சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்! விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!! தொடர்- 16…..சங்கர சுப்பிரமணியன்.


டோக்கியோவில்  நாங்கள் திட்டமிட்டபடி பார்க்கவேண்டிய இடங்களை சுற்றிப் பார்த்த மன நிறைவுடன் மீண்டும் புல்லட் ட்ரெய்யின் மூலம் ஒஸாகா நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது. ஒஸாகா ரயில் நிலையம் வந்தடைய இரவு ஆனதால் நேராக தங்கும் விடுதிக்கு வந்து மறுநாள் ஹிரோஷிமா செல்வதற்குண்டான ஏற்பாடுகளைச் செய்யவே நேரம் சரியாக இருந்தது.

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கிய இடங்கள் ஹிரோஷிமா மற்றும் நாகஷாகி ஆகிய இடங்களாகும். இவற்றில் ஜப்பானின் நகரங்களான டோக்கியோ, கியோட்டோ, மற்றம் ஒஸாகாவிலிருந்து புல்லட் ட்ரெயினில் செல்லலாம் என்பதால் ஹிரோஷிமாவுக்கு செல்ல முடிவெடுத்தோம்.

மறுநாள் காலையில் ஒஸாகா ரயில் நிலையத்திலிருந்து ஹிரோஷிமாவுக்கு புல்லட் ட்ரெயினில் எங்கள் பயணம் தொடங்கியது. ஒஸாகவிலிருந்து மூன்றுவிதமான புல்லட் ட்ரெயின்கள் ஹிரோஷிமாவுக்கு செல்கின்றன.
நஷோமி என்ற ரயில் ஹிரோஷிமாவுக்கு ஒரு மணி இருபது

நிமிடங்களிலும் ஷகூரா என்ற ரயில் ஓருமணி நாற்பது நிமிடங்களிலும் மற்றும் கொடோமா என்ற ரயில் இரண்டு மணி முப்பது நிமிடங்களில் செல்கின்றன.

நாங்கள் நஷோமி ரயிலில் முன்பதிவு செய்திருந்தோம். இது பயணத்தின்போது ஷின்-ஹோப், ஹிமேஜி மற்றும் ஒகாயமா என்ற மூன்றி ரயில் நிலையங்களில் மட்டும் நிற்கும்.

மேலும் இவ்வாறு பயணிக்கும் சீனாவில் இருப்பது அடுக்குமாடி குடியிருப்புகளை அதிகமாக காணமுடியாது. பெரும்பாலும் தனி வீடுகளாகவே அடுத்தத்து காணப்படுகின்றன.

நாங்கள் பயணித்த ரயில் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒன்றிரண்டு வினாடிகளுக்கு முன்னதாகவே ஹிரோஷிமா ரயில் நிலையத்தை அடைந்தது. வியப்புக்கு மேல் வியப்பாக அவர்களது நேரக்கணிப்பு வியப்பில் ஆழ்த்தியது. ஹிரோஷிமா ரயில் நிலையத்தை விட்டு வெளிவந்ததும் அங்கிருந்து 2.4 கி.மீ. தூரமிருந்த அடோமிக் பாம்ப் டோம் என்று சொல்லப்படும் அணுகுண்டு வீச்சால் தகர்க்கப்பட்ட கட்டிடத்துக்கு சென்றோம்.

அந்த இடத்தைப் பார்த்ததும் ஒருவிதமான சோகம் மனதை ஆட்கொண்டது. அங்கு வந்திருந்த பார்வயாளர்கள் முகத்திலும் ஒருவித சோகமே குடி கொண்டிருந்தது. அதனை அவர்களின் செயல் பாடுகளின் ஊடக காணமுடிந்தது.

அங்குள்ள இடிபாடுகளை மட்டுமே புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அவற்றின் பின்னணியில் தங்களை யாரும் படம் பிடித்துக் கொள்ளவில்லை. இந்த இடம் குண்டு வீச்சுக்குமுன் ஹிரோஷிமா இண்டஸ்டிரியல் ப்ரமோஷன் ஹால் என்ற பெயரில் இருந்தது. அப்போது இந்த இடம் இங்கு தயாரிக்கும் பொருட்களை பார்வைக்கு வைக்கும் இடமாகவும் மற்றும் அவற்றை விற்பனை செய்யும் இடமாகவும் இருந்துள்ளது.

இடிந்து காட்சி தரும் இக்கட்டிடத்தின் அருகே ஓடும் ஆற்றில் குண்டு வீச்சால் இறந்தவர்களின் எண்ணற்ற பிணங்கள் நீரபரப்பு முழுவதும் மிதந்து கொண்டிருந்தனவாம். இவற்றை எல்லாம் கேள்விப்படும்போது சுற்றுலாப் பயணிகளின் அனுபவம் வேறு விதமாக இருந்ததை உணர முடிகிறது. இந்த ஆற்றை பாலத்தின் மூலம் கடந்து சென்றால் ஹிரோஷிமா ப்பீஸ் மெமோரியல் கார்டன் உள்ளது. இந்த கார்டனிலேயே ப்பீஸ் மெமோரியல் பார்க் உள்ளது.

இந்த பார்க் பார்க்க வேண்டிய இடம். இந்த இடத்தில்தான் 1,40,000

மக்கள் அணுகுண்டு வீச்சால் தமது உயிரை இழந்தனர். ப்பீஸ் மெமோரியல் பார்க் மற்றும் ப்பீஸ் மெமோரியல்  மியூசியம் போன்றவற்றை பார்வையிட பாதி நாட்களுக்கு மேலாகிவிடும். இங்கு அணுகுண்டு வீச்சால்  உயிரிரிழந்தவர்களின் ஞாபகார்த்தமாக அணையா விளக்காக தீபம் எரிந்து கொண்டிருக்கிறது.

மேலும் இதில் உயிரிழந்த சிறுவர்களை நினைவு கூறும் முகமாக குழந்தைகள் அமைதி நினைவு கட்டமைப்பு ஒன்றையும் நிறுவியுள்ளார்கள். இங்குள்ள மியூசியம் அணுகுண்டு வீச்சால் மடிந்தவர்களை  நினைத்து மரியாதை செலுத்தும் இடமாக இருக்கிறது.

மேலும் இந்த அருங்காட்சியகம் அணுகுண்டு விழுந்தவுடன் உடல் கருகி இறந்தவர்களை நினைவு கூறுவதுடன் அதனால் ஏற்பட்ட காயங்களுடன் நீண்ட நாட்கள் வாழ்ந்து மடிந்தவர்கள் மற்றும் அணுகுண்டு கதிர் வீச்சால் நோயுண்டு மடிந்தவர்கள் என்று மடிந்தவர்கள் அனைவரையும் நினைக்கும் சான்றாகவும் இருக்கிறது.


இவ்வாறு எங்கு திரும்பினாலும் அந்த கொடிய நிகழ்வு நடந்ததாள் நம் நினவில் வந்து போவதை தடுக்க முடியவில்லை. அதிலும் அருங்காட்சியகத்தில் குண்டு வீசப்பட்ட நேரம் அடுகுண்டு தரையை நோக்கி வருவது தரையில் விழுந்தவுடன் மக்கள் தீக்காயங்களுடன் அங்கும் இங்கும் ஓடி மடிவது என்று அந்த கொடுமையை விவரமாக சித்தரித்து காட்சிப்படுத்தி இருந்தார்கள்.

அதைப்பார்த்த எனக்கு மனதில் என்னவோ நினைவுகள் ஓட எனது துக்கம் இரட்டிப்பானது. அதற்குமேல் அங்கு எதையும் பார்க்க எங்களால் முடியவில்லை. சில இடங்களில் அங்குள்ள மக்கள் அவர்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் கூறிக் கேட்டதை விவரித்துக் கொண்டிருந்தார்கள். அப்படி அவர்கள் விவரிக்கும்போது கண்ணீர் மல்க கிட்டத்தட்ட அழுவதுபோல் காணப்பட்டார்கள்.

இதைப் பார்த்த அங்கிருந்தோர் அனைவரது முகங்களும் அவ்வாறே தென்பட்டன. எல்லோரிடமும் ஓர் இறுக்கம் நிலவுவதையும் காணமுடிந்தது. மிகவும் கனத்த இதயத்துடன் அன்று இறந்த மக்களுக்கும் பின் கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து மடிந்த மக்களுக்கும் மனதால் அஞ்சலியை தெரிவித்தபடி அங்கிருந்து ஹிரோஷிமா ரயில் நிலையம் நோக்கி நடந்தோம்.






































































-சங்கர சுப்பிரமணியன்.

(தொடரும்)

No comments: