சூர்தாஸ் கூறினார்:
“இறைவனுக்கு எனது சேவை தேவையில்லை. அவரிடம் இல்லாதது என்று எதுவுமில்லை. என்னைவிடச் சிறப்பாகவும் திறமையாகவும் சேவை செய்யக்கூடிய எண்ணற்ற பக்தர்கள் அவரிடம் இருக்கிறார்கள். ஆனால், அந்த இறைவனின் பக்தர்களில் பலர் துன்பத்திலும் துயரத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு அன்பும் ஆதரவும் உதவியும் தேவைப்படுகின்றன. எனவே, நான் அவர்களுக்குச் சேவை செய்து, அதன் மூலம் எனது ஆன்மாவை உயர்த்திக்கொள்வேன்.”
நமது வீட்டில் ஒரு திருமண விழா நடைபெறும்போது, ஏற்கெனவே வயிறு நிறைந்து உணவருந்தியவர்களைக்கூட மீண்டும் மீண்டும் உணவு உண்ணுமாறு வற்புறுத்துகிறோம். இதனால் உணவு வீணாகிறது. விருப்பமில்லாதவர்களுக்குக்கூட அளவுக்கு அதிகமாக உணவு பரிமாறப்படுகிறது. ஆனால், உணவின்றிப் பசியால் வாடி, ஒரு கவளம் உணவுக்காக வீட்டின் வாசலில் காத்திருப்பவர்களையோ கடுமையான சொற்களால் விரட்டியடிக்கிறோம். இது எத்தகைய முரண்பாடான செயல்!
சூர்தாஸ் கிருஷ்ணரிடம் கூறினார்:
“கிருஷ்ணா! நீயோ என்றும் நிறைவானவன்; என்றும் திருப்தி உடையவன்; எதனையும் சார்ந்திராத சுதந்திரமானவன். உனக்கு நான் ஏன் சேவை செய்ய வேண்டும்? சேவை தேவைப்படுகின்ற, உதவிக்காகக் காத்திருக்கின்ற மக்களுக்கே நான் சேவை செய்வேன்.”
அனைவரிடத்திலும் இறைவனைக் காண்போம்!
இந்த உலகில் வாழும் ஒவ்வொருவரிடத்திலும் இறைவனைக் காண வேண்டும். அனைவரும் ஒரே கடலில் தோன்றும் அலைகளைப் போன்றவர்கள் என்பதை உணர வேண்டும். அலைகள் வெவ்வேறாகத் தோன்றினாலும், அவை அனைத்தும் ஒரே கடலையே ஆதாரமாகக் கொண்டுள்ளன. அதுபோல, மனிதர்கள் உருவத்திலும் தோற்றத்திலும் வேறுபட்டிருந்தாலும், அனைவரும் ஒரே பரம்பொருளின் அம்சங்களே என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.
அந்த உணர்வின் அடிப்படையில் அனைவரிடத்திலும் உறவுணர்வையும், அன்பையும், இரக்கத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மற்றவர்களை நம்மிடமிருந்து வேறுபட்டவர்களாகக் கருதிச் சேவை செய்யக்கூடாது. அவர்களிடத்திலும் இறைவனைக் கண்டு, இறைவனுக்கு நாம் எத்தகைய பக்தியுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் வழிபாடு செய்கிறோமோ, அதே உணர்வுடன் அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும்.
நாம் பிறரிடம் இறைவனைக் கண்டு செய்யும் ஒரே ஒரு சேவை, இறைவனை அடைய வேண்டும் என்று பல ஆண்டுகள் ஏங்கித் தவிப்பதைக் காட்டிலும் மேலானது.
எனவே, இறைவனைத் தேடி எங்கும் செல்ல வேண்டியதில்லை. துன்பப்படுவோருக்கு உதவுவதிலும், பசித்தோருக்கு உணவளிப்பதிலும், ஆதரவற்றோருக்கு ஆதரவளிப்பதிலும், அன்பும் அக்கறையும் தேவைப்படுவோருக்குத் துணையாக இருப்பதிலும் இறைவனைக் காணலாம்.
மனித சேவையே மாதவ சேவை! பிறருக்குச் செய்யும் அன்பான சேவையே இறைவனுக்குச் செய்யும் உண்மையான வழிபாடு!
No comments:
Post a Comment