கிரீன்லாந்து பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்கா – டென்மார்க் இடையே புதிய ஒப்பந்தம்!
சவூதி அரேபியா - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் மோதல் - 5 பேர் உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் குடும்பத்தினருக்கு புதிய கட்டுப்பாடு
இந்திய போர்க்கப்பல் மீது மோதிய பாகிஸ்தான் கப்பல் - புதுடெல்லி கடும் எதிர்ப்பு
மக்காவை இலக்குவைத்ததற்காக ஹவுதி கிளர்ச்சியாளர்களை கண்டித்து சவூதி கொந்தளிப்பு ; “சிவப்பு எல்லைக்கோட்டினை” சுட்டிக்காட்டி கடும் எச்சரிக்கை
2027க்கான பிரிக்ஸ் தலைமையை ஏற்றது சீனா
கிரீன்லாந்து பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்கா – டென்மார்க் இடையே புதிய ஒப்பந்தம்!
Published By: M.Priyanka
19 Sep, 2026 | 09:08 AM
கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த அச்சுறுத்தல்களால் உருவான ராஜதந்திரப் முரண்பாட்டை தொடர்ந்து, கிரீன்லாந்தின் பாதுகாப்பு குறித்த ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவும் டென்மார்க்கும் அறிவித்துள்ளன.
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு "பாதுகாப்பு மற்றும் அனைத்துத் தேவைகள் மீதும் நிரந்தரக் கட்டுப்பாட்டை" வழங்கும் என்று டிரம்ப் கூறினார்.
டென்மார்க் பிரதமர் கூறுகையில், இந்த ஒப்பந்தம் ஆர்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.
இருப்பினும், டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்ட ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட விவரங்கள் குறித்து அவர் எதுவும் பேசவில்லை.
தேசிய பாதுகாப்பு காரணங்கள், அதன் மூலோபாய இருப்பிடம் மற்றும் கனிம வளங்களை மேற்கோள் காட்டி கிரீன்லாந்தைக் "கைப்பற்றுவேன்" என்று டிரம்ப் பல மாதங்களாக அச்சுறுத்தி வந்த நிலையில் இந்த ஒப்பந்தம் வந்துள்ளது.
டிரம்ப், 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் இட்ட பதிவில், இந்த ஒப்பந்தம் "அமெரிக்காவிற்கு எந்தச் செலவும் இல்லாமல்" எட்டப்பட்டுள்ளது என்றும், கிரீன்லாந்தின் பாதுகாப்பைப் "பாதுகாக்கவும் உறுதி செய்யவும் தேவையானவற்றைச் செய்ய" அமெரிக்காவிற்கு இது அதிகாரமளிக்கும் என்றும் கூறினார்.
மேலும், அமெரிக்காவின் எதிரி நாடுகள் எதுவும் கிரீன்லாந்தில் ராணுவ முன்னிலையைக் கொண்டிருக்கக் கூடாது அல்லது "எங்களது எழுத்துப்பூர்வ ஒப்புதல் இன்றி கிரீன்லாந்தில் உணர்வுபூர்வமான முதலீடுகளை செய்யக் கூடாது" என்ற விதி இதில் அடங்கும் என்றும் அவர் கூறினார்.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்பதை டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் (Mette Frederiksen) உறுதிப்படுத்தினார்.
இந்த ஒப்பந்தம் "ஆர்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பகுதியில் நமது பொதுவான பாதுகாப்பை வலுப்படுத்துகிறது" என்றும், அதே வேளையில் "டென்மார்க் பேரரசின் இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் கிரீன்லாந்து மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கிறது" என்றும் அவர் கூறினார். நன்றி வீரகேசரி
சவூதி அரேபியா - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் மோதல் - 5 பேர் உயிரிழப்பு
18 Sep, 2026 | 02:41 PM
சவூதி அரேபியா மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆகிய இரு தரப்புக்கும் இடையே மோதல் தீவிரமாகியுள்ளது. இந்த இருமுனைத் தாக்குதல்களில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (17) சவூதியின் தென்கிழக்கில் உள்ள தைப் நகர் மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததோடு 2 பேர் காயமடைந்துள்ளனர்.
அதேபோன்று, ஏமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தைஸ் நகரில் சவூதி அரேபியா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டுப் போர் நடவடிக்கையில் ஈடுபட்டதன் விளைவாக ஏமனில் பல பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுத உதவி முதலான பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், தற்போது சவூதி அரேபியாவிலும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு பதிலடியாக சவூதியும் ஹவுதிகள் மீது எதிர்த்தாக்குதல் நடத்துகிறது. இதன் காரணமாக மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. நன்றி வீரகேசரி
அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் குடும்பத்தினருக்கு புதிய கட்டுப்பாடு
Published By: P. Saranya
17 Sep, 2026 | 10:27 AM
அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களது வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளைத் தங்களுடன் அழைத்து வருவதைத் தடை செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், தற்காலிக வீசாக்களில் உள்ளவர்கள் பிற வீசாக்களுக்கு மாறுவதற்கான விதிமுறைகளையும் அரசாங்கம் கடுமையாக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆண்டுக்குச் சுமார் 3 இலட்சமாக உள்ள நிகர வெளிநாட்டுப் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை 2028 ஆம் ஆண்டிற்குள் 2 இலட்சத்து 25 ஆயிரமாகக் குறைக்க அவுஸ்திரேலிய உள்நாட்டு அமைச்சர் டோனி பர்க் திட்டமிட்டுள்ளார்.
தற்போது வெளிநாட்டு மாணவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் அவுஸ்திரேலியாவில் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய விதிமுறைகள் மூலம் இந்தச் சலுகைகள் நிறுத்தப்படவுள்ளன.
2023 இல் 518,000 ஆக உச்சத்திலிருந்த நிகரப் புலம்பெயர்வு, 2024 இல் 429,000 ஆகக் குறைந்து, 2025 ஜூன் 30 உடன் முடிந்த நிதியாண்டில் 306,000 ஆகப் பதிவாகியுள்ளது. இதில் பாதியளவினர் வெளிநாட்டு மாணவர்களாவர்.
வலதுசாரி சார்புடைய 'ஒன் நேஷன்' கட்சி, தற்காலிகப் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை 3 ஆண்டுகளில் 750,000 ஆகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு அதிகரித்த புலம்பெயர்வோரால் நாட்டின் வீடமைப்புத் துறை, உட்கட்டமைப்பு மற்றும் சமூக அமைப்பில் கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இன்றைய தினம் தேசிய ஊடக மையத்தில் உரையாற்றவுள்ள உள்நாட்டு அமைச்சர் டோனி பர்க், இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புகளை வெளியிடவுள்ளார். நன்றி வீரகேசரி
இந்திய போர்க்கப்பல் மீது மோதிய பாகிஸ்தான் கப்பல் - புதுடெல்லி கடும் எதிர்ப்பு
16 Sep, 2026 | 02:35 PM
சர்வதேச கடற்பரப்பில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல் மீது பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் மோதியதையடுத்து, புதுடெல்லி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடலில் பாகிஸ்தான் கடற்படைப் பிரிவுகளின் "ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறையற்ற செயற்பாடு" மோதலுக்கு வழிவகுத்ததாகச் சுட்டிக்காட்டி, இந்திய வெளியுறவு அமைச்சு, பாகிஸ்தான் தூதரகத்தின் இடைக்காலத் தூதரை நேரில் அழைத்து விளக்கம் கோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் சம்பவம் சர்வதேச கடற்பரப்பில் நடந்ததாகவும், இதில் பெரியளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று (15) மாலை வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையின் முதன்மைப் போர்க்கப்பல் ஒன்றுக்கு மிக அருகில், வடக்கு அரபிக் கடலில் பாகிஸ்தான் கப்பல் சென்றபோது கப்பல்கள் இரண்டும் மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் கப்பல் அதிக வேகத்தில் சென்றதும் பாதுகாப்பற்ற மற்றும் தொழில்முறையற்ற முறையில் இயக்கப்பட்டதுமே இந்த மோதலுக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றன.
மேலும், "இந்தச் சம்பவத்தில் எந்தச் சேதமும் ஏற்பட்டதாகப் பதிவாகவில்லை" என்றும் கூறப்பட்டது. பாகிஸ்தான் கடற்படைக் கப்பலின் இந்தச் செயல்பாடு, இராணுவப் பயிற்சிகள், இயக்கம் மற்றும் படை நகர்வுகள் குறித்த முன்னறிவிப்பு தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 1991ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரிவு 10ஐ நேரடியாக மீறும் வகையில் அமைந்துள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
"இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடப்பதைத் தடுக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புடைய ஒப்பந்தங்களின் விதிகளை அனைத்து இராணுவப் பிரிவுகளும் கவனமாகவும் மரியாதையுடனும் பின்பற்ற வேண்டும் என்ற அவசியத்தைப் சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு பாகிஸ்தான் இடைக்காலத் தூதருக்கு அறிவுறுத்தப்பட்டது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த அறிக்கைச் செய்தியைப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சுக்குத் தெரிவிக்குமாறும் பாகிஸ்தான் தூதருக்கு அறிவுறுத்தப்பட்டது. நன்றி வீரகேசரி
மக்காவை இலக்குவைத்ததற்காக ஹவுதி கிளர்ச்சியாளர்களை கண்டித்து சவூதி கொந்தளிப்பு ; “சிவப்பு எல்லைக்கோட்டினை” சுட்டிக்காட்டி கடும் எச்சரிக்கை
16 Sep, 2026 | 02:21 PM
(உருத்திரா)
இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்காவை இலக்குவைத்து தாக்குதல் நடத்த முயன்றதாக யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி அரேபியா இன்று புதன்கிழமை (16) குற்றம் சாட்டியுள்ளது.
இது உலக நாடுகளில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மக்கா நகரின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகள், ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்த முயன்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் மூலம் மக்காவில் தாக்குதல் நடத்த முயன்றும், மக்கா வான் எல்லைக்குள் நுழைவதற்குள் குறித்த ட்ரோனை சவூதி அரேபியா வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
அதனையடுத்து, புனிதத் தலங்களின் பாதுகாப்பு எல்லையானது ஒரு "சிவப்பு எல்லைக்கோடு" என்று எச்சரித்துள்ள சவூதி, ஹவுதியின் தாக்குதல் முயற்சிக்காக தாம் பழிவாங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் சவூதி அரேபியாவின் ஆதரவு பெற்ற யேமன் அரசுக்கும் இடையே மீண்டும் வெடித்துள்ள மோதலில் ரியாத் நகரம் இலக்குவைக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவிற்கு கடல்வழி முற்றுகையை அறிவித்துள்ள ஹவுதிகள், செங்கடலில் பயணிக்கும் அந்நாட்டின் கப்பல்களை இலக்கு வைத்து வருகின்றனர்.
கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலின் மூலம் யேமனின் செங்கடல் கடலோரப் பகுதி முழுவதையும் மற்றும் பாப் அல்-மந்தப் (Bab al-Mandab) நீரிணையையும் ஹவுதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர் நிலைமை காரணமாக ஹோர்முஸ் நீரிணை கடல்வழிப் பாதை முடக்கப்பட்டுள்ள நிலையில், சவூதியின் எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்த பாப் அல்-மந்தப் பகுதி மிக முக்கியமான பாதையாகும்.
ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான யாத்திரீகர்களை ஈர்க்கும் சவூதியின் புனித நகரமான மக்காவை நோக்கி வந்த கிளர்ச்சியாளர்களின் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக ரியாத் வெளியிட்ட அறிக்கையை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உடனடியாக மறுத்தனர்.
"மக்காவை இலக்குவைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஒரு பழமையான பொய். இது இனி யாரையும் ஏமாற்றாது" என்று ஹவுதிகளின் அரசியல் குழுவைச் சேர்ந்த ஹஸெம் அல்-அசாத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
புனிதத் தலங்களின் பாதுகாப்பு ஒரு "சிவப்புக் கோடு" (தாண்டக்கூடாத எல்லை) என்று எச்சரித்துள்ள சவூதி, இதற்காகப் பழிவாங்கப்போவதாக உறுதியளித்துள்ளது.
57 முஸ்லிம் நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC), இந்த "கொாடூரமான" தாக்குதல் முயற்சியைக் கண்டித்துள்ளது.
மக்கா மற்றும் யேமன் எல்லையை ஒட்டியுள்ள சவூதியின் தெற்குப் பகுதிகளில் சாத்தியமான தாக்குதல்கள் குறித்து சவூதி அரேபியா நேற்று செவ்வாய்க்கிழமை (15) எச்சரிக்கை விடுத்திருந்தது.
கடந்த பெப்ரவரியில் மேற்காசியாவில் போர் வெடித்த பிறகு மக்காவில் விடுக்கப்பட்ட முதல் எச்சரிக்கை இதுவாகும்.
யேமனில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் சவூதியின் தெற்குப் பகுதியில் 13 பேர் காயமடைந்த அடுத்த நாளே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
யேமனின் பெரும்பகுதி வடக்கு நிலப்பரப்பை பல ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தி வரும் ஹவுதிகள், ஜூலை மாதம் யேமன் அரசுப் படைகளுக்கு எதிராகப் பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்கியபோது சண்டை மீண்டும் தீவிரமடைந்தது.
அரேபிய தீபகற்பத்தின் ஏழ்மையான நாடான யேமனில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் காரணமாக, செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து இதுவரை 82,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
2027க்கான பிரிக்ஸ் தலைமையை ஏற்றது சீனா
14 Sep, 2026 | 12:02 PM
2027 ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைமையை சீனா பொறுப்பேற்றுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான 18 ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு செப்டெம்பர் 12 மற்றும் 13 திகதிகளில் புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியாவின் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் 45 பக்க கூட்டுப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவற்றுள் தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒருதலைப்பட்சமான வரி விதிப்புகளைத் தவிர்க்க வேண்டும், அணு ஆயுத பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கூட்டுப் பிரகடனத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரகடனத்துக்கு மாநாட்டின் இறுதி நாளான 13 ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பிரிக்ஸ் மாநாட்டில் 2027 ஆம் ஆண்டு பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு அடுத்த ஆண்டு பிரிக்ஸ் மாநாடு சீனாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியப் பிரதமர் மோடி தெரிவிக்கையில், “அடுத்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை சீனா நடத்த உள்ளது. இதற்காக சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்குக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். டெல்லி பிரிக்ஸ் மாநாட்டில் சீன ஜனாதிபதி கலந்து கொண்டதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment