இலங்கைச் செய்திகள்

பணமோசடி வழக்கு: யோஷித ராஜபக்‌ஷவுக்கு எதிரான சாட்சி விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றில் ஆரம்பம்!

இஸ்ரேலில் இலங்கை வேலைவாய்ப்புகள் இனி அரசாங்க ஒப்பந்தம் மூலம் மட்டுமே : புதிய உத்தரவு

ரகித ராஜபக்‌ஷவின் வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம்

இலங்கையில் வருடாந்தம் 6000 புதிய மார்பகப் புற்றுநோயாளர்கள் பதிவு ; சுமார் 1,000 பெண்கள் உயிரிழப்பு 


பணமோசடி வழக்கு: யோஷித ராஜபக்‌ஷவுக்கு எதிரான சாட்சி விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றில் ஆரம்பம்!

30 Oct, 2026 | 11:32 AM

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்‌ஷவுக்கு எதிராகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று வெள்ளிக்கிழமை (30) நடைபெற்று வருகின்றது.

இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் வழிநடத்தலின் கீழ் சாட்சி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

730 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தைச் செலவிட்டு தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் அமைந்துள்ள 05 காணித் துண்டுகளைக் கொள்வனவு செய்தமையின் ஊடாகப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகக் குற்றம்சாட்டி, யோஷித ராஜபக்‌ஷவுக்கு எதிராகச் சட்டமா அதிபரால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 






இஸ்ரேலில் இலங்கை வேலைவாய்ப்புகள் இனி அரசாங்க ஒப்பந்தம் மூலம் மட்டுமே : புதிய உத்தரவு

Published By: Digital Desk 1

29 Oct, 2026 | 05:02 PM

(எம்.ஆர்.எம்.வசீம்)

இஸ்ரேல் அரசாங்கத்தின் புதிய கொள்கை தீர்மானத்திற்கு அமைய,  ஜனவரி 01 ஆம் திகதி முதல் இலங்கையர்களை இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளுக்காக பணியமர்த்தும் நடவடிக்கைகள் அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் மட்டுமே மேற்கொள்ளப்படும் என இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அறிவித்துள்ளது.

இதற்கமைய, உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக தற்போது நடைமுறையிலுள்ள இஸ்ரேல் வேலைவாய்ப்புப் பணியமர்த்தல் திட்டம்  எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது. 2027 ஆம் ஆண்டிற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய பணியமர்த்தல் முறைமை, பணியமர்த்தல் எல்லைகள் மற்றும் தெரிவு நடைமுறைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் இஸ்ரேலில் கட்டுமானம், தொழிற்துறை மற்றும் வணிகம் மற்றும் சேவைகள் ஆகிய துறைகளில் (உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள்) தனியார் துறை ஊடாகப் பணியாளர்களை பணியமர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. எனவே, குறிப்பிடப்பட்ட துறைகளிலோ அல்லது வேறு எந்தவொரு துறையிலோ இஸ்ரேலில் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக தனியார் துறையினரால் வழங்கப்படும் வாக்குறுதிகள் குறித்து வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணியகம் கேட்டுக்கொள்கிறது.

இதற்கமைய, இஸ்ரேல் வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போர் இஸ்ரேல் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி எந்தவொரு நபருக்கோ அல்லது உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கோ பணம் செலுத்துவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

பணியகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை, தனியார் துறையினரால் இஸ்ரேல் வேலைவாய்ப்புகளுக்காக நடத்தப்படும் திறன் பரீட்சைகள், நேர்முகப் பரீட்சைகள் அல்லது ஏனைய தெரிவு நடைமுறைகளில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே கவனத்தில் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ஏற்கனவே இஸ்ரேல் வேலைவாய்ப்புகளுக்காக சட்டபூர்வமாக பணம் செலுத்தியுள்ள நபர்கள் இது குறித்து தேவையற்ற அச்சமடையத் தேவையில்லை என்றும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தல்கள் விரைவில் பணியகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சட்டபூர்வமாக பணம் செலுத்தியுள்ள நபர்கள் பற்றிய தகவல்களை உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களிடமிருந்து பணியகம் கோரியுள்ளதோடு, அத்தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 





ரகித ராஜபக்‌ஷவின் வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம்

29 Oct, 2026 | 04:31 PM

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவின் மகனான ரகித ராஜபக்‌ஷவுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகளை இடைநிறுத்தம் அறிவித்தல் அவரது வீட்டுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்ட விதிகளின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாவல பகுதியில் அமைந்துள்ள ரகித ராஜபக்‌ஷவின் வீட்டுக்கு நேற்று புதன்கிழமை (28) சென்ற இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு, வங்கிக் கணக்குகளை முடக்கும் அறிவித்தலை அவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

எனினும், அதிகாரிகள் சென்றபோது ரகித ராஜபக்‌ஷ வீட்டில் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், குறித்த அறிவித்தலை மீண்டும் அவரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 






இலங்கையில் வருடாந்தம் 6000 புதிய மார்பகப் புற்றுநோயாளர்கள் பதிவு ; சுமார் 1,000 பெண்கள் உயிரிழப்பு 

29 Oct, 2026 | 01:11 PM

(நமது நிருபர்)

இலங்கையில் வருடாந்தம் ஏறத்தாழ 6000 புதிய மார்பகப் புற்றுநோயாளர்கள் பதிவாவதுடன், சுமார் 1,000 பெண்கள் இந்நோயினால் உயிரிழக்கின்றனர். மார்பகப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்ற போதிலும், அச்சம், வெட்கம் மற்றும் போதிய விழிப்புணர்வின்மை காரணமாக சிகிச்சை பெறுவதைத் தாமதிப்பது முக்கிய பிரச்சினையாக காணப்படுகிறது.

இலங்கையில் பெண்களிடையே அதிகளவில் பதிவாகும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதையும், அது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதையும் நோக்கமாகக் கொண்டு, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் சுகாதார அமைச்சுடன் இணைந்து விசேட தேசிய வேலைத்திட்டத்தை நவம்பர் 2ஆம் திகதி முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவியும் அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில், அண்மையில் கூடிய ஒன்றியத்தின் கூட்டத்திலேயே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

மார்பகப் புற்றுநோயின் தற்போதைய நிலைமை மற்றும் அந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் முக்கியத்துவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இங்கு விளக்கிக் கூறினர். 

வருடாந்தம் இலங்கையில் ஏறத்தாழ 6,000 புதிய மார்பகப் புற்றுநோயாளர்கள் பதிவாகுவதுடன், சுமார் 1,000 பெண்கள் இந்நோயினால் உயிரிழக்கின்றனர். 

மார்பகப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்ற போதிலும், அச்சம், வெட்கம் மற்றும் போதிய விழிப்புணர்வின்மை காரணமாகச் சிகிச்சை பெறுவதைத் தாமதிப்பது முக்கிய பிரச்சினையாக இருப்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. 

இதற்கமைய, நவம்பர் 2ஆம் திகதி திங்கட்கிழமை, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தேர்தல் தொகுதிகள் மற்றும் மாவட்ட மட்டங்களில் சுகாதார மருத்துவ முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதுடன், அவற்றில் நேரடியாகவும் பங்கேற்கவுள்ளனர்.

இதன்போது, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி, பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் இளஞ்சிவப்பு நிறச் சின்னங்கள் மற்றும் ஆடைகளைப் பயன்படுத்தி, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமான இளஞ்சிவப்பு மாதத்திற்கான தமது ஆதரவை வெளிப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

கிராமப்புறங்கள், பெருந்தோட்டப் பகுதிகள், நகர்ப்புற அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் குறைந்தளவில் பங்கேற்பு காணப்படும் பகுதிகளைச் சேர்ந்த பெண்களை சுவநாரி மருத்துவப் பரிசோதனை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

தற்போது 35 – 45 வயதுக்குட்பட்ட பெண்களில் சுமார் 50 சதவீதமானவர்களே சுவனாரி மருத்துவப் பரிசோதனை நிலையங்களுக்குச் செல்வதால், ஏனைய பெண்களையும் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான பிரதான மையங்களில் கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மட்டத்தில் செயற்படும் மகளிர் சங்கங்கள் உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினரை ஒருங்கிணைத்து, 35–45 வயதுக்குட்பட்ட அனைத்துப் பெண்களையும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தும் விரிவான வேலைத்திட்டமொன்றை அடுத்த ஆண்டில் நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, ஜனவரி மாதத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் முன்னெடுப்பில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், பாலின அடிப்படையிலான வரவு - செலவுத் திட்டமிடல் மற்றும் பராமரிப்புப் பொருளாதாரம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. 

தேசிய பராமரிப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல் மற்றும் வரவு - செலவுத் திட்டச் செயன்முறையில் பாலின உணர்திறன் கொண்ட கொள்கைகளை உள்ளடக்குதல் ஆகியவற்றுக்கான தொழில்நுட்ப ஆலோசனை உதவியைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், குடும்ப வன்முறையைத் தடுப்பதற்கான சட்டம், பராமரிப்புக் கொடுப்பனவுகள் தொடர்பான சட்டம் மற்றும் சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகளை வழங்குவதைத் தடுக்கும் சட்டங்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக, நீதி அமைச்சுடன் இணைந்து அவற்றுக்கான திருத்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.  நன்றி வீரகேசரி 







No comments: