‘எனது வாழ்க்கையில் வசதிகளை எவ்வாறு, எந்தெந்த வழிகளில் அதிகரித்துக் கொள்ளலாம்?’ என்பதே இன்று பெரும்பாலான மக்களின் கவலையாக உள்ளது. ஆனால், தம்மால் மற்றவர்களுக்கு எத்தகைய மகிழ்ச்சியை அளிக்க முடியும், எத்தகைய ஆனந்தத்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள முடியும், தமக்குரிய கடமைகளை எவ்வாறு நிறைவேற்ற முடியும் என்பதைப் பற்றி எவரும் பெரிதாகச் சிந்திப்பதில்லை.
மற்றவர்கள் தமக்கு எவ்வளவு மகிழ்ச்சியை அளிக்க முடியும், சமுதாயத்திலிருந்து எவ்வளவு இன்பத்தைப் பெற முடியும், சமுதாயம் தமக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் என்னென்ன என்பதையே ஒவ்வொருவரும் கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றனர். தங்களுடைய ஆசைகளையும் தேவைகளையும் விட, தங்களுடைய பொறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மிகச் சிலரே.
‘ஒரு தனிமனிதனாக, இந்தச் சமுதாயத்திலிருந்து என்னால் அதிகபட்சப் பயனை எவ்வாறு பெற முடியும்?’ என்பதே பலருடைய எண்ணமாக இருக்கிறது. ஆனால், தாங்கள் அங்கம் வகிக்கும் சமுதாயத்தின் பாதுகாப்பையும் வளத்தையும் பேணிப் பாதுகாப்பது தங்களுடைய முதன்மையான கடமை என்பதை மக்கள் மறந்துவிடுகின்றனர்.
ஒரு தனிமனிதன் தனது சுயநல ஆசைகளையும் விருப்பங்களையும் தியாகம் செய்து, சமுதாய நலனுக்காக உழைக்க முன்வரும்போதுதான் நாடு செழிப்படையும். அத்தகைய மனப்பான்மை மக்களிடையே உருவாகும்போதுதான் உலகில் அமைதியும் நிலவும்.
இதனால்தான் வேதங்கள், மனிதன் தனது சுயநல ஆசைகளையும் விருப்பங்களையும் துறக்கும்போதுதான் உண்மையான அமைதியைப் பெற முடியும் என்று பறைசாற்றுகின்றன. செல்வத்தைத் தொடர்ந்து குவித்துக் கொண்டிருப்பவர்களையும், உடல் சார்ந்த சுகபோகங்களைப் பெருக்கிக் கொள்வதிலேயே எப்போதும் ஈடுபட்டிருப்பவர்களையும் வேதங்கள் கண்டிக்கின்றன.
எனவே, நமது சொந்த மகிழ்ச்சிக்காக மட்டும் பாடுபடாமல், அனைவருடைய மகிழ்ச்சிக்காகவும் உழைக்க வேண்டும். அவ்வாறு நாம் செயல்படும்போது, மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்த மனநிறைவுடன், அதைவிடப் பெருமளவிலான மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் நாமும் அனுபவிக்க முடியும்.
சுயநலத்தைத் துறந்து, பொதுநலத்தைப் போற்றி வாழ்வதே தனிமனித மகிழ்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும், உலக அமைதிக்கும் வழிவகுக்கும்.
No comments:
Post a Comment