உலகச் செய்திகள்

வெனிசுவேலா சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கத்தில் 164 பேர் பலி, 971 பேர் காயம்!

அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தம்: வளைகுடா நாடுகளின் ஆதரவைத் திரட்ட பஹ்ரைனில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ பேச்சுவார்த்தை!

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் பதவி விலகல்

ஜப்பானில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்: டோக்கியோ 5.8 ரிச்டர் அளவில் பதிவு!



வெனிசுவேலா சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கத்தில் 164 பேர் பலி, 971 பேர் காயம்!

25 Jun, 2026 | 06:38 PM

தென்அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் புதன்கிழமை (24) இரவு ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளதோடு, 971க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் வியாழக்கிழமை (25) அறிவித்துள்ளார்.  

முன்னதாக பலி எண்ணிக்கை 32 ஆகக் காணப்பட்ட நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளது.  

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, முதல் நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.2 ஆகவும், அடுத்த ஒரு நிமிடத்திற்குள் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.5 ஆகவும் பதிவாகியுள்ளது.

தலைநகர் கராகாஸிலிருந்து மேற்கே சுமார் 170 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மொரோன் என்ற கரையோரப் பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.  நன்றி வீரகேசரி 




அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தம்: வளைகுடா நாடுகளின் ஆதரவைத் திரட்ட பஹ்ரைனில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ பேச்சுவார்த்தை!

Published By: Digital Desk 3

25 Jun, 2026 | 04:00 PM

அமெரிக்க வெளிவிவகார  அமைச்சர் மார்கோ ரூபியோ, ட்ரம்ப் நிர்வாகத்தின் பூர்வாங்க அமெரிக்க-ஈரான் அமைதி உடன்படிக்கையை வளைகுடா அரபு நாடுகளுக்கு விளக்கி அவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக, தனது மத்திய கிழக்கு பயணத்தின் இறுதி கட்டமாக இன்று வியாழக்கிழமை பஹ்ரைன் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கப்பற்படைத் தலைமையகம் அமைந்துள்ள பஹ்ரைனின் தலைநகர் மனாமாவிற்கு புதன்கிழமை இரவு சென்றடைந்த மார்கோ ரூபியோ, அங்கு பஹ்ரைன் அதிகாரிகளைச் சந்திப்பதோடு மட்டுமன்றி, வளைகுடா ஒத்துழைப்பு சபையின்  வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சவூதி அரேபியா, கட்டார், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய ஆறு சுன்னி முடியாட்சி நாடுகளை உள்ளடக்கியதே இந்த வளைகுடா ஒத்துழைப்பு சபையாகும்.  அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக கடந்த வாரம் எட்டப்பட்ட உடன்படிக்கைக்குப் பின்னர், எண்ணெய் வளம் மிக்க வளைகுடா பிராந்தியத்திற்கு அமெரிக்கா மேற்கொண்டுள்ள முதலாவது உயர்மட்ட தூதரகப் பயணம் இதுவாகும்.

ஈரானுக்கு அளவுக்கு அதிகமான சலுகைகளை வழங்குவது, பிராந்தியத்தின் பாதுகாப்பு சமநிலையைக் குலைப்பதோடு, உலகளாவிய எண்ணெய் விநியோகக் கட்டமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தி, ஈரானை மேலும் பலப்படுத்தக்கூடும் என வளைகுடா நாடுகள் அச்சம் கொண்டுள்ளன. 

இந்த நிலையில், தனது இந்த இராஜதந்திரப் பயணம் மிகவும் சவாலானது என்பதை மார்கோ ரூபியோ ஒப்புக்கொண்டுள்ளார்.  இதற்கு முன்னதாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்குச் சென்றிருந்த ரூபியோ, இந்த முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் ஈரானுக்கு சாதகமாக அமையாது என அங்கிருந்த அதிகாரிகளுக்கு உறுதியளித்துள்ளார்.

மார்கோ ரூபியோவின் அறிக்கை: "இந்த ஒப்பந்தத்தின் எந்தவொரு பகுதியும் இப்பிராந்தியத்தில் உள்ள எங்களது நீண்டகால கூட்டாளிகளின் பாதுகாப்பையோ, ஸ்திரத்தன்மையையோ அல்லது பொருளாதார வளர்ச்சியையோ எந்த வகையிலும் பாதிக்காது. வளைகுடா நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே எனது இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்" என குவைத்திலும் பஹ்ரைனிலும் ஊடகவியலாளர்களிடம் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.   நன்றி வீரகேசரி 





பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் பதவி விலகல்

Published By: Digital Desk 1

22 Jun, 2026 | 03:16 PM

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இன்று (22) திங்கட்கிழமை தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

ஏதிர்வரும் செப்டம்பர் மாதம் பாராளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்குள் புதிய தலைவர் ஒருவர் தெரிவுசெய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் பிரித்தானியா காணப்போகும் 7 ஆவது பிரதமர் இவராவார்.

பிரித்தானிய அரசியலில் நிலவிய அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக உறுதியளித்து, பாரிய தேர்தல் வெற்றியொன்றைப் பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையாத நிலையில், தனது கட்சித் தரப்பினர் தான் பதவியிலிருந்து விலக வேண்டும் என விரும்புவது தெளிவாகத் தெரிவதாக ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த பிரதமருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 09ஆம் திகதி ஆரம்பமாகும் என அவர் தெரிவித்துள்ள போதிலும், அவரது அரசியல் போட்டியாளரான ஆண்டி பர்ன்ஹாம் முன்னணியில் உள்ளார்.

இது குறித்து லண்டன் டவுனிங் வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக கருத்து வெளியிட்ட பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர்,

அடுத்த பொதுத் தேர்தலில் கட்சியை வழிநடத்த நான் தகுதியானவனா என்ற கேள்வியை எனது கட்சி எழுப்பியுள்ளது. பாராளுமன்றக் கட்சியின் அந்தப் பதிலைக் கேட்டுக்கொண்ட நான், அதனை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

மேலும், புதிய தலைவரிடம் அதிகாரத்தை ஒழுங்கான முறையில் ஒப்படைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தான் முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 





ஜப்பானில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்: டோக்கியோ 5.8 ரிச்டர் அளவில் பதிவு!

Published By: Digital Desk 1

26 Jun, 2026 | 11:28 AM

ஜப்பானின் டோக்கியோ நகருக்கு அருகில் அமைந்துள்ள சிபா மாகாணத்தில் 5.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த நாட்டு வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இதுவரை எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் ஒரு மணித்தியாலத்திற்கும் குறைவான காலப்பகுதிக்குள் பதிவான இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், டோக்கியோவிற்கு அருகில் அமைந்துள்ள தெற்கு இபராக்கி மாகாணத்தில் 4.1 ரிச்டர் அளவு நிலநடுக்கமொன்று அந்நாட்டு நேரப்படி இன்று காலை 11.49க்கு பதிவாகியிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.    நன்றி வீரகேசரி 



No comments: