிர்வரும் 27ஆம் திகதி இம்ரான்கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையிலேயே இம்ரான்கானின் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார். 

பஞ்சாப் பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் அவரை 30 நாட்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 




No comments: