பெருநிலத்தில் சில நாட்கள் (கன்பரா யோகன்)


கடந்த மார்ச் மாதக் கடைசியில் மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தின் வட பகுதியையும், மேற்குப் பகுதியையும் உலுப்பி விட்டுச் சென்ற ‘நரெல்லே’ புயல்காற்றின் அதிர்வுகள் தணிந்திருந்த சில நாட்களின் பின் பேர்த் நகரத்துக்கு ஒரு வார விடுமுறையில் சென்றிருந்தோம்.

அப்போதும் வட பகுதி குறிப்பாக எக்ஸ்மவுத் போன்ற சுற்றுலாத்தலங்கள் செல்லமுடியாத அளவுக்கு அங்கிருந்த விமானத்தளம் சேதமடைந்திருந்தது. இதனால் நாம் அங்கு செல்ல முடியாது போய்விட்டபோதிலும் ஒரு வாரம் பேர்த் நகரத்தை சுற்றிப் பார்த்த அனுபவ நிறைவுடன் இதை எழுதுகிறேன்.  

கன்பரா அமைந்திருக்கும் ஒரு குறுணி நிலப்பரப்பிலிருந்து இந்த விரிந்த மேற்கு அவுஸ்திரேலியாவுக்கு சென்றது முதல் தடவை. இந்தப் மாநிலமே நாட்டின் 40 சத வீத நிலப் பரப்பை உள்ளடக்கிய மிகப் பெரிய மாநிலம். மிக சிறியது எமது தலை நகர பிராந்தியம் - ACT. 

விமானத்தில் சிட்னியிலிருந்து 4 மணி 20 நிமிடம் எடுக்கும் இந்த பயண செலவை கணக்கிட்டுப் பார்க்கும் எம்மில் பலரும் பேர்த்துக்குப் போவதிலும் பார்க்க மலேசியா அல்லது சிங்கப்பூர் சென்று திரும்பிவிடலாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் அப்படிச் சொல்பவர்கள் விரிந்த இந்த பிரதேசத்தின் நிலக் காட்சிகளை தவற விடுகிறார்கள் என்றே நான் கருதுகிறேன்.

எமது தூரத்து உறவினரொருவர் பேர்த்திலிருக்கிறார் என்று


அறிந்திருந்தேன்.  ஆனால் அவரது கைத் தொலைபேசி இலக்கத்தை தவறவிட்டிருந்ததால் ஜெர்மனியிலுள்ள இன்னொரு உறவினரிடம் இருந்து அதை வாங்கியிருந்தேன்.

சரி அவரை சந்திக்கலாமே என்று பேர்த்தில் நின்று போன் எடுத்தேன்.

அவரோ தான் Newman என்ற இடத்தில் - பேர்த்திலிருந்து 1200 கிமீ தூரத்திலிருக்கிறார் என்றும் காரில் வர 13 மணி நேரமெடுக்கும் என்று சொல்லக் கேட்டுத் திகைத்துப் போனேன். இரவு நேர பயணங்களில் கங்காருகளுடன் விபத்துக்குள்ளாகும் ஆபத்துமுண்டு என்று எச்சரித்தார். கன்பராவில் காரில் கங்காருகளுடன் மோதிக் களைத்த எமக்கு இன்னொரு அனுபவம் தேவையா? அந்தப் பக்கம் தலை வைத்தும் படுக்கக் கூடாது என்று எண்ணிக் கொண்டேன்.    

அது கிடக்க வேலை எப்படிப் போகிறது என்று கேட்டேன். BHP இன் சப் ஏஜென்சி ஒன்றுக்கு தான் வேலை பார்ப்பதாகவும், Iron Ore அகழ்வில் முதன்மையான இடத்திலிருக்கும் அப்பகுதியில் தனது வேலை அகழ்வுக் கழிவுகளை பராமரிப்பதுதான் என்கிறார். மதிய உணவுக்காக வீட்டுக்கு சென்று கொண்டே போனில் பேசினார். இலகுவில் எவைரையும் சந்தித்துவிடக்கூடிய தூரங்களில் இல்லாதிருக்கக்கூடிய பெருந்தேசம் பேர்த்.

Swan River பேர்த் மாநகரப் பகுதியின் நடுவே ஓடுகிறது. நகரத்தில் உள்ள பெரிய உயரமான கட்டிடங்களில் BHP, Rio Tinto மற்றும் Woodside Petrolium போன்ற நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ளதை கண்டேன்.  

Freemantle என்ற இடம் பெரிய துறைமுக நகரம். Swan River ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள இந்த துறைமுகம், பேர்த்திற்கான முக்கிய துறைமுகம். மேற்கு ஆஸ்திரேலியாவிற்கான பெரும்பாலான கொன்டெய்னர் சரக்குகள், வாகனங்கள் மற்றும் பொருட்கள் இந்த வழியாகவே வருகின்றன

இங்கே உள்ள Fremantle Prison பிரசித்தமானது. அவுஸ்திரேலியா பெடெரேஷன் ஆவதற்கு முன்பு இங்கிலாந்தின் கொலனிகளாக ஒவ்வொரு மாநிலங்களும் இருந்த காலத்தில் இந்த சிறை இங்கிலாந்தின் குற்றவாளிகளை - அவர்களை கொன்விக்ட்ஸ் (Convicts) என்று அழைப்பது வழக்கம் - அடைத்து வைத்திருக்கப் பயன்பட்டிருக்கிறது.

UNESCO World Heritage பட்டியலில் இந்த சிறை இடம் பெற்றிருக்கிறது. 18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் தனது கொலனிகளை அமைக்க இங்கிலாந்து கைதிகளை எவ்வாறு பயன்படுத்தியது என்பதை இது காட்டுவதால், யுனெஸ்கோ இதை அங்கீகரித்துள்ளது என்று சொல்கிறார்கள்.  

உள்ளே நான்கு மாடியில் அமைந்த இருபுறமும் வரிசையாக கட்டப்பட்டிருந்த இந்தச் சிறைக்குள் ஒரு தூக்குத் தண்டனை நிறைவேற்றும் அறையும் இருந்திருக்கிறது என்பதைப் பார்த்தோம். இந்தச் சிறைச்சாலை சில தொலைக்காடசித்தொடர்களிலும் படமாக்கப்பட்டிருக்கிறது என்பதை tour guide மூலம் அறிந்துகொண்டோம்.

 

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் Rottnest Island, மேற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரைக்கு அப்பால், இந்தியப் பெருங்கடலில், பேர்த் நகரத்தின் மேற்கே அமைந்திருக்கிறது. Fremantle இலிருந்து கடல் வழியாக 18 கி.மீ. தூரத்திலுள்ள இந்த தீவுக்கு வேகமான படகில்(Ferry) செல்ல 30 நிமிடங்கள் எடுக்கிறது. இந்த தீவில் கார்கள் அல்லது எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படுவதில்லை.  சைக்கிள்கள், ஸ்கூட்டர்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தலாம், மேலும் சுற்றுலாப் பணிகளுக்கு தீவை சுற்றிக் காட்ட பஸ் சேவையும் உள்ளது. பல அழகிய கடற்கரைகளைக் கொண்ட இந்தத் தீவுக்கு பெருந்தொகையாக பயணிகள் வருவதற்கு ஒரு முக்கிய காரணி உண்டு. அது குவோக்கோ.

Quokka என்பது ஒரு பெரிய எலியைப் போன்ற உடல் வடிவம் கொண்டது. மனிதர்களுக்கு மிகவும் நட்பாக இருப்பது போல தோன்றுவதால் இது பிரபலமானது. பெரும்பாலும் Rottnest Island இல் மட்டும் வாழும் இது உங்கள் கால்களுக்கு அருகில் வந்து விடும். கங்காருவைப் போல அதன் பெரிய பின்புற கால்களில் நின்று கொள்ளும் குவோக்கோ தனது குட்டிகளை வயிற்றில் உள்ள பைகளில் (pouch) சுமந்து செல்லும்.

பேர்த் இலிருந்து Nambung National Park சுமார் 2–3 மணி நேர கார் பயணம் பாலைவனத்தில் கல் தூண்கள் நிறைந்த Pinnacles காரணமாக பிரபலமான Nambung National Park, Perth அருகிலுள்ள ஒரு தனித்துவமான இயற்கை பூங்கா

Pinnacles என்பது இயற்கையாக உருவான மர்மமான கல் தூண்கள் கொண்ட ஒரு பாலைவனக் காட்சிப் பகுதி, இது உலகின் மிக வித்தியாசமான நிலவடிவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆயிரக்கணக்கான இயற்கையாக உருவான கல் தூண்கள். சில தூண்கள் சிறியது, சில மனித உயரத்தை விட உயரமானவை. மஞ்சள் நிற மணல் பாலைவனத்தில் கற்கள் “காட்டைப் போல” காட்சியளிக்கும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் கடல் மணல் மற்றும் சுண்ணாம்பு கல் மாற்றங்களால் இவை உருவாகியிருக்கின்றன. 

ஐந்து நாட்களில் பேர்த் நரைச் சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்புவதற்கு நல்ல வெயில் எறித்த பகற் பொழுதுகள் உதவின. நீண்ட பகற் பொழுது கொண்ட அவுஸ்திரேலிய நகரமாக பெர்த் கருதப்படுகிறது.

 

 

No comments: