குடிசையும் கோட்டையும் இரண்டும் ஒரே பூமியின் மேல் கட்டப்படுகின்றன. அதுபோலவே, எல்லா மதங்களும், சமயங்களும், ஆன்மிக ஒழுக்க முறைகளும் வேதத்தை அடித்தளமாகக் கொண்டுள்ளன. இந்தியப் பண்பாட்டின் தனிச்சிறப்பு என்னவெனில், இங்கு உடை மற்றும் நடத்தை, மொழி மற்றும் இலக்கியம், வாழ்க்கை முறை, உயரிய இலட்சியங்கள் மற்றும் சமூக அமைப்புகள் அனைத்தும் மனிதனின் ஆன்மிக முன்னேற்றத்தை நோக்கியவையாக அமைந்துள்ளன. அவை உடலைவிட ஆன்மாவே உயர்ந்தது, ஸ்தூலத்தைவிட சூட்சுமமே சிறந்தது என்பதை வலியுறுத்துகின்றன. வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் அந்த உயரிய குறிக்கோளுக்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடலைப் போஷித்து, நோயின்றி பாதுகாக்க வேண்டும். ஏன்? அது ஆன்மிக சாதனைக்கு ஏற்ற கருவியாக இருக்க வேண்டும் என்பதற்காக. ஆன்மிக சாதனை எதற்காக? தன்னுடைய உண்மையான இயல்பை உணர்வதற்காக. ஸ்தூலத்தின் அடிப்படை சூட்சுமம்; மனிதனின் அடிப்படை தெய்வீகம். இந்தியப் பண்பாடு, வெளிப்படையாகத் தோன்றும் உருவங்களை அல்ல, அவற்றின் அடித்தளமான உண்மையை நோக்கிப் பார்ப்பதற்கே மனிதனை வழிநடத்துகிறது. நீண்ட காலமாக, இந்தக் கண்ணோட்டம் ஒவ்வொரு இந்தியருக்கும் இயல்பான வாழ்க்கை நோக்கமாக இருந்தது. அது அவர்களின் இரத்தத்தோடு கலந்திருந்தது என்று கூறலாம். தாயின் மடியில் இருந்து, வயலில் உழைக்கும் தந்தையிடமிருந்து, பள்ளியில் ஆசிரியரிடமிருந்து, அண்டை அயலார், நண்பர்கள், உறவினர்கள், முதியோர்கள், இளையோர்கள் என சுற்றியிருந்த அனைவரிடமிருந்தும், அவர்கள் செய்த செயல்கள், எழுதியவை, பேசியவை அனைத்திலிருந்தும் இந்த உயரிய பண்பாடு இயல்பாகவே அவர்களுள் ஊறிப்போனது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment