சரஸ்வதி சபதம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 உலகில் சிறப்போடு வாழ கல்வியா, செல்வமா, வீரமா அவசியம்


என்ற சர்ச்சை இன்றும் நிலவி வருகிறது. இந்த சர்ச்சை தேவ லோகத்தில் மூன்று தேவியர்களுக்கு மத்திலும் எழுந்ததால் , அல்லது எழுந்தால் விடை என்னவாக அமையும் என்பதை விளக்கும் பொருட்டு அறுபது வருடங்களுக்கு முன் தயாரான படம் சரஸ்வதி சபதம். 



திருவிளையாடல் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஏ. பி. நாகராஜன் பிரம்மாண்டமாக இந்த புராணப் படத்தை உருவாக்கினார். ஏராளமான நடிகர்கள், காட்சி ஜோடனைகள், ஆடை அணிகலன்கள் என்று கலரில் படம் தயாரானது. சமூகப் படங்கள் வரவேற்பை பெற்று வந்த சமயத்தில் புராணப் படத்தை பெரும் செலவில் படமாக்கினார் ஏபி . என். 


தேவலோகத்தில் சஞ்சரிக்கும் நாரதர் கல்விக்குரிய கடவுள்

சரஸ்வதியிடம் , செல்வம் தான் உலகில் பெரியது என்றும், செல்வத்துக்குரிய கடவுள் லஷ்மியிடம் கல்விதான் பெரியது என்றும், வீரத்துக்குரிய துர்க்கையிடம் கல்விதான் பெரியதென்றும் கூறி கலகத்தை மூட்டி விடுகிறார். இதன் விளைவாக மூன்று தேவியர்களும் பூலோகம் சென்று தங்கள் சக்திதான் பெரியது என்று நிரூபிக்க கங்கணம் கட்டிக் கொள்கிறார்கள். வாய் பேச முடியாத ஊமையை பெரும் அறிஞனாக ,கவிஞனாகவும் , பிச்சைக்காரியை நாட்டின் அரசியாகவும், தொடை நடுங்கி கோழையை மாபெரும் வீரனாகவும் மாற்றி விடுகிறார்கள். அதனைத் தொடர்ந்து யார் சிறந்தவர் என்ற பலப் பரீட்சை கவிஞன், அரசி, வீரன் மூவரிடமும் தோன்றுகிறது. முடிவில் யார் ஜெயித்தார்கள் என்பதே படத்தின் முடிச்சு. 


புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்களை எடுத்து அவற்றை சுவாரஸ்யமான முறையில் கோர்த்து கதையாக்கி படமாக்குவது என்பது ஒரு வித்தை. அந்த வித்தையில் கரை கண்ட ஏபி என் படத்துக்கு கதை வசனம் எழுதி இயக்கி இருந்தார். மூன்றிலும் அவரின் திறமை பளிச்சிட்டது. நாடகத் துறையில் இருந்து வந்தவர் என்பதால் ரசிகர்களின் ரசனையை நன்கு அறிந்து காட்சிக்கு காட்சி வசனங்களையும் , காட்சி அமைப்பிலும் முத்திரை பதித்திருந்தார் அவர். 

படத்தின் கதை முப்பெரும் தேவிகளை அடிப்படையாக வைத்து அமைந்திருந்தாலும் அவர்களையே திணறடிப்பவராக வருகிறார் நாரதர். வழமையாக நாரதர் என்றால் நகைச்சுவை நடிகரே அந்த வேடத்தில் நடிப்பார். ஆனால் இதில் நாரதராக வந்து குழப்பம் செய்பவர் சிவாஜி. அபூர்வமாக கிடைத்த இந்த பாத்திரத்தை ரசித்து செய்திருந்தார் அவர். மூன்று தேவிகளும் அவரிடம் தடுமாறுவதும், அவர்களிடம் இவர் தடுமாறுவதும் நல்ல தமாஷ். அப்படி நடிப்பவர் படத்தின் பிற் பகுதியில் வித்தியாபதியாக வந்து தன் பார்வை, குரல், நடை எல்லாவற்றாலும் அசத்துகிறார். 

படத்தின் தொடக்கத்தில் சரஸ்வதியாக வரும் சாவித்திரி கோமாதா

எந்தன் குலமாதா பாடலை வீணை மீட்டி பாடி கவருகிறார். பாடல் பதிவின் போது தான் விட்ட சிறு தவறை படத்தில் தன்னுடைய நடிப்பின் மூலம் மறைத்து விட்டார் சாவித்திரி ,அவர் உண்மையிலேயே நடிகையர் திலகம் தான் என்று பாராட்டியிருந்தார் சுசிலா. 

பத்மினி நடனத்தோடு கவர , தேவிகா முக பாவங்களில் கவர்கிறார். நாகேஷ், மனோரமா நகைச்சுவை கலகலப்பு . 


பிச்சைக்காரியாக வந்து அரசியாகி தனது ஒய்யாரத்தாலும் அலங்காரத்தாலும் வசீகரிக்கிறார் கே. ஆர் . விஜயா. தாய் தந்த பிச்சையில் பிறந்தேன் அம்மா பாடலில் அவர் தோற்றம், நடிப்பு உருக்கமாய் இருந்தது. 

கோழையாக வந்து வீரனாகி இந்தக் காலத்து தளபதிகளுக்கு முன் உதாரணமாக திகழ்கிறார் ஜெமினி . படத்தில் சாந்தமாக வருபவர் சிவகுமார் தான் . 

ஏபி என் படம் என்றால் அவர் படங்களில் தொடர்ந்து நடிக்கும் கே. சாரங்கபாணி , ஜி . சகுந்தலா, செந்தாமரை , டி . என். சிவதாணு , பி.டி. சம்பந்தம் , சிவசூரியன் வி . நாகையா, ஈ . ஆர். சகாதேவன், உசிலைமணி, என்னத்தே கன்னையா, ஆகியோரும் நடித்தனர். இவர்களுடன் ஆசாத் பயில்வானும் ஜெமினியுடன் படத்தில் மோதுகிறார். 

படத்தில் கங்கா அமைத்த அரங்க அமைப்பு சூப்பர். கே. எஸ் பிரசாத்

கமரா வண்ணமயமாக காட்சிகளை வழங்கியது. படத்தில் எபி என் ஒரு பக்கம் தன் உழைப்பை கொட்ட , மறுபுறம் கே . வி. மகாதேவன், கண்ணதாசன், சௌந்தரராஜன், சுசிலா கூட்டணி ஏபி என்னுக்கு சவால் விடுவது போல் இசை அமுது படைத்திருந்தார்கள் . கல்வியா செல்வமா வீரமா, ராணி மகாராணி ராஜ்யத்தின் ராணி, தெய்வம் இருப்பது எங்கே , உருவத்தை காட்டிடும் கண்ணாடி பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் , ராகம் . 

ரசிகர்கள் சமூகப் படங்களில் தங்கள் கவனத்தை செலுத்த தொடங்கிய காலத்தில் அவர்களை புராணப் படங்கள் பக்கமும் ஈர்ப்பேன் என்று ஏபி என் போட்ட சபதம் சரஸ்வதி சபதம் ! 
 


No comments: