உலகச் செய்திகள்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு அதிவேக ரயில்கள் ; இந்த ஆண்டில் ஸ்பெயினில் 2வது கோர விபத்து ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 68ஆக அதிகரிப்பு ; 80க்கு மேற்பட்டோர் படுகாயம்

பெரும்பான்மை இல்லை ; மீண்டும் தேர்தலை நடத்த வேண்டாம்: இஸ்ரேல் ஜனாதிபதி கட்சிகளிடம் கோரிக்கை

சவூதியின் விமான நிலையங்கள், இராணுவ தளம் உள்ளிட்ட பல இடங்களில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

12 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட பாலம் வழியாக சீனா சென்றார் வடகொரிய ஜனாதிபதி

ஜேர்மனியில் ஜென்சி இளைஞர்கள் போராட்டங்கள்: பிராங்போர்ட்டில் கடைகள் சூறையாடல், வன்முறை!  



நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு அதிவேக ரயில்கள் ; இந்த ஆண்டில் ஸ்பெயினில் 2வது கோர விபத்து ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 68ஆக அதிகரிப்பு ; 80க்கு மேற்பட்டோர் படுகாயம்  

29 Oct, 2026 | 12:00 PM

ஸ்பெனில் நேற்று புதன்கிழமை (28) இரு அதிவேக ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 68ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த விபத்தில் குறைந்தது 80 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

டொலெடோ மாகாணத்தில் உர்டா மற்றும் லாஸ் யெபெனெஸ் நகரங்களுக்கு இடைப்பட்ட ரயில் மார்க்கத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இவ்விபத்து தொடர்பில் அந்நாட்டின் பிராந்திய அரசின் ஊடகப் பேச்சாளர் எஸ்தர் படில்லா கூறுகையில், குறித்த ஒரு பகுதியில், தண்டவாளத்தில் ரயிலொன்று தரித்து நின்றபோது, அதே தண்டவாளத்தில் எதிர்த்திசையிலிருந்து வந்துகொண்டிருந்த ரயில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் மீது நேருக்கு நேராக மோதியுள்ளது என்கிறார்.

ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மெட்ரிட்டிலிருந்து செவில்லி நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுக்கு சொந்தமான  ரயிலே, வேகமாக வந்து நிறுத்தப்பட்டிருந்த தனியார் ரயில் மீது மோதியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ரயில்கள் இரண்டும் தடம் புரண்டதோடு இரண்டு ரயில் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.

அரசு ரயிலில் 397 பயணிகளும் தனியார் ரயிலில் 147 பயணிகளும் இருந்த நிலையில், விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் இரண்டு ரயில்களிலும் இருந்த பயணிகள் அடங்குவர். 

இதனையடுத்து, மாட்ரிட், கியூடட், அண்டலூசியா நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த ஜனவரியில் ஸ்பெயினில் இதே போன்று இரு ரயில் மோதி விபத்து இடம்பெற்றதையடுத்து, தற்போது அங்கு மீண்டும் ஒரு கோர ரயில் விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 



பெரும்பான்மை இல்லை ; மீண்டும் தேர்தலை நடத்த வேண்டாம்: இஸ்ரேல் ஜனாதிபதி கட்சிகளிடம் கோரிக்கை  

29 Oct, 2026 | 09:23 AM

இஸ்ரேலில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டமைப்பு மற்றும் காடி ஐசன்காட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி ஆகிய இரண்டுக்கும்  ஆட்சி அமைக்கத் தேவையான 61 பெரும்பான்மை இடங்கள் கிடைக்காததால் அங்கே தொங்கு பாராளுமன்றச் சூழல் உருவாகியுள்ளது.

120 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் நெதன்யாகுவின் கூட்டணி 53 இடங்களை மாத்திரமே  பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவரான காடி ஐசன்காட் தலைமையிலான கூட்டணி 48 இடங்களை வெல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் மிகப்பெரிய திருப்புமுனையாக இஸ்ரேலிய அரபுப் பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் 19 இடங்களைக் கைப்பற்றித் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளன.

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்ஸாக் மீண்டும் ஒரு இடைத்தேர்தலைத் தவிர்த்து, கட்சிகள் விட்டுக்கொடுப்புகளுடன் ஆட்சி அமைக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரபுப் கூட்டமைப்பின் தலைவர் யூசுப் ஜபாரீன், நெதன்யாகுவின் ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைக்கத் தயார் எனக் கூறிய போதிலும், காஸா போர் மற்றும் ஆக்கிரமிப்புகள் காரணமாகக் கூட்டணியில் நேரடியாக இணைய மறுத்துள்ளார்.

தேர்தலுக்கு மத்தியில் ஈரானுக்கு எதிரான இராணுவச் நடவடிக்கைகளுக்கான பேச்சுக்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், நெதன்யாகு தனது சுய அரசியலுக்காக நாட்டின் பாதுகாப்பைப் பயன்படுத்தக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்காட் எச்சரித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 





சவூதியின் விமான நிலையங்கள், இராணுவ தளம் உள்ளிட்ட பல இடங்களில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்  

30 Oct, 2026 | 12:36 PM

சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள், இராணுவ தளம் உள்ளிட்ட பல இடங்களில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை (30) மீண்டும் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக சவூதி தெரிவித்துள்ளது. 

சவூதி அரேபியாவின் அப்கியூக் நகரில் உள்ள மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், ரியாத்தில் உள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையம், தமாம் நகரில் உள்ள கிங் பகத் சர்வதேச விமான நிலையம், நிஜ்ரன் பகுதியில் உள்ள இராணுவ படைத்தளம் போன்ற பல இடங்களில் ஹூதியினர் தாக்குதல்களில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை இந்தத் தாக்குதல்களை சவூதியின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஹூதியினர் அனுப்பிய ஏவுகணையின் சிதறல் பட்டு சவூதியின் தலைநகர் ரியாத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் சவூதி தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களின் விளைவாக பல வாகனங்கள் சேதமடைந்திருப்பதாகவும் சவூதி அரசு சுட்டிக்காட்டியுள்ளது. 

ஏமன் நாட்டில் அரசு தரப்புக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் சவூதி, ஈரான் ஆகிய இரு நாடுகள் தலையிட்டு, தாமும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதும் இடம்பெற்று வருகிறது.

ஏமன் அரசு தரப்புக்கு சவூதியும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவளித்து, ஏமன் உள்நாட்டு யுத்தத்தில் அவரவர் ஆதரவுத் தரப்புக்காக சவூதியும் ஈரானும் ஏமனுக்குள் தாக்குதல் நடத்தி வருவதோடு, ஈரான் - சவூதி ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான மோதலும்  தொடர்ந்து இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது.

அமெரிக்கா, ஈரான் ஆகியவற்றுக்கு இடையே போர் நிலவியபோது ஏமனில் செயற்பட்டு வரும் ஹூதியினர் சவூதி மீது தாக்குதல் நடத்தினர். குறிப்பாக, சவூதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற பிரம்மாண்ட தளங்களை நோக்கி தாக்குதல்களில் ஈடுபட்டனர். 

இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சவூதியும் ஏமன் அரசு படைகளுடன் இணைந்து, ஏமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தி வந்தனர்.

இவ்விதமாக உள்நாட்டுப் போருக்குள் மற்ற நாடுகளின் தலையீட்டினால் பல முனைகளில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையிலேயே சவூதியில் இன்று ஹூதியினர் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 




12 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட பாலம் வழியாக சீனா சென்றார் வடகொரிய ஜனாதிபதி  

Published By: Digital Desk 1

25 Oct, 2026 | 02:16 PM

வடகொரியாவையும் சீனாவையும் இணைக்கும் புதிதாகத் திறக்கப்பட்ட யாலு ஆற்றுப் பாலம் வழியாக, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சீன எல்லை நகரமான டான்டாங்கிற்கு ஒருநாள் விஜயம் மேற்கொண்ட பின்னர், கிம் ஜாங் உன் தாயகம் திரும்பியதாக வடகொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று சனிக்கிழமை (24) இடம்பெற்ற இந்தப் பயணத்தின்போது, சீனாவின் உயர்மட்ட அரசியல் அதிகாரியான வாங் ஹுனிங்கும் கிம்முடன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் “அன்பான வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும்” வாங் ஹுனிங், கிம் ஜாங் உன்னிடம் தெரிவித்ததாக வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு நாடுகளையும் இணைக்கும் புதிய யாலு ஆற்றுப் பாலம் கட்டி முடிக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்குப் பின்னர் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டது. இந்தப் பாலம் திறக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர் கிம் ஜாங் உன் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

ஆசியாவின் முக்கிய பொருளாதார வல்லரசான சீனாவுக்கும், அணுவாயுத வல்லமையைக் கொண்ட அதன் அண்டை நாடான வடகொரியாவுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை இந்த விஜயம் மேலும் வலுப்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

மேலும், கிம் ஜாங் உன்னும் வாங் ஹுனிங்கும் டான்டாங்கில் அமைந்துள்ள கொரியப் போர் நினைவுச் சின்னத்தைப் பார்வையிட்டுள்ளனர். கொரியப் போரின்போது வடகொரியாவுடன் இணைந்து போரிட்ட சீன வீரர்களுக்கு கிம் ஜாங் உன் அங்கு அஞ்சலி செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கு எதிராக ஒரு “புதிய பனிப்போரை” உருவாக்கும் நோக்கில், சீனாவுடனும் ரஷ்யாவுடனும் வடகொரியாவை இணைக்க கிம் ஜாங் உன் முயற்சிப்பதாகவும், இந்த விஜயம் அவரது வெளிவிவகாரக் கொள்கையில் அதிகரித்து வரும் தீவிரத்தன்மையைப் பிரதிபலிப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், யாலு ஆற்றின் குறுக்கே சுமார் 3 கிலோமீற்றர் (1.9 மைல்) நீளத்தில் அமைந்துள்ள புதிய பாலத்தின் திறப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தையும் இது பிரதிபலிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.   நன்றி வீரகேசரி 






ஜேர்மனியில் ஜென்சி இளைஞர்கள் போராட்டங்கள்: பிராங்போர்ட்டில் கடைகள் சூறையாடல், வன்முறை!  

01 Nov, 2026 | 09:57 AM

ஐரோப்பா முழுவதும் பரவி வரும் ஜென்சி தலைமுறை (Gen Z) இளைஞர்களின் எதிர்ப்பலைகளின் தொடர்ச்சியாக, ஜேர்மனியில் கல்வித்துறை மேம்பாடு, வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் கட்டாய இராணுவப் பயிற்சிக்கான எதிர்ப்பு ஆகியவற்றைக் வலியுறுத்தி 34க்கும் மேற்பட்ட நகரங்களில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் நேற்று சனிக்கிழமை (31) மிகப்பெரிய போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

ஜேர்மனியின் நிதித் தலைநகரான பிராங்போர்ட்டில் இரவில் போராட்டங்கள் வன்முறையாக மாறியதில், குறைந்தபட்சம் இரண்டு வணிகக் கடைகள் சூறையாடப்பட்டதுடன், பல கடைகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுச் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

கலவரக்காரர்கள் அவசரப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மீது மோலோடோவ் காக்டெய்ல் மற்றும் பட்டாசுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்னர். இதனால் பொதுமக்களை நகரின் மையப்பகுதியை விட்டு விலகியிருக்குமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

ஹம்பபேர்க்கிலும் வீதிகளில் வைக்கப்பட்டிருந்த வீதித் தடைகள் மற்றும் குப்பைத் தொட்டிகளுக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.

ஜென்சி பொறுப்பேற்கிறது (Gen Z regelt) என்ற அமைப்பின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப்போராட்டத்தில், சான்சலர் பிரீட்ரிச் மெர்ஸ் தலைமையிலான அரசாங்கம் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.    நன்றி வீரகேசரி 

 





No comments: