பணக்காரப் பெண் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

எம் ஜி ஆர், சிவாஜி இருவரும் சினிமாவில் உச்சம் தொட்ட கால கட்டத்தில் சிறிய தயாரிப்பாளர்களின் ஆபத்பாந்தவனாகத் திகழ்ந்தவர் ஜெய்சங்கர். குறைந்த செலவு, நிறைந்த இலாபம் என்ற வகையில் பலர் இவரை ஹீரோவாகப் போட்டு படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்படி உருவான ஒரு படம்தான் பணக்காரப் பெண். 

 படத்தை தயாரித்தவர் பி எல் மோகன்ராம். எல்லோரும் சிறிய நடிகர்களை போட்டு படம் எடுத்து , பின்னர் பெரிய நடிகர்களிடம் செல்வது வழக்கம். ஆனால் இந்த மோகன்ராம் இதற்கு மாறாக செயல்பட்டார். எம் ஜி ஆர் இரட்டை வேடங்களில் நடித்த ஆசைமுகம் படத்தை 1965ல் தயாரித்து விட்டு பின்னர் ஜெய்சங்கரிடம் வந்தவர் அப்படியே அவரின் நிரந்தர படத் தயாரிப்பாளராகி தங்கி விட்டார். 

 ஜெய்சங்கர் , ஜெயலலிதா ஜோடியில் ராஜா வீட்டுப் பிள்ளை படத்தை

எடுத்தவர் அதே ஜோடி நடிப்பில் முத்துச் சிப்பி , தங்ககோபுரம், படங்களையும் தயாரித்தார். பின்னர் ஜெய்சங்கர் நடிப்பில் மன்னிப்பு படத்தை எடுத்து விட்டு 1976ல் பணக்காரப் பெண் படத்தை உருவாக்கினார். இதில் ஜெய்சங்கருக்கு இணை ஜெயலலிதா அல்ல , ஜெயசித்ரா. 

 ராதா ஒரு பணக்காரப் பெண். அவளின் தந்தையை கொலை செய்து , பின்னர் ராதாவை மனநோயாளியாக்கி விட்டு சொத்தை சுருட்ட திட்டம் போடுகிறார்கள் அவளின் உறவினர்களான சோமுவும், மாசிலாமணியும். ராதாவின் தந்தை இவர்களால் கொல்லப்பட , எதிர்பாரா விதமாய் ராதா தான் காதலிக்கும் ராஜாவை கல்யாணம் செய்து கொள்கிறாள். இப்போது ராதாவை கொன்று விட்டு பழியை ராஜா மீது சுமத்த பிளான் பண்ணுகிறார்கள். ஆரம்பத்தில் சோமு, மாசிலாமணி இருவரையும் நம்பும் ராதா , ராஜா இருவரும் பின்னர்தான் சுதாகரித்துக் கொள்கிறார்கள். அதன் பின் எப்படி அவர்களின் பதிலடி அமைந்தது என்பது மீதி படம். 

 சும்மா சொல்லக் கூடாது , படம் முழுவதும் ஒரே சதித் திட்டம்தான். இவ்வளவு சதிகளை அன்றைய சீசனில் ஒரு படத்தில் பார்ப்பது என்பதும் அபூர்வம்தான். 

 படத்தில் சோமுவாக அசோகன் , மாசிலாமணியாக தங்கவேலு

இருவரும் நடித்தனர். இருவரும் தங்கள் பாத்திரத்தை ரசித்து நடித்திருந்தனர். படம் முழுவதும் வரும் இவர்கள் இருவரும் சதித் திட்டம் தீட்டுவது, அதை நிறைவேற்ற ஆராய்வது என்று ஒரே அட்டகாசம்தான். இவர்களின் நடிப்புக்கு துறையூர் மூர்த்தி எழுதிய வசனங்கள் சுவாரஸ்யமாக அமைந்தது . 

 “நான் அன்னைகே கொன்னுடலாம்னு சொன்னேன் நீங்கதான் இன்னைக்கு நாள் சரியிலிலே அட்டமி நவமி அம்மி குளவி என்று சொல்லி காரியத்தை கெடுத்திடீங்க , பகவான் கீதையிலேயே உடலுக்குத்தான் அழிவு ஆன்மாக்கு இல்லைனு சொல்லியிருக்காரு, பின்னாடி போற ராதாவின் உயிரை நாம கொஞ்சம் முன்னாடியே எடுத்துட்டா என்ன , நான் பெரியப்பானு கூப்பிடுறேன் நீங்க யாரப்பானு கேட்கிறீங்க என்பன போன்ற வசனங்கள் குபீர் சிரிப்பை கொண்டு வருகின்றன. 

 அதிலும் கொலை செய்யும் முறை பற்றி தங்கவேலு அசோகனிடம் ,

மாமாக்கு தலையணை , ராதாக்கு கழுத்தை நெரித்து , அப்படி எனக்கு என்ன வச்சிருக்கிரீங்க என்று அப்பாவித்த தனமாக கேட்பது நல்ல தமாஷ். 

 இவர்களின் அட்டகாசத்துக்கு நடுவில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா இருவரும் ஒரு படி பின்னே போய் விடுகிறார்கள். ஆனாலும் நடிப்பு ரசிக்கும் படி தான் இருக்கிறது. எஸ் .என் . லஷ்மி அம்மா வேடத்தில், வழக்கம் போல் . வி..எஸ்.ராகவன் இதில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். தேங்காய் சீனிவாசன் வரும் காட்சி கலகல. இவர்களுடன் ஆர் எஸ் மனோகர், எம் ஆர் ஆர் வாசு, சி ஐ டி சகுந்தலா, ராஜவேலு ஆகியோரும் நடித்தனர். 

 

மோகன் ராம் தயாரிக்கும் படங்களுக்கு எஸ் .எம் . சுப்பையா நாயுடு இசையமைப்பதுதான் வழக்கம். இப் படத்தில் மாற்றம் நிகழ்ந்தது. வி . குமார் இசையமைத்தார். பாடல்களில் தி மு க எதிர்ப்பும், அ தி மு க சார்பும் வெளிப்படையாக தெரிந்தது. புலமைப்பித்தனின் அண்ணா நீ இங்கு வர வேண்டும் பாடல் தி மு க தலைமை சரியில்லை என்று சுட்டிக் காட்டியது. வாலியின் ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா நீ நாடாள வர வேண்டும் பாடல் அ தி மு க ஆட்சிக்கு வர வேண்டும் என்று அரை கூவியது. இரண்டு பாடல்களுக்கும் ஜெய்சங்கர் நடித்தார்! இவை தவிர நாள் நல்ல நாள் டூயட்டும் இனிமையாக ஒலித்தது. 

 படத்துக்கு சரோஜினி ஸ்ரீராம் திரைக்கதை எழுத , அனுபவஸ்தரான

துறையூர் மூர்த்தி வசனங்களில் அசத்தினார். என் .எஸ் .வர்மா படத்தை ஒளிப்பதிவு செய்தார். யு . ராஜேந்திரன் படத்தை டைரக்ட் செய்தார்.

 




No comments: