உலகச் செய்திகள்

லெபனானில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஈரான் வெளியுறவு அமைச்சர்

எப்ஸ்டீனுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - மெலனியா ட்ரம்ப்

ஆர்த்தடாக்ஸ் உயிர்த்த ஞாயிறு ; ரஷ்யா - உக்ரேன் 32 மணித்தியால போர்நிறுத்தம்

லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு

இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறுகிறது: ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சர் கண்டனம்



லெபனானில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஈரான் வெளியுறவு அமைச்சர்

Published By: Vishnu

11 Apr, 2026 | 02:04 AM

லெபனான் உட்பட, ஒப்புக்கொள்ளப்பட்ட போர்நிறுத்த நிபந்தனைகளை அமெரிக்கா பாதுகாக்க வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வலியுறுத்தியுள்ளார்.

லெபனானுக்கான ஈரான் தூதர் முகமது ரெசா ஷிபானியுடன் தொலைபேசியில் உரையாடியபோது அமைச்சர் இந்த அறிக்கையை வெளியிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போர்நிறுத்த ஒப்பந்தங்களின்படி லெபனானில் சண்டை நிறுத்தப்படுவதை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் என்று ஈரான் கூறுகிறது.

லெபனானில் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்த அமைச்சர், போர்நிறுத்தப் புரிதலின்படி தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.   நன்றி வீரகேசரி 






எப்ஸ்டீனுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - மெலனியா ட்ரம்ப்

10 Apr, 2026 | 11:40 AM

(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)

அமெரிக்காவில் சிறுவர் பாலியல் குற்றவாளி என அறியப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீனுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ள மெலனியா ட்ரம்ப், “எப்ஸ்டீனுடன் இணைத்து என்னைப் பற்றி வெளியாகும் கதைகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை. அந்த குற்றச்சாட்டுகள் இன்றே முடிவுக்கு வரவேண்டும்” என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மனைவியும் அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலனியா ட்ரம்ப் வியாழக்கிழமை (9) வெள்ளை மாளிகையில் இதனைத் தெரிவித்தார். 

கடந்த சில நாட்களாக எப்ஸ்டீனுக்கு மெலனியாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அது வெறும் வதந்தி என மெலனியா மறுத்திருக்கிறார். 

அத்துடன் எப்ஸ்டீனின் பாலியல் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாடாளுமன்ற விசாரணைகளை நடத்தவேண்டும் என்றும் கூறினார். 

எப்ஸ்டீன்தான் தன்னை ட்ரம்புக்கு அறிமுகப்படுத்தினார் என சமூக ஊடகங்களில் வெளியான தகவலையும் மெலனியா மறுத்துள்ளார். “எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் தீய எண்ணம் கொண்டவர்களின் முயற்சியே இந்த வதந்திகள்” எனவும் தெரிவித்துள்ளார். 

மெலனியா தனது இந்தக் கருத்தை வெளியிடப்போவதாக வெள்ளை மாளிகை முன்கூட்டியே எவ்விதத்திலும் வெளிப்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

2000ஆம் ஆண்டில் எப்ஸ்டீனை மிகச் சில முறைகளே சந்தித்திருந்ததாகவும் எனினும் எப்ஸ்டீனால் தான் பாதிக்கப்படவில்லை என்றும் மெலனியா கூறியுள்ளார். 

மேலும், எப்ஸ்டீன் தன்னால் பாதிக்கப்பட்டவர்களை தவறாகப் பயன்படுத்தியதைப் பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்றும் “நான் எந்த வகையிலும் இதில் சம்பந்தப்படவில்லை” என்றும் அவர் மறுத்தார். 

"மதிப்பிழந்த அந்த நிதியாளரின் (எப்ஸ்டீன்) உதவியாளராக இருந்து தற்போது சிறையில் உள்ள கிஸ்லேன் மேக்ஸ்வெல்லையும் எனக்குத் தெரியாது” என்று மெலனியா உறுதியோடு மறுத்திருக்கிறார். 

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபராக வலம் வந்த ஜெப்ரி எப்ஸ்டீன், சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாகவும் பெண்கள், சிறுமியரை விநியோகித்து, மறைமுகமாக வியாபாரத் தொடர்பு பேணிவந்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு,  2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 

பின், நியூயோர்க்கில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், ஜெப்ரி எப்ஸ்டீன், மர்மமான முறையில் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். 

அதனையடுத்து, எப்ஸ்டீன் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்பான வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் அமெரிக்க நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, “எப்ஸ்டீன் ஆவணங்கள்” என்ற பெயரில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

லட்சக்கணக்கான பக்கங்களை கொண்ட இந்த “எப்ஸ்டீன் ஆவணங்களில்”  உலகளவில் செல்வாக்கு பெற்றிருக்கும் பல முக்கியஸ்தர்கள், அரசியல் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அந்த ஆவணங்களில் டொனால்ட் ட்ரம்பின் பெயர் இருப்பதாக பெருமளவில் பேசப்பட்டு, அவர் மீது விசாரணைகள் வலுக்கப்படவேண்டும் என அமெரிக்காவில் பல்வேறு தரப்பினர் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், தற்போது ட்ரம்பின் மனைவி மெலனியாவையும் எப்ஸ்டீனையும் தொடர்புபடுத்தி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. 

இந்நிலையில் அதற்கு மெலனியா மறுப்பு தெரிவித்துள்ளார்.    நன்றி வீரகேசரி 





ஆர்த்தடாக்ஸ் உயிர்த்த ஞாயிறு ; ரஷ்யா - உக்ரேன் 32 மணித்தியால போர்நிறுத்தம்

Published By: Digital Desk 3

10 Apr, 2026 | 12:03 PM

(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)

ஆர்த்தடாக்ஸ் உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு, உக்ரேன் போரில் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 32 மணித்தியால தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பை ஏற்று உக்ரேனும் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்கும் என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர்  ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

சனிக்கிழமை மாலை 4:00 மணி முதல்  ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:00 மணி வரை அமுலில் இருக்கும்.

அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரே பெலோசோவ், தலைமை தளபதி வலேரி கெராசிமோவுக்கு உத்தரவிட்டுள்ளார். எனினும், உக்ரேன் தரப்பில் ஏதேனும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அதை முறியடிக்கத் தயாராக இருக்குமாறும் ரஷ்யப் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உக்ரேன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது டெலிகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 

"உயிர்த்த ஞாயிறு தினத்தின்போது போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என உக்ரேன் ஏற்கனவே பலமுறை முன்மொழிந்திருந்தது. அதன் அடிப்படையில் நாங்கள் இந்த போர்நிறுத்தத்தை கடைப்பிடிப்போம். அச்சுறுத்தல்கள் இல்லாத ஈஸ்டர் பண்டிகை மக்களுக்குத் தேவை," எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டும் இதே போன்ற 30 மணித்தியால போர்நிறுத்தத்தை புட்டின் அறிவித்திருந்தார். ஆனால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் ஒப்பந்தத்தை மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த போர்நிறுத்த முன்மொழிவு குறித்து அமெரிக்காவுடன் முன்கூட்டியே விவாதிக்கப்படவில்லை என கிரெம்ளின் ஊடகப் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ரஷ்யாவின் சிறப்புத் தூதர் கிரில் டிமிட்ரிவ் தற்போது அமெரிக்காவில் தங்கியிருந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்துடன் அமைதி ஒப்பந்தம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்த்தடாக்ஸ் நாட்காட்டியின்படி, இந்த ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினம்  ஏப்ரல் 12 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. நான்கு ஆண்டுகளாக நீடிக்கும் இந்த மோதலில், தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில் இந்த தற்காலிக போர்நிறுத்தம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 





லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு

Published By: Digital Desk 3

10 Apr, 2026 | 10:16 AM

 (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)

மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், லெபனானில் தாக்குதல்கள் தொடரும் நிலையில், அந்த நாட்டுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் ஆரம்பிக்குமாறு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அமைச்சரவைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஹிஸ்புல்லா அமைப்பை நிராயுதபாணியாக்குதல் மற்றும் இஸ்ரேல் - லெபனான் இடையே அமைதியான உறவை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் பேச்சுவார்த்தைகள் அமையும் என நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

லெபனான் தரப்பில் விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகளை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பு கூறுகிறது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல்  மீறுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், லெபனானுக்கு இந்த ஒப்பந்தம் பொருந்தாது என நெதன்யாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் என்பிசி செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில், 

ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை வலுப்படுத்த லெபனான் மீதான தாக்குதல்களைக் குறைக்குமாறு நெதன்யாகுவிடம் தான் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நேற்று லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையான வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 303 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

பெய்ரூட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.   நன்றி வீரகேசரி 





இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறுகிறது: ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சர் கண்டனம்

Published By: Digital Desk 3

09 Apr, 2026 | 05:02 PM

(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)

மேற்காசியாவில் புதிதாக எட்டப்பட்ட இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறி வருவதாகவும், சர்வதேச சட்டங்களுக்கு முரணாக லெபனான் மீது தாக்குதல் நடத்துவதாகவும் ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பாரெஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரான் மற்றும் லெபனான் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வரும் மேற்கத்திய நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் உருவெடுத்துள்ளது. இந்த மோதல்களை "பொறுப்பற்றது மற்றும் சட்டவிரோதமானது" என குறிப்பிட்டுள்ள மாட்ரிட் நிர்வாகம், தனது வான்பரப்பைப் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது.

பாராளுமன்றில் உரையாற்றிய அமைச்சர் அல்பாரெஸ்,

"நேற்று இஸ்ரேல் எவ்வாறு போர்நிறுத்தத்தை அலட்சியம் செய்தது என்பதையும், சர்வதேச சட்டத்தை மீறி லெபனான் மீது நூற்றுக்கணக்கான குண்டுகளை வீசியதையும் நாம் கண்டோம்." எனத் தெரிவித்துள்ளார்.

மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள தனது தூதரகத்தை மீண்டும் திறப்பதாக ஸ்பெயின் அறிவித்துள்ளது.

இது தொடர்பில்  ஊடகவியலாளர்களிடம் பேசிய அல்பாரெஸ்,

"எங்கள் தூதர் மீண்டும் தெஹ்ரானுக்குத் திரும்பி தனது பொறுப்புகளை ஏற்குமாறும், தூதரகத்தை மீண்டும் திறக்குமாறும் நான் அறிவுறுத்தியுள்ளேன். ஈரானிய தலைநகரில் இருந்தும் அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்க நாங்கள் விரும்புகிறோம்," எனத் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 




No comments: