நாமலுக்கு பிணை வழங்குவதா? 29ஆம் திகதி தீர்மானம் – சஷிந்திர ராஜபக்ஷவின் மகனுக்கு பிடியாணை
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவைக்கு மேலும் ஒரு வருடம் இந்திய நிதியுதவி
நுவரெலியா சீதையம்மன் ஆலய விசேட பூஜை வழிபாடுகளில் ஜப்பான் உயர்ஸ்தானிகர் பங்கேற்பு!
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் அவுஸ்திரேலிய சட்டப்பேரவைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
திருகோணமலையில் புலம்பெயர்வு தகவல் மையத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல்
நாமலுக்கு பிணை வழங்குவதா? 29ஆம் திகதி தீர்மானம் – சஷிந்திர ராஜபக்ஷவின் மகனுக்கு பிடியாணை
Published By: Vishnu
18 Sep, 2026 | 07:57 PM
(எம்.எப்.எம்.பஸீர், செ.சுபதர்ஷனி)
எயார் பஸ் கொள்வனவின்போது 100 மில்லியன் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை (18) கொழும்பு நீதிவான் நீதிமன்ற பிரதம நீதிவான் அசாங்க எஸ் போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
பிணைக்கோரிக்கைத் தொடர்பான பிரதிவாதி தரப்பின் எழுத்து மூல சர்ப்பங்களை எதிர்வரும் 22 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிவான், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் எழுத்துமூல சமர்ப்பனங்களை 25 ஆம் திகதியன்று மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதிவான் இதன்போது பணித்திருந்தார்.
இதன்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் மன்றில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விடயங்களை முன்வைக்கையில், “ கனம் நீதிவான் அவர்களே! ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மற்றொரு வழக்குக்காக நேற்று முன்தினம் (16) இந்த சந்தேகநபர் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்காகவே சந்தேகநபர் முன்னிலைப்படுத்தப்படிருந்தார்.
இந்த சம்பவத்தில் ஊழல் குற்றச்சாட்டு மற்றும் பணச் சுத்திகரிப்பு தடுப்பு சட்டத்தின் கீழான குற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளமையால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களமும் இணைந்து இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, இவ்வாறான விசாரணைகளுக்கு சட்டமா அதிபரின் ஒத்துழைப்பினை பெறுவதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு உரிமையுன்டு” என்றார்.
தொடர்ந்து விசாரணையின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்திய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக்க பண்டார, “ கணம் நீதிவான் அவர்களே ! இந்த சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடமிருந்தும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளது. சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை கூட்டத்தை நடத்தியமை மற்றும் அவரின் மகன் சமீந்திர ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ளமை தொடர்பிலும் முன்னாள் சபாநாயகரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கும் மேலதிகமாக சுசந்த சமிந்திர ரத்நாயக்க மற்றும் திமுத்து சஞ்சய ஆகிய இரு நபர்களின் வாக்குமூலங்களும் ஆணைக்குழுவால் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பான விசாரணை 2012 ஆம் ஆண்டுவரை பின்னோக்கி உள்ளது. இந்த குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய முதலாவது சந்தேகநபரான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன உயிரிழந்துள்ளார். 2 ஆவது சந்தேகநபரான கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். அதேபோல் 3 ஆவது சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சமீந்திர ராஜபக்ஷவும் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149 ஆவது பிரிவுக்கமைய இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தலையும் மன்றுக்கு சமர்ப்பித்துள்ளார். நீதிமன்றத்துக்கு உறுதிப்படுத்தல் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பதில், விசேட காரணங்களை முன்வைக்கும் போது மாத்திரமே பிரதிவாதிக்கு பிணைவழங்க முடியும். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தரப்பதில், பிரதிவாதியின் சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்கள் விசேட காரணங்கள் அல்ல என தீர்மானித்த நீதிமன்றம் பிணைக் கோரிக்கையை தள்ளுபடி செய்திருந்தது, அதற்கமைய சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்திடம் கோருகிறேன்“ என்றார்.
இந்த சந்தர்ப்பத்தில் நீதிவான், இந்த வழக்கில் 2 ஆவது மற்றும் 3 ஆவது சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. அது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வினவினார்.
இதன்போது பிரதிவாதி சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, ஹங்குரன்கெத்த பொத்குல் விகாரையில் இடம்பெற உள்ள விசேட மத வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அந்த விகாரையின் விகாராதிபதியினால் பாராளுமன்ற உறுப்பினருக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ் ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். அந்த அழைப்பை பிணை வழங்குவதற்காகப் பரிசீலிக்க கூடிய விசேட காரணியாக ஏற்றுக்கொள்ளுமாறு நாமல் ராஜபக்ஷவின் தரப்பு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு பதிலளித்த பிரதிசொலிசிட்டர் ஜெனரல், “ கனம் நீதிவான் அவர்களே! நிமால் பெரேரா எனும் நபரின் நம்பகத்தன்மை தொடர்பில் கடந்த வழக்கு விசாரணையின் போது, குறித்த நபரின் நம்பகத்தன்மையை வழக்கு விசாரணையின் போதே தீர்மானிக்கப்படும் என நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த சந்தரப்பத்தின் போது அதை கருத்தில் கொள்ள இயலாது. இதனை விசேட காரணமாகவும் கருத்தில் கொள்ள முடியாது. அண்மையில் இந்தியாவில் பௌத்த மத வழிப்பாட்டுக்காக பிணை கோரியிருந்தபோது, உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா அதை விசேட காரணமாக கருத முடியாது என தீர்ப்பளித்திருந்தார்.
வெலிகம பே எனும் ஹோட்டல் ஒன்றுடன் தொடர்புடைய சம்பவம் தொடர்பாகவும் தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்போது 175 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றம் இடம்பெற்றமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் பணமும் நிமல் பெரேராவின் கணக்கிற்கே கிடைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ எனும் சந்தேகநபர் தொடர்பில் எவ்வித விசேட காரணங்களும் முன்வைக்கப்படவில்லை,” என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
மன்றில் முன்வைக்கப்பட்ட இருதரப்பு சாட்சியங்களையும் கருத்திற்கொண்ட நீதிவான் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார். நன்றி வீரகேசரி
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவைக்கு மேலும் ஒரு வருடம் இந்திய நிதியுதவி
18 Sep, 2026 | 06:01 PM
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவைக்கான நிதியுதவியை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த நிதியுதவி, 2024 ஆகஸ்ட் மாதம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வழங்கப்படுகின்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதுடன், மக்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த நிதியுதவி வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Viability Gap Funding (VGF) என்ற பொறிமுறையின் கீழ் ஆண்டுதோறும்
சுமார் 300 மில்லியன் இலங்கை ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
கப்பல் சேவையின் கட்டணத்தை பொதுமக்களுக்கு ஏற்ற வகையில் பேணுவதுடன், அதன் செயற்பாட்டு நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக முக்கிய தளவாட மற்றும் செயற்பாட்டு செலவுகளை ஈடுசெய்ய இந்த நிதியுதவி பயன்படுத்தப்படவுள்ளது.
2024 ஆகஸ்ட் மாதம் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் 52,000 பயணிகள் இந்த கப்பல் சேவையைப் பயன்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கலாசார, பொருளாதார மற்றும் சமூக பரிமாற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் இணைப்பை மீளுருவாக்குவதில் இந்த சேவை முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான மேம்படுத்தப்பட்ட கடல்சார் இணைப்பு தொடர்பான பகிரப்பட்ட நோக்கத்துடன் இந்த நிதியுதவி தொடர்வதும் இணைந்துள்ளது. இது 2024 டிசம்பரில் இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போதும், 2025 ஏப்ரலில் இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின்போதும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, எதிர்கால திட்டங்களின் கீழ் 65 மில்லியன் அமெரிக்க
டொலர் வரையிலான ஒட்டுமொத்த இந்திய மானிய உதவியின் கீழ் காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், இந்தியா–இலங்கை இடையிலான கடல்சார் இணைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்காக புதிய கப்பல் பாதைகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஆராயப்படவுள்ளன. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் மக்கள் தொடர்புகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி வீரகேசரி
நுவரெலியா சீதையம்மன் ஆலய விசேட பூஜை வழிபாடுகளில் ஜப்பான் உயர்ஸ்தானிகர் பங்கேற்பு!
18 Sep, 2026 | 05:50 PM
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நுவரெலியா சீதா எலிய சீதையம்மன் ஆலயத்தில் ஜப்பான் உயர்ஸ்தானிகர் அகிடோ இசமாதோ விசேட பூஜை வழிபாடுகளில் இன்று வெள்ளிக்கிழமை (18) மாலை 3 மணியளவில் கலந்துகொண்டார்.
ஆலயத்திற்கு வருகை தந்த தூதுவரை ஆலயத்தின் அறங்காவலர் சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் மாலை அணிவித்து மலர் செண்டு கொடுத்து வரவேற்றார்.
தொடர்ந்து இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன் ஆலயத்தின் சார்பாக நினைவுப் பரிசு ஒன்றும் ஆலயத்தின் உப பொருளாளர் ஆர்.குணசேகரனால் வழங்கி வைக்கப்பட்டது.
ஆலயத்தின் விசேட விருந்தினர்கள் கையொப்பமிடும் புத்தகத்திலும் தனது வரவு தொடர்பாக பதிவு செய்தார்.
இதன்போது உயர்ஸ்தானிகர் ஆலயத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக தயார் செய்யப்பட்டுள்ள முப்பரிமாண புஸ்பக விமானம் தொடர்பான காட்சிகளையும் கண்டுகளித்தார். நன்றி வீரகேசரி
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் அவுஸ்திரேலிய சட்டப்பேரவைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
18 Sep, 2026 | 02:48 PM
(நா.தனுஜா)
கொரியாவின் சியோலில் நடைபெற்ற 29 ஆவது ஆசிய சட்ட மாநாட்டின் ஓரங்கமாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் அவுஸ்திரேலிய சட்டப் பேரவையும் இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டன.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய மற்றும் அவுஸ்திரேலிய சட்டப் பேரவையின் தலைவர் தானியா வுல்ஃப் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
1933 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, கன்பராவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் அவுஸ்திரேலிய சட்டப்பேரவையானது அவுஸ்திரேலிய சட்டத்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல தேசிய அமைப்பாகும். இவ்வமைப்பு அங்கத்துவ சங்கங்கள், சட்டத்தரணிகள் சங்கம் என்பன உள்ளிட்ட கட்டமைப்புக்கள் ஊடாக சுமார் 107,000 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
அதேவேளை அவுஸ்திரேலிய சட்டப்பேரவையானது தேசிய மற்றும் சர்வதேச பிரச்சினைகளில் அவுஸ்திரேலிய சட்டத்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தி முன்னிலையாவதுடன், நீதியை நிலைநாட்டல், நீதிக்கான அணுகல் மற்றும் சட்டக்கட்டமைப்பின் மேம்பாடு என்பவற்றை ஊக்குவிக்கும் வகையில் செயலாற்றி வருவதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இருதரப்பினருக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக இருநாடுகளினதும் சட்டத்தரணிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும், சட்டத்துறைசார் தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
திருகோணமலையில் புலம்பெயர்வு தகவல் மையத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல்
Published By: Vishnu
19 Sep, 2026 | 05:43 AM
2025–2026 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், சர்வதேச புலம்பெயர்வு கொள்கை அபிவிருத்தி மையமான ICMPD, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு (MOFAFET) மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு பாதுகாப்பான, சட்டபூர்வமான மற்றும் ஒழுங்குமுறையான புலம்பெயர்வு தொடர்பான தகவல் மற்றும் வழிகாட்டல்களை வழங்குதல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் சமூக மட்ட ஆதரவு பொறிமுறைகளை வலுப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இக்கலந்துரையாடலில் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முதலாவது செயலாளர் திருமதி Andrea Kiensat,
ICMPD ஒருங்கிணைப்பாளர் திரு. Shamir Shalih, ச.சுமித்திரா counseller icmpd, கிழக்கு மாகாண வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு அதிகாரி மற்றும் திருகோணமலை மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி அதிகாரி (FEDO) உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
திருகோணமலை மாவட்டத்தில் MIC திட்டத்தின் கீழ் இதுவரை மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள், அடைந்துள்ள முன்னேற்றங்கள், கள மட்டத்தில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், குறிப்பாக ஜப்பானிய மற்றும் கொரிய மொழிப் பயிற்சிகளை வழங்கும் வெளிநாட்டு மொழிப் பயிற்சி தொடர்பான முன்மொழிவும் கலந்துரையாடப்பட்டது.
இத்தகைய மொழிப் பயிற்சிகள் மூலம் ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் இளைஞர்களுக்கு தேவையான மொழித்திறன்களை மேம்படுத்துவதுடன், பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வமான புலம்பெயர்வை ஊக்குவிக்க முடியும் எனக் கலந்துரையாடப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் பாதுகாப்பான புலம்பெயர்வு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, மோசடி தடுப்பு, தகவல் மற்றும் வழிகாட்டல் சேவைகள் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை தொடர்ந்தும் மேம்படுத்துவதற்கு இக்கலந்துரையாடலில் முக்கியத்துவம் வழங்கப்பட்டது. நன்றி வீரகேசரி





No comments:
Post a Comment