அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச் சூடு: கைதான இளைஞரின் திடுக்கிடும் பின்னணி வெளியானது !
ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல் ; கருங்கடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாரிய அச்சுறுத்தல்
ஜேர்மனிலிருந்து 5 ஆயிரம் இராணுவ வீரர்களை திரும்பப் பெறுகிறது அமெரிக்கா
மியன்மார் முன்னாள் தலைவி ஆங் சான் சூகி வீட்டுக்காவலுக்கு மாற்றம்: இராணுவ ஆட்சியாளர் அறிவிப்பு!
காசாவில் 14 கிலோமீற்றர் நீளமான ஹமாஸின் நிலத்தடி சுரங்கப்பாதைகள் அழிப்பு - இஸ்ரேல்
அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச் சூடு: கைதான இளைஞரின் திடுக்கிடும் பின்னணி வெளியானது !
Published By: Digital Desk 3
27 Apr, 2026 | 10:18 AM
அமெரிக்க ஜனாதிபதி பற்கேற்ற பங்கேற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கைது செய்யப்பட்ட 31 வயது கோல் டோமஸ் ஆலன் ஒரு உயர் கல்வி கற்ற பட்டதாரி மற்றும் மென்பொருள் உருவாக்குநர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமூக ஊடகங்கள் மற்றும் கல்வி நிறுவனத் தரவுகளின்படி, ஆலன் ஒரு சாதாரணத் தாக்குதல்தாரியாகத் தெரியவில்லை.
கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இயந்திரவியல் பொறியியலில் இளநிலைப் பட்டமும், கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர்.
கடந்த ஆறு ஆண்டுகளாக கல்வி நிறுவனம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். 2024-ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் "சிறந்த ஆசிரியர்" விருதையும் இவர் பெற்றுள்ளார்.
கணினி விளையாட்டுகளை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட இவர், மூலக்கூறு வேதியியல் தொடர்பான ஒரு விளையாட்டை உருவாக்கியுள்ளார். விண்வெளியில் நடக்கும் போர் தொடர்பான புதிய விளையாட்டு ஒன்றை உருவாக்கி வந்ததாகவும் தெரிகிறது.
ஆலனின் முன்னாள் பேராசிரியர் பின் டாங் தெரிவிக்கையில், அவர் வகுப்பில் எப்போதும் முதல் வரிசையில் அமரும் மிகச் சிறந்த மாணவர். மிகவும் மென்மையாகப் பேசக்கூடிய, மரியாதையான பண்புள்ளவர். அவர் இத்தகைய செயலில் ஈடுபட்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
2024-ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதிதேர்தலின் போது ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக 25 டொலர்களை ஆலன் நன்கொடையாக வழங்கியுள்ளார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
வயோதிபர்களுக்கான சக்கர நாற்காலிகளில் புதிய வகை பிரேக் முறையைக் கண்டுபிடித்ததற்காக ஒரு காலத்தில் பாராட்டப்பட்ட ஒரு இளம் விஞ்ஞானி, தற்போது பல நவீன ஆயுதங்களுடன் அமெரிக்க ஜனாதிபதியை தாக்க முயன்றது ஏன் என்பது குறித்துப் புலனாய்வு அமைப்பினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, கணினி விளையாட்டுப் போர்களை நிஜ வாழ்க்கையில் செயல்படுத்த முயன்றாரா அல்லது ஏதேனும் அரசியல் விரோதம் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. நன்றி வீரகேசரி
ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல் ; கருங்கடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாரிய அச்சுறுத்தல்
29 Apr, 2026 | 11:28 AM
(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)
ரஷ்யாவின் கருங்கடல் கடற்கரையின் துவாப்சே நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் அண்மையில் தொடர்ச்சியாக நடத்திய ட்ரோன் தாக்குதல்களால் சுத்திகரிப்பு நிலையம் தீப்பற்றி எரிந்து, கரும்புகையை வெளியேற்றியதோடு, பாரிய எண்ணெய்க் கசிவும் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா மீது உக்ரைன் மூன்றாவது முறையாக நடத்திய ட்ரோன் தாக்குதலால் தீ பரவி, சேதமடைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கசிந்த எண்ணெயால் பாரியதொரு சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது எண்ணெய்க் கசிவு கட்டுப்படுத்தப்பட்டதாக
கூறப்படுகிறபோதும் எண்ணெய்க் கலப்பினால் தூய்மையின்றிக் கிடக்கும் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவதற்கான பணிகள் போதுமானதாக இல்லை என ரஷ்யாவின் அவசரநிலை சூழ்நிலைகள் அமைச்சர் அலெக்சாண்டர் குரென்கோவ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர், நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. சுத்திகரிப்பு நிலையத்தை சுற்றியுள்ள பாதுகாப்பு அணைகளை மேலும் பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், சுத்திகரிப்பு நிலையத்தில் கசிந்த எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்கள் கருங்கடலில் கலப்பதை தடுப்பதற்காக மேலதிகமாக, “பூம் பெரியர்ஸ்” (boom barriers) என்கிற தடுப்புக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துவாப்சே ஆற்றில் முன்னதாக இதுபோன்ற தடுப்புக்கள் ஒன்பது வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல்
நடத்தப்பட்ட பின்னர், நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்களும் பல்வேறு இயந்திரங்களும் களப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை தெரியவருகிறது.
இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட மோசமான விபத்துக்களால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை. எனினும், பாதுகாப்பு கருதி அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
30க்கும் மேற்பட்ட வீதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து பல தரப்பினர் கவலையும் அச்சமும் தெரிவித்து வருகின்றனர்.
நன்றி வீரகேசரி
ஜேர்மனிலிருந்து 5 ஆயிரம் இராணுவ வீரர்களை திரும்பப் பெறுகிறது அமெரிக்கா
Published By: Digital Desk 2
02 May, 2026 | 12:50 PM
( இணையத்தள சர்வதேச செய்திப்பிரிவு )
ஜேர்மனியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தனது படைத்தளங்களில் இருந்து சுமார் 5,000 இராணுவ வீரர்களை திரும்பப் பெறவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்காவுக்கு இராணுவத் தளங்கள் காணப்படுவதுடன், நேட்டோ (NATO) அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் மற்றும் நட்பு நாடுகளிலும் அமெரிக்கப் படைகள் நிரந்தரமாக பணியாற்றி வருகின்றன. அந்த வகையில், ஜேர்மனியில் உள்ள அமெரிக்க படைத்தளங்களில் தற்போது சுமார் 36,000 அமெரிக்க பாதுகாப்புப் படையினர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஜேர்மனி இடையே அண்மையில் கருத்து முரண்பாடுகள் உருவாகியுள்ளன. குறிப்பாக, ஈரானுக்கு எதிரான போர் தொடர்பில் அமெரிக்கா அவமானமடைந்துள்ளதாக ஜேர்மனியின் சான்சிலர் பிரைட்ரிச் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்து அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சிறிய பதற்ற நிலை உருவாகியுள்ளது.இந்த பின்னணியில், ஜேர்மனியில் இருந்து 5,000 அமெரிக்க இராணுவ வீரர்களை அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் கட்டம்கட்டமாக திரும்பப் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளதென அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை, ஐரோப்பிய பாதுகாப்பு சூழ்நிலைக்கும், நேட்டோ கூட்டணியின் செயல்திறனுக்கும் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து சர்வதேச ரீதியில் கவனம் செலுத்தப்படுகிறது.எனினும், அமெரிக்கா தனது கூட்டணி உறவுகளை தொடர்ந்து பேணும் என்றும், பாதுகாப்பு ஒத்துழைப்பில் மாற்றம் இருக்காது என்றும் சர்வதேச ஊடக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நன்றி வீரகேசரி
மியன்மார் முன்னாள் தலைவி ஆங் சான் சூகி வீட்டுக்காவலுக்கு மாற்றம்: இராணுவ ஆட்சியாளர் அறிவிப்பு!
Published By: Digital Desk 3
01 May, 2026 | 10:38 AM
(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)
மியன்மாரின் மக்களாட்சித் தலைவியும் நோபல் பரிசு பெற்றவருமான 80 வயதுடைய ஆங் சான் சூகி, இராணுவச் சிறையிலிருந்து மாற்றப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மியன்மார் இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ளது.
2021-ஆம் ஆண்டு மியன்மாரில் ஏற்பட்ட இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகி, நேபிடாவ் நகரில் உள்ள இராணுவச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.
இராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லேங் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சூகியின் எஞ்சிய சிறைத்தண்டனையை அவர் ஒரு குறிப்பிட்ட இல்லத்தில் தங்கியிருந்து கழிக்கும் வகையில் மாற்றியமைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சீருடை அணிந்த இரு அதிகாரிகளுடன் சூகி அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் அரச ஊடகம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து ஆங் சான் சூகியின் மகன் கிம் ஆரிஸ் கடும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
அரச ஊடகத்தில் வெளியான புகைப்படம் 2022-இல் எடுக்கப்பட்டது எனவும், அது தற்போதைய நிலையை விளக்கவில்லை எனவும் அவர் பிபிசி-க்குத் தெரிவித்துள்ளார்.
தனது தாயார் உயிருடன் இருப்பதற்கான எந்தவொரு உறுதியான ஆதாரமும் தன்னிடம் இல்லை எனவும், அவருடன் பேச அனுமதிக்கும் வரை இந்தச் செய்திகளை நம்பப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2021 புரட்சிக்கு பின்னர் சூகிக்கு விதிக்கப்பட்ட 33 ஆண்டு காலச் சிறைத்தண்டனை பலமுறை குறைக்கப்பட்டுள்ளது.
மியன்மார் இராணுவ ஆட்சி மீதான சர்வதேசத் தனிமைப்படுத்தலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவும், மியன்மார் ஒரு முறையான அரசாங்கம் என்பதைக் காட்டவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சூகியுடன் சிறையில் இருந்த அவுஸ்திரேலிய பொருளாதார நிபுணர் சீன் டர்னல், மியன்மார் சிறைகள் மிகவும் பழமையான முறையில், அடிப்படை வசதிகளின்றி மிக மோசமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆங் சான் சூகியின் சட்டதரணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக அவரைச் சந்திக்கவில்லை என்பதுடன், அவரது குடும்பத்தினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தத் தொடர்பும் இல்லாமல் உள்ளனர். 80 வயதான சூகியின் ஆரோக்கியம் குறித்த கவலைகள் சர்வதேச அளவில் எழுந்துள்ள நிலையில், இந்த வீட்டுக்காவல் மாற்றம் அவரது முழுமையான விடுதலையை நோக்கிய நகர்வா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நன்றி வீரகேசரி
காசாவில் 14 கிலோமீற்றர் நீளமான ஹமாஸின் நிலத்தடி சுரங்கப்பாதைகள் அழிப்பு - இஸ்ரேல்
28 Apr, 2026 | 03:08 PM
(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)
வடக்கு காசா பகுதியில் சுமார் 14 கிலோமீட்டர் நீளமுள்ள ஹமாஸ் அமைப்பின் நிலத்தடி சுரங்கப்பாதைகளை அழித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை நேற்று திங்கட்கிழமை (27) தகவல் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவத்தின் 252-வது பிரிவின் கீழ் உள்ள வடக்கு பிரிகேடியர் படைகள் மற்றும் 'யஹாலம்' (Yahalam) சிறப்புப் பொறியியல் பிரிவு ஆகியவை இணைந்து கடந்த சில மாதங்களாக வடக்கு காசாவிலும், குறிப்பாக பெய்ட் ஹனூன் (Beit Hanoun) பகுதியிலும் இந்தத் தேடுதல் மற்றும் அழிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தன.
அழிக்கப்பட்ட இந்தச் சுரங்கப்பாதைகளுக்குள் தங்கும் அறைகள் மற்றும் ஏராளமான ஆயுதங்கள் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியை முழுமையாகச் சுத்தப்படுத்தும் பணியில் இராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இராணுவத்தினருக்கு அச்சுறுத்தலாக இருந்த சுமார் 70 பயங்கரவாதிகளை வடக்கு பிரிகேடியர் படைகள் கடந்த சில மாதங்களில் சுட்டுக்கொன்றுள்ளதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் தனது உள்நாட்டுப் பாதுகாப்பு கொள்கையை மாற்றியமைத்துள்ளது. இதன்படி, வடக்கு எல்லைப் பகுதிகள் மற்றும் மெரோன், சஃப்சுஃபா போன்ற பகுதிகளில் 1,500 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
லெபனானின் பிண்ட் ஜுபெய்ல் (Bint Jbeil) பகுதியில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் தலைமையகம் மற்றும் பல இராணுவக் கட்டடங்களை இஸ்ரேல் தாக்கி அழித்துள்ளது.
லெபனானின் பெக்கா சமவெளி மற்றும் தெற்கு லெபனானின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஹெஸ்புல்லா உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளது. நன்றி வீரகேசரி










No comments:
Post a Comment