இலங்கையில் 2005 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நான் சம்பந்தப்பட்ட
நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு,
மீண்டும் மெல்பனுக்கு புறப்படும் தறுவாயில்,
ராஜஶ்ரீகாந்தன் நினைவுகள் நூலின் சில பிரதிகளை வடமராட்சியிலிருந்த மூத்த எழுத்தாளர் நண்பர் தெணியானுக்கு சேர்ப்பித்தேன்.
அவர் எனக்களித்த வாக்குறுதியின்
பிரகாரம், 20-03-2005 ஆம் திகதி கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில்
இந்நூலின் அறிமுக நிகழ்வை நடத்தினார். அப்போது நான் அவுஸ்திரேலியாவிலிருந்தேன்.
கல்லூரியின் அதிபர் திரு.
ம. குட்டித்தம்பியின் தலைமையில் நடந்த இந்நிழ்வில், கலாநிதிகள் எஸ். சிவலிங்கராசா,
த. கலாமணி, செ. திருநாவுக்கரசு ஆகியோர் உரையாற்றினர். எனது சார்பில் நண்பர் தெணியான்
உரையாற்றினார். இந்த நிகழ்வின்போதும் நூல் விற்பனையில் கிடைத்த பணம் யாவும் திருமதி
லீலா ராஜஶ்ரீகாந்தனிடமே ஒப்படைக்கப்பட்டது.
எனது நெஞ்சத்துக்கு நெருக்கமான
நண்பர்தான் ராஜஶ்ரீகாந்தன்.
நான் அவுஸ்திரேலியாவுக்கு
1987 பெப்ரவரியில் புறப்பட்டபோது விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தவர். தொடர்ந்தும் என்னுடன் தொடர்பிலிருந்தவர். அவரது
மறைவு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
அவரின் ஆத்மா சாந்தியடையவேண்டும் என
பிரார்த்திக்கொண்டே, என்னால் முடிந்ததை அப்போது
இலங்கையில் செய்தேன்.
தற்போது நண்பர் தெணியானும்
எம்மத்தியில் இல்லை. இவர்கள் பற்றிய நினைவுகளை சுமந்தவாறே காலத்தை கடத்துகின்றேன்.
இவர்கள் இருவரும் எனக்குக்கிடைத்த
மிகச்சிறந்த நண்பர்கள். இவர்களின் பிள்ளைகளுடன்
தொடர்ந்தும் தொடர்பிலிருக்கின்றேன்.
இந்த எழுத்தும் வாழ்க்கையும்
தொடர் பதிவில், நான் மேற்கொண்ட இலக்கிய தொகுப்பு முயற்சிகள் பற்றியும் பேசவேண்டியிருக்கிறது.
அந்த அனுபவமும் சுவரசியமானது.
1988 இற்குப்பின்னர் எமது மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. அவர்களுடன் மீண்டும் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. எனது அழைப்பின்பேரில் சிட்னியிலிருந்து மெல்பனுக்கு வருகை தந்த அவர், 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம்
25 ஆம் திகதி மெல்பன் வை. டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் நடந்த எனது சமாந்தரங்கள்
கதைத் தொகுதியின் வெளியீட்டு அரங்கில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு பேராதனை பல்கலைக்கழக முன்னாள்
விரிவுரையாளர் கலாநிதி காசிநாதர் தலைமை தாங்கினார்.
நைஜீரியாவுக்கு தொழில்
வாய்ப்பு பெற்று எஸ்.பொ. கொழும்பிலிருந்து புறப்படுவதற்கு முன்னர், ஜெம்பட்டா
வீதியில் நாடக, திரைப்பட கலைஞர் மாத்தளை கார்த்திகேசு
தமது இல்லத்தில் நடத்திய பிரிவுபசார தேநீர் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டேன்.
ஒரு விடுமுறைக்கு இலங்கை
வந்திருந்தபோது வீரகேசரிக்கு வந்து என்னை மீண்டும்
சந்தித்த எஸ்.பொ. , ஆபிரிக்காவில் ஒரு தவம் என்ற தலைப்பில் ஒரு தொடரையும் எழுதத்தொடங்கி,
முதல் அத்தியாயத்தை தந்துவிட்டுச்சென்றிருந்தார்.
இதர அத்தியாயங்களையும்
எஸ். பொ. அனுப்பிய பின்னர் அந்தத் தொடரை வெளியிடலாம் என்றார் வீரகேசரி வாரவெளியீட்டுக்குப்
பொறுப்பான ஆசிரியர் பொன். ராஜகோபால். அந்தத் தொடரை எஸ். பொ. பின்னர் எழுதி அனுப்பவில்லை. அதனால் வெளியாகவில்லை.
மீண்டும் மற்றும் ஒரு விடுமுறை
காலத்தில் கொழும்பு வந்திருக்கும் எஸ். பொ. , என்னைத் தேடிக்கொண்டு வீரகேசரிக்குச்
சென்றுள்ளார். நான் அப்போது அவுஸ்திரேலியா வாசியாகியிருந்தேன். ராஜகோபாலிடம் எனது முகவரியை
பெற்றுக்கொண்டு சிட்னிக்கு வருகை தந்த எஸ். பொ. , எனக்கு கடிதம் எழுதி, எமது நட்பை இந்த புகலிட தேசத்தில் புதுப்பித்துக்கொண்டார்.
மெல்பனில் நடந்த எனது சமாந்தரங்கள்
நூல் வெளியீடு அவருக்கு மிகுந்த உற்சாகத்தையளித்தது. எனது நூல் பற்றிய விமர்சன உரையை மெல்பன் 3 zzz தமிழ் ஓசை வானொலியிலும் நிகழ்த்தினார். அக்கட்டுரை யாழ்ப்பாணத்திலிருந்து அச்சமயம் வெளியான திசை வார இதழிலும் கொழும்பில்
தினகரன் வார மஞ்சரியிலும் வெளியானது.
சிட்னிக்கு நான் செல்லும்
சந்தர்ப்பங்களில் எஸ்.பொ.வை அவரது மூத்த மகன்
மருத்துவர் அநுராவின் வீட்டில் சந்திப்பது வழக்கம். அப்போது அவர்கள் சிட்னியில் Strathfield என்ற பிரதேசத்தில் வசித்தார்கள்.
1990 ஆம் ஆண்டு
ஏப்ரில் மாதம் தமிழ்நாட்டிற்குச் சென்று பல எழுத்தாளர்களை சந்தித்தேன். அவர்கள்
ஜெயகாந்தன், அசோகமித்திரன், ராஜம் கிருஷ்ணன்,
‘ சிட்டி ‘ சுந்தரராஜன், சோ. சிவபாதசுந்தரம், திலகவதி, சிவகாமி, அகிலன் கண்ணன்,
கே.சி. எஸ். அருணாசலம், தனுஷ்கோடி ராமசாமி, தா. பாண்டியன், பொன்னீலன், தி. க. சிவசங்கரன்,
இந்திரா பார்த்தசாரதி, கவிஞர்கள் வாலி, வைரமுத்து, மேத்தா, மேத்தா தாசன், முத்துதாசன்,
அக்கினிபுத்திரன், செ. யோகநாதன், சு. சமுத்திரம் ஆகியோர்.