இலங்கைச் செய்திகள்

 தமிழர் அரசியல் தீர்வுக்கான புதிய அரசியலமைப்பு : கட்சிகள் இடையே ஒருமித்த நிலைப்பாடு

வடக்கு ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

கொழும்பு கோட்டை ரயில் நிலையம் நவீனமயமாக்கப்படுகிறது : அபிவிருத்திப் பணிகள் நாளை ஆரம்பம் !

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை

நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டங்கள்! 



தமிழர் அரசியல் தீர்வுக்கான புதிய அரசியலமைப்பு : கட்சிகள் இடையே ஒருமித்த நிலைப்பாடு

10 Apr, 2026 | 09:42 AM

(இணையத்தள செய்திப் பிரிவு )

தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை ஒருங்கிணைப்பில், இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான புதிய அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்கள் குறித்து தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கும், அவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான இரண்டாவது முக்கிய கூட்டம் கொழும்பில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில், தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகளுக்கான புதிய அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்கள் குறித்து கட்சிகள் இடையே ஏகமனதாக இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த அடிப்படை அம்சங்களை பொதுநோக்காகக் கொண்டு,


தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த தீர்வுத்திட்டம் ஒன்றை உருவாக்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.

இதற்காக, விரிவான அரசியல் தீர்வுத்திட்டத்தை வடிவமைக்கும் நோக்கில் ஒரு சிறப்பு வரைபுக்குழு (Drafting Committee) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழ்த் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுடன், நிபுணர் குழுவும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக சிரேஷ்ட சட்டத்தரணிகளான கா. ரனித்தா ஞானராஜா மற்றும் மரியதாஸ் யூட் டினேஷ் ஆகியோர் செயற்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நிபுணர் குழுவில் க. கனக ஈஸ்வரன், எம். சொர்ணராஜா, என். செல்வக்குமாரன், வி.ரி. தமிழ்மாறன், என். சிவக்குமார், கே. குருபரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்ற ஒவ்வொரு தமிழ்த் தேசிய அரசியல் கட்சியும் தங்களது சார்பில் ஒரு உறுப்பினரை இந்த நிபுணர் குழுவில் நியமிக்க ஒப்புதல் வழங்கியுள்ளன.

முன்னதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்தாலும், அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருங்கிணைந்த வரைபை உருவாக்குவது  முக்கிய தேவையாகக் கருதப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்காலத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக


இலங்கை அரசாங்கம் கலந்துரையாடல்களை முன்னெடுத்தால், இந்த ஒருங்கிணைந்த அடிப்படை வரைபே தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டு நிலைப்பாடாக முன்வைக்கப்படும் எனவும் இந்த மாநாட்டில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 




வடக்கு ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

09 Apr, 2026 | 09:11 AM

வடக்கு ரயில் மார்க்கத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இன்று வியாழக்கிழமை  (09) முதல் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் வழமை போல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, யாழ்ப்பாணம் நகரிடை  ரயில் மற்றும் யாழ்ப்பாணம் இரவு தபால் ரயில் ஆகியன இன்று முதலும், யாழ் தேவி ரயில் நாளை முதலும் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்தது.

"திட்வா"  சூறாவளியினால்  வடக்கு ரயில் மார்க்கம் 14 இடங்களில் சேதமடைந்திருந்தது. இதனால் கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி முதல் வேகக் கட்டுப்பாடுகளுடன் சில ரயில்கள் மட்டும் இயக்கப்பட்ட போதிலும், ஜனவரி 19 முதல் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

தற்போது அந்த 14 இடங்களும் நிரந்தரமாகப் புனரமைக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் வடக்கு ரயில் பாதையில் ரயில்கள் வழமையான வேகத்தில் தடையின்றி இயங்கும் எனத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 






கொழும்பு கோட்டை ரயில் நிலையம் நவீனமயமாக்கப்படுகிறது : அபிவிருத்திப் பணிகள் நாளை ஆரம்பம் !

08 Apr, 2026 | 11:03 AM

( இணையத்தள செய்திப் பிரிவு )

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், இலங்கை ரயில்வே திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கொழும்பு கோட்டை ரயில் நிலைய நவீனமயமாக்கல் பணிகள் நாளை வியாழக்கிழமை  (09) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

நாளை காலை 09.00 மணிக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இந்த நவீனமயமாக்கல் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று திறந்து வைக்கப்படவுள்ள நவீனமயமாக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு இணையாக, ரயில் நிலையத்தையும் மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

'கிளீன் ஸ்ரீ லங்கா' (Clean Sri Lanka) செயலகத்தின் மேற்பார்வையின் கீழ், பயணிகளுக்குத் தேவையான நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகளை உள்ளடக்கியதாக இந்தப் புனரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளன.   நன்றி வீரகேசரி 







செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை

08 Apr, 2026 | 10:52 AM


யாழ். செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி தொடர்பிலான மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான நிதி குறித்த பாதீட்டுக்கு இதுவரை நீதி அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை என செவ்வாய்க்கிழமை (07) யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் வெளிப்பட்டது.

செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று (7) யாழ். நீதிவான் லெனின் குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் ஆஜராகி இருந்ததுடன் இந்த மனித புதைகுழி தொடர்பிலான அகழ்வு பணிகளை மேற்பார்வை செய்யும் சட்ட வைத்திய நிபுணர் செல்லையா பிரணவன் நீதிமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றினை தாக்கல் செய்தார்.

பாதிக்கப்பட்ட தரப்பினர் சார் சட்டத்தரணி ரனிதா ஞானராஜா ஆஜரான தலைமையிலான குழுவினர் ஆஜரானதுடன் காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் சட்டத்தரணி பூரணி ஆஜராகி இருந்தார்.

இதன்போது நீதிமன்றில் விடயங்களை முன்வைத்த அகழ்வு பணிகளை மேற்பார்வை செய்யும் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கான தயார்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க முடியுமான சூழல் இருப்பதாக அவர் இதன்போது நீதிமன்றில் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் குறித்த மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு திட்டமிட்ட செலவீனங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பாதீட்டுக்கு இதுவரை நீதி அமைச்சிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை எனவும் அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவதானம் செலுத்திய யாழ். நீதிவான் லெனின் குமார் நீதி அமைச்சுக்கு இது தொடர்பில் ஞாபகமூட்டும் கடிதம் ஒன்றினை அனுப்ப உடனடியாக உத்தரவிட்டார்.

 எதிர்வரும் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் பாதீட்டுக்கு அனுமதி கிடைக்காத நிலையில் அவ்வாறான அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் தற்போது சந்தேகம் நிலவுகிறது.

எனினும் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பாதீட்டுக்கு அனுமதி பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் மீண்டும் ஒருமுறை ஆராய இந்த வழக்கை எதிர்வரும் 21ஆம் தேதி மீள விசாரணைக்கு அழைக்குமாறு நீதிவான் லெனின் குமார் உத்தரவிட்டார்.

இதன்போது காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பூரணி ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் செம்மணி மனித புதைகுழி வளாகத்தை பார்வையிட அனுமதி கோரியுள்ளதாக நீதிமன்றில் குறிப்பிட்டு அதற்காக அனுமதி கோரினார்.

இது தொடர்பாக கவனம் செலுத்திய நீதிவான் லெனின் குமார் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் குழுவுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு முதலோ அல்லது அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு பிறகோ குறித்த வளாகத்தை பார்வையிடுவதற்கான அனுமதியை வழங்க முடியும் எனவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார்.

இதேவேளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் ஆஜரான அதிகாரிகள் இதுவரை முன்னெடுத்த விசாரணை அறிக்கை ஒன்றினை மன்றில் சமர்ப்பித்து செம்மணி மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட வழக்கு பொருட்களின் கால நிர்ணயம் தொடர்பில் தீர்மானம் ஒன்றினை முன்னெடுக்க பேராசிரியர் ராஜ் சோமதேவவுக்கு கட்டளை ஒன்றினை பிறப்பிக்குமாறு கோரினர்.

இது தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றம் கட்டளை ஒன்றை பிறப்பித்திருந்த நிலையில் அது தொடர்பில் அவதானம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேநேரம் இதுவரையில் செம்மணி மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக மேலதிக ஆய்வுகளை முன்னெடுப்பதற்கான செலவீனங்கள் குறித்த பாதீட்டுக்கும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்ற விடயம் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது.

அத்துடன் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் திருத்தப்பட்ட பாதீடு ஒன்றை அது தொடர்பில் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்வைத்து அதற்கு அனுமதி கோரினார். இது தொடர்பில் அவதானம் செலுத்திய யாழ்.

நீதிவான் லெனின் குமார் அந்த பாதீட்டுக்கும் அனுமதி அளித்தார். இந்த நிலையில் இது தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை தீர்மானிப்பது தொடர்பான விடயத்துக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.   நன்றி வீரகேசரி 




நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டங்கள்! 

07 Apr, 2026 | 12:25 PM

நுவரெலியா மாகாண சபையின் ஏற்பாட்டில் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கான நுவரெலியா வசந்தகால கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வசந்தகால கொண்டாட்டமானது ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளதாக நுவரெலியா மாகாண சபையின் முதல்வர் உப்பாளி வனிகசேகர தெரிவித்தார்.

இந்நிலையில் நுவரெலியா வசந்தகால கொண்டாட்டத்துக்கு வருகை


தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க நுவரெலியா மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இக்கொண்டாட்ட நாட்களில் ஹெலிக்கொப்டர் சவாரி, படகு சவாரி, மலர் கண்காட்சி போன்ற களியாட்ட நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  




 










நன்றி வீரகேசரி 




No comments: