எங்கள் காலத்துக் கவிஞன் (கன்பரா யோகன்)

 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. 1985 இல் மண் சுமந்த மேனியர் நாடக நாட்களில் பழக முன்னரே சேரனின் இரண்டாவது சூரிய உதயம், யமன் கவிதை தொகுதிகளை அறையில் வைத்திருந்தேன். பல்கலைக்கழகத்தின் முன் இருந்த மணியம் புத்தகக் கடையில் வாங்கியிருந்த அந்தக் கவிதைகளில் பல மனப்பாடம் ஆகியிருந்தன

 சேரனின் கவிதைகளில் அந்தக் கால போரின் வலி, மண்ணின் உயிர்த் துடிப்பு, போராட்ட அறைகூவல் அனைத்தும் இருந்தன. கவிதைகளில் பொருந்தும் படிமங்கள் செறிந்திருந்தது நினைவில் இன்னும் நிற்கின்றது. ஒரு கவிதையில் தனது தோட்டத்தில் பறவைகளைப் துரத்த பட்டாசு கொழுத்தி போட்ட ஒருவரை இராணுவம் துப்பாக்கி வேட்டு வைத்தார் என்று கைது செய்து சித்திரவதை செய்தது பற்றியதை சொல்கிறார். அந்த கவிதையில் ஒரு இடத்தில் நறுக்காக

 “ பறந்து போனது பறவைக்  கூட்டம்

   பிறகு வந்தது மிருகக் கூட்டம்”

 என்று நயம்பட எழுதியிருந்தார்.

 சேரனின் கவிதைகள் காலத்தைப் பிரதிபலித்தன. தாயக மண்ணில் அவர் படைப்பில் உருவான ‘எங்கள் மண்ணும் இந்த நாட்களும்’ - கவிதா நிகழ்வு, ‘மாயமான்’ - வீதி நாடகம் ஆகியவற்றிலும்

மற்றும் அவரது பல கவிதைகளைக் கொண்டிருந்த 'மண் சுமந்த மேனியர் ' நாடகத்திலும் பங்கு பற்றியிருந்தவன்  என்ற வகையில் சேரனுடனான நட்பு வயது, அந்தஸ்து என்ற எல்லைகளைக் கடந்து பல ஆண்டுகள் நீடித்திருந்தது.

 துரதிஷ்ட வசமாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் கனடா சென்றிருந்தபோது அவரை நேரில் சந்திக்க முடியவில்லை. அப்போது அவர் உடல் நலக்குறைவுடன் இருந்தாலும் என்னைச் சந்திக்க ஆவலாயிருந்தார். ஒரு புதன்கிழமை வந்து சந்திப்பதாக தொலைபேசியில் சொன்னேன். பிறகு அவரது விலாசத்தை கேட்க போன்  எடுத்தபோது அவர் எடுக்கவில்லை எனவே குறுஞ்செய்தியில்

 'ப்ளீஸ் கிவ் மீ எ ரிங் ' என்று அனுப்பினேன். பதிலுக்கு அவரது குறும்பு மிக்க குறுஞ் செய்தியை அனுப்பியிருந்தார்.

 'டயமண்ட், கோல்ட் ஓர் சில்வர்?' என்ற கேள்விதான் அது.

 அந்தப் புதன்கிழமைக்கு இரு நாட்கள் முன்பு மீண்டும் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்

'மன்னிக்கவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளேன். உன்னைச் சந்திக்க முடியவில்லை'

 எனக்கு அதிர்ச்சியாயிருந்தது என்றாலும் அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை அறிந்திருந்தேன் . அதன் பிறகு எனது அழைப்புக்களை அவரால் எடுக்க முடியவில்லை. நானும் அவுஸ்திரேலியா திரும்பி விடடேன். அதுவே அவருடனான எனது இறுதித் தொடர்பாடலாகி விட்டது.  எங்கள் காலத்துக் கவிஞன் சேரனுக்கு எனது அஞ்சலி.

 

No comments: