“ வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில் “ என்ற
பாடல் வரிகளை மறந்திருக்கமாட்டோம்.
வாழ்க்கை வாழ்வதற்குத்தான்
என்ற தொனிப்பொருளில்தான் இந்த வரிகள் அமைந்துள்ளன.
ஏமாற்றம், துரோகம், வறுமை,
அவமானம், தோல்வி, மன அழுத்தம், விரக்தி, இழப்பு, தனிமை , குடும்ப வன்முறை முதலான காரணங்களினால், எமது சமூகத்தில் தற்கொலைகள்
நிகழுகின்றன.
பெண்விடுதலை, பெண்ணியம்
சார்ந்த கருத்துக்கள் பேசுபொருளாகியிருக்கின்றன. ஆனால், ஆண்கள் சார்ந்த
பிரச்சினைகளை “ ஆணாதிக்கம்
“ என்ற வரையறைக்குள் அடக்கிவிடும் தன்மைதான் அதிகரித்திருக்கிறது.
அதனால், எமது சமூகத்தின் மத்தியில் இதுதொடர்பாகவும் விழிப்புணர்வை
ஏற்படுத்தவேண்டியிருக்கிறது. இம்முறை அனைத்துலக
ஆண்கள் தினத்தில் ஆண்களின் தற்கொலைகளை பேசுபொருளாக்கியிருக்கும் சூழலில் எமது கருத்துக்களை
முன்வைக்கின்றோம்.
பெரும்பாலான வாழ்வியல் பிரச்சினைகளுக்கான அடிப்படைக் காரணத்தை
அறிந்து, அதற்கேற்ப உரிய தீர்வை கண்டுபிடிக்காமல், பலரும் விபரீதமான முடிவுகளையே கண்டடைகின்றனர்.
உலக அரங்கிலும் பல புகழ்பெற்ற
கலைஞர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகளும் கூட தற்கொலை செய்துகொண்டவர்கள்தான்.
அதற்கு நாம் அடல்ஃப் ஹிட்லர் முதல்கொண்டு
பலரை உதாரணம் காண்பிக்க முடியும்.
ஒருவர் தன்மீதான நம்பிக்கையை
இழக்கும்போது, விரக்தியை நோக்கி நகருகின்றார். அந்த விரக்தி தொடருமானால், மன அழுத்தம்தான்
பெருகும். இறுதியில், தனக்கான முடிவை நோக்கி நகருகின்றார். இறுதியில் அனைத்து துயரங்களிலுமிருந்து
விடுதலையாவதற்கு ஒரே வழி தற்கொலைதான் என்ற
தீர்வுக்கு வருகிறார்.
இந்தப்பதிவின் தொடக்கத்தில்
குறிப்பிடப்பட்ட பாடல் வரிகளைப்போன்றே மற்றும் ஒரு பாடல் வரியும் இருக்கின்றது.
“ உனக்கும் கீழே வாழ்பவர் கோடி, நினைத்துப் பார்த்து
நிம்மதி நாடு “
ஆனால், தற்கொலைசெய்துகொள்ளவேண்டும் என எண்ணுபவர்கள், தன்னை, தன்னைச்சூழவிருக்கும் குடும்பத்தினரை, உறவினர்கள்,
நண்பர்களை, பசுமை நிறைந்த நினைவுகளை அந்தக்கணத்தில் முற்றாக மறந்துவிடுகிறார்கள்.
இவர்களைப்போன்றவர்களுக்காகவே
விஞ்ஞான உலகில் மருத்துவர்கள், உலநள சிகிச்சையாளர்கள், சீர்மியத் தொண்டர்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்.
எமது தமிழ் சமூகத்தில்
குறிப்பாக இலங்கையிலும் இலங்கைத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும், தற்கொலை
மரண அவலம் தொடருகின்றது.
அதேசமயம், உளவள சிகிச்சை
நிலையங்களும் பெருகியிருக்கின்றன.
நகரீகம் வளர்ச்சியடைந்த
மேல்நாடுகளில், இயங்கும் மருத்துவமனைகளில்
உளவள சிகிச்சைக்காகவே தனியான பிரிவுகளும் இயங்குகின்றன.
அத்தகைய நாடுகளிலும் தற்கொலை
மரண வீதம் அதிகரித்து காணப்படுகிறது. பலர்
நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தியும் தற்கொலை செய்துகொள்கின்றனர். அல்லது முயற்சிக்கின்றனர்.
கணினி தொழில் நுட்பம் எமக்கு
வேறும் சில ஆபத்துக்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
எளிதாக, உடலை வருத்தாமல் எவ்வாறு தற்கொலை செய்துகொள்வது..?
முதலான ஆலோசனைகளைக்கூட கணினியில் தரவிறக்கம்
செய்து படிக்கமுடியுமென்ற நிலைக்கு இந்த நவீன உலகம் எம்மைத் தள்ளியிருக்கிறது.
பின்விளைகளைப்பற்றி சற்றேனும்
சிந்திக்காமல், தவறான செயல்களை செய்துவிட்டு, சமூகத்தில் அம்பலமாகும்போது, அவமானம்
தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டவர்கள் பற்றிய செய்திகளை படித்திருக்கின்றோம்.