இராமாயணத்தில் வரும்
சீதை, மகாபாரதத்தில் வரும் குந்தி,
காந்தாரி, திரௌபதி, சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி, மாதவி, நளவெண்பாவில்
வரும் தமயந்தி பற்றியெல்லாம் அறிந்திருப்பீர்கள்.
இவர்களை படைத்தவர்கள்
யார்…? என்று பார்த்தால், வால்மீகி – கம்பர்
– வியாசர் – இளங்கோவடிகள் - புகழேந்தி முதலான ஆண்கள்தான். காளிதாசர்தான் சகுந்தலையையும் படைத்தார்.
இந்தப்பெண்களையெல்லாம் கஷ்டப்படுத்திய இந்த ஆண்களின் படைப்புகளுக்கு எமது சமூகம் காவியம் என்றும் பெயர் சூட்டிக்கொண்டது.
வள்ளுவரும் என்ன செல்கிறார்:
அடிசிற்கினியாளே… அன்புடைய மாதே பதிசொற் தவறாத பாவாய்… அடிவருடி பின்தூங்கி முன்
எழுந்த பேதையே…. “ என்று தனது மனைவி
வாசுகி மரணித்த பின்னர் அவளை சிதையிலே
வைத்து தீவைப்பதற்கு முன்னர் பாடினாராம்!
அவளது மரணத்தின் பின்னர்
வள்ளுவருக்கு அடிவருடியது யார்..? என்பது தெரியவில்லை.
இந்தக்கதைகளைப்பற்றியெல்லாம்
யோசிக்கவைத்திருக்கிறது - மறுவிசாரணைக்குட்படுத்து
கிறது ஓவியாவின் கருஞ்சட்டைப்பெண்கள் நூல்.
எமது வாழ்நாளில் பலதரப்பட்ட இஸங்களை பார்த்துவருகின்றோம்.
கம்யூனிசம், மார்க்ஸிசம், ஷோசலிஸம், இவை தவிர,
கிளாசிசம்
- மேனரிஸம் -
ரொமாண்டிசிசம் - மொடர்னிசம்,
எக்ஸ்பிரஷனிசம் - ரியலிசம் - நச்சுரலிசம் – சிம்பலிசம்
– இமேஜிசம் - எக்ஸிஸ்டென்ஷியலிசம் என்றெல்லாம் ஏராளமான இஸங்கள் இருக்கின்றன.
ஆனால், ஆணிஸம் – பெண்ணிஸம் என்று எதுவுமில்லை. பெண்ணியம் இருக்கிறது.
ஆண்ணியம் இருக்கிறதா..?
கம்யூனிஸ்ட்டுகளின் அடையாளம் சிவப்பு என்றால்
சுயமரியாதை இயக்கத்தினரது அடையாளம் கருப்பு!
தந்தை “ பெரியார் பெரியார் “ என்று
காலம்பூராவும் சொல்லிவருகின்றோம். சுயமரியாதை இயக்கத்தின் தந்தை எனப்போற்றுகின்றோம்.
ஆனால், அவருக்கு பெரியார் என்ற பட்டத்தை யார் சூட்டினார்கள்..? என்று பார்த்தால், 1938 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற
பெண்கள் மாநாட்டில்தான் அவருக்கு அந்தப்பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி இந்நூலில்
தெரியவருகிறது.
அவருடைய கடவுள் மறுப்புக்கொள்கை பற்றி ஆன்மீகவாதிகளினால்
பேசப்பட்டளவுக்கு அவரது பெண்களின் விடுதலை சம்பந்தமான சிந்தனைகள் பற்றி பேசப்படவில்லை.
அந்தக்குறையை ஓவியாவின் கருஞ்சட்டைப் பெண்கள் நீக்கியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
உடற்கூற்றின்பிரகாரம் பார்த்தால், ஆண்களைவிட பெண்கள்தான்
வலிமையானவர்கள். ஒரு குழந்தையை சுமந்து பெற்றெடுக்கும் வலிமை மகத்தானது. அதனை தாய்மை
என்று மென்மையாக சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகின்றோம்.
பெரியார் திடலில் சுமார் ஓராண்டுகாலம் நடைபெற்ற
நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்ட உரையின் முழுவடிவமும் இந்த நூலில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.
பாரதநாட்டில் தோன்றிய காவிய மாந்தர்களை படைத்த
ஆண்கள், பெண்களை அவதானித்து சித்திரித்த போக்கிலிருந்து முற்றிலுமாக மாறிய நிலையில் மேற்கத்தைய கார்ல்மார்க்ஸ்,
லெனின், ஏங்கல்ஸ் முதலான ஆண்கள் பெண்கள் பற்றிக் கொண்டிருந்த கருத்துக்களையும் இந்நூல் உரத்துப்பேசுகிறது.