உலகச் செய்திகள்

ஏமனின் ஏடன் விமான நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்: பதற்றம் அதிகரிப்பு

ஜேர்மனி விமான நிலையத்தில் 90க்கும் மேற்பட்ட விஷப்பாம்புகள், பல்லிகளுடன் சென்ற நபர் தடுத்து நிறுத்தம்

கடலுக்கடியில் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா ; அமெரிக்க, தென்கொரிய நாடுகளிடையே பதற்றம்

அமெரிக்காவில் இந்து வழிபாட்டுத் தலத்தில் தாக்குதல் நடத்தத் திட்டம்: 19 வயது இளைஞர் கைது

ராமலீலா விழாவில் கரப்பான்பூச்சி உருவ பொம்மையை எரிக்க தீர்மானம் - பின்னணி என்ன?  



ஏமனின் ஏடன் விமான நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்: பதற்றம் அதிகரிப்பு

17 Oct, 2026 | 12:36 PM

ஏமனின் துறைமுக நகரமான ஏடனில் அமைந்துள்ள விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு இரண்டு ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தரப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஈரானின் ஆதரவைப் பெறும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இருப்பதாக ஏமன் பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஒரு வாரத்திற்குள் ஏடன் விமான நிலையம் மீது நடத்தப்பட்டுள்ள இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

ஈரானுடன் தொடர்புடைய பிராந்திய மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அண்டை நாடான சவுதி அரேபியாவையும், சவுதியின் ஆதரவைப் பெறும் ஏமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கத்தையும் இலக்காகக் கொண்டு தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஏடன் விமான நிலையத்தின் ஒரு பகுதியில், சவுதி ஆதரவு அரசாங்கத்துடன் தொடர்புடைய இராணுவப் பிரிவு ஒன்று நிலைகொண்டிருந்ததாக பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் ஒருவரும் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியே ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்கானதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிப்பதற்கான அனுமதி இல்லாத காரணத்தால், குறித்த அதிகாரிகள் தங்களது பெயர்களை வெளியிட விரும்பவில்லை.

எனினும், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் அல்லது தரப்பும் பொறுப்பேற்கவில்லை.

ஏடன் நகரிலுள்ள அரண்மனை வளாகம் ஒன்றின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாகக் கூறப்படும் கொடிய தாக்குதலுக்கு அடுத்த நாளே விமான நிலையம் மீதான இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

2015ஆம் ஆண்டு முதல், ஏமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கம் ஏடன் நகரத்தைத் தனது நிர்வாக மையமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது.    நன்றி வீரகேசரி   









ஜேர்மனி விமான நிலையத்தில் 90க்கும் மேற்பட்ட விஷப்பாம்புகள், பல்லிகளுடன் சென்ற நபர் தடுத்து நிறுத்தம்

16 Oct, 2026 | 01:00 PM

ஜேர்மனியின் கொலோன் – பொன் விமான நிலையத்தில், மெக்சிகோவிலிருந்து சென்ற 45 வயதுடைய நபர் ஒருவர் தனது பயணப் பொதியில் 90க்கும் மேற்பட்ட விஷப்பாம்புகள் மற்றும் பல்லிகளைச் சட்டவிரோதமாகக் கடத்த முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

ஜேர்மன் விமான நிலையத்தில் ‘கிரீன் சேனல்’ வழியாகச் செல்ல முயன்றபோது, மிகவும் பதற்றத்துடன் காணப்பட்ட குறித்த நபரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். அவர் மெக்சிகோவைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில், கொக்கைன் பயன்படுத்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து, அவரது பயணப் பொதியைச் சோதனையிட்டபோது போதைப்பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

எனினும், சம்போ மற்றும் கிரீம் போத்தல்கள், பிளாஸ்டிக் கொள்கலன்கள் மற்றும் காலுறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 37 விஷப்பாம்புகள் மற்றும் 55 பல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பாம்புகள், ராட்டில்ஸ்னேக்குகள் மற்றும் இகுவானாக்கள் உட்பட ஊர்வனவும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ நகரிலிருந்து இஸ்தான்புல் வழியாகக் கொண்டுவரப்பட்ட இந்த விலங்குகள், போதிய காற்றோட்டமின்றி மிகவும் சீரற்ற நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததால், அவற்றில் சில உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிருடன் மீட்கப்பட்ட விலங்குகள் மத்திய ஜேர்மனியில் உள்ள பாம்புப் பண்ணை ஒன்றில் பராமரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 









கடலுக்கடியில் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா ; அமெரிக்க, தென்கொரிய நாடுகளிடையே பதற்றம் 


16 Oct, 2026 | 12:48 PM

வடகொரியா, கடலுக்கு அடியில் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணைகள் இரண்டினை ஏவி சோதனை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கடந்த புதன்கிழமை (14) ஜப்பான் கடலில், “ஹெரோ கிம் குன் ஒக் ” (Hero Kim Kun Ok) என்ற அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. 

அமெரிக்கா மற்றும் தென்கொரிய நாடுகளை இலக்குவைத்து வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் அன் பணிப்புரையின் கீழ் பல்வேறு இராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மோதல் நிலைமையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பேச்சுவார்த்தை முயற்சிகளையும் வடகொரிய ஜனாதிபதி நிராகரித்திருந்தார். 

இந்நிலையிலேயே வடகொரியா நீர்மூழ்கிக் கப்பலின் ஊடாக ஏவுகணை சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. 

இந்த ஏவுகணை சோதனையானது தரை வழியாக மட்டுமன்றி, கடல்வழியாகவும் எப்போது வேண்டுமானாலும் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என வடகொரியா பிற நாடுகளுக்கு செய்தி பகர்வதாக கருதப்படுகிறது. இதனால் அமெரிக்க, தென்கொரிய நாடுகளிடையே பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.    நன்றி வீரகேசரி 








அமெரிக்காவில் இந்து வழிபாட்டுத் தலத்தில் தாக்குதல் நடத்தத் திட்டம்: 19 வயது இளைஞர் கைது 


Published By: Digital Desk 1

15 Oct, 2026 | 10:41 AM

அமெரிக்காவின் சிக்காகோ பகுதியில் உள்ள இந்து வழிபாட்டுத் தலமொன்றைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் 19 வயது இளைஞர் ஒருவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) பொலிஸார் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் அங்கு இடம்பெறவிருந்ததாகக் கூறப்படும் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞர், இல்லினாய்ஸ் மாநிலத்தின் பலட்டை பகுதியைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரோஸ் பபோராகிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் உணவகம் ஒன்றில் காசாளராகப் பணியாற்றி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னதாக, தனது துப்பாக்கிச் சூடு திட்டம் தொடர்பான எட்டு பக்க ஆவணமொன்றையும் தந்திரோபாயப் போர் உபகரணங்களின் படங்களையும் சக ஊழியர் ஒருவருக்கு அவர் அனுப்பியுள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இளைஞரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது, வரிசை எண் இல்லாத AR ரகத் துப்பாக்கி, வெடிமருந்துகள், தோட்டாக்கள் நிரப்பப்பட்ட மெகசின்கள் மற்றும் எரிவாயுக் கலன் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று புதன்கிழமை (14) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பபோராகிஸுக்கு பிணை மறுக்கப்பட்டதுடன், விசாரணைக்கு முந்தைய பொலிஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   நன்றி வீரகேசரி 









ராமலீலா விழாவில் கரப்பான்பூச்சி உருவ பொம்மையை எரிக்க தீர்மானம் - பின்னணி என்ன?  

16 Oct, 2026 | 12:00 PM

இந்திய நாட்டின் டெல்லியின் பிதாம்பூரில் இந்த ஆண்டு தசரா பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ராமலீலா வைபவத்தில் இராவணன், கும்பகர்ணன், மேக்னா ஆகிய உருவ பொம்மைகளுடன் கரப்பான்பூச்சி உருவ பொம்மையையும் தீயிட்டு எரிப்பதற்கு விழா ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர். 

சுமார் 30 அடி உயரம் கொண்ட கரப்பான்பூச்சி உருவ பொம்மையை எரிக்கும் தீர்மானம் ஸ்ரீ கேசவ் ராமலீலா சமிதியால் எடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக விழா ஏற்பாட்டுக் குழு கூறுகையில், “கரப்பான்பூச்சி குப்பையையும் அசுத்தத்தையும் குறிக்கிறது. ஸ்வச் பாரத், ஸ்வச் டெல்லி பிரச்சாரங்களின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது. 

அதேவேளை, விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் பா.ஜ.க எம்.எல்.ஏவுமான அசோக் கோயல், கரப்பான்பூச்சி உருவ பொம்மையை தீயிட்டு எரிக்கும் முடிவு அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். அ

அவர் மேலும் கூறுகையில், 

தீமையின் மீது நன்மையின் வெற்றியை ஊக்குவிப்பதும் தூய்மையின் செய்தியை வலுப்படுத்துவதுமே இந்த பொம்மைகளை எரிப்பதன் நோக்கம். இராவணனின் படையில் உள்ள அசுரர்களின் வரிசையில் கரப்பான்பூச்சியின் உருவபொம்மை ஒன்றும் சேர்க்கப்படும்  என்றும் அவர் கூறியுள்ளார். 

எனினும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இந்தியாவில் பல பகுதிகளில் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்தே விழா ஏற்பாட்டுக் குழுவினர் கரப்பான்பூச்சி உருவ பொம்மையினை எரிக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளதென்றும் இதன் பின்னணியில் ஒரு அரசியல் பதிலடி இருப்பதாக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.    நன்றி வீரகேசரி 







No comments: