யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இராணுவ வீரருக்கு வீடு கட்டிக்கொடுக்கும் இராணுவம்!
வவுனியாவில் அனுமதியின்றி வாகன பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் ; மோட்டார் சைக்கிள் பறிமுதல் ; பலருக்கு எதிராக வழக்கு!
உள்நாட்டு இறைவரி திணைக்கள யாழ். அலுவலகத்தில் வரிசெலுத்துவோர் அடையாள அட்டை இலக்கத்தை பெற நீண்ட வரிசையில் காத்திருப்பு!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இராணுவ வீரருக்கு வீடு கட்டிக்கொடுக்கும் இராணுவம்!
23 Jun, 2026 | 02:21 PM
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராணுவ வீரருக்கு இராணுவத்தினரால் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் வீடொன்று அமைத்து கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது.
புத்தூர் பகுதியை சேர்ந்த லான்ஸ்கோப்ரல் எம்.எம் ராஜா ராஜா எனும் இராணுவ வீரருக்கு இராணுவத்தினரின் "சேவா வனிதா" திட்டத்தின் ஊடாக 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியில் கட்டப்படும் இந்த வீடானது, எதிர்வரும் ஜூலை மாதம் 25 ஆம் திகதி கட்டி முடித்து கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வீட்டுக்கான அடிக்கல்லினை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நாட்டி வைத்தார்.
நிகழ்வில் சர்வ மத தலைவர்கள் யாழ். மாவட்ட செயலர், யாழ்
மாவட்ட கட்டளை தளபதி கோப்பாய் பிரதேச செயலாளர், இராணுவ தளபதிகள், பொலிஸார் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நன்றி வீரகேசரி
வவுனியாவில் அனுமதியின்றி வாகன பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் ; மோட்டார் சைக்கிள் பறிமுதல் ; பலருக்கு எதிராக வழக்கு!
23 Jun, 2026 | 09:31 AM
வவுனியா நகரில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களால் நடத்தப்பட்ட, அனுமதி பெறப்படாத வாகனப் பேரணி ஒன்றின்போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் பேரணியினர் பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலை மாணவர்களால் வவுனியா புகையிரத நிலைய வீதியில் பெரும் எண்ணிக்கையிலான மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களுடன் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, மாணவர்கள் கூட்டமாக வீதியை மறித்து, ஏனைய வாகனங்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் போக்குவரத்து இடையூறை ஏற்படுத்தும் வகையில் பயணித்துள்ளனர்.
அத்துடன், அதிவேக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களில் அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய வகையில் 'சைலன்சர்கள்' பொருத்தப்பட்டிருந்ததோடு, வீதியில் ஆபத்தான முறையில் அதிவேகமாகவும் அவர்கள் வாகனங்களை செலுத்தியுள்ளனர்.
இது குறித்துக் கிடைத்த தகவலையடுத்து, வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குறித்த பேரணியை வழிமறித்தனர்.
இதன்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் போக்குவரத்து இடையூறு விளைவித்தல் (பொது வீதியில் ஏனைய வாகனங்கள் பயணிக்க முடியாதவாறு இடையூறு ஏற்படுத்தியமை), வாகன வடிவமைப்புகளில் சட்டவிரோத மாற்றம் (வாகனங்களின் அசல் வடிவமைப்பு அனுமதியின்றி மாற்றியமைத்தமை ), ஒலி மாசு ஏற்படுத்தல் (மோட்டார் சைக்கிள்களின் ஒலி அமைப்பை மாற்றி அதிக சத்தத்தை எழுப்பியமை), வேகமாக பயணித்தமை (பொது வீதியில் ஆபத்தான முறையில் வாகனங்களைச் செலுத்தியமை) தொடர்பிலான சட்டங்களின் கீழ் மாணவர்களுக்கு எதிராக பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த சோதனையின்போது, விதிமுறைகளை அப்பட்டமாக மீறிய குற்றச்சாட்டில் ஒரு மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு, வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய பல மாணவர்களுக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக வவுனியா போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக பொலிஸார் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மாணவர்கள் இவ்வாறான கொண்டாட்டங்களின்போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதையும், வீதிப் பாதுகாப்புச் சட்டங்களை மீறுவதையும் எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என்றனர்.
இதேவேளை, குறித்த பாடசாலையில் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடல் நடைபெற்ற நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
உள்நாட்டு இறைவரி திணைக்கள யாழ். அலுவலகத்தில் வரிசெலுத்துவோர் அடையாள அட்டை இலக்கத்தை பெற நீண்ட வரிசையில் காத்திருப்பு!
22 Jun, 2026 | 04:36 PM
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தில், வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதைக் காண முடிகிறது.
இம்மாதம் 30 ஆம் திகதிக்கு பின்னர் இந்த அடையாள இலக்கத்தைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணமாகும்.
அபராதத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பெருமளவிலான மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசைகளில் காத்திருந்து இந்த இலக்கத்தைப் பெற்று வருகின்றனர்.
நன்றி வீரகேசரி






No comments:
Post a Comment