இலங்கைச் செய்திகள்

ஹெய்ட்டியில் குற்றக்குழு ஒழிப்புப் படையில் இணையும் இலங்கை பாதுகாப்பு படையினர்!

ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி விகாரமகாதேவி பூங்காவில் தொடரும் தேரர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஷ மனுத் தாக்கல்

வடக்கு கிழக்கில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2 இலட்சம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான பரிந்துரை; சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி

சிறைச்சாலைகளுக்குள் தேரர்கள் அணியும் ஆடை தொடர்பில் புதிய சுற்றறிக்கை இவ்வாரத்துக்குள் வெளியாகும் 



ஹெய்ட்டியில் குற்றக்குழு ஒழிப்புப் படையில் இணையும் இலங்கை பாதுகாப்பு படையினர்! 

17 Oct, 2026 | 10:32 AM

ஹெய்ட்டியில் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றக்குழு ஒழிப்புப் படை அமைதிப்பணிப் நடவடிக்கைகளில் இணைவதற்காக, இந்த வாரம் 498 மேலதிக இலங்கை பாதுகாப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 173 சிப்பாய்கள் மற்றும் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த  45 உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 218 பேரைக் கொண்ட குழுவொன்று நேற்று வெள்ளிக்கிழமை (16) நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

இதற்கு முன்னர், 21 அதிகாரிகள் மற்றும் 259 சிப்பாய்கள் உள்ளடங்கலாக 280 இராணுவப் படையினர் அடங்கிய மற்றுமொரு குழு அக்டோபர் 14 ஆம் திகதி ஹெய்ட்டி நோக்கிப் புறப்பட்டதைத் தொடர்ந்து இந்த புதிய Deployment மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு புதிதாகக் களமிறக்கப்பட்டுள்ள படையினர், ஏற்கனவே ஹெய்ட்டியில் சேவையாற்றி வரும் இலங்கைக் குழுவினருடன் இணைந்து கொள்ளவுள்ளனர்.

அங்கு கவச வாகன ரோந்துப் பணிகள் மற்றும் முக்கிய விநியோகப் பாதைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் நாட்டில் துருப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

இதேவேளை, அதே அமைதிப்பணிப் நடவடிக்கையில் இணைவதற்காக இலங்கை ஊடாகப் பயணித்த 50 உறுப்பினர்களைக் கொண்ட வங்காளதேசப் படையினருக்கு இலங்கை இராணுவம் தேவையான தங்குமிடம், உணவு, போக்குவரத்து மற்றும் பிற அத்தியாவசிய வசதிகளை வழங்கி ஆதரவளித்துள்ளது.

அக்டோபர் 15 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த வங்காளதேசப் படையினருக்கு, நல்எண்ணம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் அடையாளமாக இந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெய்ட்டியில் நிலவும் குற்றக்குழுக்களின் வன்முறைகள் மற்றும் அஸ்திரத்தன்மையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் சர்வதேச பாதுகாப்பு நடவடிக்கைகளில் இலங்கை தொடர்ந்து வழங்கி வரும் பங்களிப்பின் ஒரு அங்கமாகவே இப் படைப் பிரிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி   






ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி விகாரமகாதேவி பூங்காவில் தொடரும் தேரர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் 

Published By: Digital Desk 2

17 Oct, 2026 | 10:12 AM

பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட தேரர்கள் குழுவினர் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று (17) சனிக்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்கள் விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

சிறையில் உள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும், கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி மகா சங்கத்தினரின் தலைமையில் காவி உடைக்கு நீதி - சுதந்திர நடைபவணி கடந்த 10 ஆம் திகதி கண்டி தலதா மாளிகை வளாகத்தில் ஆரம்பமாகி 16 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 






வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஷ மனுத் தாக்கல் 

Published By: Vishnu

17 Oct, 2026 | 03:42 AM

(எம்.எப்.எம்.பஸீர், செ.சுபதர்ஷனி)

தனக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இதய அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, பெறப்பட வேண்டிய மேலதிக மற்றும் தொடர் மருத்துவ சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் செல்ல வேண்டியுள்ளமையால்,  அதனை கருத்தில் கொண்டு  வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு  குறித்த  நகர்த்தல் பத்திரம் ஊடாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்குத் தவறியமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு அமைவாக,  4 மாதங்களுக்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மனு  மீதான  பரிசீலனை  எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.   நன்றி வீரகேசரி 





வடக்கு கிழக்கில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2 இலட்சம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான பரிந்துரை; சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி 

Published By: Vishnu

17 Oct, 2026 | 03:28 AM

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2 இலட்சம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான பரிந்துரைகள் விரைவில் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாடுகள் காரணமாகக் காணப்படும் பிரச்சினைகள், அபிவிருத்திப் பணிகளில் நிலவும் தடைகள் மற்றும் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், சுற்றுச்சூழல் அமைச்சர் , பிரதி அமைச்சர் அன்ரன் ஜெயக்கொடி ஆகியோரின் பங்கேற்புடன் ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (16) நடைபெற்றது.

இந்த அரசாங்கம் அபிவிருத்திக்கு எதிரானது அல்ல எனினும், ஒவ்வொரு திட்டத்துக்கும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் . திட்டங்களைத் தயாரிக்கும் ஆரம்பக் கட்டத்திலேயே வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் தொடர்பு காணப்படுமாயின், அவற்றின் அனுமதிகளைக் கோர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் எதிர்காலத்தில் இத்தகைய பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் வனவளத் திணைக்களத்துக்கு அறிவித்தல் வழங்குதல், சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இணைந்து கண்காணித்தல் மற்றும் அவசரப் பராமரிப்புப் பணிகளை விரைவாக ஒருங்கிணைத்தல் ஆகியவற்றுக்கான பொறிமுறைகளை உருவாக்க அமைச்சர் ஆலோசனை வழங்கினார். இதற்காக சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வட்ஸ்அப் குழுவொன்றை உருவாக்கவும் பரிந்துரைத்தார்.

நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள குளங்களின் எல்லைகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியுடன் சம்பந்தப்பட்ட திணைக்களங்களை உள்ளடக்கிய குழுவொன்றை அமைக்கவும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார் மேலும் 2012ஆம் ஆண்டு புவியிடங்காட்டித் தொழில்நுட்பத்தைப் (ஜி.பி.எஸ்.) பயன்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெருமளவிலான காணிகள் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகக் குறிப்பிட்டார். அவற்றில் மருத்துவமனைகள், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் மற்றும் தனியார் காணிகளும் உள்ளடங்கியுள்ளதாகத் தெரிவித்ததுடன்

இக்காணிகளை அடையாளம் கண்டு விடுவிப்பதற்காக 2025ஆம் ஆண்டு அமைச்சரவையின் அனுமதியுடன் குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும், அந்தக் குழுவுக்கு ஆறு மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டபோதும், ஓராண்டு கடந்தும் இறுதி அறிக்கை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். சில அதிகாரிகளிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் செயன்முறையை முழுமைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எனினும், ஆய்வுகள் நிறைவடைந்து விடுவிப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்ட காணிகளைக்கூட இதுவரை விடுவிக்க முடியாத நிலை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து சுமார் 2 இலட்சம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான பரிந்துரைகளை விரைவில் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்து, அதன் ஒப்புதலுடன் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.   நன்றி வீரகேசரி 






சிறைச்சாலைகளுக்குள் தேரர்கள் அணியும் ஆடை தொடர்பில் புதிய சுற்றறிக்கை இவ்வாரத்துக்குள் வெளியாகும் 

16 Oct, 2026 | 05:24 PM

(இராஜதுரை ஹஷான்)

பௌத்த பிக்குகள் சிறைச்சாலைக்குள் அணியும் ஆடை குறித்து பௌத்த விவகார திணைக்களம் மற்றும் சங்க சபையுடன் கலந்துரையாடி முரண்பாடற்ற தீர்மானம் எடுக்கப்படும். புதிய விதிமுறைகளுடனான சுற்றறிக்கை இவ்வாரத்துக்குள் வெளியிடப்படும் என சிறைச்சாலை பதில் ஆணையாளர் நாயகம் ஏ.எஸ்.கஜநாயக்க குறிப்பிட்டார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை இன்று வெள்ளிக்கிழமை (16) சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பௌத்த பிக்குகள் ஏதேனும் குற்றத்துக்காக  சிறைச்சாலையில் அடைக்கப்படும் போது பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்  குறித்து, சுற்றறிக்கையில் மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.அது தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளோம்.

தற்போதும் சிறைச்சாலைகளில் பிக்குகளுக்கு எனத் தனியான பிரிவுகள் உள்ளன. அதற்கு மேலதிகமாக ஏனைய வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சு மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

புதிய விதிமுறைகளின்படி, பிக்குகள்  மற்றும் ஏனைய மதத் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்ட பின்னர், சிறைச்சாலைக்கு வெளியில் அழைத்துச் செல்லப்படும் போது,அவர்களைத் அவர்களின் காவியுடையுடன்  அல்லது அந்தந்த மதத் தலைவர்களுக்குரிய உத்தியோகபூர்வ ஆடையுடனும் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல், சிறைச்சாலைக்குள் இருக்கும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் மகா சங்கத்தினரிடம் ஆலோசித்தோம். அவர்கள் அதுகுறித்தும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு எமக்கு அறிவித்தனர். அத்துடன்,இவ்வாறான சந்தர்ப்பங்களில், பிக்குகள் சார்ந்த சங்க சபைக்கும், பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்திற்கும் அறிவுறுத்தி அவர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக  செயற்படுவோம்.

சிறைச்சாலைகளில் சாதாரன குற்றங்களுக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை வீட்டுக் காவலில் வைப்பதற்கு  புதிய நடைமுறை ஒன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது. போதைப்பொருள் மட்டுமன்றி, ஏனைய குற்றங்களுடன் தொடர்புடையவர்களைச் சிறையிலடைப்பதற்கு முன்னர், அவர்களை வீடுகளிலேயே தடுத்து வைத்து எம்மால் கண்காணிப்பதற்கான ஒரு நடைமுறையை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

புதிய சிறைச்சாலைகளை நிர்மாணிக்க மாட்டோம், சிறைச்சாலைகளை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யவே நடவடிக்கை எடுக்கப்படும்.குறிப்பாக, அதிக நெருக்கடிமிக்க சிறைச்சாலைகளை வேறு இடங்களுக்கு மாற்றி, சர்வதேச மட்டத்திலான வசதிகளை வழங்கக்கூடிய சிறைச்சாலைகளாகச் செயற்படுத்தத் தயாராக உள்ளோம் என்றார்.   நன்றி வீரகேசரி 







No comments: