அவுஸ்திரேலியாவில் மெல்பனில்
வதியும் ஜே.கே. என்ற புனைபெயரில் இலக்கியப்பிரதிகள் எழுதிவரும் ஜெயக்குமாரனின் வெள்ளி
( மாயப்புனைவு ) நாவலை அண்மையில் படித்தேன்.
ஜே.கே. மெல்பனில்தான் வசிக்கிறார்
என்பதை அவரது எழுத்துக்களை தொடர்ந்து படித்துவரும்
வாசகர்கள் நன்கு அறிவர். எனினும் ஜே.கே. என்றால், அது மறைந்துவிட்ட ஜெயகாந்தனைத்தானே
குறிக்கும் என்றும், அவுஸ்திரேலியா எங்கே இருக்கிறது
? எனவும் கேட்கும் தமிழக வாசகர்களுக்காகவும், இந்தப்பதிவின் தொடக்கத்தில் அவ்வாறு எழுதினேன்.
தங்களுக்கு ஆஸ்திரேலியாதான்
தெரியும், அவுஸ்திரேலியா எங்கே இருக்கிறது..? என்று ஒரு தமிழக வாசகர் தமிழ்நாடு திண்ணை
இணைய இதழில் கேட்டிருந்தார்.
இங்கு நான் குறிப்பிடும்
ஜே.கே. “ படலை “ என்ற வலைத்தளமும் வைத்திருக்கிறார். அதிலும் இவரது
ஆக்கங்களை நாம் படிக்கமுடியும்.
“ படலை “ என்றால் அது என்ன..? எனக்கேட்கும் வாசகர்களுக்காக நான் ஒரு அகராதிதான்
உருவாக்கவேண்டும்.
சரிபோகட்டும், ஜே.கே. ஏற்கனவே என் கொல்லைப்புறத்துக் காதலிகள், கந்தசாமியும் கலக்சியும்,
சமாதானத்தின் கதை முதலான படைப்புகளை நூலுருவில் தந்திருப்பவர். இவை பற்றியும் ஏற்கனவே
எனது வாசிப்பு அனுபவத்தை எழுதியிருக்கின்றேன்.
ஜேகே.யின் இந்த மாயப்புனைவு
நாவலைப்பற்றி சொல்வதற்கு முன்னர் கடந்த ஆண்டு நடுப்பகுதியில் நான் அவுஸ்திரேலியாவிலும், பிரான்ஸிலும், இங்கிலாந்திலும்
சந்தித்த மூன்று அனுபவங்களை குறிப்பிட விரும்புகின்றேன்.
சம்பவம் -01
கடந்த மே மாதம் சிட்னியில்
மறைந்த கவிஞர் அம்பி அவர்கள் இறுதியாக எழுதிய சொல்லாத கதைகள் நூலை முழுமையாக
கணினியில் பதிவுசெய்து கொடுத்தபோது, அந்த நூலுக்கான முன்னுரையை ( அம்பி சொல்லச்சொல்ல
எழுதியது ) அம்பியின் புதல்வர் திருக்குமாருக்கு அனுப்பியிருந்தேன்.
அவ்வேளையில் அம்பியால், பேசமுடியாது போய்விட்டது. ஆனால், அவர் அதனை வாசித்தார்.
சில நிமிடங்களில் அம்பியின்
புதல்வர் என்னைத் தொடர்புகொண்டு, வாட்ஸ் அப்பை
பார்க்குமாறு சொன்னார். பார்த்தேன்.
அம்பியின் முன்னுரையை அவரது
மருமகள் கூகுளில் பதிவேற்றியிருக்கிறார்.
ஒரு இனிமையான பெண்குரல் அந்த முன்னுரையை தெளிவாகவும் சிறந்த உச்சரிப்புடனும்
வாசித்தது. அந்தக்குரல் யாருடையது என்பது தெரியாது!