நிமலனுமே பார்த்திடுவான் !


 


















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்  ….. அவுஸ்திரேலியா 






கோவிலுக்குச் செல்லுகின்றோம் 
குறைகளைய வேண்டுகின்றோம்
வீடு திரும்புகிறோம்
மீண்டும்குறை செய்கின்றோம்
ஆண்டவனும் பார்ப்பான்
அசையாமல் இருந்திடுவான்
அழுக்கேற்றி அழுக்கேற்றி
அனுதினமும் இருக்கின்றோம்

அகந்தையும் ஆணவமும் 
அகநிறைய அமர்கிறது
ஆசையோ கடலாக
ஆகியே இருக்கிறது 
இருக்கின்ற பற்றுக்கள்
இறுக்கியே நிற்கிறது
எப்பத்தான் குறைகள்
எமைவிட்டு அகன்றிடுமோ  ? 

நிறைகுடங்கள் தழும்பாது
நீண்டதூரம் சென்றாலும்
குறைகுடங்கள் தழும்பிவிடும்
குடந்தூக்கி நின்றவுடன்
நிறைகுடமாய் இருந்திடுவார்
நிமலனையே கண்டிடுவார்
குறைகுடமாய் இருப்பார்கள்
கடுமிருளில் மூழ்கிடுவார்

எல்லோர்க்கும் பிறப்பு
ஒன்றாக அமைகிறது
எண்ணுவதும் செய்வதுமே
மாறுபட்டு அமைகிறது
எண்ணுவதைச் செய்வதனை
இழுக்கின்றிச் செய்துவிடின்
எங்களது பிரார்த்தனையை
இறைவனுமே ஏற்றிடுவான் 

நிறைவான அத்தனையும்
நித்தமுமே நாடிடுவோம்
நிறைவான அத்தனையும்
அகமதிலே இருத்திடுவோம்
முழுநிறைவாய் இருக்கின்ற
பரம்பொருளே இறையாகும்
நிறைமனமாய் வேண்டிநின்றால்
நிமலனுமே  பார்த்திடுவான் !





No comments: