முருகனின் மனைவி மாதவிக்கு திடீர் திடீரென்று ஆசைவந்துவிடும். உடனே கணவனை தொந்தரவு செய்வாள்.
அப்படி என்ன ஆசை என்று நினைக்கிறீர்களா? சம்பந்தம்இல்லாதஇடத்தில் சம்பந்தமில்லாத ஆசையெல்லாம்
வந்துவிடும். ஒருசமயம் இந்தியாவில் உள்ள சிறு
கிராமத்தில் குலதெய்வம்கோவிலுக்கு சாமி கும்பிட
சென்றபோது அங்கு பர்கர் கிடைக்குமா என்று கேட்டு, கேட்டதோடு விடாமல் தேடிப் பார்த்துவாங்கிவரவும்
சொல்லியிருக்கிறாள். நடக்கிற காரியமா அது?
அவளுக்கு சொல்லி புரியவைத்து பெரிய நகரம்
ஒன்றிற்கு வந்த பின் அவள் கேட்டதை வாங்கிக்
கொடுத்திருக்கிறான் முருகன். இதுதான் அவள்
பிரச்சனை. மாமா என்று அழைத்துக் கொண்டுபக்கத்தில்வரும்போதே அய்யோ இப்போது என்ன
கேட்கப்போகிறாளோ என்று பயப்படும் அளவுக்கு அவன் நிலமைஆகிவிட்டது.
அன்று ஒரு சனிக் கிழமை மெதுவாக எழுந்து குளித்து
டிபன் சாப்பிட்டபின் சோபாவில் சாய்ந்தபடி டீவி ரிமோட்மூலம்சானலை மாற்றிக் கொண்டிருந்தான். ஒரு
சானலில்,
"மாம்பழம்னா மாம்பழம் சேலத்து மாம்பழம்" என்ற
பாடல் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது
அடுக்களையிலிருந்து மாதவி,
"இந்தாங்க, அந்த சானலை மாத்தாதிங்க, எனக்கு
பிடித்தபாட்டு" என்று உத்தரவிட்டாள்.
"சரி, சரி மாத்தல" என்று சொல்லிக் கொண்டே அவனும் அந்தப்பாட்டைக் கேட்க ஆரம்பித்தான்.
பாட்டு முடிந்ததும், "மாமா, ஒன்னு கேட்டா கோபிச்சுக்கமாட்டீகளே?" என்று கேட்டாள்.
"சரி சொல்லு, ஒன்னும் கோபிச்சுக்க மாட்டேன்"
"எனக்கு மாம்பழம் சாப்பிடனும்போல இருக்கு,
வாங்கிட்டு வருவீங்களா?" என்று பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.
அப்பாடா! இந்த தடவை பெரிதாக சோதனை
ஒன்றுமில்ல. நல்லவேளை இப்போது மாம்பழ சீசன் தான்.இல்லாவிட்டால் ஒவ்வொரு இடமா மாம்பழத்தை தேடி
இலங்கையில் அனுமன் சீதையைத் தேடி அலைந்த
மாதிரி அலைய வேண்டிஇருந்திருக்கும். அல்லது
அவளை சமாதானப் படுத்துவதற்குள் மாம்பழ சீசன்
இல்லாவிட்டாலும் மாம்பழ சீசன் வந்திருக்கும்.
இதற்காகவாவது பிள்ளையாருக்கு சிதறுகாய் ஒன்று
போடவேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டே,
"சரி, மத்தியானம் போய் வாங்கித்தரேன்" என்று சொல்லிவிட்டு அம்மாத தமிழ் இதழ் ஒன்றை
புரட்டிக் கொண்டிருந்தான்.
"மத்தியானம் சாப்பிட்டா நீங்க போக மாட்டீங்க.
சாப்பிட்டவுடனே ஒரு குட்டித் தூக்கம். அப்புறம்
சோம்பேறியாகிடுவீங்க"
"கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தால் ஒனக்கு பிடிக்காதே. சரிபோயிட்டு வரேன்" என்று சொல்லிக் கொண்டே காரை
எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
அன்று டாண்டினாங்க் மார்க்கெட்டில் நல்ல கூட்டம்.
கடைக்குஅருகிலே காரை நிறுத்த இடம் கிடைக்காமல் கார் பார்க்கை இரண்டு மூன்று தடவை சுற்றி வந்தும்
பலன் இல்லாததால் கடைக்கு சற்று தூரத்தில் காரை
நிறுத்திவிட்டு மார்க்கெட்டுக்குள் சென்றான்.