மார்பகப் புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறிதலை அனைவருக்கும் எட்டக்கூடியதாக்குவோம்
இலங்கையில் பெண்களிடையே அதிகமாகக் காணப்படும் புற்றுநோய் மார்பகப் புற்றுநோயாகும். இது பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் சுமார் நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறியும் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இந்தப் பகுதிகளில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வசித்து வருகின்றனர்; அவர்களில் பலர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள்.
கொழும்பு போன்ற பெரிய நகரங்களைப் போல அல்லாமல், இப்பகுதிகளில் போதுமான பரிசோதனை வசதிகள் இல்லை. மேலும், நடமாடும் மருத்துவ சேவைகள் இல்லாத காரணத்தால், பெண்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது அல்லது மருத்துவ உதவியைப் பெறுவதில் தாமதம் செய்கின்றனர். இதன் விளைவாக, நோய் பெரும்பாலும் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகிறது. இது சிகிச்சையை சிக்கலாக்குவதோடு, நோயாளிகளின் குணமடையும் வாய்ப்பையும் குறைக்கிறது.
இந்தப் பிரச்சினைக்கான ஒரு நடைமுறைத் தீர்வு தற்போது நம் கைகளுக்குள் உள்ளது. சிட்னி ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தானம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிலைநிறுத்தப்படவுள்ள ஒரு நடமாடும் மார்பகப் பரிசோதனை அலகை (Mobile Breast Scanning Unit) கொள்வனவு செய்வதற்காக சுமார் அமெரிக்க டாலர் 500,000 நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
நவீன மருத்துவப் படப்பிடிப்பு (Imaging) தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இந்த அலகு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களுக்கு வழக்கமாகச் சென்று, தற்போது பரிசோதனை வசதிகளைப் பெற முடியாத அல்லது மிகவும் குறைந்த அணுகல் வாய்ப்புள்ள பெண்களுக்கு நேரடியாக சேவையை வழங்கும்.

No comments:
Post a Comment