சேவை செய்வதே இறைவனுக்குச் செய்யும் வழிபாடு!

 மகாபாரதப் போரின் உச்சக்கட்டமான குருக்ஷேத்திரப் போரின்போது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நாள் முழுவதும் அர்ஜுனனின் தேரோட்டியாகப் பணியாற்றினார். போரின் முடிவில் மாலைப் பொழுது வந்ததும் போர் நிறுத்தப்பட்டது. அப்போது கிருஷ்ணர் குதிரைகளை ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று, அவற்றிற்கு இதமான நீராடல் செய்வித்து, போரின்போது ஏற்பட்ட காயங்களுக்கு மருந்துத் தைலங்களைப் பூசினார். மேலும், கடிவாளங்களையும் குதிரைகளுக்கான கட்டுகளையும் சீரமைத்து, மறுநாள் மீண்டும் போருக்குத் தயாராகும் வகையில் தேரையும் செப்பனிட்டார்.

இறைவனே இவ்வாறு சேவையின் மகத்துவத்தைத் தமது செயல்களின் மூலம் நமக்கு எடுத்துக்காட்டுகிறார். ஒவ்வோர் உயிரினத்திற்கும் நாம் செய்யும் சேவை இறைவனுக்கே செய்யப்படும் சேவையாகும்; அத்தகைய சேவையை இறைவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார் என்பதையும் அவர் உணர்த்துகிறார்.

கால்நடைகளுக்கும், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஆற்றும் தொண்டுகள் அனைத்தும் போற்றத்தக்க ஆன்மிகச் சாதனைகளாகும் (சாதனா). நமது இல்லத்தைச் சுற்றியுள்ள சூழலைத் தூய்மையாக வைத்திருத்தல், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தல், மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத் தொண்டாற்றுதல் போன்ற சேவைகளில்  அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும்.

இன்றைய காலத்தில் பலர் இத்தகைய பணிகளைச் சமூக சேவை என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே மேற்கொள்கின்றனர். ஆனால், அவற்றை முழுமையான மன ஈடுபாட்டுடனும், இறைத் தொண்டாகவும் கருதிச் செய்வதில்லை. அத்தகைய செயல்களில் உண்மையான ஆன்மிகச் சாதனைக்குரிய மனப்பான்மை காணப்படுவதில்லை.

சேவை என்பது வெறும் சமூகப் பணியல்ல; அது இறைவனை அடைவதற்கான ஓர் உயர்ந்த ஆன்மிகப் பாதையாகும்.

இத்தகைய சேவைச் சாதனையின் மூலமாகவே அனுமன் ஸ்ரீராமருடன் இரண்டறக் கலந்தார். எவ்வாறு ஓர் ஆறு கடலுடன் கலந்து தனது தனித்தன்மையை இழந்து கடலாகவே ஆகிறதோ, அவ்வாறே அனுமன் தனது தன்னலமற்ற சேவையின் மூலம் ஸ்ரீராமருடன் ஐக்கியமானார்.

எனவே, நாம் செய்யும் ஒவ்வொரு சேவையையும் இறைவனுக்குச் சமர்ப்பிக்கும் புனிதத் தொண்டாகக் கருதி, அன்புடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்படுவோம்.

No comments: