தமிழ் ஈழவிடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் பங்கேற்ற சகோதரி புஷ்பராணி அவர்கள் கடந்த 17 ஆம் திகதி பாரிஸில் மறைந்துவிட்டார்.
அண்மைக்காலமாக அவர் சற்று சுகவீனமுற்றிருந்தார்.
எனினும், என்னோடு வாட்ஸ் அப்பில் தொடர்பிலிருந்தார்.
தொடர்ச்சியாக தொடர்பிலிருப்பவர்கள், திடீரென எம்மை விட்டுப் பிரியும்போது, அந்தத் துயரத்தை கடப்பது மிகவும் சிரமமானது. எனினும்
நாம் கடந்துதான் செல்லவேண்டும்.
புஷ்பராணி அவர்களை 2019 இல் முதலில் பாரிஸில் நடந்த எனது சொல்லத்தவறிய கதைகள் நூல் அறிமுக அரங்கிலும், பின்னர் கடந்த 2023 இல் அவரது இல்லத்திலும் சந்தித்தேன்.
இறுதியாக நடந்த சந்திப்பிற்கு தோழர் ராயப்பு அழகிரி என்னை அழைத்துச்சென்றிருந்தார்.
தனது வாழ்வில் வசந்தத்தை காணாமல், வலிகளை மாத்திரமே அனுபவித்த புஷ்பராணி போன்ற
பெண் ஆளுமைகளை எமது சமூகம் நினைவில் வைத்திருக்கவேண்டும்.
இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடையத் தொடங்கி
ஐம்பத்தி மூன்று ஆண்டுகள்
நிறைவடைந்துள்ள காலப்பகுதியில் ( 1972 –
2025 ) நாம் வாழ்கிறோம். தமிழ் ஈழ விடுதலைக்காக முதல் முதலில் களமிறங்கிய பெண்தான் புஷ்பராணி!
இலங்கையில் ஏற்கனவே 1915 இல் கண்டி கலவரமும், 1958 இல் தென்னிலங்கையில் மற்றும் ஒரு இனக்கலவரமும் வந்திருந்தாலும், 1965 இல் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தமிழரசும், தமிழ்க்காங்கிரஸும் அரசமைத்து
தேன்நிலவு கொண்டாடினர்.
ஆனால், அந்த ஐக்கிய தேசியக்கட்சி
1970 இல் தோல்விகண்டபோது, ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் சமசமாஜக்கட்சியும்
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து அரசை அமைத்தது. அதற்கு மக்கள் அரசாங்கம் என்று
பெயரையும் சூட்டிக்கொண்டது.
உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெயரையும் பெருமையையும் பெற்ற ஶ்ரீமாவின் காலத்தில்தான்
தென்னிலங்கையிலும் வட இலங்கையிலும் விடுதலை வேட்கை நிரம்பிய பெண்கள் சித்திரவதைக்குள்ளாகத்
தொடங்கினர்.
1970 ஆம் ஆண்டு மேமாதம் நடந்த பொதுத்தேர்தலில், 90 தொகுதிகள் ஶ்ரீலசு. கட்சிக்கும்,
19 தொகுதிகள்
லங்கா சமமாஜக்கட்சிக்கும், 6 தொகுதிகள் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கிடைத்தன. டட்லி சேனநாயக்காவின் ஐ. தே. க.
17 தொகுதிகளில்தான்
வென்றது.
தமிழரசுக்கட்சிக்கு 13 ஆசனம், தமிழ்க்காங்கிரஸ் மூன்று
ஆசனம்.