செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 240-வது எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்டது!
ஊர்காவற்துறை பகுதியில் கடும் வெப்பத்தினால் மாடுகள் பாதிப்பு
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்!
கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் ; அர்ச்சுனா எம்.பிக்கு பிணை
110 கோடி போதைப்பொருள் விவகாரம்: கைதான 22 தேரர்களில் 19 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி!
திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணிகளை ஆலயத்திற்கு வழங்குமாறு கோரி தொல்பொருள் திணைக்கள பணிப்பாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு...!
செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 240-வது எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்டது!
01 May, 2026 | 12:40 PM
(யாழ் செய்தியாளர்)
இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆரம்பமாகி நான்கு நாட்களுக்குப் பின்னர், மேலும் ஒரு மனித எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், புதைகுழியில் கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 241 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை (மே 01) மேதினம் மற்றும் முழு பூரணை தினம் என்பதால் அகழ்வுப் பணிகளை அரை நாள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டு, பணிகள் இடம்பெறுகின்றன.
நேற்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு ஒரு பதின்ம வயதுடைய ஒருவருடையதாக இருக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
நேற்று ஒரு மனித எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டது.
இதற்கமைய 241 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு 240 அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அகழ்ந்து எடுக்கப்பட்ட 232ஆவது எலும்புக்கூட்டு பதின்ம வயதுடைய ஒருவருடையதாக இருக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
ஏழு மாதங்களுக்குப் பின்னர், 2026 ஏப்ரல் 27, அன்று, யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகியது. அகழ்வாய்வின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் நாளான, 29 ஏப்ரல் அன்று, அகழ்வு தளத்தில் கறுப்பு நிற மண் துகள்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டன
அகழ்ந்து எடுக்கப்பட்ட கறுப்பு நிற மண்ணை ஆராய்ந்தபோது அதில் ஒரு நாணயக்குற்றி கண்டெடுக்கப்பட்டதாகவும் சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரது வழிநடத்தலில் யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் முதன்முறையாக 2025 மே 15ஆம் திகதி ஆரம்பமாகின.
45 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2025 செப்டம்பர் 06ஆம் திகதி மதியம் நிறைவடைந்த போது, மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட 240 மனித எலும்புக்கூடுகளில் ஒன்றைத் தவிர அனைத்து எலும்புக்கூடுகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.
அகழ்வாய்வுத் தளம் இரண்டில் மீட்கப்படாத மனித எலும்புக்கூடு அந்த இடத்திலேயே தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் சட்டத்தரணி நிரஞ்சன் மேலும் தெரிவிக்கின்றார்.
மனிதப் புதைகுழி ஒன்று, மனிதப் புதைகுழி இரண்டு என அடையாளப்படுத்தப்பட்டே அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. மனிதப் புதைகுழி இரண்டில் ஏற்கனவே ஒன்பது மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மனிதப் புதைகுழி ஒன்றில் ஏற்கனவே 231 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட நிலையில் ஒன்று அகழ்ந்து எடுக்கப்படவில்லை. 218 ஆவது மனித எலும்புக்கூடு இதுவரை அகழ்ந்து எடுக்கப்படவில்லை. அது பாதுகாக்கப்படுகிறது. ஆகவே மேலதிகமாக இன்று (நேற்று) 232ஆவது எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டது.
செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியிலிருந்து மனித எலும்புகளுடன் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்ட ஏனைய பொருட்களுள் பால் போத்தல், பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலைப் பைகளும் உள்ளடங்குகின்றன. நன்றி வீரகேசரி
ஊர்காவற்துறை பகுதியில் கடும் வெப்பத்தினால் மாடுகள் பாதிப்பு
01 May, 2026 | 12:27 PM
(யாழ்.செய்தியாளர்)
தற்போது நிலவும் கடும் வெப்பமான வானிலை காரணமாக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேசங்களில் மாடுகள் ஆபத்தான நிலைமைகளை எதிர்நோக்கியுள்ளன.
பல மாடுகள் வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாது மயங்கி வீழ்ந்துள்ள ஒரு சில மாடுகள் இறந்துள்ளதாக பொது மக்கள் கூறுகின்ற போதும் அவற்றை உறுதிப்படுத்த முடியவில்லை.
இருப்பினும் வெயிலின் தாக்கத்தால் பல மாடுகள் மயங்கி வீழ்ந்த
நிலையில் உடனடியாக சம்பவ இடங்களுக்கு செல்லும் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி அவசர சிகிச்சைகளை அளித்து மாடுகளை ஆபத்திலிருந்து காப்பாற்றி வருகின்றார் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதிக வெயில் காரணமாக பால் உற்பத்தி குறைத்தல், கரைகுட்டி பிரசவித்தல் போன்ற தாக்கங்களும் ஏற்படுகின்றன.
எனவே போதிய அளவு நீர் அருந்தும் வகையிலும் கடும் வெயில் நேரங்களில் வெட்டை வெளியில் கட்டிவைத்தல் போன்ற நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் கால்நடை வளர்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நன்றி வீரகேசரி
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்!
01 May, 2026 | 10:22 AM
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் மே மாதம் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்தமருத்துவ துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் தயாளினி திலீபன் படுகொலை செய்யப்பட்டு தனங்கிளப்பு பகுதியில் உருக்குலைந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த வழக்கு நேற்று மீண்டும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷானும் முதலாவது சந்தேக நபரான விரிவுரையாளரின் மருமகன் சார்பில் சர்மினி விக்னேஸ்வரனும் இரண்டாவது சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளரின் மகள் சார்பில் சட்டத்தரணி சமந்த அத்துக்கோரளவின் வழிகாட்டலில் சட்டத்தரணி வீ.கௌதமனும் ஆஜராகினர்.
குறித்த வழக்கின் மரண விசாரணையை எதிர்வரும் மே 20ம் திகதி நடத்த தீர்மானித்துள்ள நீதிவான் எஸ்.லெனின்குமார், சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் மே மாதம் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். நன்றி வீரகேசரி
கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் ; அர்ச்சுனா எம்.பிக்கு பிணை
Published By: Digital Desk 3
29 Apr, 2026 | 11:28 AM
கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது.
அதேவேளை அர்ச்சுனா இராமநாதன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினருக்கும், மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஒன்று நிலவி வரும் நிலையில், கடந்த 25 ஆம் திகதி குறித்த காணிக்குள் பாராளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியமை தொடர்பிலான காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
அதனை அடுத்து, கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு வாக்கு மூலம் அளிக்க அர்ச்சுனா இராமநாதனை அழைத்து, வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர் அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அர்ச்சுனாவை இன்று புதன்கிழமை வரையில் விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்றைய தினம் அர்ச்சுனா சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து அர்ச்சுனா இராமநாதனை 05 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் , 20 ஆயிரம் ரூபா பெறுமதியான காசு பிணையிலும் செல்ல அனுமதித்த மன்று , எதிர் தரப்பினருடன் எவ்வித பேச்சுவார்த்தைகளுக்கும் போக கூடாது என நிபந்தனையும் விதித்துள்ளது.
அதேவேளை , அர்ச்சுனா இராமநாதன் மீது தாக்குதல் மேற்கொண்டார் என குற்றம் சாட்டப்பட்ட பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை இன்று வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் அவரும் மன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், பெண்ணையும் பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது. நன்றி வீரகேசரி
110 கோடி போதைப்பொருள் விவகாரம்: கைதான 22 தேரர்களில் 19 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி!
29 Apr, 2026 | 09:31 AM
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 22 தேரர்களில், 19 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாய்லாந்திற்குச் சென்று சனிக்கிழமை (25) நாடு திரும்பிய இவர்களிடமிருந்து 112 கிலோகிராம் "குஷ்" மற்றும் "ஹஷிஸ்" போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
தற்போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தேரர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (28) சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்ப்படுத்திய போதே, அவர்களில் 19 பேர் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கைதானவர்களில் ஜம்புரலிய பகுதியைச் சேர்ந்த மூன்று தேரர்கள் ஏற்கனவே தாய்லாந்து சென்று வந்துள்ளனர்.
சனிக்கிழமை (25) அன்று விமான நிலையத்திற்குப் போதைப்பொருளைப் பெற்றுக்கொள்ள வந்த இவர், ஏனையவர்கள் பிடிபட்டதும் தப்பியோடியுள்ளார். கைது செய்யப்படும்போது அவரும் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் இருந்துள்ளார்.
இந்த முழு மோசடியின் பின்னணியில் வர்த்தகர்கள் போல் வேடமிட்டுள்ள இருவர் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அவர்களில் ஒருவர் 'ஹாஜி' எனும் பெயரில் அழைக்கப்படுபவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த பாரிய கடத்தல் குறித்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் நேரடி மேற்பார்வையில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேனவின் வழிநடத்தலில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நன்றி வீரகேசரி
திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணிகளை ஆலயத்திற்கு வழங்குமாறு கோரி தொல்பொருள் திணைக்கள பணிப்பாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு...!
Published By: Digital Desk 2
02 May, 2026 | 03:25 PM
(சேனையூர் நிருபர்)
திருக்கோணேஸ்வர ஆலயம் அமைந்துள்ள பகுதி மற்றும் அருள்மலையை உள்ளடக்கிய 18 ஏக்கர் 01 ரூட். 29 பேச்சஸ், கணிதுண்டும், பாபநாச தீர்த்தம் அமைந்துள்ள 03 ஏக்கர் 02 ரூட் 01 பேர்ச்சஸ் காணித்துண்டும் , மற்றும் கோட்டைவாசல் பிள்ளையார் அமைப்புள்ள 26 பேர்சஸ் உள்ளடங்கிய காணி துண்டும் திருகோணேஸ்வர ஆலயத்துக்கு சொந்தமானவை என வெளிப்படுத்தவும் அவற்றுக்கான பாரதீனப்படுத்தல் கட்டளையை திருக்கோணேஸ்வஸ்ர ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபைக்கு வழங்க கோரியும் சட்டத்தரணி திலகரெட்ணம் துஷ்யந்தன் தலமையிலான திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபயினரால் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் , தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு எதிராக கடந்த 29 ம் திகதி சித்திரை மாதம் 2026 அன்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
1950 ம் ஆண்டிலிருந்து இன்றுவரை காலத்துக்கு காலம் பல்வேறுபட்ட அரச கெடுபிடிகள் மற்றும் தொல்பொருள் கெடுபிடிகள் அத்துமீறிய கையகப்படுத்தல்கள் என்பவற்றை கட்டுபடுத்தி ஆலயத்தின் ராஜகோபுர கட்டுமானம் மற்றும் இதர அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவே குறித்த வழக்கினை தாக்கல் செய்துள்ளதாக ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் தலைவர் சட்டத்தரணி திலகரெட்ணம் துஷ்யந்தன் மேலும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி







No comments:
Post a Comment